செவ்வாய், 23 ஜூன், 2026

பெண்களுக்கு மட்டுமேயான சிறப்பான பூங்கா! தாம்பரம் மாநகராட்சியின் புதிய முயற்சி!


தமிழ்நாடு

தாம்பரம், ஜூன் 23- தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் பகுதி பெண்கள், எவ்விதப் பாதுகாப்பு அச்சமும் இன்றி உடற்பயிற்சி செய்யவும், தங்களின் ஓய்வு நேரத்தைச் சுதந்திரமாகச் செலவிடவும் ஏதுவாக, பெண்களுக்கு மட்டுமேயான ஒரு பிரத்யேக பூங்காவை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த சிறப்புப் பூங்காவிற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

தாம்பரம் மாநகராட்சியின் செம்பாக்கம் மண்டலம், 23ஆவது வார்டுக்கு உட்பட்ட நடேசன் நகர் 2ஆவது தெருவில் இந்த பூங்கா அமையவுள்ளது. சுமார் 18,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த பூங்காவிற்கு ‘பிங்க் பார்க்’ (Pink Park) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான முழு நிதிச் செலவும் தாம்பரம் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து பயன்படுத்தப்பட உள்ளது. அனைத்துப் பணிகளும் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்குள் முழுமையாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூங்காவின் முக்கிய அம்சங்கள் மற்றும் வசதிகள்

பெண்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த பூங்காவில் பல்வேறு நவீன வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன:

தனிச்சிறப்பான உடற்பயிற்சிக் கூடம் (Gym): பெண்களுக்கு மட்டுமேயான மூடிய உடற்பயிற்சி நிலையத்துடன், திறந்தவெளி உடற்பயிற்சி (Open Gym) உபகரணங்களும் நிறுவப்பட உள்ளன.

நடைப்பயிற்சி மற்றும் ஓய்விடங்கள்: சீரான நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான தனிச்சிறப்பான வழித்தடங்கள் (Walking tracks) மற்றும் மூத்த குடிமைகளான முதியோர்கள் அமர்ந்து உரையாடுவதற்கான நிழற்குடைகளுடன் கூடிய இருக்கை வசதிகள்.

குழந்தைகள் விளையாட்டுப் பகுதி: சிறுவர்கள் விளையாடுவதற்கான அதிநவீன விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஊஞ்சல்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய வசதிகள்

இந்த பூங்காவின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இது மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்காகச் சிறப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது. சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் குழந்தைகள் எளிதாக விளையாடக்கூடிய தனிச்சிறப்பான ஊஞ்சல்கள், மணல் தொட்டிகள் மற்றும் பார்வை குறைபாடு அல்லது ஆட்டிசம் (Autism) குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான தரைமட்ட விளையாட்டு உபகரணங்கள் இதில் இடம்பெற உள்ளன.

24 மணி நேரப் பாதுகாப்பு வளையம்

பொதுப் பூங்காக்களில் பெண்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்சினையாகப் பாதுகாப்பு உள்கட்டமைப்புக் குறைபாடுகள் உள்ளன. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த பிங்க் பூங்காவில் 24 மணி நேரக் கண்காணிப்பு படக் கருவிகள் (CCTV) பொருத்தப்பட உள்ளன. இவை அனைத்தும் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மய்யத்துடன் (Integrated Command and Control Centre – ICCC) நேரடியாக இணைக்கப்பட்டுத் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இது தவிர, உள்ளூர் காவல் துறையினரின் வழக்கமான ரோந்துப் பணிகளும் இந்தப் பகுதியில் தீவிரப்படுத்தப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எஸ். பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

100 பூங்காக்கள் பராமரிப்பு

தாம்பரம் மாநகராட்சி தற்போது அதன் எல்லைக்குள் சுமார் 100 பூங்காக்களைப் பராமரித்து வருகிறது. தொடக்கக் காலங்களில் நிதிப் பற்றாக்குறை காரணமாகப் பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க முடியாத சூழல் இருந்ததாகவும், தற்போது உபரி பட்ஜெட் (Surplus Budget) உள்ளதால் இத்தகைய பெரிய திட்டங்கள் மூலதன நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுவதாகவும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 23.06.26