ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பேச்சே இவரது மூச்சு(ஓப்ரா)உலக ஊடகங்கள், முன்னணி பத்திரிகைகளால் ஆற்றல் மிக்கவர், செல்வாக்கு உள்ளவர், சக்தி வாய்ந்தவர் என்று பாராட்டப்பட்ட ஒரு பெண். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சிறு வயதிலேயே பாலியல் கொடுமைகளை எதிர்கொண்டவர்.
ஆனால், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களைத் தலைகீழாக மாற்றி, உலகப் பிரபலங்கள் எல்லாம் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படமாட்டோமா என்று ஏக்கப்பட வைத்தவர். இந்தப் பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஓப்ரா வின்பிரே.
உலகின் மிகுந்த செல்வாக்கான பெண் இவராக இருக்கலாம் " என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் பாராட்டப்பட்டவர். அதே ஓபாமா முன்னால் கால் மேல் கால் போட்டு உரையாடக்கூடிய சகஜத்தை ஓப்ரா பெற்றிருந்தார். இதற்குக் காரணம் உலகின் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளராக அவர் இருந்ததுதான்.
அவருக்கு முந்தைய தலைமுறை யில் சினிமா நடிகர், நடிகைகள் பெற்றிருந்த புகழை டிவி மூலம் பெற்றவர் ஓப்ரா. 25 ஆண்டுகளாக அவர் நடத்தி வந்த தி ஓப்ரா வின்பிரே டாக் ஷோ'வை நிறுத்துவது பற்றி யாருமே யோசித்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்த நிகழ்ச்சி அவ்வளவு புகழ் பெற்றவை.
நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தபோது, அவருடைய ஆண்டு வருமானம் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல். இப்படி உலகப் புகழ் பெற்றவராகவும், பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் இருக்கும் ஓப்ரா, சிறு வயதில் தனக்கு நேர்ந்ததைப் போல மற்றக் குழந்தைகளுக்கு நேரக்கூடாது என்பதில் உறுதிகொண்ட வராக இருந்தார். தனது பணத்தில் பெரும் பகுதியைக் கறுப்பின ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்குச் செலவிட்டுவருகிறார்.
அதற்குக் காரணம் இருக்கிறது. வறுமை காரணமாகச் சிறு வயதில் பல நேரம் கோணிச் சாக்கே அவரது உடையாக இருந்திருக்கிறது. அப்போது பாட்டி வெர்னிடா லீயிடம் வளர்ந்தார் ஓப்ரா. அவர் அடிக்கடி வீட்டு வேலைக்குப் போய்விட்டதால், பிறகு தந்தையிடம் விடப்பட்டார்.
அங்கு நெருங்கிய உறவினர்களாலேயே பல முறை பாலியல் வன்முறைக்கு உள்ளானார். கறுப்பினப் பெண்களுக்கு அதுவே அன்றைய நியதியாக இருந்தது. பிறகு காதல் கொண்டவருடன் 14 வயதிலேயே தாயானார். ஆனால், சில நாட்களில் அக்குழந்தையைப் பறிகொடுத்தார்.
மற்றொருபுறம், சிறு வயதில் இருந்தே ஓப்ராவின் பேச்சுத்திறமையும், வாசிப்பும் மேம்பட்டிருந்தன. இந்த இரண்டையும் கொண்டு சமூகம் அவர் மீது குத்திய ஒவ்வொரு முத்திரையையும் தகர்க்க ஆரம்பித்தார்.
பேச்சுத் திறமை மூலம் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே 19 வயதில் ரேடியோ செய்தி வாசிப்பாளர் ஆனார். அந்த வருமானமும் போதாத நிலையில், அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டதன் மூலமாகக் கிடைத்த தொகை மூலம் கல்லூரி கட்டணங்களைச் செலுத்தினார்.
கொஞ்ச காலத்தில் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையில் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்தார். அமெரிக்காவில் அந்தக் காலத்தில் ஊரின் வாயை அடக்குவதற்காகக் கறுப்பினப் பெண்கள் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் அவர்களுக்கு, முக்கியப் பொறுப்பு கள் வழங்கப்பட்ட தில்லை. ஆனால், ஓப்ரா அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், தன் இயல்பான கடும் உழைப்பைச் செலுத்தினார்.
புகழ்பெற்ற பேச்சு
அடுத்து பால்டிமோர் தொலைக்காட்சி நிலையத்தில் வேலை பார்த்தபோது எப்படி பேட்டிகளை எடுப்பது, வி.அய்.பிக் களிடம் எப்படி தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது என்பதையெல்லாம் கற்றுக்கொண்டார். 1984இல் ஏ.எம்.சிகாகோ தொலைக்காட்சி நிறுவனமே, ஓப்ராவை வேலைக்குச் சேர அழைத்தது.
அங்கேதான் தனது அடையாளமான டாக் ஷோ நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அது மிகப் பெரிய ஹிட். அப்போது புகழ்பெற்றிருந்த பில் டொனாகு டாக் ஷோ'வை அது விஞ்சியது. டாக் ஷோவைத் தொகுத்து வழங்குவதில் தனி ஆளுமையாக வளர்ந்த பின் ஹார்ப்போ புரொட சன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, தனது நிகழ்ச்சி களைத் தானே தயாரித்தார்.
நலப்பணிகள்
தனது வருமானத்தின் பெரும் பகுதியை ஏஞ்சல் நெட்வொர்க் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார். கறுப்பினக் குழந்தைகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்தினாலும், இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் குழந்தைகளின் படிப்புக்கும் அவர் உதவி வருகிறார்.
தென்னாப்பிரிக்காவில் ஓப்ரா வின்பிரே பெண்கள் தலைமைப்பண்பு அமைப்பை நடத்தி வருகிறார். கறுப்பின மாணவிகளின் ஆளுமைப் பண்பை வளர்க்கும் கல்வி நிறுவனம் அது.
ஓப்ராவின் வார்த்தைகளிலேயே அவரது வாழ்க் கையைச் சொல்வதென்றால், இந்த உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது தெரியுமா? ஒருவர் தனது அணுகு முறையை மாற்றிக்கொண்டால் தங்கள் வாழ்க்கையையே மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான்.
போராட்டம் இல்லையேல் வலிமை நமக்குக் கிடைக்காது. உங்கள் மனக்காயங்களைப் புத்திக்கூர்மையாக மாற்றுங்கள். அதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியம்"
-விடுதலை,10.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக