ஞாயிறு, 5 ஜூலை, 2015

சேவைக்குக் கிடைத்த தேசிய விருது!


ஊசி போடுவது, மாத்திரைகளை நோயாளிகளுக்குத் தந்தனுப்புவது மட்டுமே தன் கடமை என்று நினைக்கவில்லை கல்பனா. அந்த உயரிய நினைப்புதான் அவருக்குக் குடியரசு தலைவர் கையால் விருது பெற்றுத் தந்திருக்கிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உதவி செவிலியர் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் கல்பனா சம்பத், கிராமத்து அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். சர்வதேச ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் விருதைச் சர்வதேசச் செவிலியர் நாளான மே 12ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பெற்றுக் கொண்டார். நாடு முழுவதும் மொத்தம் 35 செவிலியர் பணி யாளர்களுக்கு இந்த ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள பெரும்பாதி கிராமம்தான் கல்பனாவின் சொந்த ஊர். ஏழ்மையான குடும்பம். தந்தை பீடி சுற்றும் தொழில் செய்தார். என் அப்பா கம்யூனிஸத் தத்துவங்களைப் படிப்பார். அதனால் வீட்டில் பாரதியார், கம்யூனிச நூல்கள், ரஷ்யப் பதிப்பாக வெளிவந்த இலக்கிய நூல்கள் நிறைய இருக்கும். எனக்கு இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிகள்.
அனைவரையும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்க வைத்தார். 98ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி முடித்தபோது, ராணுவத்தில் உதவித் தொகையோடு செவிலியர் படிப்பு படிக்கலாம் என்ற செய்தியைப் பத்திரிகையில் பார்த்து விண்ணப்பித்தேன். அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் கொல்கத்தாவில் ராணுவத்தின் மூலம் நர்சிங் படித்தேன் என்று சொல்கிறார் கல்பனா.
கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவருக்குக் கொல்கத்தா போன்ற பெருநகரத்தில் தங்கிப் படிக்கும் தைரியத்தை அவருடைய பெற்றோர் தந்தனர். உதவித்தொகையுடன் படிப்பை முடித்து, ராணுவத்தில் லெப்டினென்ட் பொறுப்பில் பணியில் சேர்ந்தார். இமாச்சல பிரதேசத்தில் பதான் கோட்டில் பயிற்சி முடித்து, பணியைத் தொடங்கினார்.
பிறகு புனே, வெலிங்டன், கான்பூர் என்று அடுத் தடுத்துப் பணி மாறுதலும் பதவி உயர்வும் கிடைத்தன. இதற்கிடையே கல்பனாவுக்குத் திருமணமானது. பதினோரு ஆண்டுகள் ராணுவப் பணிக்குப் பிறகு 1993 இல் பணியிலிருந்து விலகினார். ஜிப்மரில் முன்னாள் ராணுவவீரர் ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தது.
ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பு கமிட்டி, சேவைத்தரம் குழு, விபத்துப் பாதுகாப்பு குழு, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செவிலியர் பணியில் இருக்கிறார் கல்பனா. சுனாமி பேரழிவு, தானே புயல் பாதிப்பு ஆகிய நாட்களில் பணியாற்றியது, வெளிமாநிலத்தவருக்குத் தமிழ் கற்றுத்தரும் பணி ஆகியவற்றுக்காக கல்பனாவுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.

விடுதலை,30.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக