ஞாயிறு, 5 ஜூலை, 2015

பெண்களுக்காகவே உழைத்த கெர்டா லெர்னர்



பெண் வரலாற்று ஆசிரியர், எழுத்தாளர், பேராசிரியர், பெண்கள் வரலாற்று துறையைத் தோற்றுவித்தவர், ஆவணப்பட இயக்குநர் என்று தன் வாழ்நாள் முழுவதும் பெண்களுக்காகவே உழைத்தவர் கெர்டா லெர்னர். பொதுவாக வரலாறு என்பது ஆண்களால் ஆண்களைப்பற்றி எழுதப்பட்டதாகவே இருந்தது.
அது ஆண்களின் நிர்வாகம், ராஜதந்திரம், யுத்தம், அரசியல் போன்றவற்றை எடுத்துச் சொல்லும். பெண்களைப் பற்றி எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டாலும்கூட, தாய், மகள், மனைவி, எஜமானி என்று பாலியல் சார்ந்தே குறிப்பிடப்பட்டுள்ளனர். சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றி வரலாற்றில் பதியப் படவில்லை.
இச்சூழலில், பெண்கள் வரலாறு என்ற துறையைத் தோற்றுவித்து, கண்களுக்கு அகப்படாத பெண்களின் பங்களிப் பையும் வரலாற்றில் இடம்பெறச் செய்தவர் கெர்டா லெர்னர்.
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் பிறந்து வளர்ந்தவர் கெர்டா லெர்னர். சுதந்திரச் சிந்தனைகளோடு வளர்க்கப்பட்டார். பிறப்பால் யூதர் என்பதால், யூத மதத்தில் பெண்களுக்கு மிகக் குறைந்த முக்கியத்துவமே கொடுக்கப்பட்டுள்ளதைக் கேள்விக்கு உட்படுத்தினார். கடவுள் நம்பிக் கையைக் கைவிட்டு நாத்திகராக மாறினார். யூதச் சடங்குகளை புறக்கணித்தார்.
1938ஆம் ஆண்டு ஜெர்மனியுடன் இணைந்தது ஆஸ்திரியா. ஹிட்லர் படைகள் யூதர்களை வேட்டையாடின. கெர்டாவின் வீடு சோதனையிடப் பட்டது. நாஜி படைகள், கெர்டாவின் அப்பாவிடம் சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டன. வீட்டில்  இருந்தவர்கள் கைது செய்யப் பட்டனர். கெர்டாவும் அவரது அம்மாவும் சிறையில் அடைக்கப் பட்டனர்.
தன் வாழ்வு இந்தச் சிறைக்குள் முடிந்துவிடப் போகிறது என்று எண்ணிக்கொண்டிருந்த கெர்டா, 6 வாரங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து தப்பினார். சிறை அனுபவம் வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்தது.  அமெரிக்காவுக்கு விசா பெற்று, தனியாகவே சென்று சேர்ந்தார்.
உணவு விடுதியில் பரிமாறும் வேலை, பொருட்களை விற்பனை செய்வது, கிளார்க், எக்ஸ்ரே எடுக்கும் பணி என்று கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து, தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். அப்படியே ஆங்கிலமும் கற்றுக்கொண்டார். இரண்டே ஆண்டுகளில் சிறைக் கைதிகள் என்ற புத்தகத்தை எழுதி, வெளியிட்டார்.
அது நாஜி படைகளின் கொடூரங்களைத் தோலுரித்துக் காட்டியது. ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் கார்ல் லெர்னரைத் திருமணம் செய்துகொண்டார் கெர்டா. இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கார்ல் லெர்னர் அமெரிக்க கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
அமெரிக்கப் பெண்கள் காங்கிரஸில் பங்கேற்று, தீவிரமாக வேலை செய்து வந்தார் கெர்டா. ஆப்பிரிக்க  அமெரிக்கப் பெண்கள், அமெரிக்கர்களால் எப்படியெல்லாம் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதைக் கண்டு உணர்ந்தார்.
அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களின் பங்களிப்பு என்பதே கண்களுக்குத் தெரியாமலும், வெளிச் சத்துக்கு வராமலும் இருப்பது கண்டு வருந்தினார். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் அடிமை எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். அவர்களின் பிரச்சினைகளை வைத்து ஒரு நாவலையும் எழுதி வெளியிட்டார்.
கணவர் இயக்கிய பிளாக் லைக் மி என்ற திரைப்படத்துக்குத் திரைக்கதையும் எழுதினார் கெர்டா. கணவரின் இறப்புக்குப் பிறகு பெண்கள் வரலாறு பக்கம் கவனத்தைத் திருப்பினார். ஓர் எழுத்தாளராகப் பெண்களின் பிரச்சினைகளை எழுதினார். பெண்கள் குறித்து பாடத்திட்டங்கள் உருவாக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஆண்-பெண் சமத்துவத்துக்கான போராட்டங்களில் கலந்து கொண்டார். முனைவர் பட்டம் பெற்று, சாரா லாரன்ஸ் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்கே பெண்கள் வரலாறு என்ற புதிய துறையை உருவாக்கினார். ஒடுக்கப்படும் பெண்களின் வரலாற்றைத் தொகுத்தார். ஆவணப்படுத்தினார். பெண்கள் வரலாற்று துறையில் முதுகலைப் பாடப் பிரிவைக் கொண்டு வந்தார்.
அந்தத் துறையின் இயக்குநராகவும் செயல்பட்டார். பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பெண் உரிமைகளை வலியுறுத்தினார்.  கெர்டாவின் அயராத உழைப்பின் காரணமாக அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் அமைப்பின் தலைவரானார். இந்த அமைப்பில் ஒரு பெண் தலைமைப் பொறுப்புக்கு வந்தது இதுவே முதல் முறை.
விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பெண்கள் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கினார். 1988ஆம் ஆண்டு பெண்கள் வரலாற்றுத் துறையில்  55 நிறுவனங்களில் இருந்து 63 அறிஞர்கள் வெளி வந்தனர். பெண்கள் வரலாற்றைப் போதித்தனர்.
அமெரிக்கப் பெண்கள் வரலாற்றில் இருந்து அய்ரோப்பிய பெண்கள் வரலாறு நோக்கித் திரும்பினார் கெர்டா. ஃப்ரெடரிக் ஏங்கெல்ஸ் எழுதிய குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் ஆகியவற்றிலுள்ள விஷயங்களை விளக்கிப் பேசினார்.   பெண்கள் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், தலைமை யேற்று நடத்துவதற்கும் பல கூட்டங்களை நடத்தினார்.
பெண்கள் வரலாற்று வாரம் என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நீண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. பெண்கள் வரலாற்று மாதம் அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்டது. கெர்டாவின் எழுத்துக்கும் சமூகப் பங்களிப்புக்கும் பெண்கள் போராட்டங்களுக்கும் பல்வேறு அமைப்புகள் அமெரிக்காவிலும் அவர் பிறந்த நாடான ஆஸ்திரியாவிலும் ஏராளமான பட்டங்களும் விருதுகளும் வழங்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டார்.
பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து 17 கவுரவ டாக்டர் பட்டங்கள் கெர்டாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த 4 ஆயிரம் ஆண்டு வரலாற்றில் முழுக்க முழுக்க ஆண்களே இடம்பெற்றிருந்தனர். இன்று அந்த நிலை கொஞ்சம் மாறியிருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் பெண் என்ற பாலினப் பாகுபாடு காட்டி ஒதுக்கப்படும் நிலை மாறுவதற்கு இன்னும் 4 ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம்.
அதற்காக மன உறுதியைத் தளர விடாமல் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு பெண்களுக்குத்தான் இருக்கிறது என்று கூறிய கெர்டா,  92 வயதில், 2013ஆம் ஆண்டு மறைந்து போனார்

-விடுதலை,30.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக