பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உடல் மற்றும் மனநலம் குறித்த பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 13 வயதில் பெண்கள், சுய சுகாதாரம், ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி (விளையாட்டு) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 13 வயது முதல் 18வயது வரையுள்ள பெண் குழந்தைகளை மிகவும் பக்குவமாக கையாள வேண்டும்.
இந்த வயதில் மிகக்குறைந்த அல்லது அதிக உடல்எடை, பிறப்புறுப்பு பிரச்சினைகள், சிறுநீரக பாதை கோளாறுகள், பூப்படைதலில் கோளாறுகள் என பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த வயதில் சமூகத்தில் பெண்ணுக்குள்ள முக்கியத்துவத்தை உணர்த்தி ஆணுக்கு பெண், நிகரானவள் என்பதை உணர்த்த வேண்டும்.
மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் காலம் என்பதால் பெற்றோர் குழப்பத்தில் இருப்பார்கள். பூப்படைந்தது முதல் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மாதவிடாய் சுழற்சி இருக்காது என்பதை நாம் உணரவேண்டும். 19 வயது முதல் 39 வயது வரை திருமணம் மற்றும் குழந்தை பேறு உட்பட வாழ்வின் முக்கிய திருப்பங்கள் நடக்கும் காலகட்டமாகும்.
இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரிக்க திட்டமிட்ட 3மாதங்களுக்கு முன்பாகவே விட்டமின் மருந்தை, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உண்ண வேண்டும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியம். மகப்பேறு காலத்தில் உரிய பயிற்சி பெற்ற மருத்துவரிடம் காண்பித்து, பிரச்சினைகளை ஆரம்பநிலையில் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.
40 முதல் 65 வயதுக்குட்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள், மாதவிடாய் சுழற்சி நிற்கும் தறுவாயில் இருப்பதால் உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். அதை உணர்ந்து உணவு கட்டுப்பாடு, அதிக சர்க்கரை தவிர்ப்பு, உணவில் சோயா மற்றும் கால்சியம், உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். 65 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு குடும்பத்தினரின் துணை மிகவும் அவசியம்.
புற்று நோய்க்கான அபாயம் அதிகம் இருக்கும் காலம் இது. எனவே கருப்பை சம்பந்தமான சிறிய சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டு, பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தன்வாழ்வின்பெரும் பகுதியை குடும்பத்திற்காக செலவிடும் பெண்ணின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது.
எந்த குடும்பத்தில் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைத் திருக்கும் என்பது மட்டும் உண்மை.
-விடுதலை,24.3.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக