செவ்வாய், 23 அக்டோபர், 2018

முலைவரிச்சட்டம்

#இந்தியாவில் சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடிய காலத்தில் '#முலைவரிச்சட்டம்' என்ற பெயரில் ஒரு சட்டம் அமுலில் இருந்தது. அதாவது #தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் தமது #மார்பின்அளவுக்கேற்ப வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். #மார்பைமறைக்காவிட்டால் வரி செலுத்தத் தேவையில்லையாம். குறிப்பாக #கேரளா, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இச்சட்டம் கடுமையாக அமுலில் இருந்ததாம்.

அப்போது கேரளா #திருவாங்கூர் அரசின் முலைவரிச் சட்டத்துக்கு எதிராக #நாஞ்செலி என்ற தாழ்த்தப்பட்ட பெண் போராடி இருக்கிறாள். 30 வயதை நெருங்கிக் கொண்டிருந்த அழகியான நாஞ்செலியின் மார்புகள் ரொம்பவும் பெரிதாக இருந்ததினால் திருவாங்கூர் அரசு அம்முலைகளுக்கு #இரட்டை வரி செலுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பித்ததாம். அதனால் ஆத்திரப்பட்ட நாஞ்செலி வரி செலுத்த மறுத்துவிட்டாள். ஆனாலும் திருவாங்கூர் அரசு விடாமல் அவளிடம் வரி கேட்டு வற்புறுத்தி வந்தது. ஒருநாள் வரி வசூலிப்பவர்கள் வீடுவரை வந்து நாஞ்செலியிடம் வரி கேட்டபோது, கொஞ்சம் பொறுங்கள் எடுத்து வருகிறேன் என்று வீட்டுக்குள் சென்ற நாஞ்செலி, ஒரு கத்தியுடன் வெளியே வந்தாள்.

#முலைவரிச்சட்ம் அமுலில் இருந்த காலத்தில்
கேரள கடைத்தெருவில் #வாழைஇலையை நிலத்தில் பரப்பி தமது கையிலிருந்த கத்தியால் மார்புகள் இரண்டையும் அறுத்து இலையில் வைத்தாளாம்! அந்தக் கொடுமையான காட்சியை நேரில் பார்த்த #வரிவிதிப்பவர்கள் ஆடிப்போனார்களம். 'இது இருந்தால்தானே வரி கேட்பாய்? நீயே எடுத்துக்கோ' என்று சொல்லிவிட்டு #நாஞ்செலி தரையில் வீழ்ந்து இறந்தாள். இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன #திருவாங்கூர் அரசு உடனடியாக முலை வரிச் சட்டத்தை நீக்கியது. இந்த சம்பவம் நடந்து நூறு வருடங்கள் கடந்து விட்டன. சம்பவம் நடந்த இடம், கேரளாவில் #சேர்தலா அருகே உள்ளது. அதன் பெயர் #முலைச்சிபுரம். அந்த ஊர் மக்கள் இன்னும் #நாஞ்செலியை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனால் கேரளாவில் நாஞ்செலிக்கு எந்த நினைவுச் சின்னமும் கிடையாது. நாமும் தான் எத்தனையோ #மகளிர்தினங்களைக் கொண்டாடி விட்டோம். ஆனால் நம்மில் எத்தனை பெண்களுக்கு #நாஞ்செலியைத் தெரியும்? #பெண்கள் தமது உரிமைகளுக்காக எவ்வாறெல்லாம் போராட வேண்டியிருக்கிறது!

செவ்வாய், 9 அக்டோபர், 2018

முதன் முதலாக சவுதிஅரேபியாவில் வங்கியின் தலைவராக பெண் தேர்வுஜெட்டா, அக். 8- சவுதி அரேபி யாவில் இயங்கும் சவுதி பிரிட் டிஷ் வங்கி மற்றும் அலவ்வால் வங்கியும் ஒன்றிணைக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் இந்த வங்கி 17.2 பில்லியன் அமெ ரிக்க டாலர் (12,560 கோடி) மதிப்புடன் நாட்டின் மிகப் பெரிய 3-ஆவது வங்கியாக உருவெடுத்துள்ளது.

இந்த புதிய வங்கியின் தலைவராக சவுதி அரேபியா வின் பிரபல பெண் தொழில் அதிபர் லுப்னா, அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக பழைமை வாதத்தை காலம் காலமாக கடை பிடித்து வரும் சவுதி அரேபியாவில் முதல் முறை யாக வங்கியின் தலைவராக ஒரு பெண் நியமனம் செய் யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவை நவீன மயமாக்கும் முயற்சியில் பட் டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் ஈடுபட்டுள்ளார். சவுதி வி‌ஷன் 2030 என்ற திட் டத்தின்படி அங்கு வாழும் பெண்களின் வாழ்வில் குறிப் பிடத்தக்க மாற்றங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட் டது.

புதிய வங்கியின் தலைவ ராக நியமிக்கப்பட்டுள்ள லுப்னா அல் ஓலயன் அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தார். போர்பஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018ஆ-ம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பெற்றிருந்தார்.

தங்களது குடும்பத்தினர் நடத்திவரும் தொழில் குழுமத் துக்கு தலைமை வகித்து வருகிறார். சவுதி அரேபியாவின் நிதி துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னு தாரணமாக விளங்குகிறார்.

- விடுதலை நாளேடு, 8.10.18

வெள்ளி, 5 அக்டோபர், 2018

பெண்ணால் முடியும்!

மெட்ரோ ரயில் நிலையங்களை நிர்வகிக்கும்  மகளிர் அணி!
பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் பலகீனமானவர்கள் என்கிற பொய்மைக் கருத்து ஆணாதிக்க சமூகத்தில் இன்றளவும் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. இது முற்றிலும் அறியாமை என்று நிரூபிக்கும் வகையில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் இன்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை மற்றும் மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வரை என இரண்டு வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மொத்தம் 26 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றில் சென்னை கோயம்பேடு மற்றும் ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

நிலையத்தில் அறிவிப்பு செய்வதில் தொடங்கி, பயணச் சீட்டு வழங்குதல், பயணிகளை கையாளுதல், கண்காணிப்புப் பணி, பயணிகளை பரிசோதனை செய்வது, வாடிக்கையாளர் சேவை, ரயில் நிலையத்தை பராமரிப்பது, துப்புரவுப் பணி என அனைத்து வேலைகளிலும் முழுக்க முழுக்க பெண்களே உள்ளனர்.

எல்லாத் துறையிலும் நுண்ணிய பயிற்சி அளித்தால் மிகப் பெரிய அளவில் பெண்கள் சாதனைகளை செய்வார்கள். ஆட்சி நிர்வாகத்திலிருந்து அடிமட்ட வேலைவரை அத்தனைத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராய் பங்கு பெற வேண்டும். அப்பொழுதுதான் நாடும் வீடும் நலம் பெறும். 
                          

                                          விமானம் ஒட்டி சாதித்த வீரப்பெண்!


“ஆண்கள் மட்டும்தான் விமானியாக முடியும். உன்னால் முடியாது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த உனக்கு எதற்கு இந்த கனவு?’’ என்று எத்தனையோ பேர் ஏளனம் செய்த பின்பும் அந்த இலக்கிலிருந்து  காவ்யா பின்வாங்கவில்லை. ஆனால், அவருடைய தந்தை அவருக்கு உறுதுணையாக இருந்தார். விமானி ஆவதற்கான பயிற்சி எடுக்க வேண்டிய கட்டணத்தைச் செலுத்த அவரது பொருளாதாரச் சூழல் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும், அவர் மனம் தளரவில்லை.

அரசு கல்வி உதவியுடன், விமானிக்கான பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற்றார். அரசு உதவியுடன் பெங்களூருவில் விமானி பயிற்சி வகுப்பிற்குச் சென்றார்.வகுப்பில் இரண்டு பெண்கள் மட்டுமே, மற்ற அனைவரும் ஆண்கள், ஆரம்பத்தில் காவ்யாவிற்கு ஆங்கிலம் சரளமாக வரவில்லை. மிகவும் கஷ்டப்பட்டார். தினமும் ஆங்கிலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். நாளடைவில் பயிற்சி முடியும் தருவாயில் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசக் கூடியவராக உருவானார். 2 வருட விமானிக்கான பயிற்சியில் 200 மணி நேரம் விமானத்தை ஓட்டிச் சாதித்தார்.

ஒரு முறை “யார் துணையும் இல்லாமல் விமானத்தில் செல்ல வேண்டும். யார் செல்கிறீர்கள்?’’ என்று பயிற்சியாளர் கேட்ட போது, தயங்காமல், ‘நான் செல்கிறேன்’ என்றார். அப்போது பயிற்சியாளர், ‘நீங்கள் ஒரு பெண்... எவ்வாறு...?’’ என்று தயங்கியுள்ளார். “எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு பெண்களும் நிகரானவர்கள்தான். இதிலும் நான் நிரூபித்துக் காட்டுகிறேன்...’’ என்று சொல்லி, தனியாக விமானத்தை ஓட்டிச் சாதித்து, தமிழகத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை காவ்யா பெற்றார். வறுமையிலும் வெல்ல முடியும் என்று நிரூபித்த இந்த சாதனைப் பெண், சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊக்கசக்தி என்பதில் அய்யமில்லை!  

- உண்மை இதழ், 1-15.9.18

வியாழன், 4 அக்டோபர், 2018

அர்ஜூனா விருது பெற்ற முதல் வீராங்கனைவில்வித்தை விளையாட்டில் சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பெண்கள் இல்லை. சிறுமியாக இருந்தபோது வில்வித்தைப் போட்டி களில் காலடி எடுத்துவைத்த அந்த வீராங்கனை, ஒலிம்பிக் போட்டிவரை பங்கேற்று இந்தியா வுக்குப் பெருமை சேர்த்தார். சர்வதேச அளவில் புகழ்பெற்றார். அவர், டோலா பானர்ஜி.

கொல்கத்தாவுக்கு அருகே உள்ள பாராநகர் தான் டோலா பானர்ஜியின் சொந்த ஊர். சிறு வயதில் மற்ற பிள்ளைகளைப் போல அல்லாமல் டோலாவுக்கு அம் பெய்தும் விளையாட்டு மீதே ஆர்வம் இருந்திருக்கிறது. அந்த விளை யாட்டில் அவர் ஆர்வமாக இருக்கவே, பாராநகரில் உள்ள வில் வித்தைப் பயிற்சி மய்யத்தில் அவருடைய பெற்றோர் டோலாவைச் சேர்த்தனர். படிப்புக்குப் பங்கம் வராமல் வில்வித்தை விளையாட்டைக் கற்றுக்கொண்ட டோலா, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெறத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறிவந்த டோலா, 1996இல் முதன்முறையாகத் தேசிய வாகையர் பட்டப் போட்டியில் பட்டம் வென்றார். அதற்கு அடுத்த ஆண்டே டோலாவுக்குச் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது டோலாவுக்கு 17 வயதுதான். 1996இல் சான்டியாகோவில் நடைபெற்ற இளையோர் உலக வாகையர் பட்டப் போட்டியில் பங்கேற்றதுதான் இவரது சர்வதேச அறிமுகப் போட்டி. இந்தப் போட்டியில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், அங்கே பெற்ற அனுபவம் மற்ற போட்டிகளில் அவருக்குப் பலமாக இருந்தது. அடுத்த ஆண்டே  லாங்க்வி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுத் தன் திறமையை வளர்த்துக்கொண்டார்.

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய காலத்தில், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதை எக்காரணம் கொண்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. 1999இல் ஷில்லாங்கில் தேசிய வில்வித்தை வாகையர் பட்டப் போட்டி நடைபெற்றது.  அந்தப் போட்டியில் அவர் வாகையர் பட்டம் வென்றார். ஒரு வகையில் இது தேசிய அளவில் அவர் பெற்ற முதல் வெற்றியும்கூட. புத்தாயிரத்தில் தொடங்கி அடுத்த சில ஆண்டுகள்வரை சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் மாறிமாறிப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார் டோலா.

இதில் குறிப்பிடும்படியாக 2001இல் அமராவதியில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். வில்வித்தையில் ரெகர்வ் பிரிவில் தேர்ச்சிபெற்றவராக விளங்கிய டோலா, 2002-ல் நடந்த தேசிய வாகையர் பட்டப் போட்டியில்  தங்கத்துக்கு வைத்த குறி தப்பவில்லை. இந்தப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார் டோலா. 2007இல் விஜயவாடாவில் நடந்த தேசிய வாகையர் பட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கம் இவர் வசமானது.

முதல் ஒலிம்பிக் வீராங்கனை

தேசிய விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்ல; இந்தக் காலகட் டத்தில் தொடர்ச்சியாகச் சர்வதேசப் போட்டிகளிலும் டோலா பங்கேற்றார். 2001இல் ஹாங்காங் ஆசிய வாகையர் பட்டப் போட்டி, 2003இல் மியான்மரில் நடந்த ஆசிய வாகையர் பட்டப் போட்டிகளிலும் பங்கேற்றபடி இருந்தார். 2001இல் பெய்ஜிங்கில் நடந்த உலக வில் வித்தைப் போட்டி பெரிய அளவில் அவரைச் சோதிக்க, 2003இல் நியூ யார்க்கில் நடந்த உலக வாகையர் பட்டப் போட்டி அவருக்குக் கைகொடுத்தது. தனி நபர் பிரிவில் சிறப்பாக விளையாடி 13ஆவது இடத்தைப் பிடித்தார் டோலா. அவருடைய இந்தச் சிறப்பான செயல் பாடு, 2004இல் ஏதென்சில் நடந்த ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற உதவியது. ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் டோலா பங்கேற்றதன் மூலம் ஒலிம்பிக் வில்வித்தைப் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றார். உலக வாகையர் பட்டப் போட்டியில் 13ஆவது இடத்தைப் பிடித்திருந்ததால், அவர் மீது ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக பரிச்சயமில்லாத தென்னாப்பிரிக்க வீராங்கனையிடம் தோல்வி யடைந்து முதல் சுற்றிலேயே வெளி யேறினார் டோலா. ஆனால், குழுப் பிரிவில் இந்தியா 8ஆவது இடத்தைப் பிடிக்க பெரிதும் உதவினார். ஒட்டுமொத்தமாக ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 52ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றமடைந்தார் டோலா.

உலக வாகையர்

டோலாவின் பயணத்தில் மறக்க முடியாத ஆண்டு 2007. அந்த ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. தனிநபர் பிரிவில் சிறப்பாக விளையாடி, தங்கப் பதக்கம் வென்று அசத்தினார் டோலா.  இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியனாக வலம்வந்தார். இதனால் 2008இல் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பெரிய அளவில் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இருந்தது. ஆனால், அந்த ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவிலும் அவர் அங்கம் வகித்த குழுவும் தகுதிச் சுற்றுக்குக்கூட முன்னேறாமல் மூட்டை கட்டியது பெரும் சோகம்.

காமன்வெல்த் சாதனை

இந்தத் தோல்விக்குப் பிறகு அடுத்த இரு ஆண்டுகள் பெரிய அளவில் சர்வதேசப் போட்டிகளில் டோலா பங்கேற்கவில்லை. 2010இல் டில்லியில் காமன்வெல்த் போட்டி நடந்தபோதுதான் களத்துக்கு வந்தார். தாய்நாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் அங்கம் வகித்த வில்வித்தைக் குழு, தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. தனி நபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தன் பெயரை நிரூபித்தார் டோலா.

வில்வித்தைப் போட்டிகளில் இந்திய அளவிலும் உலக அளவிலும் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்த டோலா பானர்ஜியை அங்கீ கரிக்கும்வகையில் 2005இல் மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கிக் கவுரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் வில்வித்தை வீராங்கனை டோலாதான்.

- விடுதலை நாளேடு, 2.10.18