திருமிகு முத்துலட்சுமி அம்மாள் அவர்கள், பள்ளிக் கூடங்களில் மதக்கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்திருப்பதாய் பத்திரிகைகளில் பார்த்தோம்.
இது ஒரு பைத்தியக்காரச் செயல் என்பதே நமது அபிப்பிராயம். அம்மையார், மதத்திற்கு என்ன பொருள் கொண்டிருக்கின்றார் என்பது நமக்கு விளங்கவில்லை.
திரு. அம்மையார் இஷ்டப்படி நமது ஆண் பெண் மக்களுக்கு நமது மதம் என்று சொல்லப்பட்ட இந்து மதப் படிப்பை சொல்லி வைப்பதாயிருந்தால், அந்த மதப்படிப்புப்படி அவர்கள் நடப்பதாயிருந்தால், திரு.முத்துலட்சுமி அம்மையார் டாக்டர் வேலையையும் சட்டசபை அங்கத்தினர் பதவியையும் விட்டுவிட்டு சட்டி கழுவ வேண்டும் என்பதை அம்மையார் அறிந்தாரோ இல்லையோ நமக்குக் தெரியவில்லை.
அல்லது நாம்தான் மதக் கொள்கைக்கு மீறி சட்டசபை உபதலைவராகக் கூட உயர்ந்துவிட்டோம். இனிமேல் நமக்கு என்ன குறை என்றும் இனி எந்தப் பெண்மணியும் நம் பதவிக்கு வராமல் சட்டி கழுவுகின்ற வேலையிலேயே இருக்கட்டும் என்கின்ற எண்ணம் கொண்டும் மதத்திற்குத் திரும்பி விட்டார்களோ என்றும் எண்ணவேண்டியிருக்கின்றது.
தவிர அம்மையார் சட்டசபையில் கொண்டு வந்திருக்கும் பெண்களை சாமி பேரால் பொட்டுக்கட்டி விபசாரியாக்கும் வழக்கத்தையும், சிறு குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து 10, 12 வயதில் குழந்தை பெறும்படியான வழக்கத்தையும் நிறுத்த வேண்டுமென்று கொண்டு வந்த தீர்மானங்களுக்கு விரோதமாக பேசினவர்கள் எல்லாம் மதத்தையே பிரதானமாக வைத்து ஆசேபித்ததை அதற்குள்ளாக மறந்து விட்டார்களா?
அல்லது அம்மையாராவது அம்மத சம்பந்தமான ஆசே பணைக்கு ஏதாவது சமாதானம் சொன்னார்களா என்று கேட்கின்றோம்.
ஒழுக்கமான காரியங்களையும் கூட செய்வதற்கு அனுமதி இல்லாத இப்பேர்ப்பட்ட மதத்தை கட்டிக்கொண்டு அழவேண்டிய அவசியம் அம்மையாருக்கு ஏற்பட்டதன் இரகசியம் நமக்கு விளக்கவில்லை. அது எப்படியோ போகட்டும்.
இது சமயம் அம்மையின் நிலைக்கு நாம் வருந்துவதோடு இருந்து கொண்டு மற்ற சட்டசபை அங்கத்தினர்கள் இத் தீர்மானத்தை நிறைவேற்றுவது நமது மனித தன்மைக்கும் சுயமரியாதைக்கும் ஆபத்து என்பதாக தெரிவித்து கொள்ளுகின்றோம்.
(குடிஅரசு, 1928)
-விடுதலை,12.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக