செவ்வாய், 12 டிசம்பர், 2017

கப்பல்படையின்  முதல் பெண் விமானி!




இந்திய கப்பல்படையின் முதல் பெண் விமானியாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் தேர்ச்சி பெற் றுள்ளார்.

கேரளத்தில் உள்ள எழிமலா கப்பல்படை அகாதெமியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ள இவர் விரைவில் கப்பல்படைக்குச் சொந்தமான உளவு விமானத்தில் பைலட்டாக உயரப் பறக்கப் போகிறார். 
இவரின் தந்தை கியான் ஸ்வரூப் கப்பல்படை கமாண்டராக உள்ளார்.

இவருடன் டில்லியைச் சேர்ந்த அஸ்தா சீகல், புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா, கேரளத்தைச் சேர்ந்த சக்தி மாயா ஆகிய மூன்று அதிகாரிகளும் இந்தியாவின் முதல் கப்பல்படை போர்தளவாட பெண் ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் பெண் விஞ்ஞானி



கேரளத்தைச் சேர்ந்த அன்னாமணி ஒரு விஞ்ஞானி. 1918-இல் கேரள மாநிலம் பீர்மேட்டில் பிறந்த இவர் விண்வெளி குறித்தும் கோள்கள் குறித்தும் ஆய்வு செய்த முதல் பெண் விஞ்ஞானி. புனேவிலுள்ள விண் வெளி ஆராய்ச்சி நிலைய அலுவலகத்தில் 1948-இல் விஞ்ஞானியாகச் சேர்ந்து படிப்படியாக அதன் இயக்குநராக உயர்வு பெற்று 1960-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இந்திய விஞ்ஞானக் கழகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு, வெளிநாடு மற்றும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிக் குழு, கோள்கள் ஆராய்ச்சி குழு ஆகியவற்றில் சிறப்பு உறுப்பினராக பணியாற்றிய முதல் பெண் இவர்தான். விண்வெளி பாதை மற்றும் கோள்கள் குறித்த தனது எண்ணற்ற ஆராய்ச்சி முடிவுகளை புத்தகங்களாக எழுதி வெளியிட்டும் உள்ளார்.
- விடுதலை நாளேடு,12.12.17

1 கருத்து: