டில்லி உயர்நீதி மன்றம் தொடங்கி 47 ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும் தலை மை நீதிபதி நாற்காலி யில் இதுவரை எந்த பெண் நீதிபதியும் நியமிக்கப்படவில்லை. இத்தனை காலமாக தலைமை நாற்காலி அதற்குத் தகுதியான ஒருவரை தேடிக் கொண்டிருந்தது போலும்!
நீதிபதி ரோஹினி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் பிரிவில் பட்டம் படித்துவிட்டு விசாகப்பட்டினத்திலுள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.
இத்தனை காலத்துக்குப் பிறகு டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நாற்காலி இவரது உழைப்புக்கும் திறமைக்கும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் டில்லி உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் தலைமை நீதிபதி ஜி.ரோஹினி என்ற தனி மகுடம் சட்ட வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது!
டில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்றம் செல்வதால், அந்தப் பதவிக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான இவர் நியமனமானார்.
2014 ஏப்ரல் 21 அன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் இவர் பதவி ஏற்கும்போது அங்கு மொத்தம் 40 நீதிபதிகள் இருந்தனர். அதில் இவரோடு சேர்த்து 10 பெண் நீதிபதிகள். இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள்.
முதன்முதலாக இவர் வழக்கு கட்டுகளோடு வாதிட நீதிமன்றத்துக்கு வந்தது 1980இல். கோகா ராகவா ராவ் என்ற மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராக சேர்ந்தார். எழுத்துப் பணியிலும் ஆர்வம் செலுத்தினார். ஆந்திராவில் அன்றைய சட்ட ஜர்னலில் ரிப்போர்ட்டராகவும் களமிறங்கினார். பின்னர் எக்சிகியூடிவ் எடிட்டராகவும் பொறுப்பு வகித்தார்.
1995 அரசு வழக்கறிஞராக நியமனமானார். ஆந்திரப் பிரதேசத்தில் 2001ல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார், அதற்கடுத்த ஆண்டே நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பார் மற்றும் பெஞ்சுக்கான நல்லுறவு போன்றவற்றிலும் கவனம் செலுத்தி, சிறப்புற செயல்படுத்தினார். ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் சேர்மனாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மூத்த நீதிபதியாக ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் பதவியிலிருந்த ரோஹினி குடியரசுத் தலைவரின் அங்கீகார கடிதம் வெளியானதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியாக டெல்லிக்கு மாற்றலானார்.
இந்தியன் விமன் நெட்வொர்க் கூட்டத்தில் பெண்கள் மற்றும் மனித உரிமை என்ற தலைப்பில் கையேடு வெளியிட்டுள்ளார் ரோஹினி. டில்லி உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற பிறகு, வழக்கு விசாரிப்பில் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளார்.
-விடுதலை,15.12.15