வியாழன், 3 செப்டம்பர், 2015

‘மகளிர் தினம்’ ஏன் கொண்டாடுகிறோம்?

‘மகளிர் தினம்’
ஏன் கொண்டாடுகிறோம்?
ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று உலகெங் கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அய்க்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படு கிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள் ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண் களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.
1857 ஆம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கங்கள், தொழிற் சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண் களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர்.
1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907 ஆம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண் கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8 ஆம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறை வேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்தத் தீர்மானம் நிறைவேறவில்லை.
1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண் டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975 ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக அய்.நா பிரகடனப் படுத்தியது. தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான்,
பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மகளிர் தின கருப்பெருளாக அய்.நா. முன்மொழிந்திருக்கும் நோக்கம், ‘‘பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வாக்குறுதி கொள்வோம்’’ என்பதே.
-விடுதலை,1.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக