வியாழன், 30 ஜூலை, 2015

கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு ஆலோசனை

Image result for கருப்பை
Image result for கருப்பைமாதவிலக்காவது, அதைத் தொடர்ந்து திருமணமாகி குழந்தை பெறுவது என இந்த இரண்டுமே கருப்பையின் மாபெரும் வேலைகள் என்பது பெரும்பாலான பெண் களின் நினைப்பு. அதனால்தான் முன்பெல்லாம் கர்ப்பப் பையில் சின்ன பிரச்னை என்றால்கூட சர்வசாதாரணமாக அறுவை சிகிச்சையில் அதை வெட்டி எறிந்து விட்டு வேறு வேலையைப் பார்க்கிற மனோபாவம் அவர்களிடம் இருந்தது.
விஞ்ஞானமும், மருத்துவமும் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் கருப்பையை அகற்றாமலேயே பிரச்சினைகளை மட்டும் குணப்படுத்த முடியும். கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கான அதை நீக்காமல் செய்யக்கூடிய தீர்வுகள் பற்றியும், தவிர்க்க முடியாமல் கருப்பை அறுவை சிகிச்சை  செய்கிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். கருப்பையில் உண்டாகிற அனேகப் பிரச்சினைகளை இன்று கர்ப்பப்பையை அகற்றாமலேயே சரிசெய்ய முடியும்.
உதாரணத்துக்கு ஃபைப்ராயிடு கட்டி என்றால் அதை மட்டும் நீக்கும் சிகிச்சைகள் வந்து விட்டன. அதீத ரத்தப் போக்கு தொடர்பான  பிரச்சினைகளுக்கும் பிரத்யேக ஊசிகள், மெரீனா என்கிற கருத்தடைச் சாதனம் போன்றவை உதவும்.  ஹார்மோன் கோளாறு காரணமாக உண்டாகிற அளவுக்கதிக ரத்தப் போக்கை சரி செய்ய, கருப் பையின் உள்ளே உள்ள சவ்வுப் பகுதியை பொசுக்கி, அதை மெலிதாக்கும் எண்டோமெட்ரியல் அப்லேஷன் சிகிச்சை பலனளிக்கும். கர்ப்பப் பையில் கட்டியோ, சதையோ இருந்தாலும் ஹிஸ்ட்ரோஸ்கோப் மூலம் சரி செய்து விட முடியும்.
இவற்றையெல்லாம் மீறி, கருப்பையில் வேறு ஏதேனும் பெரிய பிரச்சினைகள் இருந்து, கருப்பையை நீக்குவது மட்டுமே தீர்வு என்கிற நிலையில்,  லேப்ராஸ்கோப்பி முறையில் அதை நீக்குவது தான் பாதுகாப்பானது. ஓப்பன் சர்ஜரி என்கிற வயிற்றைக் கிழித்துச் செய்கிற அறுவை சிகிச்சை  செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையிலும் இரண்டு வகைகள் உள்ளன.
ஒன்று  டிஎல்ஹெச் எனப்படுகிற டோட்டல் லேப்ராஸ் கோப்பிக் ஹிஸ்ட்டரெக்டமி.  இதில் முழுக்க முழுக்க லேப்ராஸ் கோப்பிக் முறையில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப் படும். இன்னொன்று எல்ஏவிஹெச் எனப்படுகிற லேப்ராஸ் கோப்பிக் அசிஸ்ட் டெட் வெஜைனல் ஹிஸ்ட்ட ரெக்டமி. இதில் பாதி அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோப்பி முறை யிலும், மீதி பிறப்புறுப்பின் வழியேவும் செய்யப்படும்.
முதல் வகையில் இடுப்பெலும்புத் தசைகள் பாதிக்கப்படாது. பின்னாளில் ஏற்படுகிற சிறுநீர் கசிவு, சிறுநீரை அடக்க முடியாத நிலை, அடி இறக்கம் போன்றவை இதில் இருக் காது. இரண்டாவது வகையில் இந்தப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது சிரமம்.கருப்பையை அகற்றச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தினால், அதற்கு முன் உங்கள் சினைப்பையை ஸ்கேன் செய்து பார்த்து, அவற்றின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.
-விடுதலை,20.1.15

சட்டத்தின் முன்னோடிகள்


நாடு முழுவதும் உள்ள நீதிமன்ற அறைகளில் பெண்கள் கால் பதிப்பதற்கான கடுமையான போராட்டத்தைத் தொடங்கிய முன்னோடி கார்னேலியா சோரப்ஜி. அந்தப் போராட்டத்தை மதராஸ் மாகாணத்தில் தொடர்ந்தவர் பி. ஆனந்தா பாய்.
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னேலியா சோரப்ஜி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துவிட்டு 1894இல் பிரிட்டனில் இருந்து நாடு திரும்பினார். ஆனால், 1924இல்தான் சட்டத் துறையில் பெண்கள் நுழைய இந்தியச் சட்டத்தில் வழிவகை ஏற்படுத்தப்பட்டது.
அதற்கு அடுத்த 4 ஆண்டுகளிலேயே சட்டத் துறைக்குள் பெண்கள் நுழைவதற்கான போராட்டத்தை பி. ஆனந்தா பாய் சென்னையில் தொடங்கி வைத்தார். கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தமிழகம் அடங்கிய அன்றைய மதராஸ் மாகாணத்தில் ஒரே பெண் சட்டப் பட்டதாரியாக அவர் இருந்ததுதான் இதற்குக் காரணம்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டப் படிப்பை அவர் நிறைவு செய்தார். அன்றைய மதராஸ் மாகாணத்தில் சட்டப் படிப்பை நிறைவு செய்த முதல் பெண் அவர்.
ஆனால், அவரால் உடனடியாக வழக்கறிஞராக மாற முடியவில்லை. அவர் வழக்கறிஞராக மாற முதலில் விரும்பவும் இல்லை. பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள 'மெட்ராஸ்: தி லாண்ட், தி பீப்பிள் அண்ட் தேர் கவர்னன்ஸ்' என்ற புத்தகத்தில் அவரது வாழ்க்கை பற்றிய குறிப்பு உள்ளது.
ஆனந்தா பாய், முதலில் அரசுப் பணிக்கு விண்ணப் பித்துள்ளார். அது நிராகரிக்கப்படவே, நீதிமன்றம் சென்று வழக்கறிஞராக மாறுவதைப் பற்றி அவர் யோசித்தார்.
வி.வி. சீனிவாச அய்யங்காரிடம் தீவிர பயிற்சி பெற்ற பிறகு, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 1929 ஏப்ரல் 22ஆம் தேதி வழக்கறிஞராகத் தன்னை அவர் பதிவு செய்துகொண்டார். இதன் மூலம் சென்னை நகரத்தில் பயிற்சி பெற்ற, அந்நகரை நன்கு அறிந்த முதல் பெண் வழக்கறிஞர் என்ற தனிப் பெருமையையும் பெற்றார்.
இன்றைய தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்கள் அந்தக் காலத்தில் தெற்கு கனரா மண்டலம் என்று அறியப்பட்டன. அப்பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தா பாய். அவருடைய அப்பா டாக்டர் கிருஷ்ண ராவ், தன் குடும்பப் பெண்கள் சுதந்திரமான, முறைசார்ந்த கல்வியைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
நாட்டில் பெண்கள் எழுச்சி பெற ஆரம்பித்த காலகட்டம் 1920-30. அந்தக் காலத்தில்தான் சமூக சீர்திருத்த இயக்கம் பரவலானது. அந்தக் காலத்தில் மிகப் பெரிய பேசுபொருளாக இருந்த பெண்களை மய்யப் படுத்திய விவாதங்களில் சட்டமே மய்யப் பொருளாக இருந்தது.
இந்து பெண்கள், முஸ்லிம் பெண்கள் என இரண்டு தரப்பினர் நடத்திய அகில இந்திய பெண்கள் மாநாடு களிலும், சட்ட ரீதியிலான மாற்றங் கள் மூலம் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான விருப் பங்கள் வெளிப்படுத்தப் பட்டன என்கிறார் வரலாற்று ஆய் வாளர் வ. கீதா. அதேநேரம் ஆனந்தா பாய், கல்வி உரிமை பெற்ற சிறுபான்மைப் பெண்களில் ஒருவர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேற்படிப்பும், மருத்துவமும் பெண்களிடையே பிரபலமடைந்து வருகின்றன. ஆனால், சட்டத் துறையில் அந்த ஆர்வம் இல்லை. அந்தத் திசையில் ஒரு நல்ல தொடக்கம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இது பெரும் உத்வேகம் தரும், என்று ஆனந்தா பாய் வழக்கறிஞர் ஆனதைப் பாராட்டி 1929இல் நடந்த ஒரு விழாவில் இளைஞர்கள் சங்கத்தின் தலைவர் ருக்மணி லட்சுமிபதி குறிப்பிட்டுள்ளார்.
அன்றைக்கு ஆண்களின் கட்டுப்பாட்டில் இருந்த சட்டத் துறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அந்தக் காலத்தில் பெண்களிடம் வழக்கை ஒப்படைக்க மக்களும் தயங்கினார்கள். கிரிமினல் வழக்குகளை எடுத்து நடத்துவதற்குத் தடையாக சமூக நம்பிக்கைளும் இருந்தன. இதன் காரணமாக சட்டம் படித்த பல பெண்கள், ஆண் வழக்கறிஞர்களின் கீழ் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டியிருந்தது என்கிறார் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் கே. சாந்தகுமாரி.
இந்தப் பின்னணியில் கார்னேலியா சோரப்ஜியும் ஆனந்தா பாயும் பல தடைகளைக் கடந்து சட்டத் துறையில் முன்னோடிகளாக இருந்துள்ளனர். தென்னிந்தியாவில் புதிய துறைக்குள் தைரியமாகக் கால் பதித்த ஆனந்தா பாயின், துணிச்சலுக்கு நாம் பெருமைப்பட வேண்டும்.
-விடுதலை,20.1.15

சனி, 25 ஜூலை, 2015

6 மாதங்களாக வளர்ப்பு மகளை கற்பழித்த தந்தை கைது


பதிவு செய்த நாள்:
சனி, ஜூலை 25,2015, 4:04 PM IST
டிவி தொலைகாட்சி தொடர் ஒன்றின் பிரதிபலிப்பாக வளர்ப்பு தந்தை ஒருவர் தனது மகளை பலமுறை கற்பழித்து உள்ளார் என்று  போலீசார் தெரிவித்து உள்ளனர். குற்றவாளியை போலீசார் கண்டறிந்து கைது செய்து கோர்ட் உத்தரவுக்கு பிறகு சிறையில் அடைத்து உள்ளனர். அவரது பெயர் சச்சின் சர்மா.

இந்தூரை சேந்ர்தவர் 11 வயது சிறுமி அவரது பெயர் வெளியிடப்படவில்லை. கடந்த் 6 மாதமாக வளர்ப்பு தந்தை தன்னை கற்பழித்து  வந்து உள்ளதாக தாயாரிடம் கூறி உள்ளார். சிறுமியின் வாழ்க்கையில் நடந்தது போல் கடந்த செவ்வாய்க்கிழமை பிரபல டிவி ஒன்றில்  குற்ற கண்காணிப்பு என்ற பெயரில் கிரைம் தொடர் வெளியாகி இருந்தது.

வெள்ளிக்கிழமை சிறுமி தாயாரிடம் இதை கூறி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் உடனடியாக போலீசாரை அழைக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் கணவர் மொபைல் போனை பறித்து விட்டார். இருந்தாலும் உடனடியாக தயார் அருகே உள்ள தவாரிகாபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதை தொடர்ந்து குற்றவாளியை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக  எனது மகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதை நிறுத்தி விட்டாள். நான் என்ன காரணம் என தெரிந்து கொள்ள முயன்றேன். ஆனால்  அவள் அமைதியாகவே இருந்தார். வெள்ளிகிழமை என் கணவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதை விவரித்தாள் என் தயார் கூறி உள்ளார்.

தனது முதல் கணவன் இறந்து விடடதால் சர்மாவை கடந்த 2 வருடங்களுக்கு முன் இவர் திருமணம் செய்து உள்ளார்.
-தினத்தந்தி இணையம்

வியாழன், 23 ஜூலை, 2015

ஏழு கண்டங்களின் மலைச்சிகரங்களில் ஏறி அரியானா சகோதரிகள் சாதனை


சண்டிகர், ஜூலை 9_- அரியானாவைச் சேர்ந்த சகோதரிகள் டஷி மற்றும் நுங்ஷி மாலிக் இருவரும் சேர்ந்து உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள ஏழு உயர்ந்த சிகரங்களில் ஒன்றாக ஏறி சாதனை படைத்துள்ளனர். உலகின் முதல் இரட்டை சகோதரி களாக இவர்கள் இச்சாத னையை நிகழ்த்தியுள்ளனர்.
இவர்கள் இந்த சாத னையை நிகழ்த்தியதற்காக சாகசக்காரர்களுக்கான கிராண்ட்ஸ்லாம் என்கிற விருதினை வென்றிருக்கின் றனர். ஏழு கண்டங்களின் மலைச்சிகரங்கள் மற்றும் வட துருவத்திலிருந்து தென் துருவத்திற்கு பனிச் சறுக்கு மற்றும் மூன்று துருவ சவால் என பல்வேறு தேசிய மற்றும் மண்டல சாதனைகளை செய்துள் ளனர்.
இவர்களது 21-ஆவது வயதில் உலகின் மிகப் பெரிய சிகரத்தை அடைந் தனர். மேலும், கின்னஸின் 60-வது பதிப்பில் இவர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்களை அரியானா வின் பெண் குழந்தை பாதுகாப்பு அமைப்பின் தூதராக நியமித்துள்ள னர்.
இந்த சகோதரிகளின் சாதனைகளைப் பற்றி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, பெண் சிசுக் கொலை மற்றும் கல்வியறிவின்மை உள்ள நம் நாட்டில் இளைய சமூகத்தின் முன் மாதிரியாக இவர்கள் விளங்கவேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த பெண்கள், ஆப் பிரிக்காவின் கிளிமாஞ் சாரோ மலைச்சிகரம், அய் ரோப்பாவின் எல்பர்ஸ் மலைச்சிகரம், தென் அமெ ரிக்காவின் அகோன்கா குவா மலைச்சிகரம், ஓசி யானாவின் கார்ஸ்டென்ஸ்ஸ் பிரமிட் மலைச்சிகரம், அலாஸ்காவின் மெக் கின்லே மலைச்சிகரம் மற்றும் அண்டார்டிக்கா வின் உயரமான வின்சன் மலைச்சிகரங்களில் ஏறி வெற்றிகொண்டுள்ளனர்.
-விடுதலை,9.7.15

புதன், 22 ஜூலை, 2015

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய முதல் திருநங்கை ராணுவ அதிகாரி

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய முதல் திருநங்கை ராணுவ அதிகாரி
லண்டன், ஜன, 20-_ இங் கிலாந்து ராணுவத்தின் முதல் திருநங்கை அதிகாரி என்ற பெருமைக்கு சொந் தக்காரரான 27 வயது ஹன்னா விண்டர்போர்ன் ஆணாகப் பிறந்து ஆணா கவே வளர்ந்தவர். பூப் படையும் காலகட்டத்தை நெருங்கியதிலிருந்து தன்னை ஒரு பெண்ணா கவே உணரத் தொடங் கினார். இதனால் கடும் உள வியல் நெருக்கடிகளுக்கு ஆளானார்.
சமீபத்தில் ஆப்கானிஸ் தான் யுத்த களங்களில் பணியாற்றிய இவர், தன் னைச் சுற்றியுள்ள ஒவ்வொ ருவரிடமும் நடிக்க வேண் டியிருப்பதை உணர்ந்தார். இதற்கு மேலும் இந்தப் பொய்யான வாழ்க்கையை தொடர முடியாதென்றும் பாலியல் மாற்று சிகிச்சை செய்து கொண்டு பெண் ணாக மாறி ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று ஹன்னா முடிவு செய்தார்.
இதனால் தன்னுடைய ராணுவ வாழ்க்கை முடிவுக்கு வந்து விடுமோ, மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று பயந்த இவருக்கு, வியக்கத் தக்க வகையில் அவரது பெற்றோர்களின் ஆதரவு கிடைத்தது. இதனால் நம் பிக்கையோடு தனது புதிய வாழ்க்கைக்கான பய ணத்தை தொடங்கினார்.
தற்போது சிகிச்சை முடிந்து முழுமையான பெண்ணாக உருமாறி யுள்ள ஹன்னா, இங்கி லாந்தின் வடக்கு யார்க் ஷைர் கவுண்டியில் உள்ள கேட்டரிக் கேரிசன் நகரில் பணிபுரிந்து வருவது குறிப் பிடத்தக்கது.
-விடுதலை,20.1.15

திங்கள், 20 ஜூலை, 2015

முதல் பெண் கப்பல் பொறியாளர்

முதல் பெண் கப்பல் பொறியாளர்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கு சரியான எடுத்துக்காட்டு சிறீலட்சுமி பிரியா. சராசரியாக ஓராண்டில் 9 மாதங்கள் கப்பலிலேயே பயணம் செய்கிறார். கப்பலை வளைக்கும் சோமாலியா நாட்டு கடற்கொள்ளை யர்கள் பகுதி முதல் ஆபத்தான கடல்பகுதிகள் வரை உலகிலுள்ள அனைத்து கடல்பகுதிகளும் இவருக்கு அத்துபடி. இந்தியா வில் பெண்கள் நுழையவே அச்சப்படும் கப்பல் துறையில், தமிழகத்திலிருந்து முதல் பெண் மரைன் இன்ஜினீயராக கடலில் களம் இறங்கி சாதித்து வருகிறார் இந்த திருச்சிக்காரர்.
இப்போதெல்லாம் 8ஆம் வகுப்பு படிக்கும் போதே பலரும், எதிர்காலத்தில் என்னவாக வரவேண்டும் என்று தீர்மானித்துவிடுகிறார் கள். ஆனால், நான் 11ஆம் வகுப்பு படிக்கும் வரை அடுத்து என்ன என்று தீர்மானிக்கவில்லை. எதேச்சையாக ஒரு நாள் டைட்டானிக் படம் பார்த்தேன். காதல், சென்டிமென்ட் என நிறையக் காட்சிகள் வந்தாலும், என் மனதில் நின்றது கடலும், அந்த மிகப்பெரிய கப்பலும் மட்டுமே. இதே சமயத்தில் தொலைக்காட்சியில் கப்பல் அதிகாரி ஒருவரின் பேட்டியைப் பார்த்தேன். அப்போதுதான் மரைன் பொறி யாளராக வேண்டும் என்று முடிவு செய்தேன்.
12ஆம் வகுப்பில் 94 சதவிகிதம் மதிப்பெண் பெற்றதும், பல கல்லூரிகளில் மரைன் படிப்புக்காக விண்ணப்பம் போட்டுவிட்டுக் காத்திருந்தேன். சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில், வயது குறைவாக இருக்கிறது என்று எனது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டார்கள். பெரும்பாலான கல்லூரிகளில், ஆண்களை மட்டுமே இந்தப் படிப்பில் சேர்க்கிறோம் என்று கூறிவிட்டார்கள். நீண்ட முயற்சிக்குப் பின் புனேவில் பிட்ஸ் பிலானி குழுமத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கே சென்றபோதுதான், மரைன் பொறியியல் துறையில் 13 பெண்கள் மட்டுமே இதுவரை படித்துள்ளனர் என்பதும், தமிழகத்திலிருந்து இந்தப் படிப்பைப் படிக்கும் முதன் பெண் நான்தான் என்பதும் தெரியவந்தது
. 90 மாணவர்களில் என்னையும் சேர்த்து மூவர் மட்டுமே பெண்கள். நேவி உடைதான் யூனி ஃபார்ம். அந்த உடையை அணிந்தவுட னேயே தனி கம்பீரம் வந்துவிட்டது. இத்தனைக்கும் பள்ளியில் படிக்கும் போது கடற்கரையையோ, கப்பலையோ நான் பார்த்ததேயில்லை. இரண்டாம் வருடத்தில்தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மொத்தம் நான்கு வருட படிப்பு. ஒவ்வொரு பருவத் தேர்விலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். இறுதியாண்டு படிக்கும் போது வளாகத் தேர்வில் வேலை கிடைத்தது. என் கனவு நிறைவேறிய தருணம் அது. 2007இல் ஆங்கிலோ ஈஸ்டர்ன் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் 5ஆம் நிலை பொறியாளராக பணிக்குச் சேர்ந்தேன். இதுவரை 3 முறை உலகை வலம் வந்திருக் கிறேன் என்று சொல்லும் சிறீலட்சுமி ப்ரியாவுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர இந்தி, பிரெஞ்சு, ஜப்பானீஸ் மொழிகளும் தெரியுமாம்.
கடலைக் காதலிக்கும் இவருக்கு, அகில இந்திய இளம் கடல்சார் அலுவலர் என்ற விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்து உள்ளது. ஒரு முறை பசிபிக் கடலில் பயணம் செய்தபோது கடும் சூறாவளி தாக்கியதில் இன்ஜின் பழுதாகி, நடுக்கடலில் கப்பல் தத்தளித்தது. நான் உள்பட சக ஊழியர்களும் கிட்டத்தட்ட 22 மணி நேரம் போராடி இன்ஜினை சரி செய்தோம். வாழ்நாளில் மறக்கவே முடியாத நிகழ்ச்சி அது.
அதேபோல் ஒவ்வொரு முறையும் சோமாலியா நாட்டு கடல் எல்லையைத் தாண்டும் போது உயிரைக் கையில் பிடித்தபடியேதான் பயணம் செய்கிறோம். எப்போது கடற்கொள்ளையர்கள் வந்து கப்பலைத் தாக்குவார்கள் என்று சொல்லவே முடியாது. இதுவரை 6 முறை சோமாலியாவைக் கடந்து சென்றிருக்கிறேன். இப்போது டென் மார்க் நாட்டு தனியார் நிறுவன சரக்குக் கப்பலில் 3ஆம் நிலை பொறியாளராகப் பணியாற்றி வருகிறேன். என் ஒரே கனவு தலைமைப் பொறியாளராக வரவேண்டும் என்பதே என்கிறார் சிறீலட்சுமி ப்ரியா.

பெண்களுக்கு 30 விழுக்காடு
அசாம் மாநிலத்தில் மோரி காவ் மாவட்டத்தில் உள்ள பொபிடோரா வனவிலங்குச் சரணாலயத்தில், ரேகா மற்றும் கவிதா எனும் இரண்டு பெண் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் (9 ஆகஸ்ட், 2010). காடுகளைக் காக்கும் பணியில் அசாம் மாநிலத்தில் உள்ள வெவ்வேறு காட்டுப் பகுதிகளில் 56 பெண்கள் ஈடுபட்டுள்ளனர். பெண்களை 30 விழுக்காடு அளவிற்கு எல்லாப் பதவிகளிலும் நியமிப்பது எனும் ஏற்பாட்டின் கீழ், வன இலாகா முதன்முதலாக இப்பணியில் அவர்களை அமர்த்தி இருக்கிறது

வாள்வீச்சு வீராங்கனை!
இந்திய வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி அக்டோபரில் டில்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிக்காக பயிற்சி செய்கிறார். அவர் கூறுகிறார்:
வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, வாள்சண்டையைத் தேர்ந்தெடுத் தேன். இந்த விளையாட்டில் அமெரிக்காவை சேர்ந்த ஜாக்யுனிஸ் எனக்கு மிகவும் பிடித்த வீராங்கனை. பிற விளையாட்டுக்களைப்போல் வாள்சண்டை நமது நாட்டில் பிரபலம் ஆக வில்லை என்பது மறுக்க முடியாது. சர்வதேச விதிமுறைகளை உடனுக்குடன் அறியச் செய்தல், அதிக ஸ்பான்ஸர் கிடைக்க செய்தல் ஆகிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டால் இதுவும் பிரபலம் ஆகும்.
இந்த விளையாட்டில் எப்பி, சேபர், ஃபாய்ல் என மூன்று பிரிவுகள் உள்ளன. இவை ஆண் களுக்கும், பெண்களுக்கும் பொதுவானவை. பன்னாட்டு அளவில் பத்து போட்டிகளில் பங் கேற்று மூன்று வெண்கல பதக்கங்கள் வென்றுள் ளேன். தேசிய அளவில் இருபத்திரண்டு போட்டி களில் பங்கேற்று ஏறக்குறைய அறுபது மெடல்கள் வாங்கியுள்ளேன். இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும். சேபர் பிரிவின் பன்னாட்டு நடுவராக பணியாற்ற வேண்டும் என விரும்புகிறார் பவானி.
விடுதலை,10.8.10

பிராமணர்கள் எப்படிக் கற்பழித்திருக்க முடியும்?- டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு!

Image result for நீதிபதிகள்
பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது என்ன?
ராஜஸ்தான் மகளிர் வளர்ச்சித் திட்டத்தில் சத்தீன் திருமதி பன்வாரிதேவி குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதனால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளானார். ராம்கர்ன் குர்ஜார் என்பவரின் ஒரு வயதுக் குழந்தையின் திருமணத்தை பன்வாரி தடுத்து நிறுத்தினார். அந்த ஆசாமியோ அந்தப் பகுதியில் பிரபலமானவர், விளைவு, பன்வாரி தன் கணவரின் எதிரிலேயே கொடுரமான முறையில் அய்ந்து கொடியவர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார். (1992  செப்டம்பர்). பி.ஜே.பி. ஆட்சி இதனைக் கண்டுகொள்ளவேயில்லை. கடும் எதிர்ப்புக் கிளர்ந்து எழுந்த பிறகே அய்ந்து மாதங்கள் கழித்தே குற்றவாளிகள் கைது செய்யப்-பட்டனர். சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும், பன்வாரி கிராமத்திலிருந்து சமூகப் பிரஷ்டம் செய்யப்பட்டார்.
வழக்குத் தொடுக்கப்பட்டதோ 1994 அக்டோபரில். டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் சொன்னது என்ன தெரியுமா? பான்வாரியை  உயர்ஜாதி பிராமணர்கள் எப்படிக் கற்பழித்திருக்க முடியும்? என்பதுதான் அந்தக் கேள்வி. வழக்கு தள்ளுபடியும் செய்யப்-பட்டது. (Economic Political Weekly 25.11.1995)
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. (10.1.1996)

