ஒரு பெண்ணின் கோரிக்கையும் தீர்வும்
அன்பார்ந்த சகோதரி, சகோதரர்களே!
இவ்விருபதாம் நூற்றாண்டில் பிற நாடுகளும், பிற சமூகங்களும் முற்போக்கடைந்து வருவதைப் பார்த்து நாமும், நம் நாடும் முன்னேற்றமடைய வேண்டுமென்ற ஆர்வத்தினால் அதற்கெனப் பல கழகங்களைக் கண்டு பற்பல துறையிலீடுபட்டுத் தொண்டாற்றி வரும்பொழுது, நம் சமூக முன்னேற்றத்திற்குத் தடைகளாயுள்ளவற்றுள் விதவா விவாக மறுப்பு முதன்மையானதென்பதை விதவைகளான நம் சகோதரிகள் படும்துயரை நாள்தோறும் கண்கூடாய்ப் பார்த்துவரும் நாம் மறுக்க முடியாது. அவர்களுக்கு நம் மதத்தின் பெயரால் நாம் இழைக்கும் அநீதியையும் அளவிட முடியாது.
இந்து சமூக ஆண்கள் மட்டும் தங்கள் மனைவிகள் இறந்த பின்னரும், மனைவிகளிருக்கும் போதும் எவ்வளவு வயதானவர்களாயிருப்பினும் தத்தம் விருப்பப்படி எத்தனை கல்யாணமாயினும் செய்து கொள்ளுகிறார்கள். ஆனால் 12 மாத (ஒரு ஆண்டு) வயதுடைய பெண் தனக்குக் கல்யாணம் செய்து வைக்கப்பட்ட கணவன் ஆறு மாதத்திலோ ஒன்றிரண்டு வருடத்திலோ இறந்துவிட்டால் அப்பெண் விதவையாய் அய்ம்புலனையும் அடக்கிக் கொண்டு தன் வாழ்நாளைக் கழிக்க வேண்டுவதுடன், அற்ப இன்பமாகிய புஷ்பம், மஞ்சள், வளையல்களையும் அணிந்தால் நம் குலமும், நாமும் நிர்மூலமாய்ப் போய்விடுவொமென்று கருதுகிறோம். 12 மாத பால் மணமாறாத பச்சிளங்குழவியின் கதியே இதுவென்றால், 12 14, 16 வயதுள்ள சிறுமிகளின் கதியை விவரிக்க வேண்டுமோ! அந்தோ பாழும் இந்து சமூகமே! இக்கொடுமைகளை மிஸ்மேயோ எழுதிவிட்டதற்கு கூப்பாடு போடும் குலாபிமானிகளுக்கும் மறுப்
பெழுதும் மாணிக்கங்களுக்கும் குறைவில்லை. ஆனால், இக்குறைகளை நீக்க முன்வரும் ஆண்மையாளரைக் காண்பதற்கில்லை.
1921ஆம் ஆண்டின் அரசாங்கத்து சென்ஸஸ் கணக்குப்படி மொத்தத்தில் 2,68,34,838 (ஏறக்குறைய மூன்று கோடி) விதவைகளிருக்கின்றார்கள். அதில் 12 மாத வயதிற்குக்கீழ்ப்பட்டு 612 விதவைகளும், 1 முதல் 2 வயதில் 498 விதவைகளும், 2 முதல்
3 வயதில் 1285 விதவைகளும்
3 முதல் 4 வயதில் 2,863 விதவைகளும்
4 முதல் 5 வயதில் 6,758 விதவைகளும், 5 முதல் 10 வயதில் 85,580 விதவைகளும், 10 முதல் 15 வயதில் 233,583 விதவைகளுமிருக்கின்றார்கள். அய்ந்து வயதிற்குட்பட்டு மொத்தம் 12,016 விதவைகளும், 14 வயதிற்குட்பட்டு 3,31,193 விதவைகளுமிருக்கின்றார்கள். இக்கணக்குப்படி இந்திய நாட்டில் விவாகமான பெண்களின் தொகையில் 5 வயதிற்குட்பட்ட விதவைகள் 1000க்கு 14 ஆகவும், 10 வயதிற்குட்பட்ட
விதவைகள் 1000க்கு 111 ஆகவும், 15
வயதிற்குட்பட்ட விதவைகள் 1000க்கு 437 ஆகவுமிருக்கின்றனர் எனக் கணக்கிடப்படுகின்றது. இக்கணக்குகளைப் பார்த்து நம் பாழ் மனம் பதறுகின்ற தெனினும் வைதீக பித்தர்கள் ஸ்ரீசாரதா இணக்க வயது மசோதவை தகைக்கப் பிரயத்தனப்பட்டு வருவதுடன் பால்ய விவாகமில்லாவிடின் பெண்களின் கற்பு நிலை பெறாது” என “பார்ப்பனக் குழந்தையும் பார்ப்பனரல்லாத குழந்தையும் உடனிருந்து சாப்பிடுவதைக் கண்டால் ஒரு வாரம் பட்டினியிருப்பேன்” எனச் சொல்லிய நமது டில்லி சட்டசபை பிரதிநிதியாகிய ஸ்ரீமான், எம்.கே. ஆச்சாரியார் சட்டசபையில் விவாதிக்கின்றார். இதனினும் இழிவு வேறொன்றுன்றோ?
இவ்வநீதிகளைப் போக்கி நம் சமூகம் முன்னேற்றமடையவும், விதவைகளின் துயரகற்றவும் ஏதுவான விதவா விவாகத்தை நடப்பிக்க முன்வரும் ஒரு சிலரையே இந்நாளில் காண்கின்றோம். அவர்களின் நன்முயற்சியைத் தடைசெய்யும் வைதீகக் கோஷ்யாருக்கும். அவர்களுக்குத் துணையாகக் கொள்ளும் இந்துமத இதிகாச புராண வேத சாஸ்திரங்களுக்கும் குறைவில்லை. ஒவ்வொரு சமூகமும் அறிவு ஆராய்ச்சிகளினால் முன்னேற்றமடைந்து வரும் இந்நாளில், படித்தோம் படித்தோம் எனப் பறைச்சாற்றித் திரியும் நம் பந்துமித்திரர்கள் இவ்விஷயங்களை அலட்சியம் செய்து வாழ்நாளை வீண் நாளாக்குகின்றார்கள் என்றால் இவர்கள் படித்துதும் படிப்பாகுமா? போனது போகுக. இனியேனும் கண்களைத் துடைத்து எழுந்து நின்று, உலகம் விசாலமான தென்பதை உணர்ந்து, பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து, தெளிந்து நம் குறைபாடுகளை யாவரும் தெளிந்து யாவருக்கும், சிறப்பாகப் பெண் மக்களுக்கும் சாங்கோபாங்கமாய் எடுத்துரைத்த விதவா விவாகத்தை நடைமுறையில் நடத்தி வருவதைக் காண முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டியது நமது முக்கிய கடமை என்பதை இதனால் ஒவ்வொருவருக்கும் வற்புறுத்துகின்றோம்.
பன்னிரண்டு வயதில் மணம் செய்து வைக்கப்பட்டு மூன்று மாதத்தில் விதவையாகி சிறிது காலத்திற்குப்பின் சமூக அநீதியை எதிர்த்து மறுமணம் புரிந்துகொண்ட, அகமதாபாத் ராவ்பகதூர்கேசவன் புதல்வியான ஸ்ரீமதி எசஸ்வதிபாய், தனது பெற்றோர்களுக்கு எழுதிய கடிதம் நம் நாட்டு இளம் விதவைகளின் துயரையும், நம் சமூகக் கொடுமையையும் நன்கு அறிவுறுத்துகின்றமையால், “நவசக்தி”யில் வந்துள்ளபடி அக்கடிதத்தை இதன்கீழ் தருகின்றோம்:_
என்னுடைய அருமைத் தந்தை தாயார்களையும் நான் பிறந்து வளர்ந்த வீட்டையும் விட்டுச் செல்ல வேண்டியிருப்பதை எண்ணும்போது என் இதயம் பிளந்துவிடும்போல் துக்கம் உண்டாகிறது. இந்தக் கடிதத்தைக் கண்டதும் சற்றும் எதிர்பாராதிருக்கையில் இடிவிழுந்தது
போல் நீங்கள் போவீர்களென தான் அறிவேன். ஆனால், காதல் தெய்வத்துக்கு என் உள்ளத்தைப் பறி கொடுத்துவிட்டேன். நான் என்ன செய்வேன்?
உங்கள் பாதத் தாமரைகளை என் கண்ணீரால் அலம்பியபோதிலும் என்னுடைய மறுமணத்திற்கு நீங்கள் இணங்கமாட்டீர்களென எனக்கு நன்றாய்த் தெரியும் ஆதலின், இதனால் எனக்கு எவ்வளவு துன்பம் உண்டாயினும் என் நடத்தையே சரியானதென்று நிச்சயம் பெற்றிருக்கின்றேன். நமது ஜாதி ஜனங்கள் உங்களையும் என்னையும் கேவலமாகச் கருதுவார்களென்பதில் சந்தேகமில்லை. அதற்கு நான் என் செய்வது? என்னுடைய பன்னிரண்டாம் வயதில் நீங்கள் தெரிந்தெடுத்த ஒரு சிறுவனுக்கு என்னை மணஞ்செய்த கொடுத்தது உண்மையிலேயே எனக்குக் கல்யாணஞ் செய்து வைத்ததாகுமென நம்புகிறீர்களா? மூன்றுமாதக் காலத்திற்குத்தான் நான் அச்சிறுவனின் மனைவியாகக் கருதப்பட்டேன். அப்போதிருந்து கைம்பெண்ணாய்க் காலம் கழித்து வருகிறேன். நண்பர்களும் பந்துக்களும் நான் விதவையானதற்கு வருந்தினாலும் என் இளமையை அடியோடு மறந்துவிட்டார்கள். உணர்ச்சிகளெல்லாம் அறவே யொழிந்த கிழவியாக என்னை எண்ணிக்கொண்டார்கள். வாழ்க்கை இன்பங்களை விரும்பித் துடிதுடித்துக் கொண்டிருந்த இருதயம் எனக்குள்ளே இருந்ததென்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. என்னுடைய கையில் ஓர் அணா பெறுமான வளையல் அணிந்தாலும் அல்லது தலையில் கொஞ்சம் பூ அணிந்து கொண்டாலும் அவற்றை, மற்றவர்கள் பாராமல் மறைத்துக்கொள்ளவேண்டியிருந்தது. பன்னிரண்டு வயது பாவையான நான் அவ்வளவு கண்டிப்பான தன்னொழுக்கத்தை எப்படி மேற்கொள்ள முடியும்? இவ்வாறு சென்ற ஒன்பது ஆண்டுகளாய் என் ஆசாபாசங்கள் உணர்ச்சிகளெல்லாம் என் இதயத்திலே ஒடுங்கிக்கிடந்தன.
எனக்குப் பன்னிரண்டு வயதாயிருந்தபோது என் தமையனாருக்கு முப்பது வயதாயிருந்தது. தன் மனைவியுடன் பத்தாண்டு காலம் இன்பவாழ்க்கை நடத்தியிருந்தார். நான் கணவனையிழந்த போதே அவரும் மனைவியை இழந்தார். அவரை மறுமணம் செய்துகொள்ளும்படி நீங்கள் வற்புறுத்தினீர்கள். அதற்கு இணங்கி அவர் மறுபடி கல்யாணஞ் செய்துகொண்டார். ஆனால் அப்போது என்னைப் பற்றி நினைத்தவர் யாருமில்லையே!
நான் யார்மீதும் குற்றஞ் சுமத்தவில்லை. நம் சமூக வழக்கமே இதற்குக் காரணமாகும். புருஷனுக்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் கல்யாணஞ்செய்துகொள்ள இடங்கொடுக்கும் சமூகச் சட்டம், பெண்ணுக்கு அவ்வுரிமையை அடியோடு மறுக்கிறது. ஆஹா! என்ன சமூகம் இது? இக்கொடிய வழக்கத்தைப் புறக்கணித்து வாழ்க்கையின்பம் பெறுவதற்கும் உரிய வழியைக் கடைப்பிடித்தால் அதில் என்ன தவறு? அதில் பாவம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இரகசியமாகத் துன்மார்க்கத்தில் வீழ்வதைவிடப் பகிரங்கமாக மணஞ்செய்துகொள்ளுவது எவ்வளவோ மேன்மையானதன்றோ? உடலைச் சங்கிலியால் பிணித்துக் கட்டிவிடலாம். ஆனால், இதயத்தை எவரும் கட்ட முடியாது.
