புதன், 22 ஆகஸ்ட், 2018

மங்காத சுயமரியாதைப் பேரொளி

பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றின் பெயரால் மூடநம்பிக்கைகளும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்திருந்த சமூகத்தில் அறிவியலின் துணையோடு பகுத்தறிவுச் சிந்தனை யாளர்கள் வெளிப்பட்டனர். சமூகம் முழுக்கக் கவிழ்ந்திருந்த அறியாமை இருளைத் தங்களின் முற்போக்குக் கருத்துகள் மூலமாக அவர்கள் அகற்ற முயன்றனர். ஆனால், அவர் களுக்குக் கிடைத்ததெல்லாம் புறக்கணிப்பும் அவமானமுமே.


பகுத்தறிவுச் சிந்தனையை மக்களிடம் கொண்டுசேர்ப்பது ஆண்களுக்கே பெரும் சவாலாக இருந்த காலத்தில் வீட்டு வாசலைத் தாண்டுவது பெண்களுக்கு அழகல்ல என்று சொல்லிப் பிணைக்கப்பட்டிருந்த அடிமை விலங்கை உடைத்துப் பல பெண்கள் களம்கண்டனர். பிற்போக்குத் தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் செயல் பட்ட பெண் பகுத்தறிவுவாதிகள் சிலரை நினைவுகூர்வது, முற்போக்குச் சிந்தனையை மக்கள் மத்தியில் பரப்பியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கருக்கு அவரது நினைவுநாளில் (ஆகஸ்ட் 20) செய்யும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

மூவலூர் ராமாமிர்தம்

முதல் பகுத்தறிவுப் பெண் குரல்

பின்னாளில் தன் பெயரால் திருமண நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்படும் என மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் நினைத்திருக்க மாட்டார். ஆனால், பெண்களின் மறு மலர்ச்சிக்காக அவர் செய்த செயல்களுக்குச் செய்யும் சின்னதொரு அங்கீகாரமாகவே பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்கு விக்கும் வகையில் தமிழக அரசால், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திரு மண நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

தேவதாசி முறையை ஒழிப்பதில் டாக்டர் முத்து லட்சு மிக்குத் துணைநின்றார். பெரியாரின் சுயமரியாதை இயக் கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். குடிஅரசு இதழில் இவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் துணிவில்லாத சனாதனவாதிகளுக்கு, ராமாமிர்தம் அம்மையாரின் பேச்சும் செயலும் எட்டிக்காயாகக் கசந்தன.

அதன் விளைவாகப் பிரச்சார மேடையில் தேவதாசி முறைக்கு எதிராகப் பேசிக்கொண்டிருந்தவரை மேடையிலேயே வைத்துக் கூந்தலை அறுத்தனர். இந்தச் செயலால் அவமானப்பட்டுத் தன் செயல்பாடுகளில் இருந்து பின்வாங்கு வார் என்ற சனாதனவாதிகளின் நினைப்பைப் பொய்யாக்கி, முன்பைவிட முழுவேகத்துடன் செயல்பட்டார்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு நீளக் கூந்தல் வளர்ப்பதைத் தவிர்த்து, கிராப் வெட்டிக்கொண்டார். 1920-களிலேயே தமிழகம் முழுவதும் பயணித்து, சுயமரியாதை கருத்துகளைப் பரப்பியதில் முதன்மையானவர் ராமாமிர்தம் அம்மையார். சுயமரியாதைத் திருமணங்கள் அதிகரிக்கவும் இவர் முக்கியப் பங்காற்றினார். இந்து மதத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமை, ஜாதிப்பாகுபாடு ஆகியவற்றுக்கு எதிராகத் திரண்ட மக்கள் இஸ்லாமுக்கு மதம் மாறிய காலத்தில், இஸ் லாமும் இந்தியர்களின் நிலையும் என்ற பிரசுரத்தை 1939இல் வெளியிட்டார்.

அதில் இஸ்லாம் மதத்தில் நிலவும் பாகுபாடற்ற நிலையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். காலையில் பறையனாய் இருப் பவன் மாலையில் இப்ராகிம் சாயபு ஆகி பிராமணன் வீட்டுக்குப் போகலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறார். (ஆதாரம்: மூவலூர் இராமாமிர்தம்: வாழ்வும் பணியும், ஆசிரியர்: பா.ஜீவசுந்தரி). வீட்டுக்குள் இருந்தே மறுமலர்ச்சி புறப்பட முடியும் என்பதை ராமாமிர்தம் உணர்ந்திருந்தார். அதுவும் ஆண்  பெண் பாகுபாடு மலிந்திருக்கும் குடும்ப அமைப்பைச் சரிசெய்வதும் சமூக மாற்றத்துக்கான திறவுகோல்களில் ஒன்று என உணர்ந்து, அந்தப் பாகுபாட்டைக் களைவதற்கான கருத்துகளையும் அவர் முன்வைத்தார்.

அழகு என்ற போர்வையில் பெண்கள் தங்கள் அலங் கரித்துக்கொள்வது பெண்ணடிமைத்தனமன்றி வேறல்ல என்று சொன்னார். கல்வி என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களும் அதன் பலனை அனுபவிக்க வேண்டும் என்பதையும் தன் பிரச்சாரக் கருத்துகளில் ஒன்றாகக் கொண்டவர் ராமாமிர்தம். பகுத்தறிவு என்பதைக் கடவுள் மறுப்பு என்று மட்டுமே தட்டையாகப் புரிந்துகொள்வதைக் கண்டித்து, சமூக மீட்சிக்கான அடிப்படைகளில் ஒன்று அது என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் பறைசாற்றியவர்.

குஞ்சிதம் குருசாமி

கொள்கையும் வாழ்வும் வேறல்ல

ஜாதிவெறி கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த காலத்தில் பத்திரிகை ஆசிரி யரும் பகுத்தறிவுவாதியுமான குத்தூசி குருசாமியை ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் குஞ்சிதம் குருசாமி. தந்தை பெரியாரின் தலைமை யில் அதிகாரபூர்வமாக நடந்த முதல் பகுத்தறிவுத் திருமணம் இவர்களுடையதுதான். சமூகம் வகுத்து வைத்திருந்த சட்டகத் துள் தன்னைச் சுருக்கிக் கொள்ள குஞ்சிதம் விரும்பவில்லை. பெண்ணுக்குக் கல்வி என்பது கைவிளக்கு என்பதை உணர்ந் திருந்தார். படித்து முடித்து ஆசிரியராகப் பணி யாற்றினார்.

பிறகு சென்னை நகராட்சி கல்வி அதிகாரியாக உயர்ந்தார். பதவி என்பது சேவை செய்யவே என்பதைத் தன் செயல் பாடுகள் மூலம் நிரூபித்தார். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் முனைப்புடன் செயல்பட்டார். அதுவே அவரது பணி நீக்கத்துக்கும் காரணமாக அமைந்தது. மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட பிறகும் தன் சமூகச் செயல்பாடுகளை அவர் குறைத்துக்கொள்ளவில்லை.

ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்தார். ஆண்களுக்கு மட்டுமே அரசியல் தெரியும் என்ற கற்பிதத்தைத் தன் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் மூலம் தகர்த்தார். பெரியாரின் வழிகாட்டுதலின்படி பிரச்சார மேடைகளில் ஆங்கிலத்திலும் அனல் தெறிக்கப் பேசினார். எந்தச் சூழலிலும் எளிமையைக் கைவிடாமல் இருந்தார். கொள்கையும் வாழ்வும் வேறல்ல என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார் குஞ்சிதம் குருசாமி.

மணியம்மை

நெருப்பாற்றில் நீந்தியவர்

கணவனைத் தொழுது எழுவதே பெண்ணுக்குப் பெருமை என்ற கருத்து வேரூன்றிக் கிடந்த காலத்தில் (இன்றும் நிலைமை அப்படியொன்றும் மாறி விடவில்லை) பெரியார் என்ற மாபெரும் அடையாளத்தின் நிழலில் மட்டு

மே மகிழ்ந்திருக்க அவர் நினைக்கவில்லை. தான் தலைவனாக வரித்துக் கொண்டவரையே வாழ்க்கைத் துணைவனாகக் கைப்பிடித்ததோடு தன் கடமை முடிந்து விட்டதாக அவர் நிறைவடையவில்லை.

சிறு வயது முதலே தான் கடைப்பிடித்துவரும் சுய மரியாதைக் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே தன் வாழ்வின் பெரும் லட்சியமெனக் கொண்டு அதன் வழியே நடந்தவர் மணியம்மை. மகள் வயதுப் பெண்ணை மணந் தவர் என்று பெரியார்  மணி யம்மை திருமணத்தை இந்தச் சமூகம் பேசு பொருளாக்கிய போது அதைப் பற்றியெல் லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தனக்கு நேர மில்லை என்பதைத் தீரம் மிக்கச் செயல்பாடுகளால் மணியம்மை நிரூபித்தார். தந்தை பெரியாரின் மறை வுக்குப் பிறகு திராவிடர் இயக்கத்தின் தலைமைப் பொறுப் பேற்றார். அது பெயரளவுக் கான தலை மையாக மட்டும் இல்லை என்பதே மணியம்மையின் இடைவிடாத செயல்பாடு களுக்குச் சான்று. சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தில் ஆயுள் காலச் செயலராகப் பொறுப் பேற்றுச் செயல்பட்டார். பிரச்சார மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசுவதோடு அவற்றை குடிஅரசு இதழில் கட்டுரை களாகவும் எழுதினார். மொழி உரிமைப் போர், இந்தி எதிர்ப்புப் போராட்டம் என முழுநேர அரசியல் பணியில் ஈடுபட்டார்.

பெரியார் சிறையில் இருந்தபோதும் அவரது மறைவுக்குப் பிறகும் திராவிடர் இயக்கச் செயல்பாடுகள் தளர்வடையாமல் பார்த்துக்கொண்டதில் மணியம்மையின் பங்கு குறிப்பிடத் தக்கது. வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ராவண லீலா விழாவுக்குத் தடை கேட்டுப் போராடினார். அவரது கோரிக்கைக்குச் சரியான பதில் இல்லை என்ற நிலையில் தமிழகத்தில் ராமன், லட்சுமணனின் உருவ பொம்மைகளை எரித்துப் போராட்டம் நடத்தினார்.

அவரச நிலை அமலில் இருந்த காலத்திலும் இயக்கத் தொண்டர்களைச் சந்தித்துப் பேசினார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தமிழகம் வந்தபோது அவருக்குக் கறுப்பு கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார். இட ஒதுக்கீடு வாயிலாக மட்டுமே பெண்கள் இன்று அரசியலில் களம்காணும் சூழலில் அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே அரசியலில் சூறாவளியாகச் சுழன்றவர் மணியம்மை, அதுவும் சமூக மாற்றத்துக்கான அரசியலில்.

திருமணத்துக்குப் பின் தாலியும் குங்குமமும் அணியாத பெண்களை அந்நாட்களில் இந்தச் சமூகம் எப்படித் தூற்றி யிருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை. காரணம் கணவனை இழந்த பெண்கள் இன்றும்கூட பொட்டு வைத்துக் கொள்ளத் துணிகிறார்களே தவிர, பூ வைத்துக்கொள்வதில்லை. இந்தப் பின்னணியில் இருந்துகொண்டு மணியம்மையார் விதைத்த புரட்சி வித்துகளை எண்ணிப் பார்த்தால் அவர் நெருப்பாற்றை நீந்திக் கடந்தவர் என்பது புரியும்.

நன்றி:  இந்து தமிழ் திசை (பெண் இன்று) 19.8.2018)

- விடுதலை நாளேடு, 21.8.18

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

ரயில்வே காவல்துறையில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடுபாட்னா, ஆக. 16- ரயில்வே பாதுகாப்புப் படைப்பிரிவு 1957ஆம் ஆண்டில் உரு வாக்கப்பட்டது. நாடுமுழுவதும் உள்ள சீருடைப்பணிப்பிரிவினரில் ரயில்வே பாதுகாப்புப் படைப்பிரிவினரே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இன்றும் 70,000 பேருக்கும்மேல் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வே பாதுகாப்பு படைப்பிரி வில் 9500 முதல் 10000 வரை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்க ளில் 50 விழுக்காடு அளவு பெண்களுக்கு வழங்கப்படுகிறது என்று மத்திய ரயில் வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். பெண்களுக்கான பணி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் பெண்களுக்கு 50 விழுக்காடு அளிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரயில்வேத் துறையில் 13,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. கணினி முறையிலான தேர் வின் அடிப்படையில் விரைவில் பணி நியமனங்கள் நடைபெறும் என்றும், நேர்முகத் தேர்வுகள் கிடையாது என் றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 16.8.18

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

பாகிஸ்தானில் இந்து பெண்களுக்கு மறுமண உரிமைசிந்து, ஆக. 13- பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், கணவனை இழந்த அல் லது விவாகரத்து ஆன இந்து பெண்கள் மறுமணம் செய்துகொள்வதற்கு அனு மதியளிக்கும் சட்டத் திருத்த மசோ தாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிந்து மாகாணத்தில் வாழும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள், கணவனை இழந்துவிட்டால் மறுமணம் செய்து கொள்வதற்கு இதுவரை அனுமதி இல்லாத நிலையில், தற்போது அவர்க ளுக்கு அந்த உரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, சிந்து இந்து திருமண சட்டத் திருத்த மசோதா-2018’அய், சட்டப் பேரவையில் பாகிஸ்தான் முஸ் லிம் லீக் கட்சியின் செயல் தலைவர் நந்த் குமார் கோக்லானி, கடந்த மார்ச் சில் தாக்கல் செய்தார்.

இந்து பெண்கள் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறுவதை உறுதி செய்யும் இந்த மசோதா, விவாகரத்து ஆன அல் லது கணவனை இழந்த பெண்கள் மறு மணம் செய்துகொள்வதையும் அனும திக்கிறது.

மேலும், கணவனை பிரிந்த பெண்க ளுக்கும், அவர்களது குழந்தைகளுக்கு மான நிதி பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன், இந்து மதத்தில் குழந்தை திருமணங்களுக்கு தடை விதிக்கவும் வழிவகை செய்கிறது.

இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ மற்றும் இதர கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, சிந்து இந்து திருமண சட்டத் திருத்த மசோதா-2018 அண்மை யில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அப்போது பேசிய நந்த் குமார் கோக்லானி, இந்து மதத்தில் உள்ள பழைமையான வழக்கங்களால் பெண் கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளுக்கு, இந்த சட்டத் திருத்த மசோதா தீர்வாக அமையும். இது அமலுக்கு வருவதற்கு முன் கணவனை பிரிந்த பெண்களும் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெறலாம், என்றார்.

இந்நிலையில், இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு சிந்து மாகாண ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

- விடுதலை நாளேடு, 13.8.18