சனி, 15 ஆகஸ்ட், 2015

இந்தியாவின் முதல் பெண் நீதிபதி


நீதிமன்றத்தில் பெண்கள் கோலோச்சுவதென்பது குருடன் கானகத்தில் வழி தேடி அலைவதை போன்றதே. மற்ற துறைகளைப் போல இந்தத் துறை இல்லை... மிகவும் சவாலானது என தான் சார்ந்த துறை கடினம் என்பதை  எல்லாரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
இது அது போன்ற ஒரு ஸ்டேட் மென்ட் அல்ல. ஏனெனில், நிஜத்திலும் நீதித்துறை என்பது ஆண்கள் ஆக்கிரமித்து ஆட்சி செய்து கொண்டிருக்கிற துறையே. இங்கும் சாதித்த மங்கைகள் இருக்கிறார்கள்.  அவர்கள் கடலில் நீந்தி கரை சேர்ந்தவர்கள்...
மீன்களின் குத்தலுக்கும் முதலைகளின் பசிக்கும் கடல்வாழ் உயிரினங் களின் கடுப்புக்கும்  ஆளாகி, சிலர் நீந்தவும் தெரியாமல் தட்டுத் தடுமாறி கரை சேர்ந்தவர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சட்டத் துறையில் சாதித்து வெளியே வருவதென்பது சரித்திரம் பெற்றதற்கு சமம். நிழலும் நிஜமும் இங்கு வெவ்வேறான துருவங்கள்!
எட்டாம் வகுப்பு படிப்பதுதான் திருமணத்துக்கான தகுதி என்றிருக்கும் ஊரில், என்னை படிக்க வைப்பதையே லட்சியமாகக் கொண்டு, அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளி, சட்டக் கல்லூரி வரை என்னை நகர்த்திச் சென்ற பெருமை என் அப்பா கிருஷ்ணனையே சாரும்.
பட்டம் வாங்குவதற்கு முன் நீதிமன்ற வாசலை நான் மிதித்ததில்லை. மூட் கோர்ட் என்று ஒன்று உண்டு. அப்போதும் நீதிமன்றத்தில் நுழைய வாய்ப்பு அமையவில்லை. நான் வழக்குரைஞராக பதிவு செய்து, கருப்பு அங்கியை அணிந்தபோது எங்கள் தெரு முழுக்க ஊர்வலமாக என்னை அழைத்துப் போனார் அப்பா.
அந்தத் தருணத்தில் ஏதோ முடிசூடிக் கொண்ட ராணியை போன்ற பிரமிப்பு! நீதி மன்றத்தில் நுழைந்த சில நாட்களிலேயே  மலை உச்சியிலிருந்து மண்ணில் தலைகுப்புற விழுந்து தூள் தூளானது வழக்கறிஞர் தொழில் பற்றிய கற்பனை. சக வழக்கறிஞர்கள் என்னிடம் விசாரித்தது யாருடைய ஜூனியர் என. சீனியர் பேரை சொன்னதும் என்னுடைய ஜாதியை சொல்கிறார்கள்.
கீழமை நீதிமன்றங்களில் ஜாதியை மய்யப்படுத்திதான் எல்லாம்! வழக்கறிஞருக்கு வழக்குகளும் அந்த வகையில்தான் வரும் என்பது போக போகத்தான் புரிந்தது.
முதல் நாள் என்னிடம் 7 வழக்குகளின் கோப்புகளை கொடுத்தார்கள். அதில் ஒன்று 30 ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றத்துக்கு வந்தது. அதற்கு வாய்தா வாங்க வேண்டும். எப்போது வழக்கை கூப்பிடுவார்கள்? எதைச் சொல்லி ஆரம்பிக்க வேண்டும்? எதுவும் தெரியாது.
நீதிபதியிடம் வசை வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் அந்த கட்டை ஜூனியர்கள் தலையில் கட்டி அனுப்பிவிடுவார்கள். இந்த நிலத் தகராறு கேஸுக்கு வாய்தா வாங்கு - இவ்வளவுதான் சீனியர் சொன்னது. அவசரத்துக்கு கண்ணில் படுபவர்களிடம், அண்ணே! அக்கா!
வாய்தா எப்படி கொடுப்பாங்க என்று கேட்டுக் கொண்டிருந்தேன். வளாகத்தில் இருக்கும் வழக்குரை ஞர்களில் யாரோ ஒருவர் பரபரப்புக்கு நடுவிலும், கிளைன்ட் ஊர்ல இல்லன்னு சொல்லுங்க என்று சொல்லி விட்டுப் போனார். மை கிளைன்ட் ஈஸ் அவுட் ஆஃப் ஸ்டேஷன் என நான் நீதிமன்றத்தில் உச்சரித்த முதல் வாதமே அப்பட்டமான பொய்.
நான் சொன்னதுதான் தாமதம் பாஸ் ஓவர் என்று சொல்லி  முறைத்து கட்டை தூக்கி கிளார்க் பக்கம்  கீழே போட்டார் நீதிபதி. வாய்தா வாங்காமல் போனால் வழக்கு ரைஞர் உள்ளே   சேர்க்க மாட்டார். உணவு இடைவேளையின் போது பாஸ் ஓவர் செய்த கட்டை இன்னொரு முறை கூப்பிடுவாங்க அதுவரை இங்கேயே  இருங்க... என்றார்கள்.
ஆக, ஜூனியர்களின் முழுவேலை வாய்தா வாங்குதல். காலம் தான் மற்ற விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும்! நீதிமன்றத்தில் வழக்குரைஞராக அங்கியோடு சுற்றிச் சுற்றி வளைய வந்து, அது மற்றவர் கவனத்தை ஈர்த்து, வழக்குரைஞர்தான் என்று ஊர்காரர்கள் நம்பி, பெண்ணாக இருந்தாலும், ஊர்கார பொண்ணு அவங்க கிட்ட கொடுத்துதான் பார்ப்போம் என்று யாராவது ஒருவர் இரக்கப்பட்டு கொடுத்தால்தான் உண்டு...
ஜூனியரிடம் ஒரு கேஸ் முழுமையாக வந்து சேரவே நான்கு ஆண்டு களாவது ஆகிவிடும். வந்த கேஸை எடுத்து நடத்தணுமே தவிர ஃபீஸுன்னு மூச்சுவிடப் படாது. மனுவில் கையெழுத்து போட வரும்போது மாங்காயோ, தேங்காயோ கொண்டுவந்தால் அதுதான் ஃபீஸ். டீ, காபி போனஸாக உண்டு.
ஜூனியராக இருக்கும்போது வருமானம் என்பது அறவே இல்லை என்ற உண்மை உறைக்கும்போதுதான் நாம் தவறான துறையை தேர்ந்தெடுத்துவிட்டோமோ என்ற சங்கடம் ஜூனியர்களுக்கு உறுத்தும். 7 மாதங்களுக்குப் பிறகு எனக்கு சீனியர் கொடுத்த பணம் நூறு ரூபாய். அந்த நேரத்தில் அந்த நூறு ரூபாய் லட்சம் சம்பாதித்ததை போன்ற பிரமிப்பைக் கொடுத்தது. அதை பத்திரமாக ஃப்ரேம் போட்டு வைத்துள்ளேன்.
ஆனால், நான் நூறே நூறு ரூபாய் சம்பாதிக்க 7 மாதம் தேவைப்பட்டிருக்கிறது.  கற்றுக்கொண்டது என்ன? வாய்தா வாங்குதல்! நீதித்துறையில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் நீண்ட நெடிய பயணம் செய்யவேண்டும். காத்திருப்பு அவசியம். காலத்தை விரயம் செய்ய வேண்டியது கட்டாயம்.
பலனை எதிர்நோக்காமல் பயணிக்க வேண்டியது தான் முதல் பாடம். வழக்கே இல்லாவிட்டாலும் காலை முதல் மாலை வரை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட வேண்டும். 2003லேயே இந்த கதி என்றால், 1928இல் இந்தியாவில் வழக்கறிஞராக அவதாரமெடுத்த முதல் பெண் எத்தகைய போராட்டங்களை சந்தித்திருப்பார்?
அன்னா சாண்டி இயற்கை யாகவே வழக்குரைஞர்கள் எழுது வதிலும் திறமை கொண்ட வர்கள் என்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்தான் அன்னா சாண்டி. 1905இல், கேரள மாநிலம் எலிப்பியில் பிறந்தவர். வாசிக்கக் கூட வாய்ப்பில்லாமல்   பெண்கள் வாழ்ந்த காலத்தில், பெண்ணியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்த சிறீமதி என்ற பத்திரிகை நடத்தியவர். இவரைப் பற்றி நாம் இன்று விவாதிப்பதற்கான காரணம் அது மட்டுமல்ல.
அதற்கும் மேலே! இந்தியாவின் முதல் பெண் நீதிபதி இவர்தான். 1959இல் உயர்நீதிமன்ற  நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் இவருடைய வாழ்க்கை வரலாறு மலையாள மனோரமாவில் தொடராக வெளிவந்து. ஆத்மகதா என்ற பெயரில் புத்தக வடிவிலும் வெளியானது.
-விடுதலை,11.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக