சனி, 21 மார்ச், 2015

நாகம்மாள் தகனம்

தோழர் .வெ.ரா.நாகம்மாள் அவர்கள் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு இனிதாங்காது என்ற நிலையில் ஆஸ்பத் திரியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வந்ததும் கடைசி ஸ்திதியில் செய்யக்கூடிய சிகிச்சைகளை செய்து பார்த்ததும் இரவு 7-45 மணிக்கு அம்மையார் ஆவி நீத்தார்கள்.
உடனே அம்மையாரின் உடல் சுத்தம் செய்யப் பட்டு நன்கு அலங்கரித்து .வெ.ரா. அவர்கள் இல்லத்தின் முன் மண்டபத்தில் யாவரும் எளிதில் பார்த்துச்செல்ல வசதியுடன் அழகிய பெட்டியில் அடக்கம் செய்து வைக்கப்பட்டது. உடனே 8-30 மணிக்கு யாவருக்கும் (.வெ.ரா. உள்பட) சாப்பாடு நடந்தது. ஊர் பிரமுகர்களும், வெளியூர் தோழர்களும் இரவு முழுவதும் வந்து கொண்டே இருந்தார்கள்.
அநேகமாக எல்லோரும் இரவு முழுவதும் விழித்துக்கொண்டே கேளிக்கையாய் இருந்ததோடு இடை இடையே டீ வழங்கப்பட்டு வந்தது. முக்கியமாய் யாவரும் கவனிக்க வேண்டியதும், கவனித்ததுமான சம்பவம் யாதெனில் நெருங்கிய உறவினர் முதல் உற்ற தோழர்கள் வரை யாவரும் அழுதல் என்னும் அநாகரிகமான காரியத்தை அறவே ஒழித்து ஆண் பெண் அடங்கலும் ஒற்றுமையாய் பேசிக்கொண்டும் நாளைய காரியங்கள் கவனித்தும் வந்ததே.
மறுநாள் காலை 9 மணி அளவிற்கு தகனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று இரவே துண்டுப் பிரசுரம் ஊரெல்லாம் வழங்கப்பட்டது. அந்தப்படிக்கே மறுநாள் காலையில் எவ்வித சடங்கும் இல்லாமல் ஒரு இரதத்திற்கு ஒப்பான ஒர் அழகிய நாலு சக்கரவண்டியில் அம்மாளின் உடல் மூடப்பட்ட பெட்டி வைக்கப்பட்டு பெட்டியை பட்டாடைகளாலும், புஷ்பங் களாலும்,
அலங்கரித்து வைத்து பல ஆயிரக்கணக்கான ஜனங்கள் பின்தொடர தகனம் செய்ய குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கி வண்டி மெல்ல தள்ளிக்கொண்டு செல்லப்பட்டது. ஊர்வல ஆரம்பத்தில் போட்டோ படக்காரர்கள் பலர் படம் எடுத்தார்கள்.
வழிநெடுக அநேக கடைகளிலும், முக்கியமாய் சுயமரியாதை வாலிபர் சங்கத்தின் முன்னிலும் (மகாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் தலைவருக்கு மாலைகள் சூட்டி உபசரிப்பதை போல்) நிறுத்தி நிறுத்தி மாலைகள் போடப்பட்டு புஷ்பங்கள் வாரி வாரி இறைக்கப்பட்டன.
தகனம் நடக்கும் இடமாகிய காவேரிக்கரை அணுகியதும் உடனே தகன ஏற்பாடுகள் நடந்து
கொண்டேயிருக்கும் போது தோழர் எஸ். மீனாட்சி சுந்தரம் பி.., எல்.டி., அவர்கள் தலைமையில் ஒர் கூட்டம் கூடி வந்திருந்த பிரமுகர்களும், இயக்க தோழர்களும் தங்கள் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் தோழர்கள் சாமி சிதம்பரனார், ராவணதாஸ், சேலம் நடேசன், டாக்டர் கிருஷ்ணசாமி, மாயவரம் சி. நடராஜன், .வி.நஞ்சப்ப செட்டியார், எம்.சிக்கையா, மைதீன் பாட்சா முதலியவர்கள் அம்மையாரின் குணாதிசயங்களைப் பற்றியும்,
வரலாற்றைப் பற்றியும் பேசினார்கள். பின் தோழர் .வெ.ரா அவர்கள் பதில் சொல்லி முடித்தவுடன் கூட்டம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பினார்கள். வெளியூர் பிரமுகர்கள் வந்துகொண்டே இருப்பதுடன், தந்திகளும், கடிதங்களும் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
ஒரு மணி நேரத்தில் எல்லாம் முடிந்தது. தகனம் செய்த பின்பு எவ்வித சடங்கும் அது சம்பந்தமான நடவடிக்கையும் இல்லை. .வெ.ரா. சனிக்கிழமை இரவு சுற்றுப்பிரயாணம் செய்வதற்குத் திருச்சிக்குப் புறப்பட்டு விட்டார்.
குடி அரசு - கட்டுரை - 14.05.1933
- விடுதலை,21.3.15 பக்கம்-7

பெசண்டம்மையாரின் முடிவு


தோழர் அன்னிபெசண்டம்மையார் 20.09.1933 அன்று மாலை 4 மணிக்கு சென்னை அடையாற்றில் முடிவெய்தி விட்டார்கள். அம்மையாரின் வாழ்வு பெண் மணிகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஆண்களுக்கும் ஓர் அறிவுறுத்தல் ஆகும்.
பெண்கள் பாவஜென்மம் என்றும், பேதமையென்பது மாதர்க்கணிகலம் என்றும், பெண்கள் ஆண்களின் காவலுக் குட்பட்டு இருக்க வேண்டியவர்கள் என்றும், அறியாமையும், அயோக்கியத்தனமும், முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் கொண்ட வாக்கியங்களை பொய்யாக்கி அவற்றில் பொதிந் துள்ள சூழ்ச்சிகளை வெளியாக்க வென்றே தோன்றியவர் என்று கருதும்படியானவர் நமது பெசண்டம்மையார்.
தோழர் பெசண்டம்மையார் ஒரு பாதிரியாரின் மனைவி யாவார் பாதிரிகளின் கொடுமையும், பித்தலாட்டமும் அம்மையாரை நாஸ்திகமாக்கி, தெய்வம்இல்லை என்று பிரச்சாரம் செய்யும்படி செய்தது பிறகு புருஷனைவிட்டு பிரிந்தார். பிறகு கர்ப்பத் தடையை யாவருக்கும் பிரச்சாரம் செய்துவந்தார் கர்ப்பத்தடையை சட்டசம்பந்த மாக்கினார். அக்காலத்திலேயே அரசாங்கத்தையும் எதிர்த்து பிரச்சாரமும் செய்தார்.
பின்னர் தனது 32ஆம் வயதுக்கு மேல் மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். பிறகு பல புத்தகங்களை எழுதினார். அதன் பிறகு பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தார். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார் வந்து அச்சபையின் உலக தலைவரானார். பிறகு சென்னையை வாசஸ்தலமாகக் கொண்டார். கிறிஸ்தவ மதத்தை கண்டித்து இந்துமத தத்துவ பிரச்சாரம் என்னும் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தார்.
இதனால் சென்னையில் உள்ள விபூதி பூசும் பார்ப்பனரிடம் மிக செல்வாக்கு அடைந்தார். அய்க்கோர்ட்டு ஜட்ஜ்கள் உள்பட அநேக பெரிய பதவியாளர்களை தனக்கு சிஷ்யராகக் கொண்டார். அரசாங்கத்திலும் ஒரளவு செல்வாக்குப் பெற்று. விபூதிப் பார்ப்பனர்களுக்கு அச்செல்வாக்கை பெரிதும் உதவினார்.
இதுகண்டு பொறாத சென்னை நாமம் போடும் அய்யங்கார் பார்ப்பனர்கள் அம்மையாருக்கு பல தொல்லைகளை விளைவித்தார்கள். அவற்றை சமாளிக்க (முன் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தது போலவே) அரசியலில் தலையிட்டு அரசியல் பிரச்சாரமும் செய்தார்கள். இதன் பயனாயும், அம்மையாரின் அபார சக்தியாலும் இந்தியா முழுமைக்கும் அரசியல் தலைவராயும் விளங்கினார்.
காலஞ்சென்ற தோழர்கள் தாஸர், பாலர், நேரு முதலியவர்கள் எல்லாம் அம்மையாருக்கு சிஷ்யர்களாக இருந்தார்கள். அம்மையார் ஓடி ஆடித்திரிய சக்தி உள்ளவரையில் அய்யங்கார் கூட்டத்தை பொது வாழ்வில் தலை எடுக்க வொட்டாமல் செய்து கொண்டே வந்தார்.
இதன் பயனாகவே (அம்மையாருக்கு அரசியலிலும் மதத்திலும் செல்வாக்கு இருக்கும்வரை) தோழர் சி.விஜயராகவாச் சாரியாராகிய அய்யங்கார் காங்கிரஸ் பிரசிடெண்டாக முடியா மலேயே போய்விட்டது.
இந்தக் காரணத்தால் சென்னை அய்யங்கார்கள் அரசியலில் மிதவாதிகள் ஆகி தோழர்கள் சி.எஸ். கஸ்தூரிரங்கய்யங்கார், சி.விஜயராகவாச்சாரியார், சி.ராஜகோபா லாச்சாரியார், எஸ். சீனிவாசய்யங்கார் முதலிய அய்யங்கார்கள் ஒன்று சேர்ந்து, மறுபடியும் அம்மையாரின் அரசியல் செல்வாக்கை ஒழிக்க வேண்டியவர்களானார்கள்,
இதற்கு பார்ப்பனரல்லாத தோழர்கள் பி.வரதராஜீலு, வி..சிதம்பரம் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப், .வெ.ராமசாமி முதலியவர்களையும், அய்யர் பார்ப்பனரில் தோழர் எஸ். சத்தியமூர்த்தி அய்யர் முதலியவர்களையும் பயன்படுத்திக் கொண்டு, அம்மையாரை எதிர்த்து அம்மை யாருக்கு பல தொல்லைகளும் கொடுத் தார்கள். அம்மையாருக்கு சரியான போட்டித் தலைவராக தோழர் காந்தியாரைப் பிடித்துக் கொண்டுவந்து மகாத்மாவாக்கினார்கள்.
இதன் பயனாகவும் அம்மையாரின் வயோதிகத்தின் பயனா கவும் அம்மையார் அரசியலில் சிறுகச்சிறுக, விட்டுக் கொடுத்துக் கொண்டே வந்துவிட்டார்கள் என்றாலும் அரசாங்கத்தின்மூலம் தனது விபூதிப் பார்ப்பன அய்யர் சிஷ்யர்களுக்கு அளவு கடந்த உதவி செய்து கொண்டே வந்தார்.
தோழர் சர்.சி.பி. போன்றவர்கள் எல்லாரும் உயர்ந்த அந்தஸ்திற்கு அம்மையாராலே ஆக்கப் பட்டவர்கள் ஆவார்கள், அம்மையாரின் அபார சத்தியை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அம்மையார் இந்த உலகம் முழுவதும் ஒரு ஆட்சிக்கு உட்படுத்தி அதன், தலைமை ஸ்தானத்தைக் கொடுத்தால் அதை ஒருகையிலும், அதன் ராணுவ ஆட்சியை மற்றொரு கையிலும்,
உலகமத (போப்) குருவேலை யை உபவேலை யாகவும், பார்க்கத் தகுதியும் ஆற்றலும் உடையவர் என்றே சொல்லுவோம். ஆகவே பெண்களுக்கு எவ்வளவு ஞானம் எவ்வளவு தைரியம் எவ்வளவு சக்தி இருக்கின்றது என்று கணிப்பதற்கு அம்மையார் ஒரு ஒப்பற்ற சாதனமாவார். அப்படிப்பட்ட அம்மையார் தனது 86ஆவது வயதில் முடிவெய்தியதுபற்றி யாரும் வருந்த வேண்டியதே இல்லை.
ஏனெனில் இனி தன்னால் யாதொரு காரியமும் செய்யமுடியாமல் போய்விட்டதென்றால் உடனே முடி வெய்துவிட வேண்டியதுதான் நல்லறிவின் குறிப்பாகும்.
ஆகவே அம்மையாரைத் தாயைப்போலவும் குருவைப் போலவும் தெய்வத்தைப் போலவும் கருதி அம்மையாரைப் போற்றிவந்த அவரது சிஷ்யர்கள் பெரிதும் மனித ஜீவ இயற்கையை உணர்ந்த ஞான வான்கள் ஆதலால் அப்படிப் பட்டவர்களுக்கு பிறரது அனுதாபமோ ஆறுதலோ அவசியம் இல்லையென்றே கருதுகிறோம்.
குடிஅரசு - துணை தலையங்கம் - 24.09.1933
 -விடுதலை,21.3.15பக்கம்-7