என்னை அதிகப்பிரசங்கி என்று ஒரு வேளை நீங்கள் கருதலாம். ஆனால், நான் என்ன செய்வேன்? என்னுடைய நடத்தைக்குக் காரணங்களை என் பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறவேண்டாமா? என் கணவராக வரிந்துகொண்டவரைப் பற்றி நீங்கள் என்ன எண்ணினாலும் சரிதான். என் உடலையும் உயிரையும் அவருக்கே அர்ப்பணஞ் செய்து விட்டேன்.
என்னருமைத் தாயே! தந்தையே! என்னை மறந்துவிடுங்கள். நான் எப்போதும் போல இனியும் உங்கள் புதல்வியேயாவேன். என்னை நீங்கள் புறக்கணியாவிட்டால் உங்கள் பாதங்களுக்குப் பூஜைசெய்ய எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய தயாளத்தினால் எனக்கு ஏராளமான ஆடையாபரணங்களைத் தந்திருந்தீர்கள். ஆனால் என் உடலில் இப்போதணிந்திருக்கும் ஆடையேயன்றி வேறு எதையும் நான் எடுத்துப்போகவில்லை. அதையும் பின்னால் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். ஒருக்கால் என்னை நீங்கள் நமது புதல்வியல்லவென்றே தள்ளிவிடலாம். பின்னர் உங்களுடைய உடையை நான் எடுத்துச் செல்வது எவ்வாறு நியாயமாகும்? எனக்கு ஆடையாபரணங்களில் ஆசையில்லை. உடம்பு முழுதும் நகை போட்டுக் கொண்டு மகிழ்ச்சியில்லாத விதவையாயிருப்பதினும் ஆபரணம் ஒன்றுமே இல்லாவிடினும் சந்தோஷமாயுள்ள மனைவியாயிருக்கவே நான் விரும்புகிறேன்.
என்னுடைய புது வாழ்விற்கு உங்களுடைய ஆசீர்வாதம் எனக்குக் கிடைக்காதா? _ உங்கள் நன்றியில்லாப் புதல்வி, எசஸ்வதி.
இதினின்றும் நம் சகோதரிகளின் (விதவைகளின்) துர்ப்பாக்கிய நிலைமை இன்னதென்பதையும், அவர்களுக்கு நாமிழைக்கும் கொடுமைகள் என்னவென்பதையும் திட்டமாய் அறிகின்றோம். கணவன் இறந்தவுடன் அப்பெண் உலக வாழ்க்கையை முற்றும் துறந்து, சுவர்க்கமென்று சொல்லப்படுகிற இடத்திற்குப் போய்ச் சேரவேண்டிய பரமார்த்திக வழிக்கென அய்ம்புலனையும் அடக்கி உற்றார் உறவினர், பெற்றார் பிள்ளைகள் முதலியவர்களால் இழிவாய்க் கருதப்பட்டு இறக்கும்வரையில் பாழும் வயிற்றைக் கழுவவேண்டியவளாகயிருக்கின்றாள். 12, 14 வயதில் விதவையான தன் பெண்ணையோ, சகோதரியையோ மூலையில் கிடத்திவிட்டு அவளைப் பற்றிய கவலை ஒரு சிறிதுமின்றி 50, 60 வயதுடைய தந்தையும், தமையனும் 12, 14 வயதுடைய சிறுமிகளை மணம் புரிந்து அதே இல்லத்தில் இன்பவாழ்வு நடத்தும் கொடுமைக்கு கண்ணீருகுக்க வேண்டாமா? ஆண்கள் மட்டில் கட்டற்ற காளைகளாகவும், பெண்கள் உணர்வற்ற கட்டைகளாகவும் உலகிடை வாழ்க்கை நடத்தவேண்டுமென வற்புறுத்தும் இந்துமத நியதியை என்னென்றியம்புவது?
அன்றியும், நம் சகோதரிகளைக் (விதவைகளை) கொடுமைப்படுத்த மதச் சட்டமெதேனும் உண்டாவென்றால் அதுவுமில்லை என்பதை கீழ்க்காணும் காந்தியடிகளின் புனிதமொழிகள் அறிவுறுத்துகின்றன. “மிகச் சிறுவயதுள்ள பெண்களை ஆயுள்முழுதும் விதவைகளாக வீட்டில் அடைத்து வைத்திருப்பதைப்போல் கொடுஞ்செயல் வேறொன்றுமில்லை. விதவைகளுக்கு மறுவிவாகம் செய்யக்கூடாதென ஒரு சாஸ்திரமும் கூறவில்லை. விதவைகளைப் பலவித நிபந்தனைக்குட்படுத்துவதால் அவர்களுடைய வாழ்வு பயனற்றதாய்ப் போனதோடு இந்து மதமும் இந்து சமூகமும் பாழாய்ப் போகின்றன. அறுபது வயதிற்கு மேற்பட்ட வயோதிகர் கூட சிறுபெண்களை போட்டி போட்டு அதிக விலை கொடுத்து அவர்களை மணம் செய்துகொள்ளுவதைவிட மானக்கேடான செய்கை வேறெதுவுமில்லை” இன்னும் இவை போன்ற எடுத்துக்காட்டுகள் பலவுள.
வாய் வேதாந்தத்தில் வல்லவர்களெனப் பெயர் படைத்த நாம் மேடைகளில் வீசும் வீச்சுக்கு அளவில்லை. நிறைவேற்றும் தீர்மானங்களுக்கும் எல்லையில்லை. பேச்சளவில் காலம் கழிப்பதிலும் பயனில்லை. விதவைகளின் துயரை முற்றும் மாற்றினாலல்லாது நாமும் நம் நாடும் நம் சமூகமும் முன்னேற்றமடைய இயலாது. பழக்கவழக்கமென்று சமூகத்தைப் பாழாக்கிவரும் வைதீகர்கள் மனவிசாலமற்ற கிணற்றுத் தவளைகள் என்பதை இந்நிலவுலகின்
கண் காண்கின்றமையினால் அவர்களால் எவ்வகையிலும் எப்பயனும் கிட்டாது.
ஆதலால், தேசிய சமூக முற்போக்கின் விழைவுமிக்க இளைஞர்களே! இக்கொடுமையை அகற்ற முற்பட வேண்டும். மனைவியையிழந்த ஆண்கள், கணவனையிழந்த பெண்களையே அவர்களின் சம்மதம் பெற்று மறுமணம் செய்துகொள்ள வேண்டுமெனவும் விதவைகள் கிடைக்காவிட்டால் கன்னிகைகளை மணந்து கொள்ளலாமென்றும் மணமாகாத இளைஞர்கள் கன்னிகைகளையோ விதவைகளையோ அவரவர் விருப்பப்படி மணம் புரிந்து கொள்ளலாமென்றும் விதிகள் நியமித்தல் வேண்டும். இந்நன் முயற்சிக்கு எவ்வித இடையூறுகள் நிகழினும் அவைகளைப் பொருட்படுத்தாது துணிவுடன் விதவா
விவாகத்தை நடைமுறையில் நடத்திவைக்க முன்வரும்படிக்கு ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றோம். இவ்விதமான விதவா விவாகங்களை நடத்த முற்படும் இளைஞர்களுக்கு எங்களாலியன்ற பொருளுதவி செய்கின்றோமென இதனால் வாக்களிப்பதுடன் அவ்வுதவியை நாடுவோர் எஸ். ராமசாமி 125, தேலுக் அய்யர் தெரு, சிங்கப்பூர் என்ற விலாசத்திற்கு கடிதங்கள் எழுதிக்கொள்ளும்படிக்கு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
இப்படிக்கு,
தங்கள் சகோதரர்கள்: எஸ்.ராமசாமி, வி.வெங்கட்டராயலு வி.டி.சங்கரலிங்கம், ஆர்.டி.கோவிந்தசாமி, எஸ்.கோபால், ஜி.ரெத்தினசபாபதி, பி.மாடசாமி, ஆர்.முத்துக்கிருஷ்ணன், ஆர்.சுந்தரராஜலு,
வி.எஸ்.நாராயணசாமி, பி.பெருமாள், ஏ.சி.சுப்பைய்யா, க.தாமோதரன், கே.வெங்கடா சலபதி, எம்.நல்லசிவம், ஆர்.புருஷோத்தமன், வி.சீனிவாசலு, ஜி.சாரங்கபாணி. ♦
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக