நாமெல்லாம் ஒரு மொழியை கற்றுக் கொள்ள பல ஆண்டுகள் உழைக்க வேண்டி இருக்கும். படிக்க முடிந்தால், எழுத வராது. அப்படியே எழுதத் தெரிந்தால், பேச வராது. ஆனால் ஒரே வருடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்ததோடு மட்டும் அல்லாமல் அந்த மொழியில் நடந்த ஒரு போட்டியில் பங்கு கொண்டு அதில் வெற்றியும் பெற்று பரிசும் வாங்கி வந்துள்ளார். அதுவும் இந்திய மொழி இல்லை, வெளிநாட்டு மொழி. இப்படி பரிசு பெற்ற மாணவி தான் சாதனா.
சென்னையில் சட்டம் பயின்று வரும் இந்த மாணவியிடம் எப்படி முடிந்தது என்று கேட்டால் நம் தமிழும், அவர்களது கொரிய மொழியும் கிட்டத்தட்ட ஒன்று போலவே உள்ளது என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார். அவர் மேலும் கூறியது:
“எனக்கு எப்போதும் புது மொழிகள் மீது பற்று அதிகம். நான் 9ஆவது படிக்கும் போது எனது நெருங்கிய தோழி வெளிநாட்டு சீரியல் ஒன்றை பார்த்த தாகவும், அது மிகவும் நன்றாக இருந்ததாகவும் கூறினார். நானும் பார்க்கிறேன் கொடு என்றேன். தன்னிடம் உள்ள “பென் ட்ரைவில்’ அந்த சீரியலை காப்பி எடுத்துக் கொடுத்தார்.
அது கொரிய மொழியில் வந்த சீரியல் “பாய்ஸ் பிபோர் பிளவர்ஸ்”. நான் அதை கொரிய மொழியிலே யே பார்த்து ரசித்தேன். அது பின்னர் “புதுயுகம்” தொலைக்காட்சியில் தமிழில் வெளிவந்தது. கொரிய மொழி மீது அன்று முதல் ஒருவிதமான பற்று ஏற்பட்டது. இந்த வெளிநாட்டு மொழியை சென்னையில் யாராவது கற்றுக் கொடுக்கிறார்களா? என்று தேடினேன்.
இன்கோ சென்டர் என்ற ஒன்று கொரிய மொழிக்காக மட்டும் அல்லாமல், அந்த நாட் டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஒரு சிறந்த இடம் என தெரிந்தது. அந்த மய்யத்தின் தலைவி ரதி ஜாபர் அவர்களை சந்தித்து என் எண்ணத்தை கூறினேன்.
அவரும் சந்தோசத்துடன் கொரிய மொழியின் பயிற்சி வகுப்பில் சேர சொன் னார். சேர்ந்த பிறகு தான் தெரிந்தது நம் தமிழ் மொழியும், கொரிய மொழியும் பல விசயங்களில் ஒன்று போல உள்ளது என்று. நம் தமிழ் வார்த்தைகளான அம்மா, அப்பா, பாம்பு, வா, போன்று நிறைய தமிழ் வார்த்தைகள் போல், கொரிய மொழியிலும் கிட்டத்தட்ட அதே ஒலியுடன் இருக்கின்றன.
அது மட்டும் அல்லாமல் தமிழில் நாம் மரியாதை கொடுத்து பேசுவது போல் கொரிய மொழியிலும் பேசுகிறார்கள். “நான் சிவே கந்தா’ என்று கூறினால், “நான் வீட்டிற்கு போறேன்’ என்று அர்த்தம்.
சென்னையில் உள்ள கொரிய மொழி பள்ளியில் பலர் இரண்டு மூன்று ஆண்டு களாக படிக்கிறார்கள். இந்த ஆண்டு படிப்ப வர்களிடம் ஒரு சிறு போட்டி வைத்து மூன்று பேர்களை தேர்ந்தெடுத்தார்கள்.
அதில் நான் முதலில் வெற்றி பெற்றேன். பின்னர் எங்களை எல்லாம் வீடியோ படமெடுத்து அதை கொரியாவிற்கு அனுப் பினார்கள். அங்கு 56 நாடுகளில் உள்ள 105 கொரியன் மய்யத்தில் இருந்து 140 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள். இந்த 140 பேர்களை ஸ்கைப் மூலம் பேட்டி கண்டார்கள். அதில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து 12 பேர்கள் தேர்வானார்கள். இவர்கள் கொரியாவிற்கு பயணமானார்கள்.
அதில் நானும் ஒருத்தி என்பதில் நான் மிகவும் மகிழ்ந்தேன். அங்கு எங்களை மேடையில் பேசவிட்டு தேர்ந்தெடுத்தார்கள். அதில் நான் மூன்றாவது பரிசினை பெற்றேன்.
மற்ற இருவர் மட்டுமல்ல என்னுடன் வந்த பலரும் மூன்றாவது ஆண்டு கொரிய மொழியை படிக்கிறார்கள். நான் முதலாம் ஆண்டுதான் முடித்துள்ளேன்.
எனக்கு மகிழ்ச்சியை தந்த விஷயங்கள் இரண்டு. கொரிய மொழியை கண்டுபிடித்த ராஜா செஜாங் இன்ஸ்டிடியூட் தான் இந்த போட்டிகளை நடத்தியது.
இரண்டாவது, இந்த பரிசினால் நான் அடுத்த ஆண்டு மீண்டும் கொரியா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
மூன்று மாதம் அங்கு தங்கி இருந்து மேலும் அதிகமாக கற்க இந்த வாய்ப்பையும் நான் பயன்படுத்திக் கொள்வேன்.
கொரியா சென்றபோது அங்குள்ள ஜி ஜூ (ஒங் ஒன்) என்ற தீவிற்கு சென்றோம். யங்ஜின் என்ற இடத்தையும் பார்த்தோம். அங்குள்ள கிராமம், அவர்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவைகளையும் பார்த்து தெரிந்து கொண்டோம். பல்வேறு பூங்காக்கள், அருங்காட்சியகம் ஆகியவைகளையும் பார்த்து ரசித்தோம்.
எங்களுடைய சவுகரியத்தை அவர்கள் முதன்மையாக எடுத்துக் கொண்டார்கள் என்று தைரியமாக கூறலாம்.
அதற்கு ஒரு சிறு உதாரணம், இந்த போட்டியாளர்களுக்கு தேவையான சாப் பாட்டை அவர்கள் தயாரித்து வழங்கினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு பார்த்துப் பார்த்து எங்களை எல்லாம் கவனித்தார்கள் என்றால் அது மிகை இல்லை.
அடுத்த ஆண்டு மூன்று மாதம் தங்கி படித்த பின், பரீட்சை உண்டு. அதில் நான் தேர்ச்சி பெற வேண்டும் என்று இப்பொழுதே கொரிய படிப்பை மேலும் கவனமாக படித்து வருகிறேன்.
- விடுதலை நாளேடு 14.11.17