வெள்ளி, 28 டிசம்பர், 2018

பாலின சமத்துவம், மாணவர் ஒற்றுமையை வலியுறுத்தி மாணவியரின் 'பெண்கள் சுவர்'

மாட்டுச்சாணத்தை தெளித்து  புனிதப்படுத்திய பிற்போக்கு ஏபிவிபி




கொச்சி, டிச.22 வழிபாட்டு இடங்களில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துகின்ற கேரள மாநில அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் ஆதரவு அளிக்கும் வகையில் பெண்கள் சுவர் எனும் பெயரில் மாணவியர் கரங்களை இணைத்துக்கொண்டு  மனித சங்கிலி பரப் புரை மேற்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோட் வரை இப்பரப்புரை நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. இப்பரப்புரையில் லட் சக்கணக்கிலான பெண்கள் கலந்துகொண்டு தங்களின் ஆதரவை அளிக்கின்றனர். இப்பரப்புரையை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அமைப்பாகிய இந்திய மாணவர் சங்கம் நடத்திவருகிறது.

கேரள மாநிலத்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி நாயர் சர்வீஸ் சொசைட்டி இந்து கல்லூரி தலை மையகத்தில் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பாகிய இந்திய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாலின சமத்துவம், மாணவர் ஒற்றுமையை வலியுறுத்தி சுமார் 350 மாணவிகள்  ஒன்றிணைந்த வனிதா மதில் எனும்  பெண்கள் சுவர் மனித சங்கிலி பரப்புரை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தின் வெளியே சுற்றுச்சுவரையொட்டி மாணவியர் பதாகைகளை ஏந்தி சிறிதுநேரம் மனித சங்கிலி அமைத்து பரப்புரை மேற்கொண்டனர். அதன்பின்னர் கலைந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்றனர்.

கல்லூரி வளாகச் சுற்றுச்சுவரையொட்டி சாலையோரத்தில் இந்திய மாணவர் சங் கத்தின் சார்பில் மாணவியர் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பதாகைகள், பலூன்களை ஏந்தி பெண்கள் சுவர் மனித சங்கிலி அமைத்து கோரிக்கைகளை வலியுறுத்தினர். மீண்டும் கேரளாவை புகலிடமாக்காதீர், மாணவர் ஒற்றுமைக்கான பெண்கள் சுவர்  என்கிற வாசகங்களைக் கொண்ட பெரிய பதாகையை மாணவிகள் ஏந்தியிருந்தார்கள்.

பெண்கள் சுவர் (மனித சங்கிலி) பரப்புரை நடைபெற்ற பகுதியிலேயே அக்கல்லூரியின் மற்றொரு பிரிவாகிய ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பாகிய ஏபிவிபி அமைப்பினர்   சிறிதுநேரத்தில், அப்பகுதியில் மாட்டுச் சாணத்தைத் தண் ணீரில் கரைத்து தெளித்து தீட்டு கழித்து புனிதப்படுத்தினார்களாம். அச்செயலை படமாக ஏபிவிபியினர் முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.

முகநூலில் குறிப்பிட்டுள்ளதாவது:

மன்னாது பத்மநாபனின் (கல்லூரி நிறுவனர்) மண்ணில் ஏபிவிபியின் சார்பில் புனிதப்படுத்தப்பட்டது. பினராயினுடைய இந்திய மாணவர் சங்கத்தினர் பெண்கள் சுவர் (மனித சங்கிலி) அமைத்து நம்முடைய கலாச்சாரத்தை பாழ்படுத்தி விட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் பகுதி செயலாளர் சுபின் சாபு கூறியதாவது:

ஒரு பகுதிக்குள் தீண்டத்தகாதவர்கள் நுழைந்தாலோ,தொட்டுவிட்டலோஉயர் ஜாதி இந்துக்கள் மற்றும் அர்ச்சகப் பார்ப்பனர்கள் மாட்டுச் சாணத்தைக் கரைத்துத் தெளித்து தீட்டு கழிப்பார்கள். அதுபோல், ஏபிவிபி அமைப்பினர் பார்ப் பனியத்தை தங்களின் செயல்மூலமாக செயல்படுத்தியுள்ளனர். ஏனென்றால், மறுமலர்ச்சிக்கான பரப்புரை மற்றும் பிற முற்போக்கு இயக்கங்களின் பரப்புரைகளால் ஆத்திரமடைந்ததாலேயே இதுபோன்று செய்துள்ளார்கள் என்றார்.

கோட்டயம் மாவட்ட இந்திய மாணவர் சங்க இணை செயலாளர் ஜஸ்டின் ஜோசப் கூறியதாவது:

இப்பரப்புரையில் கலந்துகொள்ள மாணவியர் பெரிதும் ஆர்வத்துடன் உள்ள நிலையில், ஏபிவிபி அமைப்பினர் அச்சுறுத்தி வருகின்றனர். இந்திய மாண வர் சங்கம் பரப்புரை நடத்தும் இடங் களில்ஏபிவிபிஉள்ளிட்டஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எதிர்ப்புறமாக நின்று எங்கள் பரப்புரைக்கு ஆதரவளிக்க வரு வோருக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். கல்லூரி நிர்வாகமும் ஏபிவிபிக்கு ஆதரவாக எங்கள் பரப்புரையில் பங்கேற்கின்ற மாண விகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து அடக்குமுறையைக் கையாள்கிறது. இந்த பரப்புரை எப்போதுமே வகுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பாக நடத்தப் படுகிறது என்றார்.

- விடுதலை நாளேடு, 22.12.18

செவ்வாய், 4 டிசம்பர், 2018

பெண்களுக்குத் தேவையான வைட்டமின்கள்

வளரிளம் பருவப்பெண்கள் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கலோரி யின் அளவை தினமும் பூர்த்திசெய்துவிட்டாலே, நியாசின், தயாமின், ரிபோபிளேவின் போன்ற பி வகை வைட்டமின்கள் அவற்றிற்குரிய அளவில் கிடைத்துவிடும். புதிய செல்களின் உருவாக்கத்திற்குத் தேவையான  டிஎன்ஏ மற்றும்  ஆர்என்ஏ உற்பத்திக்கு போலாசின், பி12, பி6 போன்ற வைட்டமின்கள் அவசியம் என்பதால் பட்டைத்தீட்டப் படாத, முழு தானியங்கள், மணிலா, பால், பாலாடைக்கட்டி, தயிர், முட்டை, ஆட்டு ஈரல், பச்சை காய்கள், கீரைகள் போன்ற உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய்க்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்னர் ஏற்படும் லேசான உடல் எடை அதிகரிப்பு, மார்பகத்தில் அழுத்தம், கண்ணில் லேசான வீக்கம், வயிற்று வலி, செரிமான சிக்கல், மனஅழுத்தம், உணவின் மீது வெறுப்பு, அதிக இனிப்பு அல்லது உப்பு சேர்த்த உணவுகளின்மீது விருப்பம், திடீரென்று அதிகரிக்கும் பசி, வகுப்பில் கவனமின்மை, உடல் மற்றும் மனச்சோர்வு போன்ற முன்மாத விடாய் பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டுமெனில், வைட்டமின் பி6 ஒரு நாளைக்கு 100 மி.கிராம் என்ற அளவில் உணவில் சேர வேண்டும். பிற வைட்டமின்களான வைட்டமின் ஏ 15 மற்றும் 18 வயதில் 60; 400 மைக்ரோ கிராமும், வைட்ட மின் ஏ யானது 13 மற்றும் 18 வயதில வயதில் 40 மி.கிராமும் தேவைப்படுகிறது.

-  விடுதலை நாளேடு, 4.12.18

பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்



ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு காங்கோ நாட்டைச் சேர்ந்த டெனிஸ் மக்வெஜ் மற்றும் ஈராக் நாட்டின் யாசிடி இனத்தைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் நாடியா முராட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.


சிரியா எல்லையை ஒட்டியுள்ள ஈராக் நாட்டின் சின்ஜார் நகரத்தை சேர்ந்த நாடியா முராட், கடந்த 2014-இல் அய்.எஸ். தீவிர வாதிகள் சின்ஜார் நகரத்தை தாக்கியபோது பாலியல் அடிமையாக மொசூலுக்கு கடத்தப் பட்டார். அங்கு தீவிரவாதிகளின் கூட்டு பலாத்கார பாலியல் வன்முறைக்கு ஆளாகி மூன்று மாதங்களுக்குப் பின் தப்பிச் சென்று ஜெர்மனியில் அவரது சகோதரியிடம் அடைக்கலமானார். போரில் ஆண்களைக் கொன்று பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் அவலத்தை நாடியா வெளிப் படுத்தியதோடு, தன்னுடைய யாசிடி இன மக்களுக்காகவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்காகவும் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வரு கிறார். 2016-ஆம் ஆண்டு முதல் பாலியல் அடிமைகளுக்காக அய்.நா.வின் நல்லெண்ண தூதராக உள்ள நாடியா முராட் தன்அனுப வத்தை கூறுகிறார்:


2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று இரவு வடக்கு ஈராக் எல்லைப் பகுதியில் உள்ள சின்ஜார் நகரத்திற்குள் நுழைந்த அய். எஸ். தீவிரவாதிகள் சிறிய கிராமத்தில் இருந்த எங்களை சிறைப்பிடித்த போது, என்னுடைய தாயார் மற்றும் ஆறு சகோதரர்களை சுட்டுக் கொன்றனர். என்னையும், மற்ற இளம் பெண்களையும் மொசூலுக்கு கடத்திச் சென்றனர். எங்களை சிறை வைத்த இடத்தில் ஏராளமான பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.  அவர்கள் அனைவருமே எங்களை பாலியல் அடிமை களாகவே நடத்தினர். ஆனால் அவர்கள் நடத்தும் பத்திரி கையில், மேலும் பல புதிய பெண்களை கவர்வதற்காக பெண்களைப் பற்றி உயர்வாக எழுதுவார்கள். நாங்கள் சிறைவைக்கப்பட்ட இடம் திறந்த வெளியாக இருந்ததால் சுலபமாக என்னால் தப்பிக்க முடிந்தது. சிலரது உதவி யால் ஜெர்மனியில் உள்ள என் சகோதரியிடம் தஞ்சமடைந்தேன்.


என்னுடைய மிகப்பெரிய மூன்று தவறுகளில் முதலாவது நான் குர்து இனத்தைச் சேர்ந்தவள், துருக்கி, ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் வசிக்கும் குர்து இன மக்கள், பல நூற்றாண்டுகளாக தங்களுக்குரிய உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். இரண்டாவது நான் உலகிலேயே மிக பழமை யான யாசிடி பிரிவை சேர்ந்தவள். நாங்கள் சாத்தானை வணங்குபவர்கள் என்பது சன்னி பிரிவினர் நம்பிக்கையாகும். மூன்றாவது நான் ஒரு பெண்ணாக பிறந்தது. எந்த ஆண் வேண்டுமானாலும் என்னை சுலபமாக அடையமுடியும்.


குர்து பிரிவினரோ, சன்னி பிரிவினரோ அவர்களில் ஒரு அங்கமாக யாசிடி பிரிவினரை அங்கீகரிப்பதில்லை. எங்களை சிறை பிடித்த தீவிரவாதிகள் அன்றிரவு கிராமங் களையும், வழிபாட்டு தலங்களையும் அடித்து நொறுக்கி கொளுத்தியதோடு, கல்லறைகளை கூட சேதப்படுத்தினர். ஆண்களை வரிசை யாக நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இவர்களை எதிர்த்து போராட வேண்டிய குர்து ராணுவப் படையினர் சந்தடி யில்லாமல் இருட்டில் மறைந்தனர். தப்பிவந்த நான் பெண்களை வணிக பொருளாக கருது வதை எதிர்த்தும், என் இன மக்களை காப் பாற்றுவதற்காகவும் போராடத் தொடங் கினேன். இது குறித்து அதிகம் பேசினேன். நான் பட்ட துயரங்கள் என்னோடு முடியட்டும் என்ற நினைப்பில் கடைசிப் பெண் என்ற தலைப்பில் என் சுயசரிதையை எழுதி வெளியிட்டேன்.  என்னைப்போன்று பாலியல் வன் முறைக்கு ஆளான பெண்களை இந்த சமூகம் குற்றவாளிகள் போல் பார்ப்பதை எதிர்த்தேன். நாஜிக்களை போல் இந்த அய்.எஸ். தீவிரவாதிகளையும் போர்க் குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டுமென்று குரல் எழுப்பினேன். இதற்கு மனித உரிமை ஆர்வலர்களும், வழக் குரைஞர்களும் ஆதரவளிக்க முன்வந்தனர்.


இன்று எனக்கு உலகின் மிகப்பெரிய விருதான நோபல் பரிசு கிடைத்தது குறித்து பெருமைப்படுகிறேன். பெரும்பாலான உலக நாடுகளில் சரிசமமான அளவில் பெண்கள் எண்ணிக்கை உள்ளது. அவர்களில் பாலின வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு எதிராக போராடுவதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்த பெண்கள் அனைவரும் முன்வர வேண்டும். அதற்கு வழிகாட்டியாக நான் இருப்பேன். பெண்கள் உரிமைக்காக இறுதி வரை போராடுவேன் என்று கூறும் நாடியா முராட், இம்மாத இறுதியில் மும்பை வரவுள் ளார். அப்போது அவருக்கு இங்குள்ள ஹார்மனி பவுண்டேஷன் பெருமைக்குரிய மதர்தெரசா நினைவு விருது வழங்கி கவுர விக்கவுள்ளது.


-  விடுதலை நாளேடு, 4.12.18

செவ்வாய், 13 நவம்பர், 2018

முதல் மகளிர் கபடி உலகக் கோப்பையை பெற்று தந்த பெண்



பெருநகரங்களில் குவிந்து கிடக்கும் வசதி, வாய்ப்பைப் பயன்படுத்தி விளை யாட்டு வீராங்கனைகளாவோர் ஒரு ரகம். வசதி வாய்ப்பு எதுவுமே இல்லாத கிராமப்புறங்களில் பிறந்து தன்னம்பிக்கையால் வீராங்கனைகளாவோர் இரண்டாவது ரகம். இந்திய மகளிர் கபடி அணியின் கேப்டன் மமதா பூஜாரி இதில் இரண்டாவது ரகம். பல்வேறு சவால்களையும் இடையூறுகளையும் சந்தித்து, பின்னர் கபடி விளையாட்டில் கில்லியானவர் இவர். முதல் மகளிர் கபடி உலகக் கோப்பையை இந்தி யாவுக்குப் பெற்றுதந்த கபடி ராணியும் இவரே!

கருநாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹெர்மண்டே என்னும் ஊரில் மமதா பிறந்தார். பள்ளியில் படித்த காலத்திலேயே எல்லா விளையாட்டுகளும் மமதாவுக்கு அத்துப்படி. கோகோ, கைப்பந்தாட்டம், தடகளம் போன்றவை அவருக்குப் பிடித்தமானவை. 1990-களில் கபடி அணி இந்தியாவில் கால் பதிக்கத் தொடங்கியது. பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் அந்தக் காலகட்டத்தில்தான் கபடி அணிகள் உயிர்பெற்றன. மமதா 12ஆம் வகுப்பு படித்தபோதுதான் கபடி விளையாட்டு அவருக்கு அறிமுகமானது.

மமதா கபடி விளையாடத் தொடங்கிய காலத்தில் களிமண் தரையில்தான் பயிற்சி மேற்கொண்டார். விளையாடிவிட்டு வீடு திரும் பும்போது உடை முழுவதும் அழுக் காகிவிடும். கை, கால்களில் சிராய்ப்புகள் இருக்கும். இந்தக் காயங்கள் மமதாவின் திருமணத்துக்குத் தடையாக வந்துவிடுமோ என்று அவருடைய பெற்றோர் அச்சப்பட்டார்கள்.

வீட்டில் மூத்த பெண்ணான மமதாவுக்கு இரண்டு சகோதரிகள் என்பதால், அவரது விளையாட்டு ஆர்வம் பெற்றோருக்குச் சற்றுக் கவலையளித்தது. ஒரு கட்டத்தில் கபடி விளையாட மமதாவை அவர்கள் அனுமதிக்க மறுத்தார்கள். ஆனால், மமதாவின் பயிற்சியாளர் அதற்குச் சம்மதிக்கவில்லை. மமதாவின் பெற்றோரைச் சமாதானப்படுத்தி அவரை விளையாடவைத்தார்.

நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்ட மமதா, அடுத்த மூன்று ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் பங் கேற்று உச்சம் தொட்டதன் பின்னணிக் காரணம்  அவரது உழைப்பு மட்டுமே. அந்தக் காலகட்டத்தில் தேசியக் கபடி அணியில் முதன்மை வீராங்கனையாக அவர் உருவெடுத்திருந்தார். ஹரியாணா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து வந்த வீராங்கனைகளைவிட இந்தியக் கபடியில் மமதா ஆதிக்கம் செலுத்தினார்.

விளையாட்டில் ஆதிக்கம்

2006இல் கிராமத்தில் இருந்த அனைவரும் மமதாவை வரவேற்கப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்கள். இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்துடன் திரும்பிய மமதாவை ஊரே திரண்டு வந்து வரவேற்றது. தொடக்கத்தில் மமதா கபடி விளையாடுவதைப் புறம்பேசிய ஊர்க்காரர்கள், அந்த வெற்றிக்குப் பிறகு மமதாவைப் புகழ்ந்தார்கள்.

கபடி விளையாட  எக்காரணம் கொண்டும் தடை போட்டுவிடாதீர்கள் என்று மமதாவின் பெற்றோரிடம் அன்புக் கோரிக்கை வைத்தார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் மமதாவை நினைத்துப் பெருமையடைந்தார்கள்.

முத்திரை வெற்றி

இது மமதா பங்கேற்ற முதல் சர்வதேசத் தொடர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாகும் அளவுக்கு மமதா உயர்ந்தார்.  கர்நாடக மாநிலத்தின் முதன்மை விளையாட்டு வீராங்கனையாகவும் ஆனார். 2008ஆம் ஆண்டில் மகளிர் கபடி அணியின் கேப்டனாக மமதா உயர்ந்தார். 2010ஆம் ஆண்டில் சீனாவின் குவாங்ஸு நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இவரது தலைமையில்தான் இந்திய அணி சென்றது. தங்கப் பதக்கத்துடன் இந்திய அணி நாடு திரும்பியது.

ஒரு வீட்டில் ஒரு பெண் வேலைக்குச் சென்றால், அந்தக் குடும்பமே உயரும் என்று சொல்லப்படுவதைப் போல கபடியால் கிடைத்த ரயில்வே வேலையால் மமதாவின் குடும்பமும் இந்தக் காலகட்டத்தில் உயர்ந்தது. கபடி விளையாட்டு மூலம் தனக்குக் கிடைத்த பரிசுப் பணத்தை வைத்து சொந்தமாக வீடு கட்டி, தன் பெற்றோருக்கு அர்ப்பணம் செய்தார் மமதா.

2012ஆம் ஆண்டில் பாட்னாவில் நடை பெற்ற முதல் மகளிர் உலகக் கோப்பைக் கபடி போட்டி மமதாவின் தலைமைப் பண்பு வெளிப்பட ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அந்த உலகக் கோப்பையில் இவரது தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இந்த வெற்றி மமதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அந்த வெற்றிக்குப் பிறகு மமதாவை கபடி ராணி என்று செல்லமாக அழைக்கத் தொடங் கினார்கள்.

திருமணத்துக்குப் பிறகு விளையாட்டை விட்டுவிட வேண்டும் என்று மமதாவின் பெற்றோர் அவரிடம் ஏற்கெனவே வாக் குறுதி பெற்றிருந்தார்கள். அதனால், திரு மணத்துக்கு முன்பாக அதற்குத் தன்னைத் தயார்படுத்திவந்தார் மமதா.

2013ஆம் ஆண்டில் மமதாவுக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கணவர் அபிஷேக்கின் ஆதரவு அவருக்கு முழுமையாகக் கிடைத்தது.

தொடர்ந்து கபடி விளையாடிய மமதா, 2014ஆம் ஆண்டில் மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றார்.  இதுவரை 11 சர்வதேசப் பதக் கங்களை மமதா பெற்றிருக்கிறார்.

கபடியில் 12 ஆண்டுகளாக நீடித்துவரும் இந்தச் சாதனைப் பயணத்தில் ஒன்பது முறை தேசிய அளவில் தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 13.11.18

சனி, 10 நவம்பர், 2018

பாலிய விதவையின் பரிதாபம் இந்து தருமத்தின் மகிமை

11.08.1929 - குடிஅரசிலிருந்து..
17.07.1929ஆம் தேதி அலகாபாத் ஹைகோர்ட்டில் நீதிபதிகள் எங்,பெனட் ஆகிய இருவர் முன் னிலையிலும் ஒரு அப்பீல் வழக்கு வாதிக்கப்பட்டது.
தீதுவானி கிராமம் நாராயணசிங்கர் மகள் இருபத்திரண்டு வயதுள்ள பீபியா என்னும் ஒரு பெண்ணுக்கு 5-வது வயதிலேயே மணம் முடிக்கப் பட்டது. அடுத்த ஆண்டில் புருஷன் இறந்து போனான். இவளுடைய ஜாதியில் விதவாவிவாக அனுமதி இல்லாமையால் பீபியா மரணப் பரியந்தம் விதவையாகவே காலம் கழிக்கும்படி நேரிட்டது. அவள் தன்னுடைய புருஷன் குடும்பத்திலேயே வாழ்ந்து வந்தாள்.
சென்ற ஆண்டில் கருத்தரித்துவிட்டாள். இவள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது பிரசவ வேதனை கண்டு குழந்தையைப் பெற்றுக் குழி தோண்டிப் புதைத்துவிட்டாள். மாடு மேய்ப்ப வர்கள் மூலம் பரவின செய்தி போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் பீபியாவை சிசுக் கொலை செய்ததாக நீதிபதி முன்பாக நிறுத்தினார்கள்.
பீபியாவுக்கு நீதிபதிகள் தீவாந்திர திட்சை விதித்து மாகாண அரசாங்கத்தார் கருணைக்கும் சிபாரிசு செய்திருக்கின்றனர். இந்து தருமத்தின் மகிமையே மகிமை!
- விடுதலை நாளேடு,10.11.18

புதன், 7 நவம்பர், 2018

இந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை



அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியிலி ருந்து தரையை எட்டிப் பார்த்தாலே பலருக்கும் தலை கிறுகிறுத்துவிடும். பறக்கும் விமானத்திலிருந்தோ பெரிய மலைகளி லிருந்தோ குதிக்க வேண்டும் என்றால் எப்படி யிருக்கும்? முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போய்விடும். பார்ப்பவர்களுக்குப் பீதியூட்டும் இந்த சாகச விளையாட்டை அந்தப் பெண் அநாயசமாகச் செய்து, இந்தியாவின் சாகச மங்கையாக மாறினார். அவர், இந்தியாவின் முதல் ஸ்கை டைவிங் வீராங்கனையான ரேச்சல் தாமஸ். சிறுவயதில் பறவையைப் போல பறக்க முடியாதா என குழந்தைகள் ஏங்குவார்கள். ரேச்சலும் அப்படித்தான் ஏங்கினார். விமானங் களைப் பார்க்கும் போதெல்லாம் பறக்கும் ஆசை, அவருக்குள் பீறிட்டு எழும். சிறுவயதில் மனத்தில் ஆழமாகப் பதிந்த இந்த ஆசை அவர் வளர்ந்த பிறகு செயல்வடிவம் பெறத் தொடங்கியது.

ஆக்ராவில் இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு  நடுவானில் பறக்கவும், மலையிலிருந்து குதித்துப் பறக்கவும் பயிற்சி வழங்கிவந்தது. ராணுவத்தினருக்கு மட்டுமே வழங்கப்படும் பயிற்சி இது. ஆனால், சாதாரணக் குடிமகளாக இந்தப் பயிற்சியைப் பெறும் பாக்கியம் ரேச்சலுக்கும் கிடைத்தது. 1979ஆம் ஆண்டில் 24 வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகுதான் அந்தப் பயிற்சியில் ரேச்சல் சேர்ந்தார். அப்படிக் கிடைத்த பொன்னான வாய்ப்பைப் பயன் படுத்தி அடிப்படை பயிற்சியை முடித்து ஸ்கை ஜம்பிங் செய்யக் கற்றுக்கொண்டார்.

ஸ்கை ஜம்பிங், டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளில் ஆண்கள் மட்டுமே ஈடு பட்ட காலம் அது. அந்தச் சாகசத்தில் களம்கண்ட முதல் இந்தியப் பெண் என்ற சிறப்போடு ஸ்கை டைவிங்கில் குதித்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு அவர் செய்த இந்தச் சாகசம், இந்தியா முழுவதும் அவருக்குப் புகழ் வெளிச்சத்தைத் தந்தது. இந்தியாவின் முதல் பெண் ஸ்கை டைவர் என்ற சிறப்பு பெற்றதால், அந்தச் சாகச விளையாட்டில் ஈடுபட அவருக்கு ஏ லைசென்ஸ் சான்றிதழை இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு வழங்கியது.

1983ஆம் ஆண்டில் பல நாடுகளுக்குச் சென்ற ரேச்சல், காட்சி ரீதியிலான டைவிங் செய்து அசத்தினார். தொடர்ந்து ஸ்கை டைவிங்கில் இவர் செய்துகாட்டிய சாகசங்கள் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை ஈர்த்தன. ஸ்கை டைவிங்கில் மேலும் நுணுக் கங்களை அறிந்துகொள்ள அரசாங்கமே அவரை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தது.

இந்தப் பயிற்சியின்போது கலிபோர்னி யாவில் 150 முறை டைவிங் செய்து தனது பயிற்சியை நிறைவு செய்தார். பயிற்சி யாளருடன் ஒருசேர சேர்ந்து நடுவானில் குதிக்கும் டேண்டம் ஜம்பிங் எனும் பயிற்சி யையும் முறைப்படி கற்றுத் தேர்ந்தார்.  நேரத்தைக் கணக்கிட்டுத் துல்லியமாகக் குதிக் கும் பயிற்சியிலும் நிபுணத்துவம் பெற்றார்.

கடல் கடந்த சாகசம்


தொடர்ந்து ஸ்கை டைவிங்கிலும் ஜம்பிங்கிலும் ஈடுபட்டுவந்தபோதும், சில ஆண்டுகள் கழித்துத்தான் சாகசப் போட்டி யாளராக ரேச்சல் களமிறங்கினார். அவரது திறமையை வெளிப்படுத்த 1987ஆம் ஆண்டு உலக பாராசூட்டிங் வாகையர் பட்டப் போட்டி தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்றது. இந்தியா சார்பாகப் பங்கேற்ற முதல் நபர் என்ற பெருமையோடு இந்தப் போட்டியில் ரேச்சல் பங்கேற்றார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி இலக்கைப் பூர்த்தி செய்தார் ரேச்சல்.

1989ஆம் ஆண்டு தாய்லாந்து ஓபன் பாராசூட்டிங் வாகையர் பட்டப்போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற அதே காலகட்டத்தில் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க ரேச்சல் தவற வில்லை.

பெருமைமிகு அங்கீகாரம்


1991ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்தார். இந்திய விமான சாகசக் கூட்டமைப்பு நடத்திய இந்தப் போட்டி யில், பெண் போட்டியாளராகப் பங்கேற்ற, ஒரே வீராங்கனை ரேச்சல் மட்டுமே. இதே போல 1995ஆம் ஆண்டில் ஆக்ராவில் நடைபெற்ற தேசிய ஸ்கை டைவிங் வாகையர் பட்ட போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்து சாதித்தார்.

1995ஆம் ஆண்டில் போபால் நகரில் தேசிய இளையோர் திருவிழா நடை பெற்றபோது நடந்த ஒரு நிகழ்வை ரேச்சல் பெருமையான விஷயமாகக் குறிப்பிடுவது வாடிக்கை. இந்த நிகழ்வில் அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவும் பங்கேற்றார். ரேச்சல் தரையை நோக்கி வரும் போது எந்தப் பகுதியில் அவர் தரையிறங் குவார் என்பதை அறிய ஆர்வமிகுதியால் சங்கர் தயாள் சர்மா எழுந்து நின்று பார்க்க ஆரம்பித்தார். வானில் பறந்தபோதே இதைக் கண்ட ரேச்சல், இதைத் தனக்குக் கிடைத்த பெருமைமிகு அங்கீகாரமாகக் குறிப்பிடுகிறார்.

18 நாடுகளில் 656 முறை ஸ்கை டைவிங் செய்து சாதித்திருக்கிறார் ரேச்சல். 16 முறை விமானத்திலிருந்து நடுவானில் குதித்து, சாகசத்தை அரங்கேற்றியிருக்கிறார். இவரது வீரதீர சாகசத்தைக் கண்டு தேசிய சாகச விளையாட்டு விருதை மத்திய அரசு வழங்கிக் கவுரவித்தது. 2005ஆம் ஆண்டில் இந்தி யாவின் நான்காவது பெரிய விருதான பத்மசிறீ விருதும் ரேச்சலுக்கு வழங்கப்பட்டது. தற்போது 63 வயதாகிவிட்ட நிலையிலும் ஸ்கை டைவிங் செய்கிறார். இதற்காக தினமும் 6 கி.மீ. தொலைவு நடப்பதையும் ஓடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஸ்கை டைவிங் பயிற்சியாளராகவும் ஆசிரி யராகவும் செயல்பட்டு இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டிவருகிறார்.

- விடுதலை நாளேடு, 6.11.18