செவ்வாய், 22 டிசம்பர், 2015

இந்திய அரசியல் அமைப்பு சாசனமும் பெண்களும்


இந்தியா, ஆங்கில ஆதிக்கத்திலிருந்து அற வழியில் சுதந்திரம் பெற்ற பிறகு, நாம் தனி சுதந்திர நாடாக செயல்பட, அரசியல் அமைப்பு சாசனம் இயற்றுவது அவசியம் என்ற காரணத் தால், ஒரு குழு அமைக்கப்பட்டது.
பல கருத்து பரிமாற்றங்கள், விவாதங்களோடு, நடைமுறையிலிருக்கும் பல நாட்டு அரசியல் அமைப்பு சாசனங்களின் உள் அமைப்பினையும் உற்று நோக்கி, நம் ஜனநாயகத்துக்குத் தேவையான விஷயங்களை சேகரித்து, இவை அனைத் தையும் ஒன்றிணைத்து டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் உள்பட பல தலைவர்களின் முயற்சியால் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் 1949 நவம்பர் 30 அன்று இயற்றப்பட்டு, 1950 ஜனவரி 26இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது.  நம் நாட்டின் சட்டங்கள் அனைத்துக்கும் ஒரு தாய் சட்டமாக, முதுகெலும்பாக விளங்குவதுதான் இந்த அரசியல் அமைப்பு சாசனம்!
நம்முடைய அரசியல் அமைப்பு சாசனத்தின் ஷரத்து 14, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட் டையே வலியுறுத்துகிறது. ஒருவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலோ, ஜாதியின் அடிப்படையிலோ, ஆண்- பெண் வித்தியாசத்தின் அடிப்படையிலோ அரசியல் அமைப்பு சாசனம் செயல்படவில்லை.
இதன் ஷரத்து 15(1) மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் மற்றும் இனத்தின் () அடிப்படையில் எந்தவித பாகுபாடும் இல்லை என வலியுறுத்துகிறது. அதன் ஷரத்து 15(3)ன் கீழ், பெண் களுக்கும் குழந்தைகளுக்குமான சிறப்புச் சட்டங்கள் இயற்றவும், சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழி செய்யப்பட்டுள்ளது.
ஆணாதிக்க சிந்தனை மிக்க சமுதாயத்தில் அடுப் பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என எண்ணப் பட்ட நிலையில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்திருக் கிறது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் எந்தவொரு செயலையும் தன்னிச்சையாக செய்ய முடியாத நிலையும் இருந்திருக்கிறது. பெண்களின் நலனுக்காகவும் விடுதலைக் காகவும் குரல் கொடுத்த தந்தை பெரியார், ராஜாராம் மோகன்ராய்,  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற பலரின் முயற்சியால் பெண்களுக்கு எதிரான பல இன்னல்கள் படிப்படியாக குறைக்கப்பட்டன.
பெரும் முயற்சியால் பெண்களுக்கு கல்விக் கண் திறக்கப்பட்டது. தடைகள் எல்லாவற்றையும் கடந்து, இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக கல்வியறிவு பெறுவ துடன், அவ்வாறு கற்ற கல்வியின் மூலம் நல்லதொரு பணி செய்து பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறார்கள்.
இந்நிலை சாத்தியமானதற்கு நமது அரசியல் அமைப்பு சாசனமும் முக்கிய காரணம். அதன் ஷரத்து 16இன் கீழ், ஒருவரின் பணி நியமனத்தின்போதோ, பணி உயர்வின் போதோ ஆண் - பெண் என்ற பேதமை பார்க்கப்படாம லிருப்பதற்கும், அனைவரையும் ஒரே கண்ணோட் டத்துடன் பார்ப்பதற்கும் வழிவகை செய்துள்ளது. ஷரத்து 39 (டி) ஒரே பணி செய்யும் ஆணுக்கும், பெண்ணுக்கும் அந்தப் பணிக்கான சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது.
அரசியல் அமைப்பு சாசனத்தின் ஷரத்து 42ன் கீழ், அனைவருக்கும் பாது காப்புடன் கூடிய பணியிடமும் மற்ற வசதிகளும் செய்து தரவேண்டும். தாய்மைப்பேறு அடைந்த பெண்களுக்கு பேறுகால உதவியும் சலுகைகளும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயேதான் மகப்பேறு நல சட்டம் 1961, சம ஊதிய சட்டம் 1976 ஆகியவை இயற்றப்பட்டு பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக இருந்து வருகின்றன.
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் ஷரத்து 39(ஏ)ன் படி இந்த சமுதாயத்தில் எந்தவித வித்தியாசமும் இன்றி ஆணும் பெண்ணும் சமமாக வாழ வழிவகை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. ஷரத்து 39(ஏ)இன் கீழ் சமநீதியை நிலை நாட்டும் வகையில், தேவைப்படும் அனைவருக்கும்  இலவச சட்ட உதவி கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக... பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கட்டாயமாக இந்த இலவச சட்ட உதவி கிடைக்க இந்த ஷரத்து வலியுறுத் துகிறது. எந்த நிலையிலும் ஒரு பெண்ணுக்கு நீதி மறுக்கப் படக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த ஷரத்து இயற்றப் பட்டுள்ளது.  இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை களும் குற்றங்களும் பெருகி வரும் நிலையில் நம் நாட்டுப் பெண்கள் அவர்களுக்கான சட்ட உரிமை களையும் கடமைகளையும் அறிவது அவசியமாகிறது.
இன்றைய நிலையில் என்னதான் பெண்கள் கல்வியறி வில் மேம்பட்டிருந்தாலும் பொருளாதார வளர்ச்சியை தொட்டுக் கொண்டிருந்தாலும் அனைத்து இந்தியப் பெண்களும் இந்த நிலையை எட்டிவிட்டார்களா என்றால் கண்டிப்பாக இல்லை என்ற பதிலே மிஞ்சி நிற்கும்.  ஆணுக்கு நிகரான ஒரு நிலையை அடைய பெண்கள் அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தாலும், நம் நாட்டுப் பெண்கள் அந்த நிலையை அடைவதற்கு இன்னும் பயணம் செய்ய வேண்டிய தூரம் மிக அதிகம்.
நம் நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களும் பயனளிக்கும் சட்டங்களும் ஏராளமாக உள்ளன. எனினும், இந்தச் சமுதாயம் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய சமமான அங்கீகாரத்தை, இன்றும் எல்லா நிலைகளிலும் கொடுக்க மறுக்கிறது என்பதுதான் நிதர்ச னமான உண்மை. இப்பாகுபாட்டைக் களைய இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் ஷரத்து 46  பெரிதும் முயல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,2.9.14

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பேச்சே இவரது மூச்சு(ஓப்ரா)உலக ஊடகங்கள், முன்னணி பத்திரிகைகளால் ஆற்றல் மிக்கவர், செல்வாக்கு உள்ளவர், சக்தி வாய்ந்தவர் என்று பாராட்டப்பட்ட ஒரு பெண். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சிறு வயதிலேயே பாலியல் கொடுமைகளை எதிர்கொண்டவர்.
ஆனால், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களைத் தலைகீழாக மாற்றி, உலகப் பிரபலங்கள் எல்லாம் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படமாட்டோமா என்று ஏக்கப்பட வைத்தவர். இந்தப் பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஓப்ரா வின்பிரே.
உலகின் மிகுந்த செல்வாக்கான பெண் இவராக இருக்கலாம் " என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் பாராட்டப்பட்டவர். அதே ஓபாமா முன்னால் கால் மேல் கால் போட்டு உரையாடக்கூடிய சகஜத்தை ஓப்ரா பெற்றிருந்தார். இதற்குக் காரணம் உலகின் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளராக அவர் இருந்ததுதான்.
அவருக்கு முந்தைய தலைமுறை யில் சினிமா நடிகர், நடிகைகள் பெற்றிருந்த புகழை டிவி மூலம் பெற்றவர் ஓப்ரா. 25 ஆண்டுகளாக அவர் நடத்தி வந்த தி ஓப்ரா வின்பிரே டாக் ஷோ'வை நிறுத்துவது பற்றி யாருமே யோசித்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்த நிகழ்ச்சி அவ்வளவு புகழ் பெற்றவை.
நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தபோது, அவருடைய ஆண்டு வருமானம் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல். இப்படி உலகப் புகழ் பெற்றவராகவும், பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் இருக்கும் ஓப்ரா, சிறு வயதில் தனக்கு நேர்ந்ததைப் போல மற்றக் குழந்தைகளுக்கு நேரக்கூடாது என்பதில் உறுதிகொண்ட வராக இருந்தார். தனது பணத்தில் பெரும் பகுதியைக் கறுப்பின ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்குச் செலவிட்டுவருகிறார்.
அதற்குக் காரணம் இருக்கிறது. வறுமை காரணமாகச் சிறு வயதில் பல நேரம் கோணிச் சாக்கே அவரது உடையாக இருந்திருக்கிறது. அப்போது பாட்டி வெர்னிடா லீயிடம் வளர்ந்தார் ஓப்ரா. அவர் அடிக்கடி வீட்டு வேலைக்குப் போய்விட்டதால், பிறகு தந்தையிடம் விடப்பட்டார்.
அங்கு நெருங்கிய உறவினர்களாலேயே பல முறை பாலியல் வன்முறைக்கு உள்ளானார். கறுப்பினப் பெண்களுக்கு அதுவே அன்றைய நியதியாக இருந்தது. பிறகு காதல் கொண்டவருடன் 14 வயதிலேயே தாயானார். ஆனால், சில நாட்களில் அக்குழந்தையைப் பறிகொடுத்தார்.
மற்றொருபுறம், சிறு வயதில் இருந்தே ஓப்ராவின் பேச்சுத்திறமையும், வாசிப்பும் மேம்பட்டிருந்தன. இந்த இரண்டையும் கொண்டு சமூகம் அவர் மீது குத்திய ஒவ்வொரு முத்திரையையும் தகர்க்க ஆரம்பித்தார்.
பேச்சுத் திறமை மூலம் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே 19 வயதில் ரேடியோ செய்தி வாசிப்பாளர் ஆனார். அந்த வருமானமும் போதாத நிலையில், அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டதன் மூலமாகக் கிடைத்த தொகை மூலம் கல்லூரி கட்டணங்களைச் செலுத்தினார்.
கொஞ்ச காலத்தில் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையில் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்தார். அமெரிக்காவில் அந்தக் காலத்தில் ஊரின் வாயை அடக்குவதற்காகக் கறுப்பினப் பெண்கள் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் அவர்களுக்கு, முக்கியப் பொறுப்பு கள் வழங்கப்பட்ட தில்லை. ஆனால், ஓப்ரா அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், தன் இயல்பான கடும் உழைப்பைச் செலுத்தினார்.
புகழ்பெற்ற பேச்சு
அடுத்து பால்டிமோர் தொலைக்காட்சி நிலையத்தில் வேலை பார்த்தபோது எப்படி பேட்டிகளை எடுப்பது, வி.அய்.பிக் களிடம் எப்படி தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது என்பதையெல்லாம் கற்றுக்கொண்டார். 1984இல் ஏ.எம்.சிகாகோ தொலைக்காட்சி நிறுவனமே, ஓப்ராவை வேலைக்குச் சேர அழைத்தது.
அங்கேதான் தனது அடையாளமான டாக் ஷோ நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அது மிகப் பெரிய ஹிட். அப்போது புகழ்பெற்றிருந்த பில் டொனாகு டாக் ஷோ'வை அது விஞ்சியது. டாக் ஷோவைத் தொகுத்து வழங்குவதில் தனி ஆளுமையாக வளர்ந்த பின் ஹார்ப்போ புரொட சன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, தனது நிகழ்ச்சி களைத் தானே தயாரித்தார்.
நலப்பணிகள்
தனது வருமானத்தின் பெரும் பகுதியை ஏஞ்சல் நெட்வொர்க் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார். கறுப்பினக் குழந்தைகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்தினாலும், இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் குழந்தைகளின் படிப்புக்கும் அவர் உதவி வருகிறார்.
தென்னாப்பிரிக்காவில் ஓப்ரா வின்பிரே பெண்கள் தலைமைப்பண்பு அமைப்பை நடத்தி வருகிறார். கறுப்பின மாணவிகளின் ஆளுமைப் பண்பை வளர்க்கும் கல்வி நிறுவனம் அது.
ஓப்ராவின் வார்த்தைகளிலேயே அவரது வாழ்க் கையைச் சொல்வதென்றால், இந்த உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது தெரியுமா? ஒருவர் தனது அணுகு முறையை மாற்றிக்கொண்டால் தங்கள் வாழ்க்கையையே மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான்.
போராட்டம் இல்லையேல் வலிமை நமக்குக் கிடைக்காது. உங்கள் மனக்காயங்களைப் புத்திக்கூர்மையாக மாற்றுங்கள். அதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியம்"
-விடுதலை,10.6.14

சனி, 12 டிசம்பர், 2015

முதன்முறையாக சவுதியில் பெண்கள் ஓட்டுப்போட அனுமதி

 

ரியாத், டிச. 12_ நகராட்சி தேர்தலில் சவுதி அரேபியாவில் பெண்கள் ஓட்டுப்போட முதன் முறையாக அனுமதி வழங் கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமை யான கட்டுப்பாடுகள் உள் ளன. இங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக் கப்பட்டுள்ளது. அதே போன்று அங்கு நடை பெறும் தேர்தல்களில் பெண்கள் போட்டியிட முடியாது. ஓட்டு போட வும் தடை விதிக்கப்பட் டிருந்தது.
இவற்றை எதிர்த்து பல ஆண்டுகளாக அங்குள்ள பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் தேர்தலில் பெண்கள் போட்டியி டவும், வாக்களிக்கவும் தற்போதைய மன்னர் சல்மான் அனுமதி அளித் தார். இந்த நிலையில் அங்கு நாளை (12ஆம் தேதி) நகராட்சித் தேர் தல் நடக்கிறது.
அதில், தங்கள் உரி மைகளுக்காகப் போரா டிய பெண்கள் தங்கள் வாழ்நாளில் முதன் முறை யாக ஓட்டு போடுகிறார் கள். அதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் பெண்கள் தீவிர பிரசாரத் தில் ஈடுபட்டனர். அங்கு அவர்கள் ஆண்களிடம் நேருக்கு நேராக முகத்தை பார்த்து பேசக்கூடாது. ஏதாவது தடுப்புக்கு பின் னால் நின்றே பேச வேண் டும். அல்லது அவர்களது ஆண் உறவினர்கள் உடன் இருக்க வேண்டும்.
தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்கள் மற்றும் விளம் பரப் பலகைகள் மற்றும் சமூக வலைத் தளங்களை பயன்படுத்தக் கூடாது. தொலைக்காட்சியில் தோன்றி பிரசாரம் செய் யக்கூடாது. அது போன்று ஆண் வேட்பாளர்களும் பெண்களிடம் நேருக்கு நேராக பேசி ஓட்டு கேட் கவும் தடை செய்யப்பட்டு உள்ளது. எது எப்படி இருந்தாலும் நாளை நடை பெறும் தேர்தல் மூலம் சவுதி அரேபிய பெண்கள் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கின்றனர். ஒன்று தேர்த லில் போட்டியிடும் வாய்ப்பு, மற்றொன்று தேர் தலில் ஓட்டு போடுவதாகும்.
-விடுதலை,12.12.15

சனி, 5 டிசம்பர், 2015

விண்வெளி சென்ற முதல் அமெரிக்க பெண் சாலி ரைட்


1983ஆம் ஆண்டு சாலி ரைட் விண்வெளிக்கு சென்றார் . அப்போது அமெரிக்கா வானில் வெற்றகரமாக ஏவிய சேலஞ்சர் விண்கலத்தில், முதல் அமெரிக்க பெண்ணாக சாலி பயணித்தபோது அவருக்கு வயது 32.
இவர் மொத்தம் 343 மணி நேரம் விண்வெளியில் இருந்துள்ளார். இவர் பயணித்த விண்கலம் சிக்கல் ஏதுமின்றி தரையிறங்கியது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, சாலி ரைட் ஒரு தேசிய வீராங்கனையாக மதிக்கப்படுவார் என அறிவித்துள்ளார்.

-விடுதலை,14.8.12

சீனாவின் முதல் பெண் விண்வெளி வீரர்!

சீனா முதன்முறையாக பெண் விண்வெளி வீரர் ஒருவருடன் விண்கலமொன்றை இன்று விண்ணுக்கு ஏவுகிறது. ஒரு பெண் உட்பட 3 விண்வெளி வீரர்கள் அடங்கலாக ஷென்ஷோவு 9 எனும்  விண்கலம் ஜூன் 2012 16ஆம் தேதி, இற்கு ஜியூக்குவான் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டது.
விண்ணில் இயங்கி வரும் சீனாவின் விண் நிலையமான டியாங்கொங் - 1 உடன் சேர்ந்து விண்வெளி குறித்து ஆய்வு செய்யவிருக்கிறது இவ்விண்கலம். எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை இது போன்று பல விண்கலங்களைப் படிப்படியாக ஏவி, இந்த டியாங்கொங் - 1 எனும் விண் நிலையதில் பல வீரர்கள் தங்கி ஆய்வு செய்யக் கூடியவாறு அதனை  நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒப்பாக கட்டி எழுப்புவதே சீனாவின் நோக்கம் ஆகும்.
இவ் விண்கலத்தில் செல்லவுள்ளவர்களில் ஜிங் ஹைப்பெங், லியூ வாங் ஆகிய இரு ஆண் வீரர்களும்,  லியூ யாங் எனும் பெண் வீரரும் அடங்குவர். 33 வயதான லியூ யாங்  எனும் சீன வான்படையின் தளபதியாகக் கடமையாற்றியவர். 

-விடுதலை,21.8.12

வெள்ளி, 4 டிசம்பர், 2015

மருத்துவப் புரட்சிக்கு வித்திட்ட கறுப்புத் தாய்!

அமெரிக்காவில் வர்ஜினியா என்ற மாநிலத்தின் ஒரு பகுதியில் ஒரு புகை யிலை விவசாய - அடிமைகளாக முன் னோர்கள் இருந்த கறுப்பின அமெரிக்கப் பெண்மணி ஹென்ரிட்டா லாக்ஸ்.
இவர் 5 ஆவது, 6 ஆவது வகுப்பு மட்டுமே படித்த ஒரு ஏழைப் பெண்மணி. அய்ந்து (5) குழந்தைகளுக்குத் தாயாகி விட்டவர்.
1951 இல் அவர் மெரிலாண்ட் பகுதியில் (வாஷிங்டன் டி.சி. - அருகில் உள்ள பகுதிதான்) பிரபல ஜான்ஹாப் கின்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்!
குழந்தைப் பருவம் முதலே இந்த பெண்மணிக்கு மூச்சுத் திணறல் வரு வதுண்டு அடிக்கடி. மூக்குப் பகுதி கொஞ்சம் வளைந்திருக்கும் (Deviated Septum) பல ஆண்டுகளாக பல் வலி உபாதையும் அடிக்கடி.
15 வயது முதலே கணவனோடு தாம்பத்திய வாழ்வு. பிறகு உடலுறவில் நாட்டமில்லை. காரணம், அவர்களை அறியாமலேயே அந்தப் பெண்ணுக்கு கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer). இவரது தாய், தந்தைக்கு இவர் 10 பிள்ளைகளில் மூத்தவர்.
இந்தப் பெண்ணை ஜான் ஹாப் கின்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். அது அவருக்கு வெளிநாடு போல் தோன்றியது. காரணம், அவர்கள் பேசும் ஆங்கிலம்கூட இவருக்குச் சரிவரத் தெரியாது.
புகையிலை விவசாய அறுவடை, பன்றி வளர்ப்பு - இவைதாம் இவருக்குத் தெரியும்.
இவருக்கு Cervix என்ற சொல்லோ, Biopsy என்ற வார்த்தையோ எதுவும் தெரியாது! எழுதப் படிக்கவே தெரி யாதவர் இவர்!
தனது வலி பற்றி டாக்டர்களிடம் சொன்னார்; ரத்தம் கசிந்து கொண் டிருந்ததை அறிந்து கூறினார். மூன்று மாதம் கழித்து ஒரு பெரிய கட்டியாக அது மாறியது.
அவர் உயிருடன் மருத்துவமனையில் இருக்கிறபோது, அவருக்குத் தகவல் தெரியாமலேயே அவரது உடம்பிலிருந்து செல்கள்(Cells)
எடுத்து குளிர்பதனப் பெட்டி அறையில் வைக்கப்பட்டன! அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அந்த செல்கள் எடுத்து வைக்கப்பட்டன.
பொதுவாக  இப்படி எடுக்கப்படும் செல்கள் உயிருடன் இருப்பதில்லையாம்! இது மிகவும் உயிர் நிலையிலேயே பராமரிக்கப்பட்டு, இன்றும் பலவித நோய்களுக்கும், சிகிச்சைகளுக்கும் மூலாதாரமாகப் பயன்படுகிறதாம்!
மைக்ரோஸ்கோப் என்ற நுண் ணாடியின்மூலம் பார்த்தால் வறுக்கப்பட்ட முட்டை (Fried Egg) போல அந்த செல்கள் காணப்படுமாம்! ஹீலாவின் செல்கள் வளர்ந்தன; வளர்ந்துகொண்டே இருக்கின்றன 350 மில்லியன் அடிக்கு. (35 கோடி அடி நீளம்; 5 அடி அவரது உயரம்). அவர் இறந்துவிட்டார்; அவரி டமிருந்து எடுக்கப்பட்டு, பாதுகாத்து பராமரிக்கப்பட்டு மருத்துவ ஆராய்ச் சிக்குப் பயன்படும் அந்த செல்கள்மூலம் மருத்துவ ஆராய்ச்சி நாளும் வளர்ந் தோங்குகிறது இன்றும்கூட!
போலியோ வாக்சின், கீமோதெரபி, குளோனிங், ஜீன் மேப்பிங், விட்ரோ ஃபர்ட்டிலைசேஷன் போன்ற பல முக்கிய ஆய்வுகளுக்கு அவரது தியாகம் அவரது அனுமதியின்றியே அமெரிக்க டாக்டர்கள் செய்தது - மனித குல வளர்ச்சிக்கு அந்தக் கறுப்பின, ஏழைத்தாயின், படிக்காத ஒரு பெண் ணிடம் அறக்கொடை (செத்தும் கொடுத்ததால் அப்படி அழைப்பதில் தவறில்லையே) மனித குலத்திற்குப் பயன்படுகிறதே!
ஹெல்த் இன்ஷுரன்ஸ் கூட கட்ட முடியாத அந்த கறுப்புப் பெண்ணின் செல்கள் மூலம் இன்றும் - அவை பல நூறு கோடி டாலர்களை பலர் சம் பாதிக்க மூலதனமாக முதலாகப் பயன்படுகிறது!
இதை ஒரு நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர், பெண்தான் - சிறப்பான வரலாறாக மருத்துவ உலகின் மிகப் பெரிய புரட்சியாக மலர்ந்த ஒரு அருமை யான நூலாக படைத்துள்ளார்.  அண்மையில் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது நியூஜெர்சியில் ஒரு பேரங்காடியில் இந்த நூல் ஒரு மூலையில் 20 சதவிகித தள்ளுபடியுடன் கிடைத்தது!
இந்நூல் எப்படிப்பட்டது?
‘‘A thorny and provocative book about cancer, racism, Scientific ethics, and cripping poverty’’ - The immortal life of Henrietta Lacks.
இதன் தமிழாக்கம்:
புற்றுநோய், இனவெறி, அறிவியல் நன்னெறி, வாழ்க் கையை முடக்கிப் போடும் வறுமை ஆகிய முட்களைப்பற்றி, ஆத்திர மூட்டக் கூடிய, சிந்தனையைத் தூண்டும் நூல் - ஹென்ரிட்டா லாக்சின் அழிவே இல்லாத வாழ்க்கை.
லாக்ஸ் மகளைக் கண்டுபிடித்து, கோபம் - சோகம் நிறைந்த அந்த மகளுடன் கலந்து பேசி இந்நூலை எழுதி உலகுக்கு இந்தக் கதையைத் தந்தவர் ரெபாக்கா ஸ்கூலூட் (Rebecca Skloots) என்ற பெண் எழுத்தாளர். இவர் ஒரு மனிதநேயர்; கடவுள் நம்பிக்கையற்றவரும்கூட. அவருக்கும் உலகு கடமைப்பட்டுள்ளது!
குறிப்பு: இந்நூல் 2010 ஆம் ஆண்டு பல பரிசுகளைப் பெற்ற ஒரு நூல்!
லாக்ஸ் செல்லை அவர் அனுமதியின்றி எடுத்த அமெரிக்க டாக்டர் இன்னமும் 100 வயது கடந்து வாழ்ந்து கொண்டுள்ளார். இதை நான் வேறு வழியில் கண்டறிந்தேன்!
-விடுதலை,5.9.12

புதன், 2 டிசம்பர், 2015

உலகின் முதல்' பெண்கள்


அமெரிக்கா
 • அமெரிக்க தபால் தலையில் இடம் பெற்ற முதல் பெண்மணி : மகாராணி இஸபெல்லா, ஸ்பெயின் (1893)
 • அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி : எலிசபெத் பிளாக் வெல் (1849)
 • அமெரிக்காவின் முதல் பெண் வழக்கறிஞர் : அராபெல்லா மான்ஸ் ஃபீல்டு (1869)
 • அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி : சான்ட்ரா டே ஒகோன்னர் (1981)
 • அமெரிக்காவின் முதல் பெண் அட்டர்னி ஜெனரல் : ஜானெட் ரெனோ (1993)
 • அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் தூதர் : பாட்ரிக்கா ஆர் ஹாரிஸ், லக்சம் பார்க் (1965)
 • அமெரிக்க காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி : ஜானெட் ரான்கிங், மோன்டானா (1916)
 • அமெரிக்காவின் முதல் பெண் அயலுறவுச் செயலர் : மாடலின் ஆல்பிரைட் (1996)
 • அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரான முதல் பெண்மணி : கோண்டலீஸா ரைஸ் (2001)
 • அமெரிக்காவின் முதல் முதல் பெண்மணி : மார்த்தா வாஷிங்டன்
 • வடமுனை சென்றடைந்த முதல் பெண்மணி : ஆன் பான்ரோஃப்ட், அமெரிக்கா (1986)
 • முதல் கறுப்பின பெண் நீதிபதி : ஜேன் மடில்டா போலின், நியூயார்க் நகரம் (1939)
 • உலகின் முதல் பெண் ஒலிம்பிக் மாரத்தான் சாம்பியன் : ஜோன் பெனோயிட், லாஸ் ஏஞ்சல்ஸ் (1984)
இங்கிலாந்து
 • பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் : மார்க் ரெட் தாட்சர் (1979)
 • சூப்பர்சானிக் கான்கார்ட் விமானத்தின் முதல் பெண் பைலட் : பார்பரா ஹார்மர், பிரிட்டீஷ் ஏர்வேஸ் (1993, மார்ச் 25)
 • பிரிட்டனின் முதல் பெண் உள்துறை செயலர் : ஜாக்வி ஸ்மித் (2007 ஜூன்)
 • சர்வதேச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைவர்: ரோஸலின் ஹிக்கின்ஸ், பிரிட்டன் (சர்வதேச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் இவரே) (2006, பிப்ரவரி 6)
 • பக்கிங்காம் அரண்மனையில் குடிபுகுந்த முதல் ஆங்கில அரசு வாரிசு : விக்டோரியா மகாராணி (1837)
 • ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண்மணி : சார்லோட்டே கூப்பர், பிரிட்டன், ஒற்றையர் டென்னிஸ்
இந்தியா
 • உலக சுகாதார அமைப்பின் உலக சுகாதார அசெம்ப்ளி தலைவரான முதல் பெண்மணி : ராஜ்குமாரி அம்ரித் கௌர், இந்தியா (1950)
 • ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடந்த முதல் ஆசியப் பெண்மணி : ஆரதி சாஹா. இந்தியா (1959)
 • உலகின் முதல் பெண் ஏர்பஸ் பைலட் : துர்பா பானர்ஜி, இந்தியா (1987)
 • ஆசியாவின் முதல் பெண் ரயில்  ஒட்டுநர் : சுரேகா யாதவ், இந்திய ரயில்வே (1992)
ஏனைய நாடுகள்
 • செயற்கை இதயம் பொருத்திக் கொண்ட முதல் பெண்மணி : மேரி லுண்ட் (1986)
 • சொந்தமாக தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத் தைத் துவங்கிய முதல் கறுப்பினப் பெண்மணி : ஒப்ரா வின்ஃப்ரே, பில்லினியரான முதல் கறுப்பினப் பெண்மணியும் இவரே (1986)
 • ஒரு செய்தித்தாளின் முதல் பெண் எடிட்டர் : ஆன் ஃபிராங்ளின், தி நியூபோர்ட் மெர்க்குரி (1762)
 • வரலாற்றில் பதிவான உலகின் முதல் புகழ் பெற்ற பெண்மணி : ஹாட்ஷேப்கட் (கி.மு. 1479)
 • உலகின் முதல் பெண் பிரதமர் : சிரிமாவோ பண்டார நாயகே, இலங்கை (1960)
 • உலகின் முதல் பெண் அதிபர் : இஸபெல் பெரோன், அர்ஜென்டினா (1974)
 • ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் பெண் தலைவர் : விக்டிஸ் ஃபின் போகாடோட்டிர், அதிபர், ஐஸ்லாந்து (1980)
 • இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர் : கோல்டா மேயர் (1964)
 • பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர் : கொரோஸான் அகினோ (1986)
 • கனடாவின் முதல் பெண் பிரதமர் : கிம் காம் பொல் (1993)
 • ஜெர்மனியின் முதல் பெண் சான்சிலர் : டாக்டர் ஏஞ்சலா மெர்கல் (2005)
 • சிலி நாட்டின் முதல் பெண் அதிபர் : மிச்செல் பாச்லெட் (2006)
 • ஒரு நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி : எல்லன் ஜான்சன் சர்லீஃப் லைபீரிய அதிபர் (2005)
 • துருக்கியின் முதல் பெண் பிரதமர் : தான்சு சில்லர் (1993)
 • விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் கறுப்பினப் பெண்மணி : அல்தியா கிப்ஸன் (1957)
 • கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் பெண்மணி : மௌரீன் காதரின் (1953)
 • ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் பெண்மணி : கெர்ட்ரூட் எடர்லே, 14 மணி 39 நிமிடங்கள் (1926, ஆகஸ்ட் 3)
 • நூறு நாட்களில் தனியாக உலகைப் படகு மூலம் சுற்றி வந்த முதல் பெண்மணி : எர்லென் மக் ஆர்தர், ஆங்கில கடற்பயணி (2001)
 • தனியாக உலகைப் பறந்து சுற்றிய முதல் பெண் மணி : ஜெர்ரி ஃபிட்ரிட்ஸ் மோக், 29 நாட்கள் (1864)
 • ஆக்சிஜன் இன்றி எவரெஸ்டில் ஏறிய முதல் பெண்மணி : லிடியா பிராடே, நியூசிலாந்து (1988)
 • எவரெஸ்டை அடைந்த உலகின் முதல் பெண்மணி : ஜீங்கோ தாபேய், ஜப்பான் (1975 மே, 16)
 • விண்வெளி சென்ற உலகின் முதல் பெண்மணி : வாலென்டினா தெரஷ்கோவா, ருஷ்யா (1963)
 • விண்வெளி சென்ற முதல் கறுப்பினப் பெண்மணி : மா கரோல் ஜெமிசன். என்டவர் (1992)
 • விண்வெளியில் நடந்த உலகின் முதல் பெண் மணி : காத்ரின் டி. சுல்லிவன், சாலஞ்சர் பயணம் (1984)
 • உலகின் முதல் விண்வெளி பெண் சுற்றுலாப் பயணி : அனுஷ் அன்சாரி, இரான் (2006)
 • உலகின் முதல் ஹெலிகாப்டர் பெண் பைலட்: ஹன்னா ரெயிட்ஷ், ஜெர்மனி (1938)
 • அய்ரோப்பாவில் மருத்துவராகத் தேர்வு பெற்ற முதல் பெண்மணி : டாக்டர் மரியா மான்டசேரி, இத்தாலி (1896)
 • பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய உலகின் முதல் நாடு : நியூசிலாந்து (1893)
 • -விடுதலை,7.8.12

செவ்வாய், 1 டிசம்பர், 2015

பருவமடைந்த பெண்களுக்குரிய உணவுகள்- நேயன்

ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் உடல் ரீதியாக பலஇழப்புகளை அடைகிறார்கள். மாதாமாதம் உதிரப்போக்கு, பிள்ளைபெறல், பாலூட்டல் போன்றவை. எனவே, பெண் பிள்ளைகள் சத்தான உணவு கொடுத்து வளர்க்கப்பட வேண்டும்.
சத்தான உளுந்தங்களி
தேவை: வெல்லத்தூள் இரண்டு டம்ளர், உளுந்தம் பருப்பு ஒரு டம்ளர், நெய், நல்லெண்ணெய் கால் டம்ளர், ஏலத்தூள் தேவைக்கேற்ப.
செய்முறை: உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். இறக்கி ஆறிய பின் மிக்சியில் பவுடராக அரைக்கவும். வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதி வந்த பின் ஆறவிட்டு வடிகட்டவும்.
அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பின், உளுந்து மாவு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கை விடாமல் கிளறவும். பிறகு இதனுடன் வெல்லக்கரைசல், ஏலத்தூள் சேர்த்து மாவு நன்கு வேகும்வரை கிளறி நெய்விட்டு ஒரு சுற்று கலந்து இறக்கி பரிமாறவும்.
மருத்துவப் பலன்: 1. உளுந்தின் புரதம், வெல்லத்தின் இரும்புச் சத்துகள் கிடைக்கும். 2. ஏலத்தூள் சேர்ப்பதால் கபத் தொல்லை வராது. 3. நல்லெண்ணெயில் செய்வதால் எலும்புகள் வலுவடையும். 4. நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்ப்பதால் உடல் சூடு தணியும்.
உளுந்து - தேங்காய் பாயசம்
தேவை: வெல்லம் ஒரு டம்ளர், தோல் நீக்கிய உளுந்து _ தேங்காய்த் துருவல் தலா அரை டம்ளர், ஏலத்தூள் _ நெய் தலா அரை தேக்கரண்டி, முந்திரி _ திராட்சை தலா 5.
செய்முறை: நெய்யை வாணலியில் காயவிட்டு முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுக்கவும். வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்து கரைந்த பின் வடிகட்டவும். உளுந்தை 20 நிமிடம் ஊறவைத்து களைந்து, தேங்காய்த் துருவல் _ ஏலத்தூள் சேர்த்து நைசாக நீர்க்க அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து, நன்கு வேகும் வரை கை விடாமல் கிளறவும். பிறகு வெல்லக் கரைசல் சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி, வறுத்து வைத்த முந்திரி _ திராட்சையை மேலே அலங்கரித்து பரிமாறவும்.
மருத்துவப் பயன்: 1. பூப்படைந்த பெண்களுக்கு அந்த நேரத்தில் எலும்புகள் வளர்ச்சி பெறும். இந்த உளுந்து பாயசம் அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி புரிகிறது. உதிரப் போக்கால் ஏற்படும் சோர்வு. பலவீனத்தை நீக்கி உடலை பலப்படுத்தும். 2. உளுத்துப் போன உடலுக்கு உளுந்து என்பார்கள். 3. வெல்லத்தின் இரும்புச் சத்தும், உளுந்தின் புரதச் சத்தும் கிடைக்கும். வாரம் ஒரு முறை தாராளமாக தரலாம்
வாழை - முருங்கைப்பூ பொரியல்
தேவை: வாழைப் பூ ஒன்று, முருங்கைப் பூ _ முருங்கைக் கீரை தலா ஒரு கைப்பிடி. வேர்க்கடலை கால் டம்ளர். ஒரு பெரிய வெங்காயம். மிளகாய் வற்றல் 4. தேங்காய் துருவல் 5 தேக்கரண்டி. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி. கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தாளிக்க எண்ணெய், உப்பு தேவைக்கு.
செய்முறை: வாழைப் பூவின் மேல் மடலை அகற்றிவிட்டு, பூக்களின் நடுவே சிறிய தீக்குச்சி போல இருப்பதை நீக்கி, பொடியாக நறுக்கி தண்ணீரில் போடவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். முருங்கைக் கீரையை அலசி ஆய்ந்து வைக்கவும். முருங்கைப் பூவையும் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.,
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம்பருப்பு, வெங்காயம் போட்டு தாளித்து... வாழைப்பூ, முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, மஞ்சள் தூள், உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். வேர்க்கடலையுடன், மிளகாய் வற்றல் சேர்த்து மிக்சியில் பொடிக்கவும்.
வாழைப்பூ நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய்த் துருவல், வேர்க்கடலைப் பொடியைக் கலந்து கிளறி சற்று நேரம் கழித்து இறக்கி பரிமாறவும்.
மருத்துவ நன்மை: 1. பூப்பெய்திய பெண்களுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு வாழைப் பூ சிறந்த மருந்தாகும். 2. முருங்கைக் கீரை மற்றும் முருங்கைப் பூவின் இரும்பு சத்தானது அதிக உதிரப் போக்கால் உருவாகும் சோகையைப் போக்கும். 3. தேங்காய் _ வெங்காயம், உடல் சூட்டை தணிக்கும். 4. வேர்க்கடலையின் புரதச் சத்தும் கிடைக்கும்.
-உண்மை,16-30.11.15