திங்கள், 31 ஆகஸ்ட், 2015

ஜோர்டான் நாட்டின் முதல் பெண் பொறியாளர்

எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு மூன்றே விஷயங் களில் அடங்கியிருக்கிறது. கல்வி, கல்வி, கல்வி என்று சொல்லும் ரஃபியா உம் கோமர், ஜோர்டான் நாட்டின் முதல் பெண் சூரிய சக்தி பொறியாளர்.
வறுமையும் கல்வியறிவின்மையும் நிரம்பி வழியும் நாடுகளில் ஒன்று ஜோர்டான். பெரும்பாலான ஜோர்டான் கிராமங்களில் மின் வசதி இல்லை. 10 வயது வரைதான் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். 15 வயதில் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். வீடு, கணவன், குழந்தைகளைக் கவனிப்பதுதான் பெண்களின் வேலை. வீட்டை விட்டுப் பெண்கள் வெளியேற அங்கே அனுமதி இல்லை.
இப்படிப் பட்ட ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் ரஃபியாவும் பிறந்தார். இவரது அப்பா கிராமத் தலைவராக இருந்தார். கிராமத்தில் இருந்த மற்றவர்களைவிட முற்போக் கான எண்ணம் கொண்டவர். பெண் குழந்தைகள் படிப்பதையும் முன்னேறுவதையும் ஊக்குவித்தவர். இதனால் கிராமத்தினரின் கடுமையான கண்டனங்களுக்கும் ஆளானவர்.
15 வயதில் ரஃபியாவுக்குத் திருமணம் நடந்து, ஒரே ஆண்டில் அது முறிந்துபோனது. மீண்டும் பிறந்த வீட்டுக்கு வந்தார் ரஃபியா. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது திருமணம். அவர் கணவருக்கு இது மூன்றாவது திருமணம். நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் ரஃபியா.
கிராமத்தில் இருந்த மற்ற பெண்களைப் போல குடும்பம், குழந்தைகள் என முடங்கிப் போனாலும் ரஃபியாவின் மனத்தில் எப்படியாவது தானும் முன்னேற வேண்டும், தங்கள் மக்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.
அரசாங்கம், அய்.நா.வின் தன்னார்வத் தொண்டு அமைப்புகளிலிருந்து அந்தக் கிராமத்துக்குச் சிலர் வந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்து, கிராமத்தின் பிரச்சினைகளை அவர்களுடன் விவாதித்தார் ரஃபியா. அவரது தைரியமும் முன்னேறத் துடிக்கும் ஆர்வமும் எல்லோரையும் ஆச் சரியப்பட வைத்தன.
மின் வசதி, பள்ளி, தண்ணீர், ஆரோக்கியம் போன்ற பிரச்சினைகளுக்காக 260 கி.மீ. தொலைவில் இருந்த ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு அடிக்கடி சென்று வந்தார் ரஃபியா. கிராமத்தினருக்கும் ரஃபியாவின் கணவருக்கும் இது பிடிக்கவில்லை. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய காரியத்தில் உறுதியாக இருந்தார் ரஃபியா.
இந்தியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தும் கல்லூரியில் உலகம் முழுவதிலும் உள்ள பின்தங்கிய ஏழை மக்களுக்குக் கல்வி அளிக்கப்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரிக்குச் சில பெண்களை அனுப்பி, படிக்க வைக்க முடிவு செய்தது ஜோர்டான் அரசாங்கம். அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்களில் ஒருவர் ரஃபியா. வீட்டினரின் கடும் எதிர்ப்பையும் மீறி படித்தார்.
ராஜஸ்தான் கல்லூரிக்கு அவர் வந்தபோது, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நிறையப் பெண்கள் வந்திருந்தனர். அவர்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். எல்லோருக்கும் புரியும் விதத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் கருவிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் கற்றுக் கொடுக்கப்பட்டது. மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கற்று வந்தார் ரஃபியா.
இந்தியாவில் நான் கற்றுக் கொண்டது கல்வி மட்டுமல்ல. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தொழில்முனைவோருக்கான ஊக்கம், தலைமைப் பண்புகள் என்று ஏராளமான விஷயங்களை அறிந்துகொண்டேன். புதிய ரஃபியாவாக மாறி இருந்தேன். அந்த நேரம் என் கணவர் மிகவும் பிரச்சினை செய்துவிட்டார்.
உடனே நாட்டுக்குத் திரும்பவில்லை என்றால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கோ சென்று விடுவதாகக் கூறினார். என்னால் அந்த மிரட்டலை அலட்சியப்படுத்த முடியவில்லை. வேறு வழியின்றி படிப்பை முடிக்காமலேயே ஜோர்டான் திரும்பினேன் என்கிறார் ரஃபியா.
என்ன செய்தும் ரஃபியாவால் அவர் கணவர் மனநிலையை மாற்ற முடியவில்லை. அதற்காக அவர் சும்மா இருந்து விடவில்லை. அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்தார். சூரிய சக்தி மூலம் கிராமத்துக்கு மின் வசதி ஏற்பட வழிவகுத்தார். அவரே சூரிய மின் தகடுகளை உருவாக்கினார்.
80 வீடுகளில் சூரிய சக்தி மின் தகடுகளை அமைத்தார். ரஃபியாவுடன் சஹியா உம் பாட் என்ற பொறியாளாரும் இதில் பங்குபெற்றார். அதுவரை விளக்கு வெளிச்சத்தை அறியாத கிராமம், ஒளிர்ந்தது. கிராமத்தினருக்கு ரஃபியா மீது நம்பிக்கை வந்தது.
சூரிய மின் சக்திக் கருவி களை உருவாக்குவதற்குப் பெண்களுக்குப் பயிற்சியளித்தார். இவற்றை விற்பதன் மூலம் பெண்களுக்கு வருமானம் கிடைத்துவருகிறது. கிராமத்தில் மின் விளக்கு, தண்ணீர் பிரச்சினைகள் குறைந்து முன் னேற்றமும் ஏற்பட்டுவருகிறது. பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறார்.
முதல் முறையாக நகராட்சித் தேர்தலில் நின்று, வெற்றி பெற்று, நகராட்சிமன்ற உறுப்பினராக மாறியிருக்கிறார் ரஃபியா.
வறுமையை விரட்டியடிக்க பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்பதால், ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிக்கொண்டிருக்கிறார் ரஃபியா. பழமையான சிந்தனைகளில் ஊறியிருக்கும் மக்களை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாதுதான்.
ஆனால் தொடர்ந்து செய்யும் முயற்சிகளுக்கு நிச்சயம் ஒருநாள் பலன் கிடைக்கும். ஜோர்டான் மக்களின் வாழ்க் கையை மாற்றி அமைக்கக்கூடிய வழி ரஃபியாவிடம் இருக்கிறது.
-விடுதலை,25.8.15

இந்தியாவின் முதல் பெண் பட்டதாரிகள்

சந்திரமுகி பாசு (1860-1944):
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் பட்டதாரிகள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சந்திரமுகி பாசுவும் காதம்பினி கங்குலியும்தான். வங்கமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சந்திரமுகி பாசு கிறிஸ்தவக் குடும்பமொன்றில் 1860இல் பிறந்தார். டேராடூனைச் சேர்ந்த உள்நாட்டு கிறிஸ்தவர்களுக்கான பள்ளியில் 1880இல் ஃபர்ஸ்ட் ஆர்ட்ஸ் என்ற கலையியல் பட்டப் படிப்புக்கான தேர்வில் வெற்றிபெற்றார்.
அதற்கான நுழைவுத் தேர்வில் 1876-லேயே சந்திரமுகி வெற்றிபெற்றிருந்தாலும், வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் 1878-வரை அவரது பெயர் இடம்பெறவில்லை. இத்தனைக்கும் தேர்வில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். எனினும் அவரது பெயர், வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
பாலினப் பாகுபாடுதான் இதற்குக் காரணம். 1878இல் விதிமுறைகள் மாற்றப்பட்டபின் சந்திரமுகி மேல்படிப்புக்கு அனுமதிக்கப் பட்டார். அதற்குப் பிறகு பேதூன் கல்லூரியில் பட்டம் படித்து 1883இல் பட்டம் பெற்றார்.
சந்திரமுகியுடன் கல்லூரியில் சேர்ந்த காதம்பினி கங்குலியும் 1883இல் பட்டம் பெற்றார். 1886இல் பேதூன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1886இல் பேதூன் கல்லூரியும் பேதூன் பள்ளியும் பிரிக்கப்பட்ட பின் பேதூன் கல்லூரியின் முதல்வராக சந்திரமுகி ஆனார். இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே இளங்கலைக் கல்லூரி ஒன்றில் தலைமைப் பொறுப்புக்கு வந்த முதல் பெண்ணும் சந்திரமுகிதான்.
காதம்பினி கங்குலி (1861-1923):
இந்தியாவில் பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற சிறப்பை சந்திரமுகி பாசுவுடன் காதம்பினி பகிர்ந்து கொண்டாலும் இந்தியாவில் அலோபதி படித்து மருத்துவரான முதல் பெண் காதம்பினிதான். 1886இல் இந்தச் சிறப்பை அவர் பெற்றார்.
ஆனந்தி கோபால் ஜோஷி என்ற பெண்ணும் அதே ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்றிருந்தாலும் அவர் படித்தது அமெரிக்காவில். காதம்பினியின் சாதனை இப்போது தான் சாதனையாகக் கருதப்படுகிறதே தவிர அவரது காலத்தில் அவருக்கு அவ்வளவு எளிதாக அங்கீகாரம் கிடைத்துவிட வில்லை. 1892இல் இங்கிலாந்து சென்ற அவர் எல்.ஆர்.சி.பி, எல்.ஆர்.சி.ஆஸ், ஜி.எஃப்.பி.எஸ் போன்ற படிப்புகளை முடித்து விட்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.
இந்தியா வந்து தனது மருத்துவத் தொழிலைத் தொடங் கியவர் பிறகு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து பாடுபட்டார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக நடை பெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கல்கத்தாவில் ஒரு கூட்டத்தை அவர் நடத்தியதும் குறிப்பிடத் தக்கது.
-விடுதலை,25.8.15

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

உழைக்கும் மகளிருக்கான சட்டங்கள் என்ன?
பெண்கள் இல்லாத துறை  என்பதே அரிதாகிக் கொண்டிருக்கிற காலகட்டம் இது. ஆனாலும், வேலை என்று வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள், பணியிடத்துச் சூழலில் பாதுகாப்பை உணர்கிறார்
களா?
இந்திய அரசியல் அமைப்பு சாசனம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறினாலும் அதன் 15(3) சரத்தின் கீழ் பெண்களுக்கும்  குழந்தைகளுக்குமான தனிச்சட்டங்கள் இயற்ற வழிவகை செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே பல நலச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில்  உள்ளன. நம் நாட்டில் உழைக்கும் மகளிருக்காக இருக்கும் சட்டங்கள் என்ன என்ன? அவை கொடுக்கும் பாதுகாப்பு என்ன? என்பது உழைக்கும்  பெண்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
மகப்பேறு நல சட்டம், 1961 (மெட்டர்னிட்டி பெனிஃபிட் ஆக்ட் 1961)
ஒரு பெண்ணுக்கு  மிகுந்த மகிழ்ச்சியையும் சிரமத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்கும் காலம்தான் அவளது தாய்மைப் பருவம். தாய்மையடைந்த  நிலையில் வேலைக்குச் செல்லும் போது அவளுக்கு சட்டம் கொடுக்கும் பாதுகாப்பு மற்றும் சலுகைகள்  பற்றி மகப்பேறு நல சட்டம் 1961  விளக்குகிறது. தாய்மை யடைந்துள்ள ஒரு பெண் மற்றும் அவள் ஈன்றெடுக்கும் அந்தப் புது வரவின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும்  குழந்தைப்பேற்றுக்கு சில நாள்கள் முன்பும், பின்பும் சராசரி பணி செய்ய இயலாத தாய்க்கும், சேய்க்கும் தேவையான விடுப்புடன் கூடிய பொருளாதார  சலுகை மற்றும் இதர சலுகைகள் அளிப்பது என்ற நோக்கிலேயே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  எங்கெல்லாம் இந்தச் சட்டம் பொருந்தும்?
தனியார் அல்லது அரசுக்குச் சொந்தமான தொழிற் சாலை, சுரங்கம், தேயிலைத் தோட்டம் ஆகியவற்றில் நேரடியாகவோ அல்லது காண்டிராக்டர்  மூலமாகவோ பணி செய்யும் பெண்கள், குதிரையேற்றம், சர்க்கஸ் போன்று உடலால் செய்யும் வித்தைகள் மற்றும் அதை ஒத்த வித்தைகள், கடை,  அங்காடி போன்றவற்றில் 10-க்கும் அதிக பெண்கள் - சென்ற 12 மாதங்களில் பணி புரியும் பட்சத்திலும், அரசு, தொழில், வர்த்தகம், விவசாய ரீதியான  பணியில் ஈடுபடுவோருக்கும்
2 மாத அறிவிப்பினைத் தொடர்ந்து அரசாங்கப் பதிவேட்டில் அறிவித்து இச்சட்டத்தை அவர்களுக்கும் அமல்படுத்தச் செய்யலாம். இந்தச் சட்டத்தின்  பொருளாதார ரீதியான சலுகைகள்...
பிரசவத்துக்கு முன் 6 வார காலத்துக்கான ஊதியத்துடன் கூடிய விடுப்பு, பிரசவத்துக்குப் பின் 6 வார காலத்துக்கான ஊதியத்துடன் கூடிய விடுப்பு  (இந்த 12 வார விடுப்பினை எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம்).
நிர்வாகத் தரப்பு இலவச மருத்துவ பாதுகாப்பு தர இயலாத பட்சத்தில் குறைந்தது 1,000 ரூபாய்க்கான மருத்துவ போனஸ். பேறுகாலம், பிரசவம்  அல்லது கருக்கலைப்பின் போது ஏற்படும் உடல்நலக் குறைவுக்கான சான்றாவணம் சமர்ப்பிக்கும் பொருட்டு மேலும் ஒரு மாதத்துக்கான ஊதியத்துடன்  கூடிய விடுப்பு.
கருக்கலைப்பு ஏற்படின் 6 வாரம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு. குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தால் 2 வாரம் ஊதியத்துடன்  கூடிய விடுப்பு. பிரசவத்துக்கு 6 வாரம் முன்பும் அதற்கு முன் ஒரு மாதமும் ஆக மொத்தம் 10 வாரங்கள் வரை எளிமையான பணி கோர கருவுற்ற  பெண்ணுக்கு உரிமை உண்டு.  அந்த உரிமை கோரும் நேரத்தில் கருவுற்றதற்கு ஆதாரமாக மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.  பிரசவத்துக்குப் பின் பணியில் சேர்ந்த பிறகு எப்போதும் கிடைக்கும் பிரேக் பீரியட் உடன் மேலும் 2 முறை 15 நிமிட கால அவகாசம் கொண்ட  (குழந்தைக்கு பாலூட்டுவதற்கு) இடைவெளி கொடுப்பது அவசியம். பேறுகாலத்தின் போது பெண்ணின் பணிமுறையை உடல்நிலைக்கு குந்தகம்  ஏற்படும்படி மாற்றம் செய்யக்கூடாது. பேறு காலத்தில் ஒரு பெண்ணை பணி நீக்கம் செய்யக் கூடாது. அவ்வாறு பணி நீக்கம் செய்யும் பட்சத்தில்  பேறுகால சலுகையைப் பெற அவர்களுக்கு உரிமை உண்டு. (ஒருவேளை தண்டனைக்குரிய குற்றச் செயலுக்காக வேலையிலிருந்து நீக்கும் பட்சத்தில்  இச்சட்டத்தின் கீழ் சலுகை மறுக்கப்படலாம்). சம ஊதிய சட்டம் 1976 இந்தச் சட்டம் நம் அரசியல் அமைப்பு சாசனத்தின் சரத்து 39இன் கீழ் ஆண்களுக்கு நிகராக பெண் களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதைக்  குறிப்பிடுகிறது.  அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் இது.  இச்சட்டத்தின் கீழ் பாலின அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு வேலையில்  சேரும்போதோ, பணி தொடர்பான விஷயங்களிலோ - உதாரணமாக பணி உயர்வின் போதோ - பெண் என்ற ஒரே காரணத்துக் காக பங்கம்விளைவிக்கக்  கூடாது.  இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான வேலைக்கு வேறு வேறு ஊதியம்  தருவதைத் தவிர்த்து ஒரே மாதிரியான ஊதியமே தரவேண்டும்.  இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பணிக்காக வேறு வேறு ஊதியம் கொடுத்துக்கொண்டிருப்பின் அந்தப் பணிக்கு  கொடுக்கப்படும் அதிகபட்ச ஊதியமே பெண்களுக்கும் தொடர்ந்து தரப்பட வேண்டும். ஊதிய உடன்படிக்கையின் மூலம் குறைந்த கூலி கொடுத்துவரும்  பட்சத்தில் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின் அது செல்லாததாகக் கருதப்படும்.  அதே போன்று எந்தவொரு பணிக்கு பணியாளரை நியமிக்கும் போதும்,  பயிற்சியின் போதும், இடமாற்றத் தின் போதும், பணி உயர்வின் போதும் பெண் என்ற காரணத்துக்காக பாகுபாடு பார்க்கக் கூடாது.
- விடுதலை,9.7.13

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

சாதனைப் பெண்கள

ஓட்டு போட வைத்த  எம்மிலின் பாங்குர்ஸ்ட் (1858 - 1928)
இங்கிலாந்தில் பெண்களுக்கான வாக்குரிமை போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் எம்மிலின் பாங்குர்ஸ்ட். மிகுந்த அறிவாளி. படிப்பாளி. 14  வயதிலேயே பெண்கள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டார். பெண்கள் உரிமைகளுக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர் பாங்குர்ஸ்டை மணம்  செய்துகொண்டார்.
அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தொடர்ந்து மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார். பலமுறை சிறை சென்றார். பட்டினிப் போராட்டம் நடத்தினார். தொடர்ச்சியான கடும் போராட்டங் களின் பலனாக 1918இல் இங்கிலாந்தில் ஓட்டு உரிமை கிடைத்தது.
இருபதாம் நூற்றாண்டின் மிக  முக்கிய மனிதர்களில் ஒருவராக எம்மிலின் பாங்குர்ஸ்ட் போற்றப் படுகிறார். எம்மிலினின் பெண்களும் போராட்டங்களில் தீவிரம் காட்டினார்கள்.
இயக்கம் தொடங்கிய கேத்தரின் ஹெலன் ஸ்பென்ஸ் (1825 - 1910)
1902இல் ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாட்டில் பெண்கள் இயக்கத்தை வழிநடத்திச் சென்றவர்களில்  முக்கியமானவர் கேத்தரின் ஹெலன் ஸ்பென்ஸ். ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை யாளர், அரசியல்வாதி என்று பல சிறப்புகளைப் பெற்றவர்.
பெண்களுக்கான இயக்கங்களில் நேரடியாகவும், பத்திரிகை, புத்தகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து போராடினார். இன்று மிகச்சிறந்த ஆஸ்திரேலிய  பெண்களில் ஒருவராக அந்த நாடே கொண்டாடுகிறது. கரன்ஸியில் அவருடைய உருவத்தைப் பொறித்துப் பெருமைப்படுத்தியிருக்கிறது.
பன்முகத் தன்மை கொண்ட ரோசா லுக்சம்பர்க் (1871 - 1919)
ரஷ்யாவில் பிறந்த ரோசா லுக்சம்பர்க், மார்க்ஸியவாதி... தத்துவஞானி... பொருளாதார வல்லுநர்... பெண்ணுரிமைப் போராளி... சமூக  விடுதலைக்காகப் போராடிய புரட்சியாளர்.
விடாது போராடிய கிளாரா ஜெட்கின் (1857 - 1933)
ஜெர்மனியில் பிறந்தவர் கிளாரா. பெண் உரிமைகளுக் காகப் போராடியவர்களில் மிக முக்கியமானவர். பெண்கள் போராட்ட வரலாற்றின்  நெடும்பயணத்தில் இவரின் பங்களிப்பு சுமார் 60 ஆண்டுகள். முற்போக்கான தொலை தூர சிந்தனையும் துணிச்சலும் இவருடைய சிறப்புக் குணங்கள்.
கல்விக்காக வாழ்ந்த மேரி மெக்லியோட் பெத்யூன் (1875 - 1955)
உனக்குப் படிக்கத் தெரியாது என்று சொன்னதும் துடிதுடித்துப் போனார் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரான மேரி. தாங்கள் ஏன் அடிமையாக இருக்கிறோம்  என்று யோசித்தவர், கல்வி ஒன்று மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்று நம்பினார். படிக்க ஆரம்பித்தார். பல இன்னல்களைக் கடந்தார்.
தன்னைப் போன்ற அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு கல்வியளித்தார். பள்ளி, கல்லூரி ஆரம்பித்தார். அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்  இவரிடம் ஆலோசனை கேட்கும் அளவுக்கு உயர்ந்தார்.
கொடி கட்டிய  எமிலி டேவிசன்(1872 - 1913)
இங்கிலாந்தின் பெண்கள் இயக்கப் போராட்டக்காரர் எமிலி டேவிசன். 1913இல் பெண்கள் இயக்கத்தின் கொடியைக் கட்டி, போராட்ட போஸ்டரை  ஒட்டுவதற்காக அய்ந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரைக்கு அருகில் சென்றார். எதிர்பாராவிதமாக குதிரை தாக்கியதில் 4 நாள்களுக்குப் பிறகு இறந்து  போனார். ஜூன் 4ஆம் தேதியை எமிலி டேவிசன் நாளாக கடைபிடிக்கிறார்கள்.
பெண்களைக் காத்த மேரி ஸ்டோப்ஸ் (1880 - 1958)
மருத்துவரான மேரி ஸ்டோப்ஸ் பெண்கள் இயக்கப் போராட்டக்காரரும் கூட. ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஏழெட்டு குழந்தைகளைப் பெற்று  வறுமையில் வாடிக்கொண்டிருந்தனர். குடும்பம் பெருகாமல் இருப் பதற்காக, சுயமாக கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் மூலம் ஏராளமான  பெண்கள் மரணம் அடைந்தனர். இதனைக் கண்ட மேரி ஸ்டோப்ஸ், குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தினார். மருத்துவமனைகளை ஆரம்பித்து  ஏழைத்தாய்களுக்கு இலவசமாக குடும்பக்கட்டுப்பாடு, பாதுகாப்பான கருக்கலைப்பு போன்றவற்றைச் செய்தார்.
அடிமைத்தனத்தை எதிர்த்த சோஜோர்னர் ட்ரூத் (1797-1883)
அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரான சோஜோர்னர் ட்ரூத் அடிமைத்தன ஒழிப்புப் போராட்டங்களிலும் பெண்ணுரிமைப் போராட்டங்களிலும் மிகச்சிறந்த  பங்களிப்பைச் செய்தவர். 1851இல் பெண்கள் உரிமை மாநாட்டில் நான் ஒரு பெண் ணல்லவா? என்ற இவரது உரை மிகவும் புகழ்பெற்றது.
பெண்களுக்காக முழங்கிய சூசன் பி.அந்தோணி (1820 - 1906)
அமெரிக்கப் பெண்ணுரிமைப் போராளி.   பெண் களுக்கான இயக்கத்தையும் பத்திரிகையையும்  ஆரம்பித் தவர்களில் ஒருவர். அமெரிக்க அய்க்கிய நாடுகளிலும் அய்ரோப்பாவிலும் சுற்றுப்பயணம் செய்து, பெண்ணுரி மையை வலியுறுத்தி பேசியவர்.
ஆண்டுக்கு சுமார் 100 மேடைகளில் முழங்கியிருக்கிறார். அமெரிக்க குடியுரிமைப் போராட்டங்களிலும் முக்கியப் பங்காற்றியவர்.
-விடுதலை,3.10.15

பெண்களுக்கான உடற்பயிற்சிகள் என்னென்ன?


பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம்.
1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.
2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.
3) யோகாசன பயிற்சிகள்.
4) ஸ்கிப்பிங் பயிற்சி
இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க இவற்றை செய்யலாம். ஆனோரோபிக் வகை உடற்பயிற்சி என்பது விளையாட்டுத் தனமாகவே இருக்கும். இதனை உடற்பயிற்சி செய்கிறோம் என்கிற உணர் வில்லாமல் விளையாட்டாக செய்யலாம்.
கைகள் வலுபெற: சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
இடுப்பு வனப்பு பெற: இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக்ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.
தோள்பட்டை...: பெண்களின் தோள்பட்டை அவரவர் களின் தலை அமைப்பு, உடல்வாகு, இடுப்பின் அளவு போன்றவற்றை பொறுத்து அமைந்திருக்க வேண்டும். தோள்பட்டை அகலமாக இருந்து தலை சிறுத்திருந்தால் நன்றாக இருக்காது. தலையும், இடுப்பும் வனப்பாக இருந்து, தோள்பட்டை வனப்பாக இல்லை என்றால் அழகு வராது.
பாதம் உறுதி பெற: குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெட் மில் பயிற்சியினையும், மெல்லிய நடைப் பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்.
-விடுதலை,24.3.15

தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே!

பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உடல் மற்றும் மனநலம் குறித்த பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 13 வயதில்  பெண்கள், சுய சுகாதாரம், ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி (விளையாட்டு) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 13 வயது முதல் 18வயது  வரையுள்ள பெண் குழந்தைகளை மிகவும் பக்குவமாக கையாள வேண்டும்.
இந்த வயதில் மிகக்குறைந்த அல்லது அதிக உடல்எடை, பிறப்புறுப்பு  பிரச்சினைகள், சிறுநீரக பாதை கோளாறுகள், பூப்படைதலில் கோளாறுகள் என பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த வயதில் சமூகத்தில்  பெண்ணுக்குள்ள முக்கியத்துவத்தை உணர்த்தி ஆணுக்கு பெண், நிகரானவள் என்பதை உணர்த்த வேண்டும்.
மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் காலம் என்பதால் பெற்றோர் குழப்பத்தில் இருப்பார்கள். பூப்படைந்தது முதல் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு  மாதவிடாய் சுழற்சி இருக்காது என்பதை நாம் உணரவேண்டும். 19 வயது முதல் 39 வயது வரை திருமணம் மற்றும் குழந்தை பேறு உட்பட வாழ்வின்  முக்கிய திருப்பங்கள் நடக்கும் காலகட்டமாகும்.
இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரிக்க திட்டமிட்ட 3மாதங்களுக்கு முன்பாகவே விட்டமின் மருந்தை,  மருத்துவர்களின் ஆலோசனைப்படி உண்ண வேண்டும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியம். மகப்பேறு காலத்தில் உரிய பயிற்சி பெற்ற  மருத்துவரிடம் காண்பித்து, பிரச்சினைகளை ஆரம்பநிலையில் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.
40 முதல் 65 வயதுக்குட்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள், மாதவிடாய் சுழற்சி நிற்கும் தறுவாயில் இருப்பதால் உடல் மற்றும் மனநல  கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். அதை உணர்ந்து உணவு கட்டுப்பாடு, அதிக சர்க்கரை தவிர்ப்பு, உணவில் சோயா மற்றும் கால்சியம், உடற் பயிற்சியில்  ஈடுபடவேண்டும். 65 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு குடும்பத்தினரின் துணை மிகவும் அவசியம்.
புற்று நோய்க்கான அபாயம் அதிகம் இருக்கும்  காலம் இது. எனவே கருப்பை சம்பந்தமான சிறிய சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டு, பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தன்வாழ்வின்பெரும் பகுதியை குடும்பத்திற்காக செலவிடும் பெண்ணின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது.
எந்த  குடும்பத்தில் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைத் திருக்கும்  என்பது மட்டும் உண்மை.
-விடுதலை,24.3.15

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

கருநாகப்பாம்பின் ரத்தத்தை குடித்த ராணுவ வீராங்கனை

கருநாகப்பாம்பின் ரத்தத்தை குடித்து
பயிற்சியை நிறைவு செய்த
அமெரிக்க ராணுவ வீராங்கனை
வாஷிங்டன், ஆக. 20 யுத்தகளத்தில் முன்ன ணியில் நின்று போர் புரிவதில் ஆண்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பாக பெண் களுக்கும் சம வாய்ப்பு வழங்க அமெரிக்க ராணு வம் முடிவு செய்தது.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 381 ஆண்கள் மற்றும் 19 பெண்களுடன், ராணுவ ரேஞ்ஜர்களுக்கான தலைமைப் பயிற்சி ப்ளோரிடா மாகாணத்தில் தொடங்கியது. இந்த பயிற்சி தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது.
இந்த பயிற்சியின் போது, வன விலங்குகள் மற்றும் அதிக நச்சுத் தன்மையுள்ள பாம்புகளை அடித்துக் கொல்வது, பேரிடரில் சிக்கித் தவிக்கும் ராணுவ வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, காடு களில் மறைந்திருந்தபடி பல நாட்கள் உயிர் வாழ்வது எப்படி? என்பன உள் ளிட்ட பல்வேறு போர் பயிற்சி முறைகள் பயிற்று விக்கப்பட்டன.
49 புஷ்-அப், 59 சிட்-அப், 6 சின்-அப் இவ்வளவையும் செய்து விட்டு 8 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதுதான் இந்த பயிற்சியின் முக்கிய அம்சமே இத்தனையையும் வெறும் 40 நிமிடங் களுக்குள் செய்து முடித்தாக வேண்டும். இது தவிர, 3 மணி நேரத்தில் 19 கிலோ மீட்டர் நடப்பது, மலை யேற்றப் பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று ஒவ்வொன் றும் ஒருவரை சிறந்த ராணுவ வீரராக உரு மாற்றக்கூடியது.
இந்த பயிற்சியின் ஒரு கட்டமாக மிகக் கடுமை யான நச்சுத் தன்மையுள்ள கருநாகங்களை வேட்டை யாடும் கலை பற்றி கற்றுத் தரப்பட்டது. மேலும், உணவு ஏதும் கிடைக்காத நிலையில், ஒரு கருநாகத் தின் ரத்தத்தை குடித்து,  உயிரை காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தாய்லாந்து நாட்டின் காட்டுப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களி டையே கருநாகத்தின் ரத்தத்தை குடிக்கும் வழக்கம் நிலவி வருகிறது. பாலுணர்வு எழுச்சியை தூண்டுவதில் முதன்மை மருந்தாக கருதப்படும் கருநாகத்தின் ரத்தம் கிழக்கு ஆசியா பகுதியில் உள்ள பல நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், பயிற்சி யின் ஒருபகுதியாக பிடி பட்ட கருநாகத்தின் ரத்தத் தை குடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். வீரர்கள் பலர் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் ஒரு வீராங்கனை மட்டும் துணிச்சலுடன் கருநாகத்தை கொன்று வெட்டப்பட்ட பாம்பின் தலைப்பகுதியை வாய்க்குள் வைத்து ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தார்.
இதைக் கண்டு அனைவரும் வியந் தனர். இந்த கடும் பயிற்சி யில் 2 பெண்கள் உட்பட 94 பேர் தேர்ச்சியடைந் துள்ளனர்.  இவர்கள் பயிற் சியில் தேர்ச்சி பெற்றதற் கான விழா வருகிற வெள்ளிக்கிழமை போர்ட் பென்னிங் ராணுவ மய்யத் தில் நடைபெறுகிறது.
-விடுதலை,20.8.15

புதன், 19 ஆகஸ்ட், 2015

அமெரிக்க அதிபர் மாளிகை அதிகாரியாக திருநங்கை நியமனம்


அமெரிக்க அதிபர் மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேன் என்ற திருநங்கை செவ்வாய்க்கிழமை நியமிக்கப் பட்டார். அமெரிக்க அதிபர் மாளிகையில் அதிகாரி யாக நியமிக்கப்பட்டுள்ள முதல் திருங்கை இவரே ஆவார். ரஃபி, இதற்கு முன்பு திருநங்கைகளின் சமத் துவத்துக்கான தேசிய மய்ய ஆலோசராக பணியாற்றி வந்தார்.
"ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேனின் நியமனம், மூன்றாம் பாலின சமூகத்திற்கு ஒரு முக்கிய நிகழ்வு என்றும், அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கை களையும் அரசு நிறைவேற்றுகிறது என்பதை உறு திப்படுத்தும் விதமாக உள்ளது என்றும் வழக்கு ரைஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருநங்கை களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, ரஃபி பிரீட் மேன்-குர்ஸ்பேன் உறுதி பூண்டிருப்பதற்கு ஒபாமா அரசு மதிப்பளிக்கிறது என்பதை இந்த நியமனம் பிரதிபலிக்கிறது என்று வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் வலேரி ஜாரெட் கூறினார்.


.-விடுதலை,19.8.15

ஆண்களே இல்லாத அபூர்வ கிராமம்...

ஆண்களே இல்லாத அபூர்வ கிராமம்... 

கென்யா நாட்டில் ஆண்கள் இல்லாமல் முற்றிலும் பெண்களால் ஆன ஒரு கிராமம் இருக் கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..
கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகரிலிருந்து 380 கி.மீட்டர் தொலைவில் உள்ள சம் புரு பகுதியில் தான் இந்த கிராமம் அமைந்துள்ளது.  உமோஜா எனும் இந்த கிராமத்தை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை கள், குழந்தைத் திருமணம், கணவனால் கைவிடப் பட்ட மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப் பட்ட 15 பெண்கள் கூட் டாக இணைந்து 1990-ல் உருவாக்கினர்.
தற்போது  இந்த கிராமத்தில் 47 பெண் கள் மற்றும் 200 குழந்தை கள் வசிக்கின்றனர். ஆண் களே இல்லாத இந்த கிரா மத்திற்கு பிரிட்டன் ராணு வத்தினரால் பாலியல் வன்முறை செய்யப்பட்ட ரெபேக்கா லோலோசோலி என்றப் பெண் கிராமத் தலைவியாக செயல்பட்டு வருகிறார். இந்த கிராமப் பெண்கள் நகை செய்து விற்பதின் மூலமாகவும், இந்தப் பகுதியிலேயே கூடாரங்களால் ஆன ஒரு சிறிய சுற்றுலாத்தலத்தை ஏற்படுத்தியுள்ளதன் மூல மாகவும் இவர்கள் தங்க ளின் வாழ்க்கைச் செலவி னங்களை எதிர்கொள்கின் றனர்.
பெண்கள் மட்டுமே இருக்கும் கிராமம் என்ப தால் அக்கம்பக்கத்து கிரா மங்களில் உள்ள ஆண்கள் அவ்வப்போது அத்துமீறி செயல்படுவதுண்டு. எனி னும், அனைத்து தடைக ளையும் தைரியமாக எதிர் கொண்டு, இந்த 247 பேரும் பத்து குடும்பங்களாக ஒற் றுமையுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


-விடுதலை,19.8.15

சனி, 15 ஆகஸ்ட், 2015

பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு


பெங்களூரு, ஆக.8 பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மகளி ருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதற்கு, மகளிர் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2010ஆ-ம் ஆண்டு நடை பெற்ற பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் 198 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியில் 64 வார்டுகளில் மகளிர் போட்டியிட அனுமதிக் கப்பட்டனர். அதன்படி பாஜகவில் 31 பேரும், காங்கிரஸில் 22 பேரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் 8 பேரும், சுயேட்சையாக 3 பேரும் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் வருகிற 22-ம் தேதி பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய் யும் பணிகள் தொடங்கி யுள்ளதால், வேட்பாளர் களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சியினர் தீவி ரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் 198 வார்டுகளைக் கொண்டு மாநகராட்சியில் 98 வார் டுகள் மகளிருக்கு ஒதுக்கப் பட்டுள்ளன.
எனவே பெண் வாக்கா ளர்களை குறி வைத்து காங்கிரஸ், பாஜக உள் ளிட்ட கட்சியினர் தேர் தல் அறிக்கையை தயா ரித்து வரு கின்றனர். மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட் டுள்ளதால் பெங்களூரு வில் உள்ள மகளிர் அமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-விடுதலை,8.8.15

இந்தியாவின் முதல் பெண் நீதிபதி


நீதிமன்றத்தில் பெண்கள் கோலோச்சுவதென்பது குருடன் கானகத்தில் வழி தேடி அலைவதை போன்றதே. மற்ற துறைகளைப் போல இந்தத் துறை இல்லை... மிகவும் சவாலானது என தான் சார்ந்த துறை கடினம் என்பதை  எல்லாரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
இது அது போன்ற ஒரு ஸ்டேட் மென்ட் அல்ல. ஏனெனில், நிஜத்திலும் நீதித்துறை என்பது ஆண்கள் ஆக்கிரமித்து ஆட்சி செய்து கொண்டிருக்கிற துறையே. இங்கும் சாதித்த மங்கைகள் இருக்கிறார்கள்.  அவர்கள் கடலில் நீந்தி கரை சேர்ந்தவர்கள்...
மீன்களின் குத்தலுக்கும் முதலைகளின் பசிக்கும் கடல்வாழ் உயிரினங் களின் கடுப்புக்கும்  ஆளாகி, சிலர் நீந்தவும் தெரியாமல் தட்டுத் தடுமாறி கரை சேர்ந்தவர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சட்டத் துறையில் சாதித்து வெளியே வருவதென்பது சரித்திரம் பெற்றதற்கு சமம். நிழலும் நிஜமும் இங்கு வெவ்வேறான துருவங்கள்!
எட்டாம் வகுப்பு படிப்பதுதான் திருமணத்துக்கான தகுதி என்றிருக்கும் ஊரில், என்னை படிக்க வைப்பதையே லட்சியமாகக் கொண்டு, அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளி, சட்டக் கல்லூரி வரை என்னை நகர்த்திச் சென்ற பெருமை என் அப்பா கிருஷ்ணனையே சாரும்.
பட்டம் வாங்குவதற்கு முன் நீதிமன்ற வாசலை நான் மிதித்ததில்லை. மூட் கோர்ட் என்று ஒன்று உண்டு. அப்போதும் நீதிமன்றத்தில் நுழைய வாய்ப்பு அமையவில்லை. நான் வழக்குரைஞராக பதிவு செய்து, கருப்பு அங்கியை அணிந்தபோது எங்கள் தெரு முழுக்க ஊர்வலமாக என்னை அழைத்துப் போனார் அப்பா.
அந்தத் தருணத்தில் ஏதோ முடிசூடிக் கொண்ட ராணியை போன்ற பிரமிப்பு! நீதி மன்றத்தில் நுழைந்த சில நாட்களிலேயே  மலை உச்சியிலிருந்து மண்ணில் தலைகுப்புற விழுந்து தூள் தூளானது வழக்கறிஞர் தொழில் பற்றிய கற்பனை. சக வழக்கறிஞர்கள் என்னிடம் விசாரித்தது யாருடைய ஜூனியர் என. சீனியர் பேரை சொன்னதும் என்னுடைய ஜாதியை சொல்கிறார்கள்.
கீழமை நீதிமன்றங்களில் ஜாதியை மய்யப்படுத்திதான் எல்லாம்! வழக்கறிஞருக்கு வழக்குகளும் அந்த வகையில்தான் வரும் என்பது போக போகத்தான் புரிந்தது.
முதல் நாள் என்னிடம் 7 வழக்குகளின் கோப்புகளை கொடுத்தார்கள். அதில் ஒன்று 30 ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றத்துக்கு வந்தது. அதற்கு வாய்தா வாங்க வேண்டும். எப்போது வழக்கை கூப்பிடுவார்கள்? எதைச் சொல்லி ஆரம்பிக்க வேண்டும்? எதுவும் தெரியாது.
நீதிபதியிடம் வசை வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் அந்த கட்டை ஜூனியர்கள் தலையில் கட்டி அனுப்பிவிடுவார்கள். இந்த நிலத் தகராறு கேஸுக்கு வாய்தா வாங்கு - இவ்வளவுதான் சீனியர் சொன்னது. அவசரத்துக்கு கண்ணில் படுபவர்களிடம், அண்ணே! அக்கா!
வாய்தா எப்படி கொடுப்பாங்க என்று கேட்டுக் கொண்டிருந்தேன். வளாகத்தில் இருக்கும் வழக்குரை ஞர்களில் யாரோ ஒருவர் பரபரப்புக்கு நடுவிலும், கிளைன்ட் ஊர்ல இல்லன்னு சொல்லுங்க என்று சொல்லி விட்டுப் போனார். மை கிளைன்ட் ஈஸ் அவுட் ஆஃப் ஸ்டேஷன் என நான் நீதிமன்றத்தில் உச்சரித்த முதல் வாதமே அப்பட்டமான பொய்.
நான் சொன்னதுதான் தாமதம் பாஸ் ஓவர் என்று சொல்லி  முறைத்து கட்டை தூக்கி கிளார்க் பக்கம்  கீழே போட்டார் நீதிபதி. வாய்தா வாங்காமல் போனால் வழக்கு ரைஞர் உள்ளே   சேர்க்க மாட்டார். உணவு இடைவேளையின் போது பாஸ் ஓவர் செய்த கட்டை இன்னொரு முறை கூப்பிடுவாங்க அதுவரை இங்கேயே  இருங்க... என்றார்கள்.
ஆக, ஜூனியர்களின் முழுவேலை வாய்தா வாங்குதல். காலம் தான் மற்ற விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும்! நீதிமன்றத்தில் வழக்குரைஞராக அங்கியோடு சுற்றிச் சுற்றி வளைய வந்து, அது மற்றவர் கவனத்தை ஈர்த்து, வழக்குரைஞர்தான் என்று ஊர்காரர்கள் நம்பி, பெண்ணாக இருந்தாலும், ஊர்கார பொண்ணு அவங்க கிட்ட கொடுத்துதான் பார்ப்போம் என்று யாராவது ஒருவர் இரக்கப்பட்டு கொடுத்தால்தான் உண்டு...
ஜூனியரிடம் ஒரு கேஸ் முழுமையாக வந்து சேரவே நான்கு ஆண்டு களாவது ஆகிவிடும். வந்த கேஸை எடுத்து நடத்தணுமே தவிர ஃபீஸுன்னு மூச்சுவிடப் படாது. மனுவில் கையெழுத்து போட வரும்போது மாங்காயோ, தேங்காயோ கொண்டுவந்தால் அதுதான் ஃபீஸ். டீ, காபி போனஸாக உண்டு.
ஜூனியராக இருக்கும்போது வருமானம் என்பது அறவே இல்லை என்ற உண்மை உறைக்கும்போதுதான் நாம் தவறான துறையை தேர்ந்தெடுத்துவிட்டோமோ என்ற சங்கடம் ஜூனியர்களுக்கு உறுத்தும். 7 மாதங்களுக்குப் பிறகு எனக்கு சீனியர் கொடுத்த பணம் நூறு ரூபாய். அந்த நேரத்தில் அந்த நூறு ரூபாய் லட்சம் சம்பாதித்ததை போன்ற பிரமிப்பைக் கொடுத்தது. அதை பத்திரமாக ஃப்ரேம் போட்டு வைத்துள்ளேன்.
ஆனால், நான் நூறே நூறு ரூபாய் சம்பாதிக்க 7 மாதம் தேவைப்பட்டிருக்கிறது.  கற்றுக்கொண்டது என்ன? வாய்தா வாங்குதல்! நீதித்துறையில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் நீண்ட நெடிய பயணம் செய்யவேண்டும். காத்திருப்பு அவசியம். காலத்தை விரயம் செய்ய வேண்டியது கட்டாயம்.
பலனை எதிர்நோக்காமல் பயணிக்க வேண்டியது தான் முதல் பாடம். வழக்கே இல்லாவிட்டாலும் காலை முதல் மாலை வரை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட வேண்டும். 2003லேயே இந்த கதி என்றால், 1928இல் இந்தியாவில் வழக்கறிஞராக அவதாரமெடுத்த முதல் பெண் எத்தகைய போராட்டங்களை சந்தித்திருப்பார்?
அன்னா சாண்டி இயற்கை யாகவே வழக்குரைஞர்கள் எழுது வதிலும் திறமை கொண்ட வர்கள் என்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்தான் அன்னா சாண்டி. 1905இல், கேரள மாநிலம் எலிப்பியில் பிறந்தவர். வாசிக்கக் கூட வாய்ப்பில்லாமல்   பெண்கள் வாழ்ந்த காலத்தில், பெண்ணியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்த சிறீமதி என்ற பத்திரிகை நடத்தியவர். இவரைப் பற்றி நாம் இன்று விவாதிப்பதற்கான காரணம் அது மட்டுமல்ல.
அதற்கும் மேலே! இந்தியாவின் முதல் பெண் நீதிபதி இவர்தான். 1959இல் உயர்நீதிமன்ற  நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் இவருடைய வாழ்க்கை வரலாறு மலையாள மனோரமாவில் தொடராக வெளிவந்து. ஆத்மகதா என்ற பெயரில் புத்தக வடிவிலும் வெளியானது.
-விடுதலை,11.8.15

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

பிரசவ காலத்திற்குப் பின் பெண்கள் வேலைக்குப் போகலாமா?

வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் கூறுவது, பிரசவத்திற்குப் பிறகு குறைந்தது ஒரு மாதமாவது வீட்டில் இருக்கவேண்டும் என்பது. அதிலும் அது அவர்களது பிரசவம் மற்றும் உடல் நிலையைப் பொறுத்து, ஒரு மாதத்தில்கூட வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்று பரிசோதித்துக் கூறுவார்கள். ஆனால் சில பெண்கள் தங் களுக்குப் பிரசவம் நடந்த ஒருசில வாரங்களிலேயே வேலைக்குச் சென்று விடுவார்கள். வேலைக்கு செல்வது நல்லதா? கெட்டதா?
பொதுவாக பிரசவம் முடிந்த பிறகு, தாய் கண்டிப்பாக குழந்தையுடன் இருக்கவேண்டும். அதிலும் பிரசவம் முடிந்த பிறகு அனைத்துத் தாய்மார்களும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது மற்றும் ஓய்வு எடுப்பது போன்றவற்றை உட னடியாக நிறுத்த முடியாது. வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களது அலுவலகத்தில் தரும் பிரசவ விடுமுறையை, பிரசவத்திற்குப் பின் இரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்வது நல்லது.
இதனால் குழந்தையை நன்கு பார்த்துக் கொள்வதோடு, அவர்களது உடல் நிலையும் நன்கு இருக்கும். மகப்பேறு மருத்துவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பின், ஆறு மாதத்திற்குப் பிறகு மீண்டும் வேலைக்கு செல்வது நல்லது என்று கூறுகின்றனர். அதிலும் சிசேரியன் பிரசவம் என்றால், தையல் காய்ந்து, குணமாவதற்கு நீண்ட நாள்கள் ஆகும். அதிலும் அவர்கள் நடக்கும் போதும், வேலை செய்யும் போதும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இல்லையெனில் தையல் பிரிந்து, கடுமையான வலியை ஏற்படுத்தி விடும். ஆகவே ஓய்வு மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகின்றனர். பெண்கள் பிரசவத்திற்குப் பின் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் வேலைக்குச் சென்றால், அதிக வேலையின் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். இது மிகவும் ஆபத் தானது.
அதிலும், பிரசவத்திற்குப் பின் உடல் நலம் சரியாகாத போது வேலை செய்தால், பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, வேலைக்கு நிறைய நாள்கள் விடுமுறை போட முடியாது என்று நினைப்பவர்கள், பிரசவத்திற்குப் பின் நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு, அதிக நேரம் வேலை செய்வதைத் தவிர்த்து ஓரளவு செய்து வந்தால், எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் தடுக்கலாம்.
வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது மிகவும் சிறந்தது. இதனால் வேலையை பார்த்தது போலும் இருக்கும்; குழந்தையை பார்த்துக் கொள்வது போலும் இருக்கும். ஆனால் நிறைய பெண்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேலைக்கு ஆள் வைப்பார்கள். அது நல்லதல்ல. தாய் பார்த்துக் கொள்வது போல் எதுவும் வராது. அதுவும் அவ்வப்போது சரியான நேரத்திற்கு குழந்தைக்கு பால் கொடுத்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால், மார்பகப்புற்று நோய் வரும் நிலை ஏற்படும். குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமானது. எங்கு வேலை செய்தாலும், நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டாம். ஏனெனில் பிரசவத்திற்குப் பின், உடலுக்கு நிறைய ஓய்வு வேண்டும். அலுவலகத்திலும் சரி; வீட்டிலும் சரி, முன்பு செய்ய முடிந்த வேலையை கூட, சில சமயங்களில் செய்ய முடியாமல் போகும். ஏனென்றால் அவ்வளவு உடல் சோர்வாக இருக்கும்.
-விடுதலை,4.8.15

தமிழ்ப் பெண்ணுக்கு சர்வதேச அங்கீகாரம்!

தான் நடித்த முதல் திரைப்படத்துக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்த பெரு மிதத்தின் சுவடு துளியும் இல்லாமல் இயல்பாக இருக் கிறார் காளீஸ்வரி சீனிவாசன். இவர் நாயகியாக நடித்த தீபன் திரைப்படம், இந்த ஆண்டு கான் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான தங்கப் பனை விருது வென்றிருக்கிறது.
நவீன நாடக நடிகையான காளீஸ்வரி, சென்னை, ரெட்டேரியைச் சேர்ந்தவர். அப்பா, சீனிவாசன் ராணுவ வீரர். அம்மா சாந்தகுமாரி, பள்ளி ஆசிரியை. நடிப்புக்கும் சினிமாவுக்கும் தொடர்பே இல்லாத நடுத்தரக் குடும்பம்.
கல்லூரிப் படிப்பை முடித்ததும் காளீஸ்வரிக்கு பி.பி.ஓ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த வேலையில் வருமானம் கிடைத்ததே தவிர மனதுக்கு நிறைவில்லை. அப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடிய நிலையில், அந்த வேலையை விட்டுவிட்டு தியேட்டர் ஒய் நாடகக் குழுவில் தொகுப்பாளினி பயிற்சியில் சேர்ந்தார்.
நாடகக்குழு இயக்குநர் யோக், காளீஸ்வரிக்கு நடிப்பு நன்றாக வருவதாக உற்சாகப்படுத்த, அப்படித்தான் காளீஸ்வரியின் மேடை நாடக வாழ்க்கை தொடங்கியது. அதன் பின்னர் முழுநேர நாடக நடிகையாக மாறியவர் தியேட்டர் ஒய் மட்டுமின்றி, கோவில்பட்டி முருகபூபதியின் மணல்மகுடி புதுச்சேரி இந்தியநாஷ்ட்ரம் போன்றவற்றிலும் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.
பள்ளிகளில் மாணவர்களுக்குக் கதை சொல்லியாகவும் இருக்கிறார்.விழிப்புணர்வு வீதி நாடகங்களில் நடிப்பதும் காளீஸ்வரியின் விருப்பங்களில் ஒன்று. கால்சென்டரில் வேலை பார்த்த எனக்கு, வேறொரு உலகத்தை இந்த நாடகத் துறை அறிமுகப்படுத்தியது.
இது முற்றிலும் வேறுபட்ட களம். இங்கு ஆடம்பர வாழ்க்கைக்கு வாய்ப்பில்லை என்றாலும் மனநிறைவுக்குக் குறைவில்லை. நான் இந்தத் துறைக்கு வந்து அய்ந்து ஆண்டுகள் ஆகிறது. நாடகங்கள் எனக்குச் சோறு போட்ட துடன், தீபன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தன என்கிறார் காளீஸ்வரி.
போரில் பாதிக்கப்பட்டு இலங்கையில் இருந்து புலம் பெயரும் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுகிறது தீபன் திரைப்படம். இந்தப் படத்தில் யாழினி என்ற பெண்ணாக நடித்தபோது, பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வலியை உணர்ந்தேன். கான் திரைப்பட விழாவில் படம் முடிந்ததும் அனைவரும் நெகிழ்ச்சியில் எழுந்து நின்று கைதட்டி எங்கள் குழுவைப் பாரட்டியதை மறக்க முடியாது.
ஃபிரெஞ்ச் மொழியில் இயக்குநர் ஜாக் ஒதியார்து உருவாக்கிய இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன் என்றவருக்குத் தன் அம்மா சாந்த குமாரியிடம் இருந்து பாராட்டு பெற்றது மிகப் பெரிய அங்கீகாரம் என்கிறார்.
விடுதலை,-28.7.15

ஆரோக்கிய தலைமுறைக்கு தாய்ப்பால் அவசியம்!

குழந்தைகளுக்கு ஏற்ற, சத்தான, கலப்படம் இல்லாத, சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால்தான். அதைக் கொடுக்கும் தாய்மார்கள், தங்களைச் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் போன்ற அனைத்து வகையான, உயிர் சத்துக்களும் உள்ளன. தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே, குழந்தை களுக்குப் பல பாதிப்புகள் ஏற்படும்.
உணவு முறை: தாய்ப்பால் கொடுக்கும் அன்னையர், சத்தான உணவுகளை சாப்பிடுவதுடன், அதிக புரத உணவுகள், பயறு வகைகள், பால், முட்டை, கீரை, பழங்கள் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். கிழங்கு வகை உணவுகளை குறைத்து, சுறா புட்டும், வெள்ளைப் பூண்டும் அதிகமாக சாப்பிட்டால், பால் அதிகமாக சுரக்கும். மசாலா, அதிக காரம் சேர்த்த உணவுகளை தவிர்க்கவும்.
எண்ணெயில் பொரித்தவை, எசன்ஸ் மற்றும் ரசாயனக் கலவை உணவுகள் போன்ற விரைவு உணவுகளை தவிர்ப்பதுடன், குளிர்பானங்களை அருந்தவே கூடாது. ஓட்டல் சாப்பாடு, அய்ஸ்கிரீம், மில்க் ஷேக் போன்ற வைகளைச் சாப்பிடக் கூடாது. குறிப்பாக, சீதாப்பழத்தை தொடவே கூடாது. சில நேரங்களில், ஈரம் மற்றும் இறுக்கம் காரணமாககூட குழந்தைகள் அழலாம். பசிக்காகத்தான் குழந்தை அழுகிறது என்று, நீங்களாகவே முடிவு செய்து, பால் கொடுக்கக் கூடாது.
குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு ஒரு முறை, நீங்களாகவே கணக்கிட்டும் பால் கொடுக்க வேண்டாம். குழந்தை பசிக்காக அழுதால், அதன் வயிறு நிறையும் வரை பால் கொடுக்கவும். யாருக்குத் தடை? மார்பக புற்றுநோய் உள்ளவர்கள், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. எய்ட்ஸ், எச்.அய்.வி., பாசிட்டிவ், ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் பி, குஷ்டம், காலரா, வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகப்படி யான காய்ச்சலில் அவதிப்படுவோர், தாய்ப்பால் தரக்கூடாது. மன நோயால் பாதிப்படைந்த பெண், தாய்ப்பால் கொடுப் பதால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது. தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குறிப்பாக, முதல் நான்கு நாள்க ளுக்கு.
-விடுதலை,4.8.15

சிசேரியன் அதிகமாவது ஏன்?

என் மகளுக்குச் சுகப்பிரசவம் என்று யாராவது சொன்னால், அது அதிசயம் போலாகிவிட்டது. இறுதிக்கட்ட நெருக் கடியில் மட்டுமே சிசேரியன் என்ற காலம் மாறிப் போய், இன்று பெரும்பாலா னோருக்குப் பிரசவமே சிசேரியன் மூலமாகத்தான் நிகழ்கிறது. நான்கில் ஒருவருக்கு சிசேரியன் என்றாகிவிட்டது.
சுகப்பிரசவம் குறைந்ததற்கு வாழ்வியல் பழக்கங்கள் ஒரு காரணமாகச் சொல்லப் பட்டாலும், சில பிரசவங்களில் சிசேரிய னைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றும். சிசேரியன் எப்போது அவசியம், சிசேரியனை எப்படித் தவிர்ப்பது?
சிசேரியன் ஏன் அதிகரித்துள்ளது?
தாமதமான திருமணம்,  நான்கு ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுதல், 30 வயதுக்கு மேல் கருவுறுதல், முதல் குழந்தை சிசேரியனால் பிறந்திருந்தால், இரண்டாவது குழந்தையும் சிசேரியன் மூலமாகவே பிறப் பதற்கான வாய்ப்புகள் அதிகரித்தல், இறுதிக்கட்ட நெருக்கடி யில் மருத்துவமனைக்கு வருதல், உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்றவை சிசேரியனுக்கான காரணங்கள்.
எப்போது சிசேரியன் அவசியம்?
பிரசவத்தின்போது சிரமங்கள் ஏற்படுத்தும் வகையில், வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும். பிரசவம் மிக மெதுவாகவும் சிக்கலாகவும் இருந்தால், குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைந்திருந்தால், தொப்புள்கொடியால் குழந்தைக்கு ஆபத்து நேர்ந்திருந்தால், குழந்தை பெரியதாக இருந்தால், பிரசவ நேரத்தில் சரியான நிலையில் குழந்தை இல்லாதிருந்தால், கருவில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், தாய்க்குப் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால், கருப்பையில் வெடிப்பு அல்லது பிளவு ஏற்பட்டிருந்தால், சிசேரியன் செய்யப்படும்.
எப்போது கவனமாக இருக்க வேண்டும்?
கருவுற்ற காலங்களில் வலி தொடர்ந்து இருந்தாலும், பனிக்குடம் உடைந்து, குழந்தை மூச்சுத் திணறலால் அவதிப் பட்டாலும், தாய்க்கு கால் வீக்கம், ரத்தப்போக்கு இருந்தாலும், குழந்தை அசையும் திறன் குறைந்திருந்தாலும், இடுப்பு எலும்பு பலவீனமாக இருந்தாலும், குழந்தையின் தாய்க்குப் பார்வைக் குறைபாடு இருந்தாலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சிசேரியனைத் தவிர்த்திட கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது என்ன?
கருவுற்ற காலங்களில் அய்ந்து முறையேனும் மருத்துவ மனைக்குச் சென்று, பரிசோதித்து கொள்ளுதல் அவசியம் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். எனவே, ஒவ்வொரு மூன்று மாத கால இடைவெளியில் மருத்துவரை அணுகுவது அவசியம். முதல், இரண்டு, மூன்று என மூன்று மாத காலத்திலும் ஒவ்வொரு முறையும், பின்னர் மருத்துவர் அறிவுறுத்தும்போதெல்லாம் மருத்துவமனைக்குச் செல்லுதல் அவசியம்.
1. 36 ஆவது வாரத்துக்குமேல் ஒவ்வொரு வாரமும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
2. இரும்புச் சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்து மாத்திரைகளை, மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய, மருத்துவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனும் செய்துகொள்ளலாம்.
எந்த ஒரு சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. எளிய உடற்பயிற்சிகள மேற் கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே, கருவுற்ற காலங்களில் யோகாசனங்களைச் செய்ய வேண்டும். நாள்தோறும் நடப்பதும் நல்லது.
சரிவிகித உணவைப் பின்பற்றவேண்டும். புரதமும், நார்சத்துக்களும் உணவில் கட்டாயம் இடம் பெறவேண்டும். பழங்களுக்கும், காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் தருவது அவசியம். மீன் சாப்பிடுவது, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும். வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உணவை நான்கைந்து வேளையாகப் பிரித்து, சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.
இயற்கைக்கு எதிராக நாள், நேரம், நட்சத்திரம் பார்த்துக் குழந்தை பிறக்க வேண்டும் என்று முடிவு செய்து, குழந்தை பெற்றுக்கொள்வது ஆபத்தானது. பெரும்பாலான சமயங்களில் இந்த முயற்சி தோல்வியையே தழுவும் என்பதால், இதைக் காரணமாகக்கொண்டு சிசேரியன் செய்துகொள்ளக் கூடாது.
-விடுதலை,4.8.15

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

அய்ன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன்: 12 வயதுச் சிறுமி சாதனை!

அய்ன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன்: 12 வயதுச் சிறுமி சாதனை!
அறிவுத் திறன் சோத னையில், இதுவரை யாரும் பெறாத குறியீட்டு எண்ணை, 12 வயது பிரிட்டன் சிறுமி பெற்று சாதனை புரிந்து உள்ளார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல் பர்ட் ஐன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன் குறியீட்டு எண்ணை இவர் பெற்றுள்ளார் என பிரிட்டன் ஊடகங்கள் இவரைப் புகழ்கின்றன. பிரிட்டனில் ஹார்லோ என்னுமிடத்தில் ஏழாம் வகுப்பு மாணவியான நிகோல் பார், கடந்த வாரம் நடத்தப்பட்ட அறிவுத் திறன் சோதனையில் 162 புள்ளிகள் பெற்றார்.
இந்தச் சோனையை நடத்திவரும் மென்ஸா அமைப்பின் சரித்திரத்தில் எவரும் பெறாத குறியீட்டு எண் இதுவாகும். நிகோ லுக்கு 10 வயதாகும்போதே, கணிதப் பாடத்தில் அவ ரது வகுப்பு மாணர்களை விடப் பல படிகள் முன் னேறியிருந்தார் என அவருடைய ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவருக்கு இலக்கியம், இசை, நாட கத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. தற்போது ஷேக்ஸ் பியரின் "பன்னிரண்டாம் இரவு' நாடக ஒத்திகையில் ஈடுபட்டுள்ள நிகோல், விரைவில் அரங்கேற வுள்ளார்.
பள்ளிப் படிப்பில் படு சுட்டியான நிகோல் பார், தனது தாயுடன் வசித்து வருகிறார். துப்புரவுத் தொழிலாளியான தந்தை ஜேம்ஸ், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரு கிறார். மகளின் அறிவுத் திறன் குறித்து ஊடகங் களில் வரும் செய்தியைக் கேட்டு பெருமிதம் அடை வதாகக் கூறினார். சார்பியல் தத்துவம், அணு ஆராய்ச்சி ஆகிய இரு மாபெரும் பங்களிப் பைச் செய்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், எந்த அறி வுத் திறன் சோதனையி லும் பங்கு பெற்றதில்லை என்பதைக் குறிப்பிட வேண் டும்.
ஆனால் மென்ஸா முறையின் அடிப்படை யில், அவரது அறிவுத் திறன் குறியீடு 160 என்று பொதுவாக கருதப்படு கிறது. பில் கேட்ஸ், பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆகி யோரைவிடவும் நிகோல் அதிக அறிவுத் திறன் குறி யீட்டைப் பெற்றுள்ளார் என பிரிட்டன் ஊடகங் கள் குறிப்பிட்டுள்ளன. பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக் கலுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்டவற்றின் அடிப் படையில் அறிவுத் திறனை சோதிக்கும் முறையை மென்ஸா அமைப்பு வடி வமைத்துள்ளது.
விடுதலை,3.8.15