திங்கள், 31 ஆகஸ்ட், 2015

இந்தியாவின் முதல் பெண் பட்டதாரிகள்

சந்திரமுகி பாசு (1860-1944):
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் பட்டதாரிகள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சந்திரமுகி பாசுவும் காதம்பினி கங்குலியும்தான். வங்கமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சந்திரமுகி பாசு கிறிஸ்தவக் குடும்பமொன்றில் 1860இல் பிறந்தார். டேராடூனைச் சேர்ந்த உள்நாட்டு கிறிஸ்தவர்களுக்கான பள்ளியில் 1880இல் ஃபர்ஸ்ட் ஆர்ட்ஸ் என்ற கலையியல் பட்டப் படிப்புக்கான தேர்வில் வெற்றிபெற்றார்.
அதற்கான நுழைவுத் தேர்வில் 1876-லேயே சந்திரமுகி வெற்றிபெற்றிருந்தாலும், வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் 1878-வரை அவரது பெயர் இடம்பெறவில்லை. இத்தனைக்கும் தேர்வில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். எனினும் அவரது பெயர், வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
பாலினப் பாகுபாடுதான் இதற்குக் காரணம். 1878இல் விதிமுறைகள் மாற்றப்பட்டபின் சந்திரமுகி மேல்படிப்புக்கு அனுமதிக்கப் பட்டார். அதற்குப் பிறகு பேதூன் கல்லூரியில் பட்டம் படித்து 1883இல் பட்டம் பெற்றார்.
சந்திரமுகியுடன் கல்லூரியில் சேர்ந்த காதம்பினி கங்குலியும் 1883இல் பட்டம் பெற்றார். 1886இல் பேதூன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1886இல் பேதூன் கல்லூரியும் பேதூன் பள்ளியும் பிரிக்கப்பட்ட பின் பேதூன் கல்லூரியின் முதல்வராக சந்திரமுகி ஆனார். இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே இளங்கலைக் கல்லூரி ஒன்றில் தலைமைப் பொறுப்புக்கு வந்த முதல் பெண்ணும் சந்திரமுகிதான்.
காதம்பினி கங்குலி (1861-1923):
இந்தியாவில் பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற சிறப்பை சந்திரமுகி பாசுவுடன் காதம்பினி பகிர்ந்து கொண்டாலும் இந்தியாவில் அலோபதி படித்து மருத்துவரான முதல் பெண் காதம்பினிதான். 1886இல் இந்தச் சிறப்பை அவர் பெற்றார்.
ஆனந்தி கோபால் ஜோஷி என்ற பெண்ணும் அதே ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்றிருந்தாலும் அவர் படித்தது அமெரிக்காவில். காதம்பினியின் சாதனை இப்போது தான் சாதனையாகக் கருதப்படுகிறதே தவிர அவரது காலத்தில் அவருக்கு அவ்வளவு எளிதாக அங்கீகாரம் கிடைத்துவிட வில்லை. 1892இல் இங்கிலாந்து சென்ற அவர் எல்.ஆர்.சி.பி, எல்.ஆர்.சி.ஆஸ், ஜி.எஃப்.பி.எஸ் போன்ற படிப்புகளை முடித்து விட்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.
இந்தியா வந்து தனது மருத்துவத் தொழிலைத் தொடங் கியவர் பிறகு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து பாடுபட்டார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக நடை பெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கல்கத்தாவில் ஒரு கூட்டத்தை அவர் நடத்தியதும் குறிப்பிடத் தக்கது.
-விடுதலை,25.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக