வெள்ளி, 28 அக்டோபர், 2016

மதராஸ் மாகாணத்தின் ஒரே பெண் அமைச்சர்


தமிழக மாநில எல்லை வரையறுக்கப்படுவதற்கு முந்தைய மதராஸ் மாகாணத்தின் ஒரே பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் விடுதலைப் போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி.
சமூக சீர்திருத்தவாதியான அவர் சிறு வயதிலிருந்தே பெண்கள் மேம்பாட்டுக்காக உழைத்தவர். 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்களில் முன்னின்றாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று சேவை செய்யவும் ருக்மிணி லட்சுமிபதி தவறவில்லை.
தேர்வு பெற்ற முதல் பெண்
மதராஸ் மாகாணத்தில் ஆங்கிலேயர் - இந்தியர் என்ற இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்ட பிறகு, மதராஸ் மாகாண சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் 1934-ல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் சார்பில் ருக்மிணி வெற்றி பெற்றார். இதன் மூலம் மதராஸ் மாகாணத்துக்கான தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் பெண் என்ற பெரு மையை அவர் பெற்றார். 1937-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற அவர், மதராஸ் மாகாண சட்டப் பேரவையின் துணை சபாநாயகராகவும் பொறுப்பேற்றார்.
இரண்டாவது உலகப் போருக்கு முன்னதாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1939இல் மதராஸ் மாகாண காங்கிரஸ், அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகியது. தொடர்ந்து காந்தி விடுத்த அழைப்பின் பேரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். அதில் ஈடுபட்ட ருக்மிணி லட்சுமிபதி 1940இல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மருத்துவ வளர்ச்சிக்கு ஊக்கம்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946இல் நடைபெற்ற மதராஸ் மாகாண இரண்டாவது சட்டப்பேரவை தேர்தலில் ருக்மிணி லட்சுமிபதி வெற்றிபெற்றார். அப்போது டி. பிரகாசம் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் ருக்மிணி இடம்பெற்றார். அவருக்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டது.
மதராஸ் மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த முதல் பெண் அமைச்சர் அவரே. மாகாணத்தில் நல்ல மருத்துவக் கல்லூரிகளின் தேவையையும், மருத்துவப் பணியில் இந்தியர்களை நியமிக்க வேண்டியதன் முக்கியத் துவத்தையும் வலியுறுத்தினார். அப்போது மதுரையிலும் ஆந்திரத்தின் குண்டூரிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க ருக்மிணி கையெழுத்திட்டார். இந்திய மருத்துவ முறைகளுக்குக் கவனம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். அவருடைய கணவர் அசண்ட லட்சுமி பதி பிரபல ஆயுர்வேத மருத்துவர் என்பது குறிப் பிடத்தக்கது.
நாடு விடுதலை பெற்ற பிறகு மதராஸ் மாகாண அமைச்சரவை கலைக்கப்பட்டாலும், 1951இல் இறக்கும் வரை ருக்மிணி எம்.எல்.ஏவாகத் தொடர்ந்தார். அதன் பிறகு மதராஸ் மாகாணம் மறுவரையறை செய்யப்பட்டதால், பழைய மாகாணத்தில் செயல்பட்ட ஒரே பெண் அமைச்சர் அவரே.
அவரை கவுரவப்படுத்தும் வகையில் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்கள் அமைந் துள்ள சாலைக்கு ருக்மிணி லட்சுமிபதி சாலை  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 -விடுதலை,20.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக