திங்கள், 5 செப்டம்பர், 2016

இந்து மதத்தில் பெண்கள் நிலை பெண்களின் அந்தஸ்து பற்றி


1. நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: “எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ  அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக் காரனாவாவது ஒரு ஸ்திரீயாகவாவது, ஒரு நாலு கால் மிருகமாகவாவது பிறப்பான்”
2. மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன் முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மகன், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும்  அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.
3. போதாயனர் கூறுவது எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமை கட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக் கூடாது.
4. மத விதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: ‘தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்” (சுந்தரகாண்டம் 5)
5. மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும் படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன்மாரும், வாலிப காலத்தில் புருஷன் மாரும், வயது முதிர்ந்த காலத் தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் - ஒரு பெண் ஆனவள் ஒரு போதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடைய வளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர் களாகவோ, அலட்சியக்காரர்களாகவோ இருக்கும்படியான மற்றவர்களுடைய இரக்கத்தினால் வாழ்பவளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ் வளவு அற்ப ஜீவர்களாகவே இருக் கிறார்கள்.
6. உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம் சமென்னவெனில் அவ ளுடைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவ னையே அவள் மரியாதை செய்யட்டும்.. ஒரு புருஷன் துர்நடத்தையுடைய வனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம் போலவே கருது கிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள் V, 154)
7. மனு: ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளாகத்தான் இருப்பாள். மேலும் அவர் சொல்லுவது ஒரு மங்கையானவள் தான் மணம் செய்து கொண்ட ஒரு புருஷன் என்ன குணங் களையுடைய வனாயிருக்கின்றாறோ அதே குணங்களையே அவளும் அடைவாள் எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப் போல் (அத்தியாயம் IX 22)
8. போதாயனர் உரைப்பது: ‘மாதர்கள் அறிவுகளேஇல்லாதவர்கள்; அவர்கள் சொத்துரிமை கொள்ளவும் யோக்கியதை யற்றவர்கள்.

விடுதலை ஞாயிறு மலர், 9.7.16

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

குழந்தைகள் - சில குறிப்புகள்

குழந்தை அழுவற்கான காரணங்கள் என்ன?
1. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு பனிக்குடத் தண்ணீரில் நீந்திக் கொண்டு தொப்புள் கொடியைப் பிடித்துக் கொண்டு இருக்கும்போது வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணருகிறது. வெளியில் வந்தவுடன் அதற்கு சூழ்நிலை பிடிக்காமல் சில குழந்தைகள் அழலாம்.

2. பசிக்காக அழலாம். தாய்ப்பாலைக் குடிக்க குழந்தைகளுக்கு இரண்டு வகையான உணர்வுத்  தூண்டல்கள் உதவி செய்கின்றன. ஒன்று சப்பி உறிஞ்சி கடிக்க வேண்டிய தூண்டல் (Seeking reflex). மற்றொன்று கன்னத்தின் தூண்டல் உணர்வு (Rooting reflex). இதுபோன்று வாயினால் ஊட்டுவது போல் சமிக்ஞைகள் குழந்தை செய்யும்போது உடனே ஊட்டி விடவேண்டும். பசி நிறைய எடுக்க ஆரம்பித்தால் குழந்தை அழ ஆரம்பித்து விடும். எனவே, பசி அறிகுறி தெரிந்த உடனே தாய்ப்பாலைக் கொடுக்க வேண்டும்.

3. சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும்போது முக்கிக் கொண்டு திணறிக் கொண்டு சில குழந்தைகள் அழலாம்.

4. பால்குடிக்கும்போது காற்றை விழுங்கும் காரணத்தினால் பால் கொடுத்தவுடன் குழந்தையை தோளில் சாய்த்து தட்டிக்கொடுத்து ஏப்பம் வரச் செய்ய வேண்டும் (Burping).அவ்வாறு செய்தாலும் சிறிதளவு காற்று வயிற்றில் குடலுக்குள் சென்று விடுவதால் வயிற்றில் சுருட்டி வலி (Air colic) ஏற்படலாம். அதனால் குழந்தை நீண்ட நேரம் அழ நேரிடலாம்.

எனவே, குழந்தை அழுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. குழந்தையின் எல்லா அழுகையும் பால் கேட்பதற்காக என்று எண்ணி தாய்ப்பால் போதவில்லை என்ற தவறான எண்ணத்துடன் தாய்ப்பால் தவிர மற்ற பால்களை கொடுக்க வேண்டாம்.

முன் கூறியது போல குழந்தை பால் குடிக்க வேண்டும் என்று சமிக்ஞைகளை ஏற்படுத்தும்போது மட்டும் மார்பகத்தில் சரியான நிலையில் வைத்து ஊட்டிவிட வேண்டும். தூங்கும் குழந்தையை மீண்டும் மீண்டும் எழுப்பி பால் குடிக்க வைக்க வேண்டாம். குழந்தை பால் கேட்கும் போது மட்டும் கொடுத்தால் போதும்.
குழந்தையை முடிந்த அளவு தாய் மட்டுமே அல்லது யாராவது ஒருவர் மட்டுமே கையாளுவது நல்லது.
அனைவரும் தூக்கி முகத்தோடு முகம் வைத்து முத்தம் கொடுத்து கொஞ்சுவது, கைகளை சுத்தம் செய்யாமல் குழந்தையை தொட்டுத் தூக்குவது போன்ற செயல்களைத் தவிர்த்தால் குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு புரையேறும் நிலை (Fore milk),, பின்பால் (Hind milk) ஆகியவை இருப்பதை அறிந்து, ஒரு பக்க மார்பில் முழுமையாகக் கொடுத்த பிறகு அடுத்த மார்பில் கொடுப்பது நல்லது. முன்பாலில் சர்க்கரைச்சத்து அதிகமாகவும், பின்பாலில் புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது. முன்பாலை மட்டும் அதிகம் குடிக்கும் குழந்தைகள் அடிக்கடி மலம் கழிக்க வாய்ப்புள்ளது. முழுமையாக பின் பாலையும் சேர்த்துக் குடிக்கும் குழந்தைகளுக்கு புரதச்சத்து கிடைக்கப் பெற்று நன்கு வளர வாய்ப்புள்ளது.

குழந்தை அழுவதற்கு பயப்படாதீர்கள். ஆறு மாதங்கள் வரை நிறைய கைக்குழந்தைகள் அழுத வண்ணமே உள்ளன. நீண்டநேரம் தொடர்ந்து அழுதால் குழந்தை மருத்துவரிடம் காண்பித்து ஆபத்தான காரணங்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிறந்த குழந்தைக்கு சாதாரணமாக காணப்படும் இயற்கையான ஆபத்தில்லாத பிரச்சினைகள்

1. ஆபத்தில்லாத உடற்செயல் மாற்றத்தால் வரும் இயற்கையான மஞ்சள் காமாலை (Physiological Jaundice).

2. வாயின் மேல் அண்ணத்தில் ஏற்படும் வெண்மையான புள்ளி (Esteisis pearl).

3. தோலில் ஏற்படும் சிகப்பான புள்ளிகள்.

4. ‘கொர்... கொர்...’ என்ற மூக்குத் துவாரம் சிறியதாக இருப்பதால் சப்தத்துடன் கூடிய மூச்சு.

5. அவ்வப்போது ஏற்படும் இலேசான தும்மல் மற்றும் இருமல்.

6. பெண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்புகளில் ஏற்படும் வெள்ளைக்கசிவு மற்றும் இரத்தக்கசிவு.
மேற்கண்ட அறிகுறிகள், நிறைய குழந்தைகளில் ஏற்படும் இயற்கையான நிகழ்வுகள் ஆகும்.
குழந்தையை தினசரி பராமரிக்க பொதுவான அறிவுரைகள்

மேற்கூறிய அறிவுரைகள் தவிர மேலும் சிலவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்:

1. குழந்தையை குளிக்க வைக்க வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தவும். மிகவும் குளிர்ந்த நீரையோ மிகவும் சூடான நீரையோ பயன்படுத்த வேண்டாம்.

2.    மருத்துவமனையை விட்டு வீட்டுக்கு அழைத்து வந்தவுடன் குளிக்க வைத்து விடுவது நலம். ஏனெனில் மருத்துவமனையில் உள்ள கிருமிகளை குளிக்க வைத்து சுத்தம் செய்து விடுவது நலம்.

3.    குளிக்க வைக்கும்போது பயிற்சியில்லாத தாதிகளை வைத்து குளிக்க வைக்கக் கூடாது. வீட்டில் உள்ள தாத்தா _ பாட்டி அல்லது தாயே நன்றாக குளிக்க வைப்பார்கள்.

சில பயிற்சியில்லாத தாதிகள் மூக்கில் எண்ணெய் விடுவது, வாயில் வாய் வைத்து ஊதி சளியை எடுப்பது போன்ற அருவருக்கத்தக்க செயல்களைச் செய்வார்கள். அது அவர்களது தனிப்பட்ட கலையாக நினைத்து செய்கிறார்கள். அவ்வாறு செய்வதை பொதுமக்கள் அவசியம் என்று நினைக்கிறார்கள்.
அவர்களை மீண்டும் மீண்டும் குளிக்க வைக்க கூப்பிடுகிறார்கள். அவர்களை புறக்கணிப்பது குழந்தையின் உடல் நலத்திற்கு அவசியமான ஒன்றாகும்.

4. குழந்தைக்கு சாம்பிராணி புகை போடக்கூடாது.

5.    குழந்தைகளுக்கு முகப்பூச்சு மாவுகளை (பவுடர்) தெளிக்கவோ தடவவோ கூடாது.

6.    தொடர்ந்து சானிடரி நாப்கின் மற்றும் டயாபர்களை அணிவித்து இருப்பதால் அந்த சிறுநீர் மற்றும் மலம் வெளியேறும் பாதைகளில் புண்ணையோ கிருமித் தொற்றையோ ஏற்படுத்தலாம். அதனால் வெளியில் வரும்போது மட்டும் நம் வசதிக்காக சிறிது நேரம் டயாபர்களை பயன்படுத்தலாம். தொடர்ந்து இரவில் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
-உண்மை இதழ்,1-15.8.16

பெண்கள் விடுதலை மாநாடு 26.8.1979 அன்று சென்னை

பெண்ணுரிமை கொடுத்துப் பெறப்படுவதல்ல! எடுத்துக்கொள்ள வேண்டியது
பகுத்தறிவு மகளிர் அணியினர் சார்பில் பெரியார் நூற்றாண்டு விழா மற்றும் பெண்கள் விடுதலை மாநாடு 26.8.1979 அன்று சென்னையில் நடைபெற்றது.

மாநாட்டு தலைமை வகித்து திருமதி சரஸ்வதி கோரா அவர்கள் உரையாற்றும் போது, “பல நூற்றாண்டு காலமாக அடக்கப்-பட்டு கிடந்த பெண்கள் சமுதாய விடுதலைக்கு அரும்பாடுபட்ட தந்தை பெரியாருக்கு பெண்களே விழா எடுப்பது மிகச் சரியான ஒன்றாகும். பெண்கள் அடிமைத்தனத்திற்கு மூலவேர் எங்கிருக்கிறது என்பதை பெரியார் ஆராய்ந்தவர். கடவுளும், மதமும், ஜாதி அமைப்பும், மூடநம்பிக்கையும் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கும் கருவிகள் என்பதை ஆழமாக விளக்கினார். பெண்கள் விடுதலையில் அவர் உறுதியாக இருந்தார். எந்த சமரசத்துக்கும் அவர் தயாரில்லை.

மனுசாஸ்திர காலத்திலிருந்து தற்போதுள்ள சட்டம் வரை எல்லாம் பெண்களை அடிமைப்-படுத்துவதாகவே இருந்தன. நாத்திகத்தை வாழ்க்கை நெறியாக நாம் பின்பற்றுவோ-மேயானால் வாழ்க்கையைப் பற்றிய நமது கண்ணோட்டப் பாதை மாறும். சமத்துவ வாழ்க்கையை வாழ்ந்துகாட்ட முடியும்’’ என்று எடுத்துக் கூறினார்கள்.
மாநாட்டில், பேராசிரியை சக்குபாய் அவர்கள், பெண்கள் விடுதலை மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
பிற்பகலில் நிகழ்ச்சிகள் தொடங்கின. சின்னாளப்பட்டி சண்முகம் குழுவினரின் ‘அண்டசராசரம்’ எனும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநாட்டில், நாகம்மையார் படத்தை சிவகாமி சிதம்பரனார் அவர்கள் திறந்து வைத்தார். அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் அவர்கள் தலைமையில் திருமணம் செய்து-கொண்டவர் இவர். மஞ்சுளாபாய் உள்ளிட்ட கழக தோழியர்கள் கலந்துகொண்டார்கள். மாநாட்டில் பட்டிமன்றம் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ ‘பொருளாதாரக் கட்டுப்-பாட்டினாலா? சமுதாயக் கட்டுப்பாட்டினாலா?’ என்ற தலைப்பில் நிகழ்ந்த பட்டிமன்றத்திற்கு டாக்டர் லீலாவதி அவர்கள் தலைமையில் பெண்கள் கலந்துகொண்டு வாதிட்டனர்.

பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.

பெண்கள் விடுதலைக்காக, தந்தை பெரியார் அவர்கள் அரும்பாடுபட்ட கரணத்தால், அதன் நன்றியின் அறிகுறியாக தமிழ்நாட்டுப் பெண்கள் அவருக்கு “பெரியார்’’ என்ற பட்டத்தை, சரித்திரச் சிறப்புடன் சூட்டியதை, இப்பெண்கள் மாநாடு பெருமையுடன் நினைவு கூர்ந்து, தந்தை பெரியார் அவர்களது தொண்டுக்கு தலைவணங்கி, தந்தை பெரியார் அவர்கள் விட்டுச்சென்று இருக்கிற புரட்சிகரமான அடிச்சுவட்டில் சென்று, பெண் சமுதாயத்தின் முழு விடுதலையைப் பெற்றே தீர்வது, பெண்களை அலங்காரப் பொருள்களாக்கி, அவர்கள் சுரண்டப்படும் நிலையைத் தடுத்து,  தற்போது சீனா போன்ற சோஷலிச நாடுகளில் உள்ளதுபோல் உடைகளில் ஆண், பெண் என்ற வித்தியாசமில்லாமல் ஒரே மாதிரியான உடைகளை (Unisex Dresses) அணியமுன் வரவேண்டும்.
ஒருவர் காலில் மற்றொருவர் விழுந்து வணங்குவது என்பது, மனித சுயமரியாதைக்கும், சமத்துவத்துக்கும் எதிரானது. இந்நிலை எல்லா வழிகளிலும் தடுக்கப்பட வேண்டும்.

தாய் பெயரின் முதல் எழுத்தையே ‘இனிஷியலாகப்’ போட அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

திருமணமான, ஆகாத ஆண்கள் அனைவருக்கும் திரு. என்ற ஒரு சொல்லே பொதுவாக பயன்படுத்தப்படும்போது, பெண்களுக்கு மட்டும் ‘குமாரி’, ‘செல்வி’, ‘திருமதி’ என்ற வேறுபாடுகள் இருக்கத் தேவையில்லை என்றும், எல்லோருக்கும் பொதுவாக ‘திரு’ என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்றும்,தந்தை பெரியார் அறிவுரைப்படி, இந்தியாவில் கல்வி, உத்தியோகங்களில், சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், மற்றும் எல்லாத் துறைகளிலும் சரி பகுதியாக 50 சதவிகித இடங்கள் பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்தாக வேண்டும்,


உயர்நீதிமன்ற நீதிபதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அரசு பணியாளர் தேர்வுக்குழுத் தலைவர் போன்ற பல பொறுப்பு வாய்ந்த முக்கியப் பணிகளில் பெண்களே இல்லாத நிலை வெட்கமும், வேதனையும் அடையக் கூடியதாகும். இந்தத் துறைகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும், ஆண்களைப் போன்றே பிறப்புரிமை அடிப்படையில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்-கொள்கிறது என்றும் தீர்மானங்கள்
நிறை-வேற்றப்பட்டன. 2006இல் இது மத்திய அரசால் _ (தி.மு.க. இடம்பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) அரசால்) நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

இறுதியாக நான் பல்வேறு கருத்துக்களை கூறி உரையாற்றினேன். எனது உரையில், “தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை எல்லாம் கொள்கைப் பிழிவாக தர வேண்டுமானால் ஒன்றைத்தான் சொல்ல முடியும். பிறவியின் பெயரால் பேதம் கூடாது என்பதுதான் தந்தை
பெரியார் அவர்களின் எல்லா கொள்கைக்கும் அடிப்படை என்பதை விளக்கினேன்.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இவ்வாண்டில் இம்மாநாடு  துவக்கமே தவிர இது முடிவானதல்ல.

பலநூறு ஆண்டுகளாக அடிமைகளாக இருந்து விட்டோம்; இனியும் அடிமையாக இருக்கப் போவதில்லை என்று தோழியர்கள் இங்கே ஒலித்தக் குரலை நாடெங்கும் ஒலிக்கத் தயாராக வேண்டும். எங்கு பார்த்தாலும் இந்த உரிமை முழக்கங்கள் ஒலித்தாக வேண்டும்.

இந்த நாட்டு அரசியல்வாதிகள் என்பவர்கள் எல்லாம், பெண்களின் ஓட்டுகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்களே தவிர அவர்கள் சமுதாயத்தில் அடிமைகளாக நடத்தப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது.
உரிமை, விடுதலை என்பவை ஒருவர் பார்த்து மற்றவருக்குக் கொடுக்கப்படுபவை யல்ல; தட்டிப் பறிக்கப்பட வேண்டிய ஒன்று. நீங்கள் கிளர்ந்து எழுந்தால் விடுதலை கிடைக்கும்.

“ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது; பூனைகளால் எலிக்கு விடுதலை கிடைக்க முடியுமா?’’ என்று கேட்டார் தந்தை பெரியார்.

இதுபோல் பெண்கள் விடுதலை மாநாடுகள் நாடு தழுவிய அளவிலே ஏராளமாக நடத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துக்கூறி, தாய்ப் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகப் போடவேண்டும், ஆண்களைப் போலவே பெண்கள் உடுத்த வேண்டும், அலங்காரம், நகை ஆசை கூடாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ‘திரு’ என்றே போடவேண்டும், பெண்களுக்கு ஆண்களைப் போல சொத்துரிமை வேண்டும். கற்பு என்பது இருபாலர்க்கும் வேண்டும் என்று மாநாட்டுத் தீர்மானக் கருத்துக்களை விளக்கிப் பேசினேன்.

இந்து மதமும், இஸ்லாம் மதமும், கிறித்தவ மதமும், மற்ற மதங்களும் பெண்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்பதை புல்ரேணுகா என்ற அம்மையார் தன் அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பெண் அடிமை தீர மதம் ஒழிய வேண்டும்.

இதுபோல் பெண்கள் விடுதலை மாநாடுகள் நாடு தழுவிய அளவில் ஏராளமாக நடக்க வேண்டும் என்று கூறி என் பேச்சை நிறைவு செய்தேன்.

மாநாட்டில், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் அலமேலு அப்பாதுரை, அருணா சிவகாமி, சங்கரவல்லி, சற்குணம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.என்.அனந்தநாயகி, பேராசிரியர் நன்னன் உள்ளிட்ட ஏராளமான கழக தோழியர்கள் மற்றும் தோழர்கள் பலரும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு அய்யாவின் பெண்ணுரிமை பணியைச் சிறப்பாக செய்தனர்.
அய்யாவின் அடிச்சுவட்டில்.... 159  - கி.வீரமணி
-உண்மை இதழ்,1-15.8.16

மாதவிடாய் நிற்கும் காலமும் மகளிர்க்குரிய மாற்றங்களும்..!

பெரும்பாலான பெண்களுக்கு ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதாவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கின்றன? ஏன் மாதவிடாய் நிற்கிறது? அதனால் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? அந்த மாற்றங்களை மனரீதியாக எப்படி எதிர்கொள்வது? என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதேபோல, ‘மாதவிடாய் நிற்கும் காலம்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயப்படுவதுண்டு. “இத்தகைய அச்சங்கள் தேவையில்லை. மாதவிடாய் நிற்கும் காலம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்-தான், அந்தக் கட்டத்துக்குள் நுழையும் பெண்கள் ஒருவிதமான அதிர்ச்சி மனநிலைக்கு ஆளாகிறார்கள். பெண்ணின் வாழ்க்கையில் இது அடுத்தக் கட்டம். ஒரு வகையில் சுதந்திரமும் கூட என்கிறார்கள் மருத்துவர்கள்.

மாதவிடாய் நிற்பது இரண்டு விதங்களில் நிகழலாம். ஒரு பெண்ணுக்கு 42 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் தொடங்கும் மாதவிடாய் நிற்றல் செயல்பாட்டு மாற்றங்கள், அடுத்த மூன்று முதல் பத்து ஆண்டுகளுக்குத் தொடரலாம். மாதவிடாய் நின்றதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. இயற்கையான முறையில் மாதவிடாய் நிற்றல் ஏற்படும் சராசரி வயது அய்ம்பது. 40 வயதுக்கு முன்பாக மாதவிடாய் நிற்றல் ஏற்படுவது இயல்புக்கு மாறான முன்முதிர்ச்சி (Premature Menopause)நிலைதான். அறுவைச் சிகிச்சை காரணமாகவும் மாதவிடாய் நிற்றல் நடைபெறும். கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை (Hysterectomy), அல்லது சினைப்பை நீக்க அறுவைச் சிகிச்சை (Hysterectomy) அல்லது இரண்டாலும் இது நிகழ்கிறது. 12 மாதங்கள் தொடர்ந்து மாதவிடாய் வரவில்லையென்றால்  அது மாதவிடாய் நிற்றல்தான்.
சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்டிரான் ஹார்மோன்கள் சுரப்பைக் குறைப்பதன் விளைவுதான் மாதவிடாய் நிற்றல். ஒவ்வொரு மாதமும் சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியாவதை நெறிப்படுத்துபவை இந்த ஹார்மோன்கள்தாம். மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கிய பெண்களின் சினைப்பையில் வெகுசில கருமுட்டைகள் மட்டுமே எஞ்சி-யிருக்கும் என்பதால் இந்த ஹார்மோன்கள் உற்பத்தியை உடல் குறைத்துக்கொள்கிறது.
மாதவிடாய் நிற்றல் அறிகுறிகள்
மாதவிடாய் நிற்கும் நிலையில் உடல் பல அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இதில் முதன்மையானது மாதாமாதம் வரும் மாதவிலக்கு நிற்பது. சிலருக்கு திடீரென முற்றிலுமாக நின்றுபோகலாம். சிலருக்கு பல மாதங்கள் தள்ளிப் போகலாம். இந்தக் காலகட்டத்திலும் கருத்தரிக்க வாய்ப்புண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால், கடைசி மாதவிலக்கு ஏற்பட்டதில் இருந்து ஓராண்டுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுவது நல்லது. அதேபோல, கடைசி மாதவிலக்கு ஏற்பட்டதில் இருந்து ஆறு மாதத்துக்கு பிறகு ஏதேனும் ரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.
அடுத்து ஏற்படக்கூடிய அறிகுறி திடீரென உடல்சூடு பரவுதல் (Hotflushes), மற்றும் வியர்த்தல். சிலருக்கு உடல் முழுவதும் சூடு பரவலாம். சிலருக்கு தலைவலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படலாம். முகம், கழுத்து, மார்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் என சூடு மற்றும் எரிச்சல் உணர்வு பரவலாம். இதைத் தொடர்ந்து அதிகம் வியர்க்கும். ஒரு மணி நேரத்துக்கு சில நொடிகள் இப்படி நடக்கலாம். இது ஆளாளுக்கு வேறுபடும். இந்த அறிகுறி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் மறைந்து விடும். இரவில் வியர்த்தல் மற்றொரு அறிகுறி. இது தூக்கத்தைக் கெடுத்து சோர்வை ஏற்படுத்தும். பெண்ணுறுப்பில் ஈரத்தன்மை குறைந்து வறண்டு போகத் தொடங்குவது மற்றொரு பொதுவான அறிகுறி. இதனால், சிலருக்கு பாலியல் ஆர்வம் குறையலாம். ஒரு சிலருக்கு இருமும்போதும், தும்மும்போதும் சிறுநீர் கசிதல் (Stressincontinence) ஏற்படலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் போவதைக்
கட்டுப்படுத்த முடியாமை போன்றவை ஏற்படும்.
மூட்டு, தசை வலி ஏற்படும். ‘ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்னும் எலும்பு அடர்த்திக் குறைதல் நிலை ஏற்பட்டால், சிறு காயங்களுக்கே எலும்பு முறிவு ஏற்படும். இடுப்பு, கை, முதுகுத் தண்டு எலும்புகள்தான் பொதுவாக பாதிப்புக்கு உள்ளாகும். மாதவிடாய் நின்றபிறகு, சிலருக்கு முகத்தில் முடி அதிகமாகலாம். தலைமுடி உதிர்தலும் அதிகமாகலாம். உமிழ்நீர் சுரப்பது குறையும். பற்களும் பலமிழக்கும். சருமம் உலர்ந்து அரிப்பு ஏற்படும். சிலருக்கு சருமத்தில் எரிச்சல், மரத்துப் போதல், ஏதோ ஊறுவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.
இவற்றுடன் தோல் மற்றும் தலைமுடி மெலிதல், எடை அதிகரித்தல் போன்ற உடலியல் மாற்றங்கள் மாதவிடாய் நிற்றலுடன் தொடர்புடைய முக்கிய உடலியல் மாற்றங்கள் ஆகும். இந்தக் காலகட்டத்தில்தான் இதயம் மற்றும் ரத்தநாளத் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதுபோல, சில உணர்வெழுச்சி பாதிப்புகளும் ஏற்படலாம். அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி, சோகம் என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் இந்தக் காலகட்டத்தில், பொறுப்புகள் அதிகரிப்பதால் உண்டாகும் மன அழுத்தத்துடன், இந்த உடலியல் மாற்றங்கள் கொடுக்கும் அசவுகரியங்களும் சேர்ந்து மாதவிடாய் நிற்கும் பெண்களின் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாதவிடாய் நிற்றலை எதிர்கொள்ளல்
உடலியல் மற்றும் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும் இக்கட்டத்தில், நல்ல ஆரோக்கிய பழக்கங்களை கடைபிடித்தால், எந்த மாற்றங்களையும் எளிதாக எதிர்கொள்ளலாம். சத்தான சரிவிகித உணவுகள் எடுத்துக்-கொள்வது, குறிப்பாக கால்சியம் நிறைந்த உணவைச் சேர்த்துக்கொள்வது, முடிந்த அளவுக்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவது, புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தைத் தவிர்த்தல், ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனநிலையை பராமரிப்பது, தேவைப்பட்டால் மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்-களின் அறிவுரையைப் பெறுவது என எளிதாகவே இந்த கட்டத்தைப் பெண்கள் கடக்க முடியும்.
மாதவிடாய் நிற்றல் ஏற்படுவது ஓர் இயற்கையான செயல்முறை. அதில் நாம் தலையிட முடியாது. ஆனால், அதனால் ஏற்படும் சில விளைவுகளை சமாளிக்கலாம். குறிப்பிட்ட சில அறிகுறிகளையும், அவற்றை எப்படி சமாளிப்பதென்பதையும் இங்கு பார்க்கலாம்:
மாதவிடாய் நிற்றல் சமாளிப்பது எப்படி?
உடல் வலிகள், வலிமைக் குறைதல், சத்துக் குறைபாடுகள்
உடற்பயிற்சி: நடைப்பயிற்சி இதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலை நடைப்பயிற்சி செய்யலாம். நல்ல காற்றோட்டம் கிடைக்கக்கூடிய இடங்கள், பூங்காக்கள், அல்லது கடற்கரை சாலைகளில் நடைப்பயிற்சி செய்யலாம்.
உணவு முறை: பசியெடுக்கும்போது மிக எளிதாக சீரணிக்கத்தக்க உணவுகளை உண்ணுதல் வேண்டும். மசாலா நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். நீண்ட பட்டினி, உபவாசம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். காலையில் சரியான நேரத்தில் சிற்றுண்டி, மதியம் காய்கள், கீரைகள் கலந்த அளவுடன் ஆன உணவு, இரவு அரை வயிறு மட்டுமே நிரம்பக்கூடிய எளிதில் சீரணமாகக்கூடிய உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். நொறுக்குத் தீனி தவிர்த்துவிட வேண்டும். காபி, டீ, அளவுடன் அருந்த வேண்டும், தவிர்ப்பது மிக நல்லது.
உடல் தளர்ச்சியை போக்க ஊட்டச்-சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். பால், மீன், முட்டை, இறைச்சி, கீரைகள் ஆகியவற்றையும் அவசியம் சேர்த்துக் கொள்ளலாம். கால்சியம் மற்றும் இரும்புச் சத்து, வைட்டமின் பி, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் மாதவிடாய் நிற்கும் காலத்து சோர்வினைப் போக்கி, உடல் வலிமையை மீட்டெடுக்க முடியும். பயறு மற்றும் பருப்பு வகைகள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கழிவுகளை வெளியேற்றும் தண்ணீர்
மாதவிடாய் நிற்றல் பருவத்தை எட்டி-யவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. சருமத்தை புத்துணர்ச்சி-யாக்கும்.
யோகாவும் உதவும்
தினசரி அரை மணிநேரம் அமைதிப் பயிற்சி மற்றும் யோகா செய்தவன் மூலம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும். அட்ரீனலினை ஊக்குவிக்கும். யோகா பயிற்சி, மனம் சம்பந்தப்-பட்ட பிரச்சினைகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது. அமைதிப் பயிற்சி, மனதில் ஏற்படும் தேவையில்லாத எண்ணங்-களை வெளியேற்று-கிறது. இதனால் எதையும் தெளிவுடன் அணுக முடிகிறது. மேலும் இதய சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
மனம்விட்டுப் பேசுங்கள்
உங்கள் வேதனையை யாரிடமும் சொல்லாமல் தனியாக தவிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் குடும்பத்தினரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நீங்கள் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறீர்கள் என அவர்கள் புரிந்துகொண்டால், அதிகமாக கவலைப்பட மாட்டார்கள். இப்படிச் செய்யும்போது உங்கள் குடும்பத்தார் பொறுமையோடும் கரிசனை-யோடும் நடந்துகொள்வார்கள். உங்களுக்கு உதவி செய்வதுடன் ஆறுதலாகவும் இருப்பார்கள்.
40 வயதில் இருந்து பெண்கள் இத்தகைய வாழ்வியல் மாற்றங்களை சரியான முறையில் கடைப்பிடித்தால், மாதவிடாய் நிற்கும் கட்டத்தை மிகச் சிரமங்களுடன் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. மிகவும் மகிழ்ச்சி-யாகவே ஏற்றுக்கொள்ளலாம்.
-உண்மை இதழ்,16-31,7.16