ஞாயிறு, 19 ஜூலை, 2015

லாரி ஓட்டுநராக முதல் பெண் ஜோதிமணி

ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ள கள்ளிப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி கவுதமன். மாநிலத்திலேயே முதல்முறையாக ஒரு பெண் லாரி ஓட்டுநராக பணி யாற்றுபவர் என்றால் அவர் ஜோதிமணி கவுதமன்தான். லாரி ஓட்டுநராக பணி யாற்றுவதில் உள்ள மகிழ்வு மற்றும் ஆபத்துகள் உள்ள தாக ஜோதிமணி கூறு கிறார்.
நாடுமுழுவதும் நெடுஞ் சாலையில் நீண்ட தொலைவு, தனிமையான நேரங்களில் செல்லும் சூழல். லாரியின் மாபெரும் சுமைகளுடன் பொருள் களுடன் செல்வது என்பது மிகவும் கடினமானது.  பெண் என்பதால் மற்றவர்களின் ஊடுருவும் பார்வை, தேவையில்லாத விசாரணைகள் மற்றும் குண்டும் குழியுமாக உள்ள பாதைகள் உள்ளிட் டவை மோசமானவை என்கிறார்.
இவையாவும் 30 வயதுள்ள தீப்பிழம்பாக உள்ள ஜோதிமணியை எதுவும் அவர் பணியை நிறுத்த முடியவில்லை. ஆண்கள் மட்டுமே செய்துவந்துள்ள லாரி ஓட்டுநர் பணியை நிறைவாக செய்துவருகிறார்.
தமிழ்நாட்டில் ஒரேயொரு பெண் லாரி ஓட்டுநராக முதல்முறையாக பணியாற்றிவரும் ஜோதிமணிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 16 டன் எடையுள்ள லாரியுடன் பல்வேறு மாநி லங்களைக் கடந்து சென்றுவருகிறார்.
ஜோதிமணி தன் அனுபவத்தைக் கூறும்போது, 1.1.2009 அன்று முதல் முறையாக லாரியை என் கரங்களால் ஓட்டத் தொடங்கினேன். என் கணவர் கவுதமனுக்கு சொந்தமான லாரியை ஓட்டினேன். கட்டுக்கடங்காத லாரியை எப்படி ஓட்டுவது என்று எனக்கு அவர் மிகவும் கவனமாகச் சொல்லிக் கொடுத்தார். அப்போது அப்படியும் இப்படியுமாக மோதிவிட்டேன். எனக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது என்று சிரித்தபடி கூறினார்.
வீட்டுவேலைகளை மட்டுமே செய்து வந்த ஜோதிமணிக்கு அவர்களுக்கு சொந்தமான லாரியை ஓட்டுவது தொழிலாகிவிட்டது. அவர் மேலும் கூறும்போது, எங்களின் இரண்டாவது லாரிக்கு ஓட்டுநரை நியமித்தோம். எங்களிடம் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிட்டார்.
அதனால் பெரும் நட்டம் ஏற்பட்டது. அதனாலேயே நானே என்னுடைய கணவருடன் இணைந்து லாரி ஓட்டத் தொடங்கினேன். நீண்ட தூரம் நெடுஞ்சாலையில் சென்றுவருவதே என்னுடைய வாழ்க்கையாகிவிட்டது என்றார். அப்போதுதான் சூரத்துக்கு பொருள்கள் ஏற்றிச் சென்று திரும்பினார்.
மணமாவதற்கு முன்பே 2009ஆம் ஆண்டின் மத்தியில் தற்போதைய கணவரான கவுதமுடன் அய்தராபாத்வரை பயணித்திருக்கிறார். தற்பொழுது குஜராத் உள்ளிட்ட பகுதிவரை தனியாகவே சென்று வருகிறார். அடிக்கடி ஆடைகள், பருத்தி ஆடைகள் மற்றும் மரம், எந்திரங்களின் பாகங்கள் ஆகியவைகளை ஏற்றிச் செல்வார்.
சுமை களுக்கு ஏற்ப எங்குமே நிறுத்தவேண்டிய அவசியம் இல்லாத பயணங்களாக அமைந்துவிடும். அதிலும் இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதம்கூட செல்ல வேண்டியதாக இருக்கும். அவருடைய குழந்தைகள் 9 வயது மோனிக் சுபாஷ், 7 வயது விஜயாபானு ஆகிய இருவரும் அவர் பாட்டி யான சரஸ்வதியிடம்(78) வளர்ந்து வருகிறார்கள்.
இந்தத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றுள்ள ஜோதிமணி நல்ல திறமையான ஓட்டுநராக மாறிவிட்டார். அதுமட்டுமன்றி அசோக் லெய்லேண்ட் லாரியில் இன்னமும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டியவராகவே இருப்பதாகக் கூறுகிறார். ஜோதிமணி கூறும்போது, 2012ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநிலத்தில் பிரேக் செயலிழந்துவிட்டதால் விபத்து நேர்ந்துவிட்டது. அதிலிருந்து தப்பியதே பெரிதாகிப்போனது என்றார்.
ஜோதிமணியின் நோக்கம் என்ன வென்றால், தன் கணவருடன் சேர்ந்து போதுமான பணம் சேர்த்தபிறகு ஒருநாளில் ஓட்டும் தொழிலில் இருந்து மாறி போக்குவரத்து முகவாண்மை நிறுவனத்தை சொந்தமாக நடத்த வேண்டும் என்பதுதான்.
அதுவரை, இந்த பெண் லாரி ஓட்டுநர் கள்ளிப்பட்டியிலிருந்து பெரு மிதத்துடன் நீண்ட தூர பயணங்களைத் தொடர்வார்.
நெஞ்சார அவரை நாம் வாழ்த் துவோமாக!
_ தி இந்து ஆங்கில நாளிதழ்
-விடுதலை ஞாயிறு மலர்,30.5.15

பார்ப்பன பெண்களின் அன்றைய நிலை

மணியம்மையாரை அன்னை என்பது ஏன்?


அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மார்ச் - 10
மணியம்மையாரை அன்னை என்பது ஏன்?
புகழக்கூடாத மணியம்மையாரை அன்னை எனப் புகழ்கிறீர்களே! இது சரியா? என்று மணச்சநல்லூரிலிருந்து ஒருவர் கேட்ட கேள்விக்கு சூடாக புரட்சிக்கவிஞர் அளித்த பதிலிருந்து சில பகுதிகள் இதோ!
நாம் இளைமைப் போதில் முருகனைப் புகழ்ந்தோம் _ பாடினோம் _ ஆனால் நாளடைவில் முருகன் புகழத்தக்க ஒரு பொருளன்று. பாடத்தக்க ஒருபொருளன்று எனக் கண்டோம். முருகனைப் புகழ்வதை விட்டோம். முருகனைப் பாடுவதை விட்டோம்.

பாரதி தமிழ்ப் பாட்டுக்கு ஒரு புதுநடை கண்ட புலவன். பாரதியைப் புகழ்ந்தோம் _ பாடினோம் _ இதைச் சிலர் எதிர்த்தார்கள். பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதை எதிர்த்து வருகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பை நாம் பொருட்-படுத்தவில்லை. ஆனால் நாம் புகழ்வதற்கும் புகழ்ந்து பாடுதற்கும் பாரதியைவிட ஒருவர் இருக்கிறாரா? அவர் யார் என்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
தாம் போகும் வழியை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன் தமிழரைக் காப்பேன். ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல; மலைமேல் நின்று மெல்ல அல்ல தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.
அது மட்டுமல்ல.
குன்று உடைக்கும் தோளும் நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம். பெரியாரைப் புகழ்ந்து பேசினோம்; புகழ்ந்து எழுதினோம்; புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ நாம் பாட இன்னும் ஒரு மேலான ஒரு பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
பெரியார் செத்துக் கொண்டிருந்தார்! தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்.
ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரை _ போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு. மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.
ஆயினும் காற்றிறங்கிப் பொதிமாடுபோல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒரு பால் ஒட்டிய ஆண் குறியினின்று முன்னறிவிப்பின்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந் தொண்டால் முடியாது. அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது;  வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு
ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை,
அன்னை என்று புகழாமல் நாம்வேறு
என்ன என்று புகழவல்லோம்?
பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகுபெறக் கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.
அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார், ஏதுங்கெட்ட வேலைக்காரி போல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.
ஒரே ஒரு மாலையை என் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை; எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டைக் கட்டுவதன்றி அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலையில் வைத்தார் என்பதும் இல்லை.
மணச்சநல்லூராரே,
நான் யாரைப் புகழ வேண்டும்?
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், (குயில் 10.5.1960; 2,3)
உண்மை,1.3.15

அன்னை நாகம்மையாரின் ஒப்பற்ற தொண்டு

பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அன்னை நாகம்மையார். சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் பிறந்தவர். தந்தை பெரியாரின் தாய் சின்னத்தாயம்மையாரின் ஒன்றுவிட்ட தம்பி மகளாவார். பள்ளி சென்று கல்வி கற்கவில்லை எனினும் உலக அறிவில் சிறந்து விளங்கினார். பெரியார் அவர்களை மணந்துகொண்ட பின், பெரியாரின் பொதுவாழ்வுக்கு உறுதுணையாக, மேடைப் பேச்சுக்கான தனித்த ஆற்றலை வளர்த்துக் கொண்டு பொதுவாழ்விற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டார்.
1920ஆம் ஆண்டு தந்தை பெரியார் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது கதர் உடுத்தி எளிய தோற்றத்திற்கு மாறினார். பூவும்  பொட்டும் பிற அணிகலன்களும் அடிமைச் சின்னங்கள் என சுயமரியாதை இயக்கம் பிரகடனப்படுத்தியபோது அவற்றைத் துறந்து பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.

1921ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலின்போது அரசாங்கம் 144 தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. தந்தை பெரியாரும், அவரது தொண்டர்களும் தடையை மீறியதால் கைது செய்யப்பட்டனர். மறுநாள் அன்னையார் தந்தை பெரியாரின் தங்கை ஆர்.எஸ்.கண்ணம்மாளுடன் சென்று தடையுத்-தரவை மீறினார். மறியலை நிறுத்துவதென்றால் ஈரோட்டில் நாகம்மையாரைத்தான் கேட்க வேண்டும் என்று காந்தியாரே கூறியுள்ளதி-லிருந்து அம்மையாரின் உறுதியினைத் தெரிந்து கொள்ளலாம். திகைப்படைந்த அரசு, உடனே தடையுத்தரவை நீக்கியது.
1924ஆம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் போராட்டத்திலும் பங்கு கொண்டதுடன், பல பெண்களையும் பங்கு கொள்ளச் செய்தார். இவர் தலைமையேற்று வைக்கம் தெருக்களில் பெண்கள் படையை நடத்திச் சென்ற பாங்கு இப்போராட்டத்தின்பால் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்ச்சிகளை இப்போராட்டம் தட்டி எழுப்பியது! இதுகுறித்து தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்,
வீட்டின் ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார், தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்தவேண்டி வைக்கம் சத்யாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூட்டினார் என்று பாராட்டி எழுதினார்.
1925ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. குடிஅரசு பத்திரிகையும் வெளிவந்தது. தாம் இருக்கும்வரை குடிஅரசு பத்திரிகையின் பதிப்பாசிரியராகவும் பிரசுரகர்த்தாவாகவும் இருந்துள்ளார். சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்றதற்கும் அதில் பெண்கள் நிறையப் பேர் கலந்து கொண்டதற்கும் அன்னையாரே காரணம். அவர் தமது கணவரின் எல்லா முயற்சிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்ததே சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிக்குக் காரணமாகும். எல்லோரையும் அன்புடன் உபசரிப்பார். பொதுஜன நன்மைக்காக வேலை செய்த எல்லா இளைஞர்களையும் பெண்களையும் தமது சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து வந்தார். அவர் தமது சிறந்த கொள்கைகளுக்காக வேலை செய்தவர்களுக்-கெல்லாம் ஒரு தாயாக இருந்தார். அவர்களுடைய சொந்த சவுகரிங்களை அவர் தாமே நேராகக் கவனித்து வந்தார். சமூகப் போராட்டத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு அவர் அபயம் அளித்தார் என்று தோழர் எஸ்.ராமநாதன் கூறியுள்ளார்.
அன்னையாரின் மலாய் நாட்டுப் பயணத்தைப்பற்றி, சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த முன்னேற்றம் பத்திரிகை, அவர்களின் மலாய் நாட்டு விஜயத்தால் மலாய் நாட்டு மக்கள் எல்லாம் அவருக்கு அறிமுகமானார்கள். மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கம் அதிதீவிரமாய்ப் பரவியிருந்ததைப் பார்த்த அன்னையார் அடைந்த களிப்பு அளப்பரியது. சிங்கப்பூருக்கு வந்திருந்து திரும்புங்கால் அவர்களுக்கு விருப்பமான _ தேவையான மலாய் நாட்டுப் பொருள் என்ன வேண்டுமென்று நாம் கேட்டதற்கு நீங்கள் எல்லாம் இம்மலாய் நாட்டில் சுயமரியாதை  இயக்கத்தைப் பரப்பியிருப்பதே நான் விரும்பும் பொருள் என்று அன்னையார் சொல்லிய வார்த்தைகள் இன்னும் நமது செவியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வீராங்கனையாய், ஒரு சமுதாயப் போராளியாய், ஓர் அன்னையாய் அருந்தொண்டாற்றிய அன்னை நாகம்மையார் 11.5.1933 அன்று மறைந்து சுயமரியாதை இயக்கத்தின் பொன்னேடுகளில் பொறிக்கத்தக்க பொன்னொளிச் சுடரானார்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

அறிவோம் சட்டம் -பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்




விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.
அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது. கழகத் தோழர்கள் உள்ளிட்ட  அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்ற வைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்கள்.
3. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
பெண்களின் பாதுகாப்புக்காக தனிச்சட்டங்கள் பல உள்ளன என்பதையும் பிற சட்டங்கள் பலவற்றில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலனை உறுதி செய்யவும், பல சட்டப்பிரிவுகள் உள்ளன என்பதை பொதுவாக  நாம் அனைவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தனிச்சட்டங்கள் இயற்ற, அரசியல் சட்டப்பிரிவு 15(3) வகை செய்கிறது, அதனடிப் படையில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், முன்னேற்றத் திற்காகவும் கீழ்க்கண்ட சட்டங்கள் இயற்றப்பட்டன.
1. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாது காத்தல் சட்டம், 2005,
2. வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961
3. The Immoral Traffic (prevention) Act
4. Muslim Women Protection of Rights on Divorce Act 1986
5. Family Couts Act 1984
6. National commission for Women Act 1990
7. Commission of Sati (prevention) Act 1987
8. Human Rights Act 1993
9. Women's Rights to property Act 1937.
10. The Divorce Act 1869.

இந்த சட்டங்கள் தவிர அரசியல் சட்டம், திருமணம் சட்டம், வாரிசு சட்டம், சுவிகாரச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சாட்டம், கருக்கலைப்பு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், பணியாளர் காப்பீட்டுச் சட்டம், போன்ற பல சட்டங்களிலும், பெண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு சட்டங்களையும் தனித்தனியாக பார்ப்போம்.
1) குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம் - 2005 ஒரு பெண்ணுடைய உடல் நலம், பாதுகாப்பு, உயிர், உடல், உறுப்பு அல்லது நல வாழ்வுக்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஊறு விளைவித்தல் அல்லது காயப்படுத்துதல் அல்லது அவ்வாறு செய்ய முயற்சித்தல், தகாத உடலுறுப்பு உணர்வுகளைப் புண்படுத்துதல், பொருளாதார ஊறு விளைவித்தல் அல்லது மதிப்புமிக்க காப்பீட்டு ஆவணங்களைப் பெறும் நோக்கத்தில் ஒரு பெண்ணை அல்லது அவரது உறவினரை மிரட்டும் வகையில் துன்புறத்துதல், தீங்கு செய்தல், காயம் ஏற்படுத்துதல் அல்லது பயமுறுத்துதல் ஆகியவை குடும்ப வன்முறையாகும்.
மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பாதுகாப்பு அலுவலர்களை பணியமர்த்தும். அவர்கள் கூடுமானவரையில் பெண்களாக இருத்தல் வேண்டும். ஒரு பெண்ணுக்கு குடும்ப வன்முறை செய்யப்பட்டால் அவர் இந்தப் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தரவேண்டும். அந்த தகவலைப் பெற்ற அலுவலர் ஒரு அறிக்கையினை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் அனுப்ப வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்தின் பேரில் ஒரு பாதுகாப்பான தங்குமிடம் ஏற்பாடு செய்து அதன் விவரங் களை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் பாதுகாப்பு அலுவலர் அறிக்கை தரவேண்டும். அப் பெண் ணுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனையும் அந்த அலுவலர் செய்வார்.
இந்த பாதுகாப்பு அலுவலர் குற்றவியல் நடுவரின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் பணிபுரிய வேண்டும். இந்தச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி, மருத்துவம், நிதி மற்றும் இதர உதவிகளைச் செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண் குற்றவியல் நடுவரிடம் புகார் செய்யலாம். அப்புகாரைப் பெற்ற குற்றவியல் நடுவர் விசாரணை நாள்பற்றிய அறிவிப்பை பாதுகாப்பு அலுவலர் மூலமாக எதிர்வாதி மற்றும் பிற நபர்களுக்கு சார்வு செய்ய ஆணையிடலாம், குற்றவியல் நடுவர் இரு தரப்பாரையும் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த உறுப்பினரிடம் ஆலோ சனை பெற உத்தரவிடலாம். வழக்கு விசாரணை குற்றவியல் நடுவரின் தனியறையில் நடத்தலாம்.
குடும்ப உறவு முறையிலுள்ள பெண் ஒருவருக்கு பங்கீடு செய்யப்பட்ட வீட்டில், உரிமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்குவதற்கு உரிமை உண்டு. அவ்வீட்டிலிருந்து அவரை சட்டப்படியில் அல்லாது வெளியேற்ற முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சீதனம் அடங்கிய சொத்துக் களை உரிமை மாற்றம் செய்ய, வங்கி பாதுகாப்பு பெட்டகங்களை வங்கி கணக்குகளை பயன்படுத்த குற்றவியல் நடுவர் தடை விதிக்கலாம்.
குடும்ப வன்முறை தொடரவும் தடைவிதிக்கலாம். குடும்ப வன்முறை செய்யாமல் இருக்க எதிர்வாதியிடமிருந்து வாக்குறுதிப் பத்திரம் தருமாறு குற்றவியல் நடுவர் கோரலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உத்தரவிடலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் இழப்பீடு தர எதிர்வாதிக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிடலாம். இழப்பீடு வழங்க உத்தரவிடும் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கைத் தரம், மன உளைச்சல், உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கிய காயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கவும் குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் உண்டு, குற்றவியல் நடுவரின் ஆணைகளின் நகல்கள், புகார் கொடுத்தவர், எதிர்வாதி, காவல் நிலையம், தொண்டு நிறுவனம் ஆகிய வற்றிற்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு ஆணையை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை எதிர்வாதி மீறினால் ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்.
குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஆணை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை நிறைவேற்றத் தவறும் பாதுகாப்பு அலுவலர் ஓராண்டு வரை நீடிக்கக் கூடிய சிறைத்தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்.             (தொடரும்)

-விடுதலை,21.6.15

சேவைக்குக் கிடைத்த தேசிய விருது!


ஊசி போடுவது, மாத்திரைகளை நோயாளிகளுக்குத் தந்தனுப்புவது மட்டுமே தன் கடமை என்று நினைக்கவில்லை கல்பனா. அந்த உயரிய நினைப்புதான் அவருக்குக் குடியரசு தலைவர் கையால் விருது பெற்றுத் தந்திருக்கிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உதவி செவிலியர் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் கல்பனா சம்பத், கிராமத்து அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். சர்வதேச ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் விருதைச் சர்வதேசச் செவிலியர் நாளான மே 12ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பெற்றுக் கொண்டார். நாடு முழுவதும் மொத்தம் 35 செவிலியர் பணி யாளர்களுக்கு இந்த ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள பெரும்பாதி கிராமம்தான் கல்பனாவின் சொந்த ஊர். ஏழ்மையான குடும்பம். தந்தை பீடி சுற்றும் தொழில் செய்தார். என் அப்பா கம்யூனிஸத் தத்துவங்களைப் படிப்பார். அதனால் வீட்டில் பாரதியார், கம்யூனிச நூல்கள், ரஷ்யப் பதிப்பாக வெளிவந்த இலக்கிய நூல்கள் நிறைய இருக்கும். எனக்கு இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிகள்.
அனைவரையும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்க வைத்தார். 98ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி முடித்தபோது, ராணுவத்தில் உதவித் தொகையோடு செவிலியர் படிப்பு படிக்கலாம் என்ற செய்தியைப் பத்திரிகையில் பார்த்து விண்ணப்பித்தேன். அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் கொல்கத்தாவில் ராணுவத்தின் மூலம் நர்சிங் படித்தேன் என்று சொல்கிறார் கல்பனா.
கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவருக்குக் கொல்கத்தா போன்ற பெருநகரத்தில் தங்கிப் படிக்கும் தைரியத்தை அவருடைய பெற்றோர் தந்தனர். உதவித்தொகையுடன் படிப்பை முடித்து, ராணுவத்தில் லெப்டினென்ட் பொறுப்பில் பணியில் சேர்ந்தார். இமாச்சல பிரதேசத்தில் பதான் கோட்டில் பயிற்சி முடித்து, பணியைத் தொடங்கினார்.
பிறகு புனே, வெலிங்டன், கான்பூர் என்று அடுத் தடுத்துப் பணி மாறுதலும் பதவி உயர்வும் கிடைத்தன. இதற்கிடையே கல்பனாவுக்குத் திருமணமானது. பதினோரு ஆண்டுகள் ராணுவப் பணிக்குப் பிறகு 1993 இல் பணியிலிருந்து விலகினார். ஜிப்மரில் முன்னாள் ராணுவவீரர் ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தது.
ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பு கமிட்டி, சேவைத்தரம் குழு, விபத்துப் பாதுகாப்பு குழு, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செவிலியர் பணியில் இருக்கிறார் கல்பனா. சுனாமி பேரழிவு, தானே புயல் பாதிப்பு ஆகிய நாட்களில் பணியாற்றியது, வெளிமாநிலத்தவருக்குத் தமிழ் கற்றுத்தரும் பணி ஆகியவற்றுக்காக கல்பனாவுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.

விடுதலை,30.6.15

பெண்களுக்காகவே உழைத்த கெர்டா லெர்னர்



பெண் வரலாற்று ஆசிரியர், எழுத்தாளர், பேராசிரியர், பெண்கள் வரலாற்று துறையைத் தோற்றுவித்தவர், ஆவணப்பட இயக்குநர் என்று தன் வாழ்நாள் முழுவதும் பெண்களுக்காகவே உழைத்தவர் கெர்டா லெர்னர். பொதுவாக வரலாறு என்பது ஆண்களால் ஆண்களைப்பற்றி எழுதப்பட்டதாகவே இருந்தது.
அது ஆண்களின் நிர்வாகம், ராஜதந்திரம், யுத்தம், அரசியல் போன்றவற்றை எடுத்துச் சொல்லும். பெண்களைப் பற்றி எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டாலும்கூட, தாய், மகள், மனைவி, எஜமானி என்று பாலியல் சார்ந்தே குறிப்பிடப்பட்டுள்ளனர். சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றி வரலாற்றில் பதியப் படவில்லை.
இச்சூழலில், பெண்கள் வரலாறு என்ற துறையைத் தோற்றுவித்து, கண்களுக்கு அகப்படாத பெண்களின் பங்களிப் பையும் வரலாற்றில் இடம்பெறச் செய்தவர் கெர்டா லெர்னர்.
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் பிறந்து வளர்ந்தவர் கெர்டா லெர்னர். சுதந்திரச் சிந்தனைகளோடு வளர்க்கப்பட்டார். பிறப்பால் யூதர் என்பதால், யூத மதத்தில் பெண்களுக்கு மிகக் குறைந்த முக்கியத்துவமே கொடுக்கப்பட்டுள்ளதைக் கேள்விக்கு உட்படுத்தினார். கடவுள் நம்பிக் கையைக் கைவிட்டு நாத்திகராக மாறினார். யூதச் சடங்குகளை புறக்கணித்தார்.
1938ஆம் ஆண்டு ஜெர்மனியுடன் இணைந்தது ஆஸ்திரியா. ஹிட்லர் படைகள் யூதர்களை வேட்டையாடின. கெர்டாவின் வீடு சோதனையிடப் பட்டது. நாஜி படைகள், கெர்டாவின் அப்பாவிடம் சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டன. வீட்டில்  இருந்தவர்கள் கைது செய்யப் பட்டனர். கெர்டாவும் அவரது அம்மாவும் சிறையில் அடைக்கப் பட்டனர்.
தன் வாழ்வு இந்தச் சிறைக்குள் முடிந்துவிடப் போகிறது என்று எண்ணிக்கொண்டிருந்த கெர்டா, 6 வாரங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து தப்பினார். சிறை அனுபவம் வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்தது.  அமெரிக்காவுக்கு விசா பெற்று, தனியாகவே சென்று சேர்ந்தார்.
உணவு விடுதியில் பரிமாறும் வேலை, பொருட்களை விற்பனை செய்வது, கிளார்க், எக்ஸ்ரே எடுக்கும் பணி என்று கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து, தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். அப்படியே ஆங்கிலமும் கற்றுக்கொண்டார். இரண்டே ஆண்டுகளில் சிறைக் கைதிகள் என்ற புத்தகத்தை எழுதி, வெளியிட்டார்.
அது நாஜி படைகளின் கொடூரங்களைத் தோலுரித்துக் காட்டியது. ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் கார்ல் லெர்னரைத் திருமணம் செய்துகொண்டார் கெர்டா. இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கார்ல் லெர்னர் அமெரிக்க கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
அமெரிக்கப் பெண்கள் காங்கிரஸில் பங்கேற்று, தீவிரமாக வேலை செய்து வந்தார் கெர்டா. ஆப்பிரிக்க  அமெரிக்கப் பெண்கள், அமெரிக்கர்களால் எப்படியெல்லாம் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதைக் கண்டு உணர்ந்தார்.
அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களின் பங்களிப்பு என்பதே கண்களுக்குத் தெரியாமலும், வெளிச் சத்துக்கு வராமலும் இருப்பது கண்டு வருந்தினார். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் அடிமை எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். அவர்களின் பிரச்சினைகளை வைத்து ஒரு நாவலையும் எழுதி வெளியிட்டார்.
கணவர் இயக்கிய பிளாக் லைக் மி என்ற திரைப்படத்துக்குத் திரைக்கதையும் எழுதினார் கெர்டா. கணவரின் இறப்புக்குப் பிறகு பெண்கள் வரலாறு பக்கம் கவனத்தைத் திருப்பினார். ஓர் எழுத்தாளராகப் பெண்களின் பிரச்சினைகளை எழுதினார். பெண்கள் குறித்து பாடத்திட்டங்கள் உருவாக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஆண்-பெண் சமத்துவத்துக்கான போராட்டங்களில் கலந்து கொண்டார். முனைவர் பட்டம் பெற்று, சாரா லாரன்ஸ் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்கே பெண்கள் வரலாறு என்ற புதிய துறையை உருவாக்கினார். ஒடுக்கப்படும் பெண்களின் வரலாற்றைத் தொகுத்தார். ஆவணப்படுத்தினார். பெண்கள் வரலாற்று துறையில் முதுகலைப் பாடப் பிரிவைக் கொண்டு வந்தார்.
அந்தத் துறையின் இயக்குநராகவும் செயல்பட்டார். பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பெண் உரிமைகளை வலியுறுத்தினார்.  கெர்டாவின் அயராத உழைப்பின் காரணமாக அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் அமைப்பின் தலைவரானார். இந்த அமைப்பில் ஒரு பெண் தலைமைப் பொறுப்புக்கு வந்தது இதுவே முதல் முறை.
விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பெண்கள் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கினார். 1988ஆம் ஆண்டு பெண்கள் வரலாற்றுத் துறையில்  55 நிறுவனங்களில் இருந்து 63 அறிஞர்கள் வெளி வந்தனர். பெண்கள் வரலாற்றைப் போதித்தனர்.
அமெரிக்கப் பெண்கள் வரலாற்றில் இருந்து அய்ரோப்பிய பெண்கள் வரலாறு நோக்கித் திரும்பினார் கெர்டா. ஃப்ரெடரிக் ஏங்கெல்ஸ் எழுதிய குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் ஆகியவற்றிலுள்ள விஷயங்களை விளக்கிப் பேசினார்.   பெண்கள் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், தலைமை யேற்று நடத்துவதற்கும் பல கூட்டங்களை நடத்தினார்.
பெண்கள் வரலாற்று வாரம் என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நீண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. பெண்கள் வரலாற்று மாதம் அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்டது. கெர்டாவின் எழுத்துக்கும் சமூகப் பங்களிப்புக்கும் பெண்கள் போராட்டங்களுக்கும் பல்வேறு அமைப்புகள் அமெரிக்காவிலும் அவர் பிறந்த நாடான ஆஸ்திரியாவிலும் ஏராளமான பட்டங்களும் விருதுகளும் வழங்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டார்.
பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து 17 கவுரவ டாக்டர் பட்டங்கள் கெர்டாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த 4 ஆயிரம் ஆண்டு வரலாற்றில் முழுக்க முழுக்க ஆண்களே இடம்பெற்றிருந்தனர். இன்று அந்த நிலை கொஞ்சம் மாறியிருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் பெண் என்ற பாலினப் பாகுபாடு காட்டி ஒதுக்கப்படும் நிலை மாறுவதற்கு இன்னும் 4 ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம்.
அதற்காக மன உறுதியைத் தளர விடாமல் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு பெண்களுக்குத்தான் இருக்கிறது என்று கூறிய கெர்டா,  92 வயதில், 2013ஆம் ஆண்டு மறைந்து போனார்

-விடுதலை,30.6.15