மார்ச்சு 10 அன்னையார் பிறந்த நாள் சிந்தனை
அன்னை மணியம்மையார் அழைப்பு
கேரள மாநிலம் வைக்கத்தில் நடந்த வைக்கம் சத்தியாக்கிரகப் பொன் விழாவில், 26-.4.-1975 அன்று பெண்கள் மாநாட்டைத் திறந்து வைத்து அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரை இது. (விடுதலை 23.-5.-1975)
நான் எங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்லுவது உங்களில் பெரும்பாலானவர்களுக்குப் புரியாது. எனினும் உங்களில் பெரும் பாலானவர்களுக்குக் கூடியவரை புரியும் வண்ணமும், மனத்தில் பதியும் வண்ணமும் நிதானமாகவும், நிறுத்தியும் பேச முடிந்தவரை முயற்சிக்கிறேன். புரியாத சில விஷயங்களைப் பற்றி எல்லாம் எங்க ளோடு வந்துள்ள நண்பர் விளக்கி மொழிபெயர்த்துச் சொல்லுவார்.
தலைவர் அவர்களே! பெரியோர்களே! வைக்கம் சத்தியாக்கி ரகத்தில் அந்தக் காலத்தில் தந்தை பெரியார் அவர்களுடன் பங்கு கொண்டு தொண்டாற்றிய புதூர் நீலகண்டன் (நம்பூத்திரி) அவர்களே! உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியையும், வணக்கத் தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்று இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மிகவும் சிறப்பாகவே இருந்தன. இங்கு உரை யாற்றிய அம்மையார்கள் அனைவரும் தெளிந்த கருத்துடனேயே உரையாற்றினார்கள். இங்குப் பேசிய கருத்துகளில் பல எங்கள் கழகக் கருத்துகளுக்கு ஏற்றதாகவும் இருக்கின்றன. ஒரு சில எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் இருக்கின்றன.
அதனால் நமக்குள் எந்தவிதமான கருத்து வேற்றுமையும் இருக்கக் கூடாது என்பதுதான். ஏன் என்றால் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லுவதன் மூலம் அவரவர்களிடையே இருந்து வருகின்ற குறைகளை நீக்கிக் கொள்ளவும், ஆற்றிக் கொள்ளவும் அல்லது ஏற்றுக் கொள்ளவும் உரிமை இருக்கின்ற காரணத்தினால் அதுதான் முறையாகும். ஆகவே, இந்தக் கருத்துகள் உடன்பாடாக இருந்தாலும் இல்லை என்றாலும் அவரவர்களுடைய கொள்கைகளை எடுத்துச் சொல் வதற்கு அவரவர்களுக்கு உரிமை இருக்கிறது என்ற காரணத்தினால் இங்குச் சொன்னவைகளை நாங்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியுமோ, அவற்றை மிக மிகப் பெருந்தன்மையுடனும், மிகவும் கவுரவத்தோடும் ஏற்றுக் கொள்கின்றோம்.
எங்கள் கருத்துகளில் பெரும்பான்மையானவை உங்களுக்குப் பிடிக்காதவையாகவும் இருக்கலாம். பிடித்தமான சிலவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவும் மற்றவற்றைத் தள்ளிவிடவும் உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும் நான் முதலிலேயே உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் தந்தை பெரியார் அவர்கள் இந்த நாட்டில் செய்த தொண்டின் சிறப்பினைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். இங்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நினைவாக இப்போது ஒரு வார காலமாக வைக்கம் சத்தியாக்கிரகப் பொன்விழாவினைக் கொண்டாடுகின்றீர்கள்.
இந்த வைக்கம் சத்தியாக்கிரகத்தை நடத்துவதில் எங்கள் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்கள் முக்கியக் காரணமாக இருந்து வந்தவர் என்ற காரணத்தினால் அவர் இல்லாத நிலையிலும் எங்களை இந்தக் கொண்டாட்டத்தில் பங்குகொள்ள அழைத்துப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். எங்கள் தலைவரைத் தமிழ்நாட்டு மக்கள் தந்தையென்றும், பெரியார் என்றும் இன்னும் சொல்லப் போனால் இந்தச் சத்தியாக்கிரகம் காரணமாக வைக்கம் வீரர் என்றும் பெருமையாக அழைத்து மகிழ்வார்கள். உங்களுக்குப் பெரியார் என்றால் அவ்வளவாகப் புரியாது. அதனால்தான் நாயக்கர் என்றும், ஸ்ரீமான் ஈ.வி. இராமசாமி நாயக்கர் என்றும் அன்போடும், மரியாதை யோடும் அழைக்கின்றீர்கள்.
சாதி ஒழிய வேண்டும்
சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்ற ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். சாதிப் பெயரை உபயோகப்படுத்தக் கூடாது என்ற கொள்கையும் கொண்டவர்கள் நாங்கள். அப்படியிருக்க இங்கு ஈ.வி. இராமசாமி நாயக்கர் என்ற சாதிப் பெயரைப் போட்டு உள் ளீர்கள். அது குற்றம் என்று நான் கருதவில்லை; சொல்லவும் இல்லை; நாயக்கர் என்றுதான் அக்காலத்தில் அவரை மரியாதையாக அழைப் பார்கள். ஒரு காலத்திலே அப்படிக் குறிப்பிடுவதில் அவருக்குப் பெருமை இருந்தது. அதனால் மக்களுக்கு நன்றாகப் புரியும்படியான நிலையும் இருந்தது என்ற காரணத்தினாலும், இந்தப் பகுதிக்குத் தந்தை பெரியார் அவர்கள் இந்தச் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளில் அதிகம் வராத காரணத்தினாலும் பழைமையாகக் கூறி வந்த ஈ.வி. இராமசாமி நாயக்கர் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றீர்களே தவிர வேறில்லை. இதை நாங்களும் பெருமையாக எடுத்துக் கொள்கின்றோம். எனது உடல் நிலை நீண்ட நேரம் பேசுவதற்கு இடம் தராத காரணத்தினால்தான் எங்கள் கருத்துகளில் இரண்டொன்றை மட்டும் சுருக்கமாக எடுத்துச் சொல்ல விரும்புகின்றேன். எங்கள் இயக்கப் பொதுச் செயலாளர் திரு. வீரமணி அவர்கள் எங்கள் கருத்துகளைச் சற்று விளக்கமாக உங்களுக்கு எடுத்துச் சொல்லுவார். எனவே நானோ, எங்கள் பொதுச் செயலாளர் திரு. வீரமணி அவர்களோ பேசுகின்ற பொழுது நாயக்கர், ஈ.வி. இராமசாமி என்ற பதங்களை உபயோகப்படுத்தாமல் தலைவர் என்றோ, தந்தை பெரியார் என்றோ, அய்யா என்றோ தான் அழைப்போம். இனி அப்படிச் சொல்லுவதன் மூலம் தான் அந்தச் சொற்கள் உங்களுக்குத் தெளிவாக விளங்கும் என்றே கருதுகின்றேன்.
50 ஆண்டுகளுக்கு முன்.....
50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்ச்சியினை நாம் இன்று நினைவு கூருகின்றோம். அந்தக் காலத்தில் எப்படி எல்லாம் நாடு இருந்தது, சமுதாயக் கொடுமைகள் இருந்தன என்பதனை இன்றைக்கு எண்ணிப் பார்க்க நம்மால் இயலாது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் வந்து இருக்கக்கூடிய சகோதரர், சகோதரிகளில் வயது 50-க்கும் மேலானவர்கள் மிக மிகக் குறைவாகவே இருப்பார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு மிகவும் சொற்பமாகவே 50 ஆண்டுகளுக்கு மேலானவர்களைக் காண முடிகின்றதே தவிர, மற்றவர்கள் எல்லாம் குறைந்த வயதுடையவர்களும், இளைஞர் களுமே ஆவார்கள். அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியினை சுவார சியமாக - உற்சாகமாக எடுத்துச் சொல்லுகின்ற பொழுது கேட்கும் அவர்களுக்கு அவ்வளவு சுவாரசியமாக இருக்குமா என்று நம்மால் சொல்ல முடியாது. ஏன் என்றால் இந்த வைக்கம் கிளர்ச்சி மிகவும் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். சரித்திரத்தைப் படிப்பது போல ஏதோ ஒரு பொழுதுபோக்காக இன்றுள்ள இளை ஞர்களுக்கு அது மனத்தில் படுமே தவிர அன்று இருந்த உணர்ச்சி நிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் - நேரில் அன்று இருந்து பார்த்தவர்கள் போல் - பங்கு கொண்டவர்கள் போல் - நம்மால் சொல்லவும் முடியாது; சொன்னால் மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பக்குவமான நிலையிலும் இன்று இல்லை.
நாடும் வளர்ந்து இருக்கின்றது. மக்களுடைய அறிவும் வளர்ந்து இருக்கின்றது. அதுவும் அல்லாமல் அன்று சமுதாயத்தில் சாதியின் பெயரால் நடந்து வந்த கொடுமைகள்; ஒரு சாரார் தொட்டாலோ, பார்த்தாலோ மனிதன் தீட்டாகி விடுவான் என்ற நிலைகள்; ஒரு குறிப்பிட்ட சாதியினரைத் தவிர, மற்றவர்கள் கடவுளைத் தொட்டால் கடவுள் தீட்டாகிவிடும், இறந்துவிடும் என்ற நிலைகள்; சாதியின் பெயரால் ஒருவன் உயர்வாகவும், ஒருவன் தாழ்வாகவும் கருதப்படுகின்ற அந்த நிலைகள்; இவையெல்லாம் ஓரளவுக்கு மறைந்து மனிதர்கள் எல்லாம் அறிவு வளர்ச்சி அடைந்துவரும் இந்தக் காலத்தே 50 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயத்தில் இருந்து வந்த கொடுமைகளை எடுத்துச் சொல்லும்பொழுது ரொம்பச் சாதா ரணமாகத்தான் மனத்தில் படும் என்றாலும், நாம் அவற்றைச் சொல்லாமல் இருக்க முடியாது.
நம் முன்னோடிகள் அன்று எப்படி எல்லாம் கஷ்டப்பட்டுத் தொல்லைகள், கொடுமைகள் அனுபவித்து இன்று இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை எண்ணுகின்ற பொழுது நாம் இன்னும் பூரணமாய்ப் பக்குவம் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏதோ ஓரளவுக்குக் கொடுமைகள் ஒழிக்கப் பட்டன என்பது தவிர, வெகு நாளாக இருந்துவந்த கொடுமைகள், அனாச்சாரங்கள் பூரணமாய் ஒழிந்தபாடில்லை. இன்று சமுதாயத்தில் இழிந்தவர்கள் என்று கருதப்படுகின்றவர்கள் இருக்கின்றார்கள். சாதியின் பெயரால் உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் இருக்கின்றார்கள். இந்த இரண்டும் இருக்கின்ற வரையில் மனித சமுதாயத்தில் நாம் எத்தகைய முன்னேற்றத்தையும் காணவே முடியாது.
கொள்கைகள் இரண்டு...
எங்கள் இயக்கத்தின் முக்கிய கொள்கைகள் இரண்டு. ஒன்று சாதி முறை அடியோடு ஒழிக்கப்பட்டு மக்கள் எல்லாம் சமத்துவம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பது. மற்றொன்று, பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு ஆண்களைப் போலவே சகல உரிமைகளையும் ஆணுக்குச் சமமாக அடைய வேண்டும் என்பது. இந்த இரண்டும்தான் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் இரண்டு கண்களைப் போன்ற முக்கியமான கொள்கைகள். இதையேதான் தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாள் முழுதும் எடுத்துச் சொல்லி அதற்காகப் பாடுபட்டும் வந்தார்கள். பெரியார் அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார்கள். அவர் இயற்கை எய்திய காலம் வரைக்கும் இந்தக் கொள்கையினையே மக்களிடம் வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தும் வந்தவர்கள் ஆவார்.
அப்படிப்பட்ட கொள்கையினை நாம் இன்று கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தந்தை பெரியார் அவர்கள் மறைவுக்குப் பிறகும் அந்த இயக்கத்தினர்களாகிய நாங்களும், அந்தக் கொள்கையினையே நாட்டுமக்களிடம் எடுத்துச் சொல்லி வருகின்றோம். அதன் காரணமாகவேதான் எங்களை இந்த விழா விற்கு அழைத்தபோதுகூடப் பெரியார் அவர்கள் இல்லாத நிலையில் நாங்கள் கலந்து கொள்கின்றோம் என்றால், அந்தக் கொள்கைக்கு ஒரு மதிப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே ஆகும்.
தந்தை பெரியார் அவர்கள் அந்தக் காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பகுதி மக்களின் சமுதாய இழிவினைப் போக்கப் பாடுபட்டிருக்கிறார்கள்; பிரச்சாரம் செய்து அவர்களின் மனத்தை மாற்றி இவ்வளவு பெரிய காரியத்தைச் சாதித்தார்கள். அந்த இடத்தை நாமும் பார்த்து இன்னும் இந்த மக்களுக்கு நம்மாலே தொண்டு செய்ய முடியுமா? அல்லது இந்த மக்கள் மனநிலை எவ்வாறு இருக்கின்றது? மாற்றம் அடைந்து இருக்கின்றதா? அல்லது பழைய நிலையில்தான் இருக்கின்றதா? என்பதை எல்லாம் தெரிந்து கொள் வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படும் என்று கருதித்தான் வந்தோம், பார்த்தோம், மகிழ்ந்தோம்.
இங்கு கலந்துகொண்ட சகோதரிகள் அனைவரும் வெகு அழகாகக் கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். எங்கள் நாட்டிலே இருக்கின்ற பெண்கள்கூட இவ்வளவு திறமையாக இருப்பார்களா என்பது சந்தேகம்தான். எங்கள் நாட்டைக் குறையாகச் சொல்லு கின்றேன் என்று கருத வேண்டாம். காரணம், இங்குள்ள அளவுக்குப் பெண்கள் சமுதாயம் கல்வி, அறிவு, துணிச்சல் உள்ளவர்களாக அங்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த நாட்டில் மட்டும் நீங்கள் ஒரு விதத்தில் எல்லாவற்றிலும் முன்னேறி இருக்கின்றீர்கள். ஆனால், சமுதாயத் துறையில் மட்டும் மாற்றங்களை வரவேற்காமல் கொஞ்சம் விடாப்பிடியாகவே இருக் கின்றீர்கள். கேரள மக்கள் அதிலும் பெரும்பாலானவர்கள் நன்றாகக் கல்வி பயின்றவர்கள்.
எவ்வளவோ அறிவு பெற்று இருக்கின்றீர்கள். மற்ற மாநிலத் தினர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கேரள நாட்டுப் பெண்களா கிய உங்களின் அறிவிலும், திறனிலும், மற்ற எல்லாக் காரியங்களிலும் உங்களை மிஞ்ச ஒருவராலும் முடியாது. அந்த அளவுக்கு இருந்தும் இன்னும் உங்களிடையே உள்ள மூடநம்பிக்கைகள் - சாதியின் பெயரில் இருந்துவரும் பிடிப்புகள் தளர்ச்சி காணாமலே இருக் கின்றன. அதிலும் நீங்கள் கொடுமைகளை மிகவும் அனுபவித்த வர்கள். எங்கள் நாட்டில் அவ்வளவு அதிகமாகக் கொடுமைகள் இல்லை. அப்படி இருந்தும்கூட நீங்கள் அந்தப் பிடியில் இருந்து நீங்கிக் கொள்ள முற்படவில்லை என்றுதான் கூற முடியும்.
இந்து மதம் ஏற்கிறதா?
இன்னும் சில விஷயங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவற்றில் இரண்டொன்றை மட்டும் சுருக்கமாகக் கூறுகின்றேன். ஆணும், பெண்ணும் சமம் என்பது எங்கள் இயக்கத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் அவர்கள் ஆணும், பெண்ணும் உங்கள் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், ஸ்திரீயும் - புருஷனும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆதாரங்களைக் காட்டி அப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி வருவார்கள்.
நமது இந்து சமுதாயத்தில் அத்தகைய முறை ஏற்றுக் கொள்ளப் படுவதும் இல்லை; கைக்கொள்ளப்படுவதும் இல்லை; ஒப்புக் கொள்ளப்படுவதும் இல்லை. எனக்கு முன்பு பேசிய தோழர் சங்கர நாராயணன்கூட சொன்னார்; சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் சமமாக இருக்க முடியாது என்று. அது மிக மிகத் தவறு. அப்படி ஒரு நிலை இனியும் இந்த நாட்டில் இருக்கவே முடியாது - இருக்கவும் கூடாது. எனவே, சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் சம அந்தஸ்து உடையவர்களாக எல்லாத் துறைகளிலும் ஆக வேண்டும். அதற் காகப் பெண்கள் சமுதாயம் பாடுபட வேண்டும்.
இந்த முயற்சிக்குப் பெண்கள்தான் முழுமூச்சாகப் பாடுபட வேண்டும். ஆண்கள் பாடுபடுவார்கள் என்று நினைத்தால், அதைவிட மிக மிகப் பைத்தியக்காரத்தனம் வேறு இருக்க முடியாது. நீங்கள் எல்லாம் படித்த தாய்மார்கள். அறிவுள்ள பெண்மணிகள். இந்த உபகண்டத்திலேயே பெண்ணடிமை போக்கவும், பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் யார் பாடுபட்டார்கள் என்பதை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் விடுதலைக்காக எவ்வளவோ பாடுபட்டார்கள். பெண்கள் அடிமை நீக்கத்திற்காகவே சுயமரியாதைத் திருமணம் என்ற முறையினைப் புகுத்தி தமிழ்நாட்டில் வைதீக முறைகளிலே நடைபெற்ற திருமணங்களை மதிப்பிழக்கச் செய்து, நாடெங்கும் சீர்திருத்தத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் பரவ வழி வகைகளைச் செய்தார்.
இதன் மூலமாகப் பெண்கள் ஓரளவு விழிப்படைந்து உள் ளார்கள். அவர்களுக்கும் ஓரளவு உரிமைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண் என்றால் எஜமானன், பெண் என்றால் அடிமை - வேலைக்காரி என்ற எண்ணம் தகர்க்கப்பட்டு வருகின்றது. தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு இடையறாது பரப்பப் பட்டு வந்த அந்தச் சுயமரியாதைத் திருமண முறையானது மக்களில் பெரும்பாலானவர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டு இன்று அது சட்ட பூர்வமாகவும் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நடைபெற்று வரு கின்றது. அவை எல்லாம் நான் முன்பு சொன்னதைப்போலத் தந்தை பெரியார் அவர்களின் இடையறாத தொண்டின் மூலம், பிரச்சாரத்தின் மூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை.
சிலர் சொல்லுகின்றார்கள்; சோஷியல் சர்வீஸ் என்று. சோஷியல் சர்வீஸ் என்பது சாதாரணமாக நம்மவர்கள் மத்தியில் என்ன என்றால் சமுதாயத்திற்கு உதவி செய்வது என்பதுதான். அதாவது தாழ்த்தப்பட்டுக் கிடக்கின்ற மக்கள் வசிக்கின்ற இடங்களுக்குச் சென்று அந்த இடங்களை எல்லாம் சுத்தம் செய்வதும், அந்தத் தாய் மார்களுக்கும், குழந்தைகளுக்கும் சுத்தத்தைப் பற்றி எல்லாம் எடுத் துச் சொல்வதும், கல்வியின் நன்மையினைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்வதும், அந்த மக்களுக்கும், குழந்தைகளுக்கும் சோப்பு, எண்ணெய், சீயக்காய் முதலியவற்றைக் கொடுத்து அவர்களை இரண்டு நாளைக்கு சுத்தமாக இருக்கச் செய்துவிட்டு அதனைப் பெரிதாகப் படம் பிடித்துப் பத்திரிகையில் போட்டு நாங்கள்தான் பெரிய சோஷியல் சர்வீஸ் செய்தோம் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும்தான் இந்த சோஷியல் சர்வீஸ் என்ற பதம் உபயோ கப்படுகின்றதே தவிர, மற்றப்படி மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்கின்ற முறையில் அந்தப் பதம் உபயோகப்படுவதே இல்லை.
பெரியார் சொன்னது சமூகப் புரட்சியே!
தந்தை பெரியார் அவர்கள் அப்படிப்பட்ட நிலையை சோஷியல் சர்வீஸ் என்று சொல்லாமல், சோஷியல் ரெவல்யூஷன்; அதாவது சமுதாயத்தை ஒரு புரட்சிகரமாக மாற்றி அமைக்கவேண்டும் என்று சொன்னார்கள்; சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிச் சொல்லுவதற்குப் பல வேறுபாடுகள், கருத்துகள் உண்டு. நான் முன்னே சொன்ன அந்த நிகழ்ச்சியை (சோஷியல் சர்வீஸ் என்ற பெயரால் செய்யப்படுகின்ற காரியத்தை) ஒருநாளும் தந்தை பெரியார் அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
அது தானாகவே, மனிதனுக்கு அறிவு வந்தால் - கல்வியைக் கொடுத்தால் - தக்கபடி நாம் அவர்களைப் பக்குவப்படுத்தி விட்டால் - அது தானாகவே இயற்கையாகவே நடக்க வேண்டிய நிகழ்ச்சியே தவிர, ஒருவர் போய் அவர்களைக் கழுவிக் குளிப்பாட்டி, எண்ணெய் தடவிச் சீவிவிட்டுச் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவதன் மூலம் ஒரு சமுதாயத்தைத் திருத்திவிட முடியாது. மக்கள் மனத்தில் இருக்கின்ற குறைபாடுகளை நீக்கி அறிவு வளர்ச்சி யினை அளித்து உண்மையான சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றால், சாதியின் பெயரால் - மதத்தின் பெயரால் - கடவுளின் பெயரால் அவர்களுக்கு இருந்து வருகின்ற இழிவுகள், கொடுமைகள் எல்லாம் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் மக் களுக்கு விளக்கம் கொடுத்து அவர்கள் புரிந்துகொள்ளும்படி விழிப் படையும்படி செய்ய வேண்டும். இத்தகைய தொண்டினைத்தான் தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்கள். அப்படிப்பட்ட காரியம் தமிழ்நாட்டில் நடக்கின்ற அளவுக்கு இங்கெல்லாம் நாம் பார்க்க முடியாது. இங்கு ஓர் அளவுக்குத் திருந்தி இருக்கின்றீர்கள். அதிலும் பெண்கள் சமுதாயத்தைப் பொறுத்தவரையிலே அதிகமான சீர்திருத்தத்தை இங்குப் புகுத்த வேண்டிய அவசியம் இல்லை. உங்களைப் பார்க்கும்போது அது நன்றாகத் தெரிகின்றது. எங்கள் தமிழகத்திலே, பெண்கள் இப்படிச் சாதாரணமாக, சிம்பிளாக ஒரு நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள். ஆனால், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ, அப்படிச் சாதாரணமாக இந்த நாட்டில் பெண்கள் இருக்கின்றார்கள். ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தி யாசம் இல்லாத வகையில்கூடப் பெண்கள் உடை அணிய வேண் டும் என்பது எங்களுடைய கொள்கை. உங்கள் கேரள நாட்டில் அப்படித்தான் இருந்து வருகின்றார்கள். ஆனால், இப்போது சிறிது மாறிக்கொண்டும் வருகின்றார்கள். ஆகவே, உங்கள் கேரள நாட்டுப் பெண்கள் எங்கள் நாட்டுப் பெண்களைப்போல் அல்லாமல் பொரு ளாதாரத்திலும், கல்வி அறிவிலும் மிகவும் முன்னேறி இருக் கின்றார்கள். பொருளாதாரச் சீர்திருத்தமானது வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று முன்பு பேசிய அம்மையார் அவர்கள் குறிப் பிட்டார்கள். மற்றக் கருத்துகளை எல்லாம் சொல்லும்பொழுது மிகவும் இனிமையாக இருந்தது; நியாயமாகவும் இருந்தது; ஒப்புக் கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. இந்தக் கருத்தினைச் சொல்லும் போது மட்டும் அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத் தாகத் தான் இருந்தது.
பொருளாதார மாற்றம் மட்டும் போதுமா?
அதற்குக் காரணம் இன்னது என்று நான் விளக்கம் கூற விரும்பாவிட்டாலும், அம்மையாரின் கருத்து அது. அவர்களுடைய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் (கம்யூனிஸ்ட்கள்) அப்படித்தான் சொல்லுவது வழக்கம். இந்த முறையில்தான் அவர்கள் பேசி இருக்கின்றார்களே தவிர, வேறு இல்லை. பொருளாதாரச் சுதந்திரம் வந்துவிட்டால் நம்முடைய நிலை எல்லாம் எப்படி மாறிவிடும் என்று சொல்ல முடியும்? இன்று இதே நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். எப்படி வைக்கம் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது? பொருளா தாரத்திலே மிகவும் பணக்காரராக இருந்த நமது வக்கீல் மாதவன் அவர்களால் தொடங்கப்பட்டதுதான் வைக்கம் சத்தியாக்கிரகம். இவ்வளவு பெரிய அளவுக்கு ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்ச் சியாக அது அமைந்துவிட்டது.
மாதவன் அவர்கள் மிகவும் படித்தவர்; பெரிய பணக்காரக் குடும் பத்தில் பிறந்தவர்தான். ஆனால், தாழ்த்தப்பட்டவர்; ஈழவ சமுதாயத் தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் எவ்வளவு பணக்காரராக, படிப்பாளியாக இருந்தபோதிலும் சமுதாயத்தில் முன்னதாக வைத்து அன்று கருதப்படவே இல்லை. இதன் காரணமாக ஏற்பட்டதுதானே வைக்கம் சத்தியாக்கிரகமே. இதனை ஒரு சிறு உதாரணத்துக்காகச் சொல்ல வந்தேனே தவிர, மற்றப்படி வேறில்லை.
நாம் எப்படித்தான் பொருளாதாரத்தில் உயர்ந்த போதிலும் நமது இழிவு மாறவே மாறாது. நமது இழிவுக்கும், மடமைக்கும் காரணமான கடவுள், மதம், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள வற்றை மாற்றிக் கொண்டால் ஒழிய, நாம் உயர்வு அடையவே முடியாது. ஒருவன் சமுதாயத்தில் உயர்ந்தவனாகவும், ஒருவன் தாழ்ந்தவனாகவும் இருக்கின்றவரையில் மனித சமுதாயம் எப்படிப் பேதமற்று உயர்வடைய முடியும்? மனுதர்ம சாஸ்திரமே இதற்கு இடம் கொடுக்காது. பெண்களைப் பற்றிக்கூடச் சொன்னார்கள். மனுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக எழுதி வைத்து இருக்கின்றார்கள் என்பது பற்றி உங்களுக்கு இரண்டு நிகழ்ச்சிகளை மட்டும் படித்துக் காட்ட விரும்புகின்றேன்.
நான் முதலிலேயே குறிப்பிட்டதுபோல நமது உரிமைக்காக - நமது விடுதலைக்காக - நாம்தான் முன்வந்து பாடுபட வேண்டும். நாம் தீவிர முயற்சி எடுத்துக்கொண்டு நமது விடுதலைக்கும், முன் னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். இன்னும் அரசியல் துறையினை எடுத்துக் கொண்டாலும் சரி, பெண்கள் எல்லாத் துறைகளிலும் சமபங்கு பெற வேண்டும். இன்றைக்கு அரசியல்வாதிகளாகட்டும், பெண்கள் தயவு இல்லாமல் அரசியல் வாழ்வை வாழவே முடியாது. இன்றைக்குச் சட்டசபைக்கு ஆண்கள் செல்ல வேண்டுமானாலும், மற்ற மற்றப் பதவிகளுக்குப் போக வேண்டுமானாலும், ஆண்களுக்கு இருக்கின்ற அளவுக்குச் சரிசமமான உரிமை பெண்களுக்கும் உண்டு. பெண்களும் ஓட்டுப் போட்டால்தான் ஆண்கள் சட்டசபைக் குச் செல்ல முடியுமே தவிர, ஆண்கள் மட்டும் ஓட்டுப் போட்டுக் கொண்டு தங்கள் ஓட்டு மூலம் சட்டசபைக்குச் செல்ல முடியாது. மற்றும் தேர்தல் சமயத்தில் பெண்கள் ஓட்டினை வாங்க அரசியல் வாதிகள் வீடுவீடாக ஏறி இறங்குகின்றார்கள்; கெஞ்சுகின்றார்கள். எப்படியாவது ஓட்டு வேட்டையாடிச் சட்டசபைக்கோ, பார்லிமென் டுக்கோ சென்று விடுகின்றார்கள். மக்கள் தொகையில் சமமாக உள்ள பெண்கள் சமுதாயத்துக்குச் சம அந்தஸ்து அளிக்க முன்வருகின் றார்களா என்றால் இல்லை. மாநாட்டில் உரையாற்றிய ரோசம்மா பொன்னூஸ் அம்மையார் அவர்கள் கூடச் சொன்னார்கள்? இந்தக் கேரளச் சட்டசபையில் இரண்டே பெண்கள்தாம் உறுப்பினர்களாக உள்ளனர் என்று இது நமக்கு எவ்வளவு கேவலம்? படித்த மக்கள் அதிகமாக உள்ள கேரளத்தில் - அதுவும் படித்த பெண்கள் மிகுதி யாக உள்ள கேரளத்தில் - இரண்டு பெண்கள்தான் சட்டசபையில் இருக்கின்றார்கள் என்றால், பெண்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக அரசியல்வாதிகள் மதிக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்!
சட்டசபைகளிலும், பதவிகளிலும் 100-க்கு 50 விகிதம் பெண் களுக்குக் கிடைக்க வேண்டும் என்று பெண்கள் போராட வேண்டும். இன்றைக்குச் சமுதாயத்தில் ஒரு சாராருக்கு மட்டும் கற்பைப் பற்றி வலியுறுத்தப்படுகின்றது. அது தவறு. இருசாராருக்கும் இருந்தால்தான் நாட்டிலே நல்ல நிலையில் வாழ முடியும். ஆண் எப்படி வேண்டு மானாலும் நடக்கலாம். எத்தனை பேர்களுடன் வேண்டுமானாலும் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம். ஆனால், பெண்கள் மட்டும் ஒரு புருஷனுடன் மட்டும்தான் வாழ வேண்டும் என்றால் என்ன நியாயமான நீதி இது? இன்றைக்கு நாட்டிலே எத்தனையோ குழந்தைகள் அனாதைகள் என்ற பெயரால் இருக்கின்றார்கள். இது யாருடைய குற்றம்? புருஷனுடைய குற்றமே தவிர, பெண்கள் குற்றம் என்று சொல்ல முடியாது. சமுதாயத்தின் குற்றம் அல்லவா? நான்கூட இப்போது என்னுடன் இரண்டு அனாதைக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றேன். இவர்களுக்கு யார் தகப்பன்? யார் தாய்? என்று தெரியாத ஒரு நிலை.
இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் அரசாங்கமாவது ஏதாவது பாதுகாப்புக் கொடுக்கின்றதா என்றால் அதுவும் இல்லை. ஏமாந்த பெண்கள் யாராவது வீதியிலே திரிவார்களேயானால், அவர்களை மட்டும் பிடித்து ஜெயிலில் தள்ளித் தண்டனை கொடுத்துக் குழந் தைகளை யாரிடமாவது கொடுத்து விடுகின்றார்கள். சிறைவாசம் முடிந்தவுடன் சத்தம் இல்லாமல் வெளியில் மீண்டும் வந்து விடு கின்றார்களே தவிர, மூலகாரணமாக இருந்த ஆணைக் கண்டு பிடித்துத் தண்டிப்பதோ அல்லது அதற்குப் பரிகாரம் தேடுவதோ இல்லை. இப்படிப்பட்டவர்கள் இருவரையும் கண்டுபிடித்து இருவ ருக்கும் தண்டனை அளிக்க வேண்டும் அல்லது இரண்டு பேர் களையும் ஒன்று சேர்த்து சமுதாயத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக ஆக்கவேண்டும். இது ஒரு நல்ல அரசின் கடமையாகும். இத்தகைய கொடுமைகளைச் சமுதாயத்தில் வளரவிடக் கூடாது.
உண்மையான தொண்டு என்பது எது?
இந்தக் காரியங்களை எல்லாம் எங்கள் இயக்கம் செய்து வரு கின்றது. அதுதான் சமுதாய சீர்திருத்தத் தொண்டு ஆகும். இரண்டு நாள்களாக உங்கள் நகரில் தங்கி இருக்கும்போது பல தோழர்கள் வந்து, உங்கள் இயக்கத் தொண்டு என்ன? என்ன என்ன செய்து வருகின்றீர்கள்? சோஷியல் சர்வீஸ், சமுதாயத் தொண்டு என்ன என்ன செய்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். பள்ளிக் கூடங்களை நடத்துவதோ; குழந்தைகளை எடுத்து வளர்ப்பதோ அது மட்டும் அல்ல சமுதாயத் தொண்டு. சமுதாயத்தில் இருக்கின்ற எல்லாவித மான குறைபாடுகளையும், கொடுமைகளையும் களைவதுதான் எங்களது முழுமையான சமுதாயத் தொண்டே தவிர, அந்தச் சமு தாயத் தொண்டின் ஓர் அங்கமாகத்தான் பள்ளிக்கூடம் நடத்துவதும், அனாதைக் குழந்தைகளைப் பாதுகாப்பதும் ஆகிய காரியத்தைச் செய்து வருகின்றோமே தவிர, வேறு இல்லை. இன்றைக்கு சோஷியல் சர்வீஸ், சமுதாயத் தொண்டு என்ற பெயரால் அனேகர் பள்ளிக்கூடம் நடத்துவதும், அனாதைக் குழந்தை விடுதி நடத்து வதும் ஆகிய காரியங்களைச் செய்கின்றார்கள். அது அனேகருக்கு வருவாய்க்கு உரிய செயலாகக்கூட அமைந்து விடுகின்றது. அத னால் பலர் அந்தக் காரியத்தில் இறங்குகின்றார்கள். ஆனால், அது உண்மையான சமுதாயத் தொண்டு ஆகாது.
ஆகவே, நாம் செய்கின்ற பணிகள் மனித சமுதாய முன்னேற் றத்துக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அடுத்தாற்போல, நான் முன்பு குறிப்பிட்டதுபோல் 50 சதவிகிதம் நமக்குப் பதவிகளிலே, உத்தியோகங்களிலே அரசாங்கம் ரிசர்வேஷன் செய்ய வேண்டும். மற்றும் பெண்கள் இன்றைக்கு ஆடம்பரத்தில் ரொம்பவும் மோகமாக இருக்கின்றார்கள். அதனைத் தவிர்க்க வேண்டும். உடுக்கும் துணி, அணியும் நகை முதலியவற்றில் பெண்கள் பைத்தியமாக இருக்கின் றார்கள். இங்கு அவைகள் கொஞ்சம் குறைவு. நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது பல உள்ளன. உங்களது உணவு, உடை முதலியவற்றை மற்ற நாட்டு மக்கள் மிகவும் பின்பற்ற வேண்டும். உங்கள் உணவு மிகவும் எளிய உணவு; உங்களுடைய உடை மிகவும் ஆடம்பரம் இல்லாத சாதாரண உடை. அதேநேரத்தில் மிகவும் சுத்த மான உடை. ஆடம்பரம் அற்ற வாழ்வு. இத்தகைய பழக்கங்களை மற்றப் பகுதி மக்களும் பின்பற்றினால்கூட நாம் ஓரளவுக்கு முன்னேறி விடலாம்.
எங்கள் நாட்டு வழக்கங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டொன்றைச் சொல்லுகின்றேன். படித்த பெண்கள் சமுதாயத்துக்குப் பயன்படாதவர்களாகவே இருக் கின்றார்கள். அவர்கள் படித்தவுடனே தங்கள் குடும்பம், பிள்ளை - குட்டி, இவைகளில் கவனம் செலுத்துகின்றார்கள். தங்கள் குடும்ப நலனைப் பற்றியே அக்கறை செலுத்துகின்றார்களே ஒழிய, சமு தாயத்துக்குப் பயன்படுவதே இல்லை. படித்த பெண்கள் மக்கள் சமுதாயத் தொண்டுக்குப் பயன்பட வேண்டும். குடும்பத்தில் வீட்டு வேலை செய்பவர்களாக மட்டும் இருந்துவிட்டால் போதாது. அது சாதாரணமாக எல்லோரும் செய்யக்கூடிய வேலை. சமையல்கூட ஆண்கள்தான் நன்றாகச் சமைக்கிறார்கள். சாஸ்திரத்தில் கூட நல்ல சமையலுக்கு நளபாகம் என்றுதான் பெயர் கொடுக்கப்பட்டு உள்ளதே ஒழிய, பெண்களைக் குறிக்கும்படி இல்லை. எனவே, பெண்களை அடிமையாக வைத்துக் கொள்வதற்குச் சமையல் காரியாக வைத்துள்ளார்களே தவிர வேறு இல்லை. அதனால் அது கேவலம் என்று நான் கூறவில்லை. அந்தத் தொழில் ஒரு மனித சமுதாயத்தில் பெண்களுக்கு மட்டும்தான் உரிய தொழில் என்று இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட முறைகளைப் பற்றி எல்லாம் சிந்திக்க வேண்டும். சிந்தித்து ஒழிக்கவும் முற்பட வேண்டும்.
மனு தர்மம் என்ன சொல்லுகிறது?
அந்தக் காலத்தில் வேண்டுமானால் மனுதர்மத்தைக் கடவுளின் வாக்காக எடுத்துக் கொண்டு மதித்தோம். ஏன் என்றால் சாஸ்திரத்திலே அப்படிச் சொல்லி இருக்கின்றபோது - கடவுளே அப்படிச் சொல்லி இருக்கின்றபோது - மதமே அப்படிச் சொல்லி இருக்கின்றபோது - அதை மீறி நடக்கக் கூடாது என்கிற பயம். அவ்வளவாக அறிவு நமக்கு இல்லாத ஒரு காலத்திலே அதனை நாம் ஒத்துக்கொண்டு அடிமையாக இருந்து வந்தோம். இன்று நாம் தெளிவு பெற்ற மக்களாக ஆகிவிட்டோம். மற்ற நாடுகளைப் பார்க்கும் நாமும் மற்ற நாட்டு மக்களைப் போல இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். எப்படி எல்லாம் நாம் முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதற்கான முயற்சிகளில் எல்லாம் ஈடுபட்டு வருகின்றோம். இப்படி இருக்கச் சாஸ்திரத்தில் - மனுதர்மத்தில் பெண்களை எவ்வளவு கேவலமாக எழுதி வைத்திருக்கின்றார்கள். இங்கு முன்பு பேசிய திரு. சங்கரநாரயாணன் அவர்கள் பேசினார். மனுதர்மத்தில் கூறப்படுகின்றது: கணவன் எவ்வளவு துராச்சாரம் உடையவனாக இருந்தாலும், அன்னிய ஸ்திரி லோலனாக இருந்தாலும், அதாவது பல பெண்கள் இடத்திலே அவன் சம்பந்தம் வைத்து இருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையானவள் அவனைத் தெய்வத்தைப்போல் பூசிக்க வேண்டியது.
இன்றைக்கு எந்தப் பெண்ணாவது இப்படிப்பட்ட புருஷனோடு வாழ்வதற்கு மனம் ஒப்புவாளா? என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இதுதான் மனுதர்ம சாஸ்திரத்தில் எழுதப்பட்டு இருக்கின்ற முறை. அதனை ஒரு காலத்தில் நமக்கு மனம் ஒப்பினாலும், ஒப்பாவிட்டாலும் நம்மைக் கற்பு தவறியவள்; பதிவிராதத்தன்மை அற்றவள்; துர்க்குணம் உடையவள்என்று எங்கு சொல்லி விடுவார்களோ என்ற ஒரு பயத்தின் காரணமாகத் தொல்லைகளை எல்லாம் - கொடுமைகளை எல்லாம் - ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காலமும் உண்டு. இப்படிப்பட்ட ஒரு பிரச்சினையினை எந்த ஸ்திரியும் இந்தக் காலத்தில் ஒப்புக்கொள்ளவே மாட்டாள். நான் மேலே கூறியது மனுதர்மத்தில் அத்தியாயம் 5, ஸ்லோகம் 154, மனுதர்மத்தில் பார்த்துக் கொள்ளலாம். அடுத்தாற்போல இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அதே மனுதர்மத்தில் சொல்லப்படுகின்றது: பால்யத்தில் பெண்ணானவள் தகப்பன் ஆக்கினையிலும், யவ்வனத்தில் புருஷனுடைய ஆக்கினையிலும், கணவன் இறந்த பின்னால் பிள்ளைகளுடைய ஆக்கினையிலும் பெண்கள் இருக்க வேண்டியதே அல்லாமல் தனது சுவாதீனமாக ஒருபொழுதும் இருக்கக் கூடாது என்றால் நம்மை என்ன மரக்கட்டைகள் அல்லது கற்கள் என்று நினைத்துக் கொண்டு இப்படிக் கூறப்பட்டு இருக்கின்றதா? நம்மால் ஒன்றும் செய்ய முடியாது; நமக்கு அறிவே இல்லை என்ற எண்ணம் தவிர, நம்மைப் பற்றி எவ்வளவு கேவலமாகச் சாஸ்திரங்கள் என்ற பெயரில் கூறப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சாஸ்திரங்களைப் பெண்கள் ஒருபோதும் மதிக்கவே கூடாது; ஒழித்துக்கட்ட முன்வர வேண்டும். குழந்தைகள் தாய் இல்லாமல் இருக்க முடியாது; தாய்மை அடைவது பெண்களுக்குத்தான் உண்டு. இந்தக் காலத்தில் இந்த வார்த்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. இது விஞ்ஞானக் காலம் விஞ்ஞான அறிவு எவ்வளவோ வளர்ந்து உள்ளது. உலகில் இன்று குழந்தைக்குத் தாயும் வேண்டியது இல்லை; தகப்பனும் வேண்டியது இல்லை. தாயோ, தந்தையோ இல்லாத குழந்தைகள் பெறுவதற்கு டெஸ்ட் ட்யூப் மூலம் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ள காலத்தில் நாம் இன்னும் காட்டுமிராண்டிக் காலத்தில் இருந்து விடுபடாமல் இருந்து வருகின்றோம்.
-விடுதலை,5.3.17