ஞாயிறு, 1 அக்டோபர், 2017

பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான சட்டங்கள் எழுத்துரு

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005 
இந்தச் சட்டத்தின்படி பெண்கள், தன் கணவரோ, மாமியாரோ துன்புறுத்தினால் தண்டனை பெற்றுத் தரலாம். கணவன் வீட்டில் மட்டும்தான் என்றில்லாமல் பெற்றோர் தன்னை துன்புறுத்தினாலும் இந்தச் சட்டத்தின் கீழ் புகாரளிக்கலாம். பெரும்பாலும் காதல் திருமணம் செய்ய விழையும் பெண்ணை அடித்து உதைத்துத் துன்புறுத்துவது போன்றவற்றில் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தலாம். இச்சட்டத்தின்படி காவல் நிலையம் சென்று புகாரளிக்கத் தேவை யில்லை. காவல் நிலையத்தில் புகாரளித்தால் எஃப்.அய்.ஆர். போடப்படுவதுபோல, மாவட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் புகாரளித்தால் டி.அய்.ஆர் பதிவு செய்யப்படும். இதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான பெண்கள் கணவனுக்கு எதிராக காவல்நிலையம் செல்லத் தயங்குவதால் இச்சட்டத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர் திருமண தடைச் சட்டம், 2006  
சர்வதேச மகளிர் ஆராய்ச்சி மய்யம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 48 சதவிகிதப் பெண்கள் 18 வயதுக்குள்ளேயே திருமணம் புரிந்து கொள்வதாகக் கூறுகிறது. குழந்தைத் திருமணத்தில் இந்தியா 13ஆவது இடத்தில் இருக்கிறது. இப்பழக்கம் தொன்றுதொட்டு இருப்பதால் அதைத் தடுப்பது சிரமமாக இருக்கிறது. 2007ஆம் ஆண்டு முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, பெண்ணுக்கு குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் ஆணுக்கு 21 ஆகவும் ஆக்கப்பட்டது.இச்சட்டத்தின்படி குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்துவைப்பது குற்றம். ஆயினும் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு இன்றும் பல குழந்தை திருமணங்கள் நடைபெற்றுதான் வருகின்றன.

சிறப்பு திருமணச் சட்டம், 1954
இந்தியாவில் பல மதங்களும், ஜாதி அமைப்புகளும் இருப்பதால் மதம் மற்றும் ஜாதி தாண்டி திருமணம் புரிகிறவர்கள் திருமணத்தை முறையாக பதிவு செய்ய வேண்டுமென்றாலோ,  திருமணத்துக்குப் பின்னான வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டு விவாகரத்து நோக்கிய பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வை நாடவோ இச்சட்டத்தின் படி முறையாக பதிவு செய்தால்தான் மண முறிவு கிடைக்கும். இச்சட்டத்தின்படி திருமணம் செய்ய விரும்புவோர் திருமணப் பதிவு அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பித்தபின் மணம் செய்ய விரும்புவோரின் பெயர்கள் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும். ஒரு மாதத்திற்குப் பின் திருமணம் முறையாக பதிவு செய்யப்படும்.

வரதட்சணை தடுப்புச் சட்டம்,1961 
வரதட்சணை என்பது காலம் காலமாக நம் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் கொடிய விஷம். வரதட்சணை கொடுக் காததற்காக கணவர் வீட்டில் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு பெண்கள் ஆளாகின்றனர். வரதட்சணைக்காக மனைவியை உயிருடன் எரித்த சம்பவங்களும் நாம் அறிந்ததுதான். வரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் எனக் கூறுகிறது இச்சட்டம். வரதட்சணை கேட்பவர்கள் மீதும் கொடுப்பவர்கள் மீதும் இச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம். இச்சட்டத்தின்படி பலர் தண்டனை பெற்றுள்ளனர்.

இந்திய  விவாகரத்துச் சட்டம், 1969

திருமண வாழ்வில் திருப்தியின்மை, வெறுமை, கட்டாயம் போன்ற பல காரணங்களால் இருவரும் மனமொத்தோ அல்லது இணையர்களில் ஒருவரோ விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு நடத்தப்பட்டு, விவாகரத்து வழங்கப்படும்.

பிரசவகால பலன்கள் சட்டம், 1861 
பிரசவ காலத்தின்போது பணிபுரியும் பெண்ணுக்கு அந்நிறுவனம் 80 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும், மருத்துவ செலவையும் வழங்க வேண்டும் எனக்கூறுகிறது இச்சட்டம். இச்சட்டம் பெண்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய சட்டம். பொருளாதாரரீதியாக பெண்களுக்கு உதவவும், வேலையை உறுதி செய்யவும் இச்சட்டம் உதவுகிறது.

மருத்துவரீதியிலான கருக்கலைப்புச் சட்டம், 1971
கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா?  என்பதைத் தெரிந்து கொண்டு, கருக்கலைப்பு செய்வதற்கு எதிராக இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றும் பல நகரங்களில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் பெண் ஆணா பெண்ணா என்று அறிந்துகொள்ளும் வசதியை ரகசியமாக தரும் இடங்களும் செயல்படுகின்றன என்பது உண்மைதான்.

பணியிடங்களில் பெண்களின் மேல் பாலியல் கொடுமை தடுப்புச் சட்டம் 2013  
பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளை தடுப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 36 சதவீத இந்திய நிறுவனங்களும், 25 சதவீத பன்னாட்டு நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நடப்பதில்லை என உறுதிப்படுத்தியிருக்கின்றன. பணியிடங்களில் பாலியல் தொந்தரவு, நெருக்கமாக அணுகுதல், பாலியல்ரீதியிலான சீண்டல் ஆகியவற்றுக்கெதிராக இச்சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தர முடியும்.

பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் தடைச் சட்டம், 1986 
எழுத்து, ஓவியம், விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்களில் பெண்களை தவறாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டம் இது. குறிப்பிட்ட ஒரு பெண்ணை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண் சமூகம் பற்றிய தவறான சித்தரிப்புக்கும் இதன் மூலம் தண்டனை பெற்றுத் தர முடியும். ஆனால் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறைவாகவே உள்ளது.

தேசிய மகளிர் ஆணையச் சட்டம், 1990  
இச்சட்டத்தின்படி லலிதா குமாரமங்கலம் தலைமையில் மகளிர் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. பெண்களின் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு எதிராக நடக்கக் கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறது. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பொருளாதார ரீதியில் வலுவுடையவர்களாக்குவதற்கான முன்னெடுப்புகளை இந்த ஆணையம் மேற்கொள்கிறது.

சம ஊதியச் சட்டம், 1976
எந்தப் பணியிலும் ஆண்-பெண் இருபாலினருக்கும் சமமான அளவிலான வாய்ப்பும், ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. எந்தப் பணியிடமாக இருந்தாலும் பெண் என்கிற காரணத்தால் ஊதியம் மறுக்கப்படக் கூடாது அல்லது குறைக்கப்படக்கூடாது. ஆண்கள் கற்றுக்கொள்ளும், மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.
-விடுதலை,1.8.17