ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

பெண்ணடிமைஒழிய மார்ச் 8 உலக மகளிர் நாள்!



2014-இல் வெளியிடப்பட்ட மனித வள மேம்பாட்டு அறிக்கையின் படி, (Human Development Report 2014)148 நாடுகளில் பாலின சமத்துவத்தில் 132-வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா!! நாம் அனைவரும், வெட்கப் பட வேண்டிய இத்தகவலோடு, இந்த நாளை கொண்டாடலாம்!!
அய்யோ! பொம்பளப் புள்ளயா? என்று குழந்தை பிறந்தவுடன் கேட்கும் குரல் நகர்ப்புறங்களில் பெரிதளவில் இல்லையென்றாலும், இன்றும் இக்குரல் கிராமப்புறங்களில் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. இந்தியாவில் 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி , 1000 ஆண்களுக்கு 940 பெண்களே உள் ளனர். தமிழகத்தின் மக்கள் தொகைப் படி பார்த்தால், ஆண்களை விட 1,28,920 பெண்கள் குறைவாக உள்ளனர்.
பிறப்பதற்கே உரிமை மறுக்கப்படுகின்ற இந்தியா போன்ற கலாச்சாரக் காவலர்கள் நிரம்பி வழியும் நாடுகளில் பெண்ண டிமைத் தனத்திற்குப் பல்வேறு கோர முகங்கள் உண்டு! பிறப்பிலிருந்து இறப்பு வரை பெண்களைத் துரத்தித் துரத்தித் துன்புறுத்துகின்றன சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடுகள்!
இப்படி மனித இனத்தின் சரி பகுதி இருக்கும் பெண் களை வதைத்துக் கொண்டிருக்கும், பெண்ணடிமையின் வேர் எது? என்று ஆராய்ந்து பார்த்தோமேயானால், அதற் குக் காரணம், கலாச்சாரம், பண்பாடு, மதம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட இச்சமூகம், ஆண்மைக்கும் பெண்மைக் கும் வகுத்து வைத்திருக்கும் இலக் கணமே! என்பது புலப்படும்.
ஆம்பளப் புள்ள மாதிரி, பொம்பளப் புள்ள மாதிரி 21-ஆம் நூற்றாண்டிலும், இக்கூச்சலை ஓர் ஆணாதிக்க சமூகத் தில் கேட்டுக் கொண்டே தான் இருக் கிறோம்!! சிறுவயது குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கும் போதே அவர்களிடையே பாகுபாடுகளை விதைக்க ஆரம்பிக் கிறோம் நாம்.
ஆண் குழந்தைகளுக்கு கார், துப்பாக்கி, சில நேரங்களில் பிளாஸ்டிக் வாளைக் கூட வாங்கிக் கொடுத்து வன்மையைக் கற்பிக்கும் நாம், பெண் குழந்தைகளுக்கு பொம்மை, சமைத்து விளையாட சின்ன செப்புச் சாமான்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து மென்மையையும், சமையல் துறை உன்னுடையது என்பதையும் கற்பிக்கிறோம்.
பிஞ்சுகளின் மனதில் பாலினப் பாகுபாடுகளின் முதல் அடியை எடுத்து வைக்கும் நாம், அவர்கள் வளரும் போதும் பல பாகுபாடுகளைக் கற்பிக்கின்றோம்.
குறிப்பாக, பதின்ம வயதில் (Teen age) பொம்பளப் புள்ள மாதிரி அடக்கம் ஒடுக்கமா இரு; வாய மூடு; மெதுவா அமைதியா பேசு; ஆம்பளப் பையன் மாதிரி நடக்காத மெதுவா நட என்ற பேச்சுகளை அனைத்து பெண்களும் கேட்டிருப் பார்கள்.
அதே வேளையில் என்ன வேண்டுமானாலும் பேசுவதற்கும், எப்படி வேண்டுமானாலும் நடப்பதற்கும், நடந்து கொள்வதற்கும் ஆண்களை இச்சமூகம் அனுமதிக்கிறது. நண்பர்களோடு வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் நேரத்தில் கூட ஆண்மைக்கொரு இலக் கணம்; பெண்மைக்கொரு இலக்கணம்!
பெண்களே அதிகமாக உணர்ச்சி வசப்படுவார்கள்; ஆண்கள் வலிமை யான உள்ளம் கொண்டவர்கள் என்ற ஆணாதிக்கக் கூற்று தான், பொம்பளப் புள்ள மாதிரி அழாதே என்றும் பொம் பளப் புள்ள மாதிரி வெக்கப் படாதே என்றும் ஆண்களைப் பார்த்து நம்மைச் சொல்ல வைக்கிறது. அழுவதில் கூட பாலின ரீதியான ஓர் இலக்கணத்தைக் கற்பிக்கிறோம் நாம். காதல் போன்ற இயற்கை உணர்ச்சிகளிலும் இச்சமூகம் இவ்விலக்கணத்தை விட்டுவைக்கவில்லை.
காதலை முதலில் வெளிப்படுத்தும் உரிமை ஆண்களுக்கே உரியது. காதலுக்கான காப் பிரைட் ஆண்களிடம் மட்டுமே உள்ளது போலவும், காதலில் தோல்வியடைவதும், ஏமாற்றப்படுவதும் ஆண்கள் மட்டும் தான் என்றும், ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணைப் பிடித்திருந்தாலும் அதை வெளிப்படுத் தாமல், அதனை அந்த ஆண் வெளிப்படுத் தும் வரை பொறுமை காக்க வேண்டும்; அது தான் பெண்மைக்கழகு என்றும், அன்றிலி ருந்து இன்று வரை வளைவு நெளிவுகளை வர்ணித்து பெண்களைப் போகப் பொரு ளாக மட்டுமே சித்தரிக்கும் பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் தவறாமல் கற்பிக்கின்றன.
செக்ஸ். இவ்வார்த்தையைக் கொண்டாடும் உரிமை ஆண்களுக்கே! அதைப் பற்றி அனைத்தும் அறிந்து வல்லு நர்களாக இருப்பதே ஆண்மைக்கழகு. உடலுறவைப் பற்றி அறிவியல்பூர்வமாக அறிந்திருந்தாலும், கற்றிருந்தாலும் அதை மறைத்து தெரியாதது போல் வெட்கப்படு வதே பெண்மைக்கழகு என்ற கற்பிதமும் ஆண் எதையும் செய்யலாம்; பெண் அடங்கியிருக்க வேண்டும் என்ற கற்பித மும் தான் பெண்களை, பாலியல் வன்முறை களுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் ஆளாக்குகிறது.  அழகு பெண்மைக்குரியது; அறிவு ஆண்மைக்குரியது, என்ற முட்டாள் தனமான இலக்கணம் பெண்கள் படித்து, பல துறைகளில் சாதித்து, பொருளாதார சுதந் திரம் அடைந்துவிட்ட இக்காலக்கட்டத்தி லும் தொடர்கிறது. அதே போல், கற்பு என்ற அடிமைச் சொல்லும் பெண்மையின் இலக்கணமாகவே இன்றும் உள்ளது.
இப்படி வாழ்க்கையின் அனைத்துக் கூறு களிலும், ஆண்மை மற்றும் பெண்மையின் இலக்கணங்களைத் தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறது இச்சமூகம் கேட்டால் இது தான் நம் கலாச்சாரம் என்று சொல்வார்கள் கலாச்சாரக் காவலர்கள். ஆண்மைக்கும், பெண்மைக்கும் இச்சமூகம் கற்பிக்கும் இந்த இலக்கணங்கள் தான் பெண்களை நல்ல அடிமைகளாகவும், ஆண்களை எஜமானர்களாகவும் வளர்த் தெடுக்கின்றன. இதனால் தான், பெண்கள் 21-ம் நூற்றாண்டிலும் சிறந்த அடிமை களாகவே உள்ளனர்.
21-ஆம் நூற்றாண்டில் பெண்களின் நிலை
திருமண அமைப்பு முறை பெண்களை எப்போதும் அடக்கி ஆள்கிறது. பெண் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஓரளவிற்கு சாத்தியப்பட்டுள்ள இக்காலக்கட்டத்திலும், பெண்கள் கல்வி அறிவுள்ள, பிள்ளை பெற்று வளர்க்கின்ற, சிலர் குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவு கின்ற அடிமைகளாகவே திருமண அமைப்பு முறைக்குள் வாழ்கின்றனர்.
இதனை நிரூபிக்கிறது மத்திய குடும்ப மற்றும் சுகாதார கணக்கெடுப்பு  III [National Family Health Survey–III (2005-06)].
ஒரு மனிதர் சுதந்திரமாக வாழ்வதற்கு தான் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்து வாழ்வது மிக மிக அவசியமான ஒன்றாகும். மேலே கூறப்பட்டுள்ள கணக்கெடுப்பில் காட்டப்பட்டுள்ள முடிவுகள் எதுவும் பெரிய முடிவுகள் அல்ல.
ஆனால் அப்படிப்பட்ட அற்பமான முடிவுகளை எடுப்பதற்குக் கூட தன் கணவனையோ அல்லது தான் வாழும் சூழலையோ சார்ந்தே இருக்க நிர்பந்திக்கப் படுகிறாள் பெண்!
ஆயுள் முழுவதும் அடுப்பங்கரையி லேயே கிடந்து மடிவதற்காகவே ஒரு தனி இனம் இருக்க வேண்டும் என்பது பச்சை வர்ணாசிரமத்திலும் பன்மடங்கு மோசமான கொள்கை [குடிஅரசு 18.03.1947] என்று பெண்களை சமையலறைக்குள் முடக்கும் அடிமைத்தனத்திற்கெதிராக 1947-லேயே குரலெழுப்பியுள்ளார் பெரியார்.
ஆனால் இன்றும், சமையல் அறை பெண்களின் டிப்பார்ட்மெண்ட்டாகவே உள்ளது என்பதை நிரூபிக்கிறது இப்புள்ளி விவரம். சமையல் மற்றும் வீட்டு வேலை களில் ஆண்கள் ஒரு நாளைக்கு 19 நிமிடங்களை மட்டுமே செலவிடுகின்றனர்; ஆனால் பெண்களோ 298 நிமிடங்கள் (5 மணி நேரத்திற்கு 2 நிமிடங்கள் குறைவு) செலவிடுகின்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி களாகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், சுய தொழில் செய்யும் தொழிலதிபர்களாக வும், சிறந்த ஆளுமைகளாகவும், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களாகவும், விஞ் ஞானிகளாகவும், பொதுநல இயக்கங்களில் தொண்டாற்றுபவர்களாகவும், மிகக் குறை வான எண்ணிக்கையிலேயே பெண்கள் இருக்கின்றனர்.இவையனைத்திற்கும் ஆண்மை, பெண்மை என்ற கற்பிதங்கள் தான் காரணம்!!
இந்நிலை மாறி பெண்கள் விடுதலை பெற...
பல பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதே தங்களுக்களிக்கப்பட்ட மிக உயரிய உரிமை என்று கருதி திருப்தி அடைந்து விடுகிறார்கள். ஆனால், பெரியார் கூறியது போல், அழகு மற்றும் அலங்காரப் பைத்தியம் இருப்பதால் தான் இன்றும் பெண்கள் போகப் பொருட் களாகவே உள்ளனர். அழகு என்னும் விலங்கைத் தங்கள் மூளையில் இருந்து உடைத்தெறிந்தால் தான் பெண்ணைப் பொருளாகப் பார்க்கும் தன்மை(Objectification)  அழிந்து மனிதர்களாக மதிக்கும் நிலை உண்டாகும்! மேலும், பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்ற எண்ணம் முதலில் பெண் களின் மனதில் ஆணித்தரமாக எழ வேண்டும்.
ஏன்? இக்கேள்விக்குப் பெரியார் 6.4.1946-ல் குடிஅரசு ஏட்டில் எழுதியதைப் படித்தால் பதில் கிடைக் கும். பெண்கள் தங்கள் ஜீவசுபாவத்துக் காகத் தாங்களே முயற்சியெடுத்துக் கட்டுப்பாடுகள் என்னும் விலங்குகளை தகர்த்தெறிய முற்பட்டா லொழிய தங்களை வாசனைத் திரவியங்கள் போலவும், உடையணிகள் போலவும் மதித்து, அனுபவித்துக் கொண்டு வரும் ஆண்களாலும், எப்படிப்பட்ட சமதர்ம ஆட்சியாலும், பொதுவுடமைக்கார ருடைய புரட்சியாலும், விடுதலை ஏற் படாது - பெரியார் (குடிஅரசு 6.4.1946)
உயிரியல் அடிப்படையில் பார்த்தோ மேயானால் பிறப்புறுப்புகளையும், இனப்பெருக்கத்திற்கான உறுப்புகளை யும் தவிர, ஆண்களுக்கும், பெண்களுக் கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இதைத் தான் மக்களைப் படித்த சமூக விஞ்ஞானி பெரியார் அங்க அமைப் பிலன்றி அறிவின் பெருக்கிலோ, வீரத் தின் மாண்பிலோ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்றத்தாழ்வான வித்தியாசம் இல்லை என்றார்.
பெண்களை அடிமைப்படுத்துவதற் காக, ஓர் ஆணாதிக்க சமூகத்தால் கற்பிக்கப்பட்ட கற்பிதங்கள் தான் ஆண்மை, பெண்மை என்னும் கூறுகள்!!
இனியாவது நம் குழந்தைகளை ஆண் களாகவோ, பெண்களாகவோ வளர்க் காமல், மனிதர்களாக வளர விடுவோம்!! ஏனெனில், ஆண்மையையும் (Masculinity) பெண்மையையும் (Feminity)  அழித்தொழித்து, மனிதத்தை Humanity) வென்றெடுப்பதே பெண்ணுரிமைப் போரின் இறுதி இலக்கு என்பதைத் தான் அறிவு ஆசான் பெரியார், வன்மை, கோபம், ஆளும் திறன் ஆண்களுக்கு சொந்தம் என்றும் சாந்தம், அமைதி, பேணும் திறன் பெண்களுக்கு சொந்தம் என்றும் சொல்வதாவது, வீரம், வன்மை, கோபம், ஆளும் திறன் புலிகளுக்கு சொந்தம் என்றும் சாந்தம், அமைதி, பேணும் திறன் ஆட்டுக்கு சொந்தம் என்றும் சொல்வது போன்றே ஒழிய வேறில்லை.நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளும் திறன் உண்டு என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதேயாகும் என்கிறார்.
எனவே ஆண்மையையும் பெண் மையையும் அழிப்பதற்குப் பெரியாரின் பெண்ணியமே ஓர் பேராயுதம்!! ஆகை யால், பெண்களே! குறிப்பாக, மகளிர் தினத்தை கோலப் போட்டியோடும், மெஹந்தி போட்டியோடும் கொண் டாடிக் கொண்டிருக்கும் பெண்களே!! பெரியார் கண்ட புரட்சி பெண்களாக மாறுங்கள்!! இலக்கை அடையுங்கள்!!!
- யாழ்மொழி
-விடுதலை,8.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக