செவ்வாய், 9 மே, 2017

இரு கால்களை இழந்தபின் கட்டை கட்டி ஓடிச் சாதிக்கும் பெண்!



எல்லாம் இருந்தும் எதையும் செய்யாதவர்கள் வாழும் உலகில், எல்லாம் இழந்தாலும் எப்படியும் சாதிப்பேன் என்பவர்களும் உள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த ஷாலினி சரஸ்வதி இரு கால்களையும் இழந்து, பெங்களூர் மாரத்தான் ஓடும் பெண்களில் முக்கியமானவர்!
தன் கைகால்கள், வயிற்றில் சுமந்து-கொண்டிருந்த குழந்தை என எல்லாவற்றையும் இழந்தார். ‘இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை... என்கிற நிலையில், தான் சாதித்ததுபற்றி அவரே கூறுகிறார்.
“பெங்களூருல படிச்சு, வளர்ந்தேன். அப்பாவுக்கு டிஃபென்ஸ்ல வேலை, அம்மா இல்லத்தரசி.
ரொம்ப சந்தோஷமான குழந்தைப் பருவம். படிப்பு, வேலைனு எல்லாமே நல்லாப் போயிட்டிருந்தது. என் அடையாளமே சிரிப்புதான். ‘எப்போதும் சிரிச்சுட்டே இருப்பாங்களே அந்தப் பொண்ணு!’ங்கிறது-தான் எனக்கான அடையாளமா இருந்திருக்கு. அந்த நிறைவான மனசுதான் வழ்க்கையின் துயரமான நாள்களைக் கடக்கும்போது உதவியிருக்கு.
நானும் பிரஷாந்த் சவுடப்பாவும் பொதுவான நண்பர்கள் மூலம் அறிமுகமா-னோம். ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். திகட்டத் திகட்ட அத்தனை இனிப்பான வாழ்க்கை. இப்போதும் அந்த இனிமை குறையலை. ஆனாலும், அப்படியொரு சம்பவம் மட்டும் நடக்காம இருந்திருந்தா...’’ என நிறுத்துகிற ஷாலினியின் மௌனம் சில நொடிகள் நீடிக்கிறது.
“2012ம் வருஷம்... வெட்டிங் ஆனிவர்சரியைக் கொண்டாடிட்டு, கம்போடியாவிலேருந்து வந்துக்கிட்டிருந்தேன். அப்ப நான் பிரெக்னென்ட்டா இருந்தேன். லேசான காய்ச்சல் இருந்தது. டாக்டரைப் பார்த்தோம். பாரசிட்டாமல் கொடுத்தார். காய்ச்சல் குறையலை. டெங்குவாகவோ, மலேரியாவா-கவோ இருக்கலாம்னு சந்தேகப்பட்டாங்க. அப்படியும் இல்லை. உடம்புல ஒவ்வொர் உறுப்பா செயலிழக்க ஆரம்பிச்சது. என் குழந்தையையும்  இழந்துட்டேன். டாக்டர்ஸுக்கே நம்பிக்கை போய், ‘சொல்ல வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிடுங்க. பார்க்கிறவங்க வந்து பார்த்துட்டுப் போயிடட்டும்’னு சொல்லிட்டாங்க. எனக்கு வந்திருந்தது அபூர்வமான பாக்டீரியா தொற்றுன்னு சொன்னாங்க. ஆஸ்பத்திரியில ‘ஐசியூ’வில் மாசக்கணக்கா இருந்தேன். உடம்பெல்லாம் நீலநிறமா மாறியது. எனக்குள்ளே என்ன நடக்குதுன்னே தெரியாத ஒரு நிலை.
அடுத்து என்னோட இடது கை அழுக ஆரம்பிச்சது. என்னால இப்பக்கூட அந்த அழுகின வாசனையை மறக்க முடியலை. ஆஸ்பத்திரிக்குப் போறதும், அழுகின செல்களை சுத்தப்படுத்திக்கிட்டு வர்றதும் வாடிக்கையானது. 2013ல என் இடது கையை எடுத்துட்டாங்க. அதை ஜீரணிச்சுக்கிறதுக் குள்ளேயே அடுத்த ஆறே மாசத்துல வலது கை இன்ஃபெக்ஷனாகி, தானாவே விழுந்தருச்சு. அடுத்தடுத்து என் கால்களையும் இழந்தேன். கால்களை எடுக்கப் போற அன்னிக்கு நல்ல பிரைட் கலர்ல நெயில்பாலிஷ் போட்டுக்-கிட்டுப் போனேன்... வெட்டி எறியப்படப் போற கால்கள் போகும்போது அழகா இருக்கட்டுமேன்னுதான்!’’ _ ஷாலினி சிரிக்கிறார். நமக்கோ நெஞ்சம் கலங்குகிறது.
“ரெண்டு வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன். அந்த ரெண்டு வருஷமும் எனக்கு வெளி உலகமே தெரியாது. படுக்கையிலேயே என் வாழ்க்கை முடங்கிப் போயிடுமோனு பயந்தேன். இந்தச் சமுதாயம் என்னை ஒதுக்கிடுமோங்கிற கவலையும் இருந்தது. கால்களை எடுத்த பிறகாவது வெளி உலகத்தை எட்டிப் பார்க்க முடியும்கிற நம்பிக்கை வந்தது. அதனால, கால்களை எடுக்கணும்னு சொன்ன-போது, அதிர்ச்சியைவிடவும் மகிழ்ச்சிதான் அதிகமா இருந்தது.
அப்படியொரு சமாதானத்துக்கு வர்றதுங்-கிறதும் சாதாரண விஷயமில்லை. ‘நான் என்ன செய்தேன்... எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது?’ங்கிற கேள்விகள் என்னை விரட்டாம இல்லை. தப்பு செய்யறவங்களுக்குத்தான் இப்படியெல்லாம் நடக்கும்னு நம்ம சமுதாயத்துல ஒரு நம்பிக்கை இருக்கில்லையா... அப்படி எந்தத் தவறுமே செய்யாத எனக்கு ஏன் இந்தத் தண்டனைனு மாசக்கணக்கா அழுது தீர்த்திருக்கேன். ஒரு கட்டத்துல இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அழுது-கிட்டே இருக்கப் போறோம்னு தோணினது. அழுதுகிட்டே இருக்கிறதால வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் போறதில்லைனு உணர்ந்தேன். அம்மா, அப்பா, கணவர், தங்கைனு என் குடும்பத்துல உள்ள எல்லாரும் எனக்கு ஆதரவா நின்னாங்க. அவங்க கொடுத்த நம்பிக்கைதான் நான் எழுந்திருக்கக் காரணம். செயற்கைக் கால்கள் பொருத்தினதும் அந்த நம்பிக்கை இன்னும் அதிகமானது...’’ என்கிற ஷாலினியின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த எல்லாமே சாதனைகள்!
“படுத்த படுக்கையா இருந்த காரணத்தினால தூங்கித் தூங்கி ரொம்ப குண்டாயிட்டேன். ஆரோக்கியமாகவும் ஆக்டிவாகவும் இருக்கிறதுக்காக வெயிட்டைக் குறைக்க வேண்டிய கட்டாயம் வந்தது. அப்பதான் கோச் ஐயப்பாவோட அறிமுகம் கிடைச்சது. அவரோட வழிகாட்டுதலின் பேர்ல தினமும் ஒன்றரை மணி நேரம் நடக்கவும் உடற்பயிற்சிகள் செய்யவும் பழகினேன். உடம்பை பேலன்ஸ் பண்ணவும், மாடிப்படிகள் ஏறவும் கத்துக்-கிட்டேன். நடக்க ஆரம்பிச்ச எனக்கு, அடுத்து ஓடணும்னு தோணினது. வலியைப் பொறுத்துக்-கிட்டு ஓடிப் பழகினேன். அந்தப் பயிற்சிதான் எனக்கு மாரத்தான்ல ஒடற ஆசையைக் கொடுத்தது’’ என்பவர் ‘டிசிஎஸ்’ சார்பாக நடந்த மாரத்தான் போட்டியில் 10 கிலோமீட்டர் ஓடி சாதனை புரிந்திருக்கிறார். தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்.
“படுக்கையிலேயே என் வாழ்க்கை முடிஞ்சுடு-மோன்னு பயந்தேன். ஓட ஆரம்பிச்சதும் வாழ்க்கையின் மேல புது ஈர்ப்பும் ரசனையும் வந்தன. ஓடும்போது எனக்குள்ள புது நம்பிக்கை வருது.அது ஒரு தெரபி மாதிரி எனக்கு உதவுது. செயற்கைக் கால்களோட வாழப் பழகறதுங்-கிறது முதல்ல பெரிய சவாலா இருந்தன. ரெண்டரை கிலோ எடை உள்ள அந்தக் கால்களைச் சுமக்கறதும், நடந்து பழகறதும் சாதாரணமானதா இல்லை. ஒவ்வொரு முறை அதை மாட்டும்போதும் வலிக்கும், ரத்தம் வரும். புதுசா செருப்போ, ஷூஸோ வாங்கிப் பயன்படுத்தும்போது முதல் சில நாள்களுக்கு அந்த அசௌகரியத்தை உணருவோமில்லையா... செயற்கைக் கால்களை நான் அப்படித்தான் எடுத்துக்கிட்டேன். எனக்கு அந்த வலியி-லேருந்து விடுபடறதை விடவும் வாழ்க்கையில வேற பெரிய லட்சியங்கள் இருந்தது. வலியைப் பொறுத்துக் கிட்டேன். பிராக்டீஸ் பண்ணப் பண்ண உடம்பும் மனசும் சரியானது. முதல் நாள் பத்து நிமிஷங்கள், அடுத்தடுத்த நாள்கள்ல அரை மணி நேரம், முக்கால் மணி நேரம்னு செயற்கைக் கால்கள் அணியற நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாக்கினேன். இன்னிக்கு என்னால 15 மணி நேரம் வரைக்கும் அதை அணிய முடியுது...’’ வலியை விழுங்கிச் சொல்கிறார்.
தற்போது, பெங்களூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருக்கும் ஷாலினி, அடுத்து 2020_ல் நடக்கவிருக்கும் பாரா ஒலிம்பிக்ஸில் ஓடவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
“எனக்கு வாழ்க்கையில பெரிய ஆசைகளோ, கனவுகளோ இல்லை. என் ஒரே லட்சியம், எப்போதும் சந்தோஷமா இருக்கிறது மட்டும்தான். சந்தோஷமா இருக்கணும்னா பணமோ, வசதிகளோ எதுவுமே தேவை-யில்லைனு நம்பறேன். அது என்னால முடியுது. இன்றைய பொழுதைவிடவும் நாளைய பொழுது இன்னும் இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்னு நம்பறேன். இதுவரைக்கும் அப்படித்தான் நடந்தது. இனியும் தொடரும்’’ என்று நம்பிக்கையின் மறுவடிவமாகப் பேசினார். வெல்க அவரது முயற்சிகள்! ஸீ
-உண்மை இதழ்,16-30..4.17

தேசிய விருது பெற்ற பெண்கள்!

விவசாயத்தின் மீதும் விவசாயிகள் மீதும் அனைவரின் கவனமும் திரும்பியிருக்கிறது. இந்தத் தருணத்தில் தமிழகத்தின் மண் சார்ந்த விவசாயத்துக்காக ஆய்வு மேற்கொண்டு தேசிய விருது பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள் மூன்று விஞ்ஞானிகள்.

விவசாயத்தில் எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும், மண் இல்லாத விவசாயத்தை நோக்கிய பயணம் சவாலானது. மண்தான் உயிர்ச் சங்கிலியின் ஆதாரம். அப்படிப்பட்ட மண்ணையும் அதில் உள்ள நுண்ணூட்டச் சத்துகளையும் அவை எவ்வாறெல்லாம் விவசாயத்தை மேம்படுத்தும் என்பதையும் ஆய்வு செய்துவருகிறார்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சித்தேஸ்வரி, ஜெகதீஸ்வரி, மாலதி ஆகியோர்.

சித்தேஸ்வரி, மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை பேராசிரியராகவும் நுண்ணூட்ட ஆய்வுத் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். அவருடன் உதவிப் பேராசிரியர்கள் ஜெகதீஸ்வரியும் மாலதியும் பணிபுரிகிறார்கள்.

மூவரும் தமிழகத்திலுள்ள 22 மாவட்டங்களில் மண் மாதிரிகளைச் சேகரித்து, நுண்ணூட்டச் சத்துகள் விவரப் பட்டியலைத் தொகுத்து வருகிறார்கள். இவர்களது ஆய்வு முடிவுகளையும் ஆராய்ச்சிப் பணிகளையும் பாராட்டி, இந்திய மண்ணியல் துறை நிறுவனம் தேசிய விருதை வழங்கியுள்ளது.

இந்த மூவர் குழுவால் வேளாண்மைப் பல்கலைக்கழக மண்ணியல் துறையின் ஒருங்கிணைந்த நுண்ணூட்ட ஆய்வு மய்யம் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்ல, துத்தநாகம் குறித்த ஆய்வுக்காகச் சிறந்த விஞ்ஞானி என்ற எஸ்.என்.ரானடே விருதும் சித்தேஸ்வரிக்குக் கிடைத்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர் சித்தேஸ்வரிக்குச் சொந்த ஊர் பெருந்துறை. விவசாயப் பின்புலம் இல்லாத குடும்பம். விவசாயத்தின் மீதான ஆர்வமே தன்னைப் பணியில் ஈடுபடவைத்திருக்கிறது என்கிறார்.

1967ஆம் ஆண்டுக்கு முன்பு மண்வள ஆய்வு அதிகமாக இல்லை. அதற்குப் பிறகுதான் ஒவ்வொரு பகுதியாக மண் மாதிரிகளைச் சேகரித்து, என்னென்ன நுண்ணூட்டச் சத்துகள் இருக்கின்றன, எவையெல்லாம் தேவை என்று விவசாயிகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

2005-க்குப் பிறகு ஜி.பி.எஸ். வசதி வந்திருக்கிறது. மண் மாதிரி எடுத்து, அதில் இருக்கிற சத்துகள் குறித்து எடுத்துச் சொல்லி, கூடுதலாக என்னென்ன சத்துகள் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்தால் மகசூல், லாபம், மண்வளம் கூடும்.

விவசாயத்தை மட்டுமல்ல, இந்த மண்ணையும் பாதுகாக்கிற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. மற்ற ஆய்வுகளைவிட, நுண்ணூட்டச் சத்துக்கான ஆய்வு ரொம்பவும் நுணுக்கமானது. தொய்வில்லாமல் வேலை நடந்தால் மட்டும்தான், நல்ல முடிவுகளைக் கொடுக்க முடியும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் நாடு முழுவதும்

22 மய்யங்கள் இருக்கின்றன. விவசாயிகளுக்குக் கொடுக்கிற பரிந்துரைகள், தொடர்ச்சியான ஆய்வுகள் என்று இந்தியாவிலேயே நம் மய்யம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கு மண் மாதிரி வரைபடம் வெளியிட வேண்டும். அந்த வரைபடம் தமிழக விவசாயிகளுக்குப் பயன்படக்கூடியதாக இருக்கும் என்று சித்தேஸ்வரி சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

உதவிப் பேராசிரியர் ஜெகதீஸ்வரி, போரான் சத்து தொடர்பாக நான் ஆய்வு மேற்கொண்டிருக்கிறேன். மற்ற சத்துகளைவிட போரான் ஆய்வு கடினம். ஒரு புள்ளி அதிகமானாலும் மண்ணுக்கு விஷமாகிவிடும். காலிஃபிளவர் போன்ற பயிர்களுக்கு இந்தச் சத்துதான் தேவை. அதனால் போரானைத் தவிர்க்க முடியாது.

இந்தத் துறையைப் பொறுத்தவரை உடலுழைப்பு, ஆய்வு இரண்டும் தேவை. நாங்கள் மூவரும் ஒரு பக்கம் குடும்பப் பொறுப்புகளை கவனித்துக்கொண்டு இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கான ஆய்வுகளைச் செய்துவருகிறோம் என்று சொல்கிறார். இவர் மதுரை மாவட்ட விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்.

சவால்களைக் கடந்த பயணம்

ஆய்வைவிட, ஆய்வு முடிவுகளை நிரூபிக்க விவசாயிகளை நேரடியாகச் சந்திக்கும் அனுபவம் சவாலானது. காலம் காலமாகப் பயிரோடு வாழ்கிற விவசாயிக்கு அனுபவப்பூர்வமான அறிவு அதிகம்.

அதோடு அறிவியலும் இணைகிறபோது விவசாயம் செழிப்பாக இருக்கும்.

எடுத்த எடுப்பிலேயே நம் பரிந்துரைகளைச் சொல்லி விவசாயிகளை நம்பவைக்க முடியாது. செயல் விளக்கத் திடல் அமைத்து நாங்களும் விவசாயம் செய்ய வேண்டும். செயல் விளக்கம் மூலம் நிரூபித்தால் மட்டுமே விவசாயிகள் நம்புவார்கள்.

ஒருமுறை நம்பிக்கை வந்துவிட்டால் அதுவே நிலைத்துவிடும். உங்கள் மண்ணில் இந்தச் சத்து குறைவாக இருக்கிறது, அதற்கு இதைப் பயன்படுத்துங்கள், இந்தப் பயிர் விதையுங்கள் என்று சொன்னால் போதும். அதை நம்பி விவசாயம் செய்வார்கள்.

குழந்தைகள் மாதிரி இருக்கிற விவசாயிகளைச் சரியாக வழிநடத்த வேண்டும். அந்தப் பொறுப்பு எங்களுக்கு ரொம்பவும் அதிகம் என்று பொறுமையாகச் சொல்கிறார் உதவிப் பேராசியர் மாலதி.

உடலுழைப்பு மட்டுமே கடினமல்ல, அறிவு சார்ந்த தளமும் கடினமானதுதான். இரண்டிலும் பெண்கள் தடம் பதிக் கிறார்கள். 
படித்த பெண்கள் விவசாயத்துக்கு வரவேண்டும் என்பதில் மூவரின் எண்ணங்களும் ஒன்றாகவே இருக்கின்றன. விவசாயத்தில் பெண்கள் இருந்தால், உற்பத்தித் திறன் கூடும். காலத்துக் கேற்ற பயிர் செய்யும் நுட்பம் மேலோங்கும்.

நுண்ணூட்டச் சத்து ஆய்வு மண்ணுக்கானது மட்டுமல்ல. மண் மூலம் தாவரத்துக்கும், தாவரத்திலிருந்து கால்நடைக்கும், கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கும் நுண்ணூட்டச் சத்துகள் கொண்டு செல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தில் உலக அளவில் ஆய்வுகள் நடக்கின்றன. அதில் எங்களது பங்கும் நிச்சயம் இருக்கும். அது சவால்கள் நிறைந்த, சவால்களைக் கடந்த பயணமாக இருக்கும்.

பெண்கள் என்ற முறையில் ஊக்கமும் கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளுமே எங்களுக்குத் தேவை. அவை சாத்தியமென்றால், இந்த வேலையே உயரத்தைத் தேடித் தரும். தனியாக அதைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை என்கிறார்கள் இந்த விவசாய விஞ்ஞானிகள்.

-விடுதலை,9.5.17
.