வெள்ளி, 18 மே, 2018

வானில் “அனிதா” துணைக்கோள் தமிழக மாணவி சாதனைகைக்குள் அடங்கும் “கலாம்” துணைக்கோளைத் தொடர்ந்து  இதோ  “அனிதா” துணைக் கோள் - உருவாக்கி யிருப்பவர் வில்லெட் ஓவியா. திருச்சி ஆர். எஸ். கே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி. வயது பதினேழு.

பிளஸ் டூ தேர்வுகள் எழுதிவிட்டு காத்திருக்கும் வில்லெட் ஓவியா, தான் உருவாக்கிய துணைக் கோள் பற்றி கூறியதாவது:

“சில ஆண்டுகளுக்கு முன், விவசாயத்திற்கு நவீன முறையில் சிக்கனமாக நீர்ப்பாசனம் எப்படி செய்யலாம் என்பது குறித்த திட்டத்தை டாக்டர் கலாம் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை கலாம் சார் பாராட்டினார். தூர்தர்ஷன் பொதிகை சானலில் “ஏழாம் அறிவு’ என்ற அறிவியல் போட்டித் தொடர் நடைபெற்றது. அதில் நானும் பங்கு பெற்றேன். நிகழ்ச்சியின் முடிவில் முதல் ஏழு பேர்களில் ஒருத்தியாக என்னால் வர முடிந்தது . அந்த நிகழ்ச்சிதான் என்னை துணைக் கோள் குறித்து சிந்திக்கச் செய்தது. அதன் காரணமாக மின்னணுவியல், மின்னியல் தொடர்பாக படிக்க ஆரம்பித்தேன்.

சுற்றுப்புறச் சூழலால் காற்றில் மாசு நாளுக்கு நாள் அதிகமாகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுகள் அதிகமாவதால் பல நோய்க்கு காரணம் தெரியாமலேயே இரையாகிறோம் . “காற்றில் மாசுகள்’ குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த துணைக்கோளை வடிவமைத்தேன். பூமியைச் சுற்றியிருக்கும் வாயு மண்டலம் பூமி வெப்பம் அடைவதால் எப்படியெல்லாம் மாற்றம் அடைகிறது... தாக்கத்திற்கு உள்ளாகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு துணைக் கோள் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன். வாயு மண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்களின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை அறிய துணைக்கோள் உதவும். “நீட்’ தேர்வு காரணமாக உயிரிழந்த அனிதாவின் நினைவாக எனது துணைக் கோளுக்கு “அனிதா - சாட்” என்று பெயரிட்டேன்.

இந்த துணைக்கோளைத் தயாரிக்க மூன்று ஆண்டுகள் பிடித்தது. “அனிதா’ துணைக்கோள் ஆறு அங்குல நீளம், அகலம், உயரம் கொண்டு கன சதுர வடிவில் இருக்கும். எடை சுமார் நானூறு கிராம். இந்த துணைக் கோளைத் தயாரிப்பதில் எல்லா வகையிலும் உதவியவர் அக்னீஷ்வர் ஜெயப்ரகாஷ். சென்னை மற்றும் “அக்னி ஃபவுண் டேஷன்” அமைப்புகளின் தலைவர். துணைக்கோளுக்கு தேவையான பாகங்களை வாங்கவும், அதை எப்படி கையாள வேண்டும் என்பதை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் உதவியது.

இந்த துணைக் கோளை கூம்பு வடிவில் இருக்கும் கருவியில் வைக்கப் பட்டு ஹீலியம் பலூன் மூலம் பறக்க விடப்படும். இந்த நிகழ்வு வரும் மே 6ஆம் தேதி மெக்சிகோவில் நடை பெற்றது.

இந்த துணைக் கோளை உருவாக்க சுமார் ஒன்றே கால் லட்சம் செலவானது. அதனையும், துணைக் கோள் விண்வெளியில் செலுத்தப்படும் செலவையும் அக்னீஷ் வர் ஜெயப்ரகாஷ் சார் ஏற்றுக் கொண்டுள்ளார்.

புவியிலிருந்து வான் நோக்கி சுமார் அய்ம்பது கி.மீ தூரம் வரை வாயு அல்லது வளி மண்டலம் பரவியுள்ளது. துணைக் கோளில் வளி மண்டலத்தின் வெப்பம், அங்கி ருக்கும் காற்று அழுத்தம், மண்டலத்தில் (பூமியிலிருந்து சுமார் பதினைந்து கி. மீ தூரத்தில்) குடி கொண்டிருக்கும் வாயுக்கள், அதன் அளவு, அங்கே காற்றின் தூய்மையின் அளவு குறித்த புள்ளிவிவரங்களைப் பதிவு செய்ய சென் சர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பூமியிலிருந்து துணைக் கோளின் வான் நோக்கிய பயணத்தை படம் பிடித்து நேரடியாக அனுப்பத் தேவையான கேமராவும் துணைக் கோளில் உண்டு. பதிவு செய்யப்படும் புள்ளிவிவரங்கள் உடனுக்குடன் மெக்சிகோ நகரில் இருக்கும் அஸ்ட்ரா ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். வாயு மண்டலம் நிலைமை குறித்து தெரிந்து கொண்டு அதை பாதுகாக்கும் நடவடிக்கைள் எடுக்க உதவியாக இருக்கும். ஹீலியம் பலூன் அதிகபட்சம் அய்ம்பது கி. மீ உயரம் வரை போகும். அங்கு போனதும் சூரிய ஒளியின் வெப்பம் காரணமாக வெடித்து விடும். அப்போது துணைக் கோள் வைக்கப்பட் டிருக்கும் கருவி கீழே விழத்தொடங்கும். அது பத்திரமாக வந்து சேர பாராசூட் விரிந்து உதவும். அநேகமாக கடலில் வந்து இறங்க வாய்ப்புள்ளது. அதை மீட்டு ஆய்வு செய்வார்கள்.  இந்தத் திட்டம் குறித்து அறிந்ததும் தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் நேரில் அழைத்துப் பாராட்டினார்கள்.

சிறு வயதிலிருந்து மருத்து வராக வேண்டும் என்ற லட்சி யத்துடன் படித்து வந்தேன். அதனால் “பிளஸ் ஒன்” னில் பயோ பாடங்களை எடுத்தி ருந்தேன்.

துணைக் கோள் குறித்து சிந்திக்கத் தொடங்கியதும் மின்னணுவியல், மின்னியல் தொடர்பான புத்தகங்களை ஆழமாகப் படிக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்து அந்த பாதையில் போகலாம் என்றாலும், “மருத்துவராக வேண்டும்” என்ற நீண்ட நாள் கனவை நனவாக்க தேர்வுகளுக்கு என்னைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

மே 6 ஆம்தேதி எனது துணைக் கோள் வளிமண்டலம் நோக்கி அனுப்பப்பட்டது. மே 6ஆம் தேதி  தேர்வு எழுத வேண்டும் என்று சென்றதால் , எனது துணைக் கோளின் விண் பயணத்தை நான் பார்க்க முடியவில்லை. அதுதான் கொஞ்சம் வருத்தத்தைத் தருகிறது” என்கிறார் வில்லெட் ஓவியா.

- விடுதலை நாளேடு, 15.5.18