செவ்வாய், 4 டிசம்பர், 2018

பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்



ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு காங்கோ நாட்டைச் சேர்ந்த டெனிஸ் மக்வெஜ் மற்றும் ஈராக் நாட்டின் யாசிடி இனத்தைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் நாடியா முராட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.


சிரியா எல்லையை ஒட்டியுள்ள ஈராக் நாட்டின் சின்ஜார் நகரத்தை சேர்ந்த நாடியா முராட், கடந்த 2014-இல் அய்.எஸ். தீவிர வாதிகள் சின்ஜார் நகரத்தை தாக்கியபோது பாலியல் அடிமையாக மொசூலுக்கு கடத்தப் பட்டார். அங்கு தீவிரவாதிகளின் கூட்டு பலாத்கார பாலியல் வன்முறைக்கு ஆளாகி மூன்று மாதங்களுக்குப் பின் தப்பிச் சென்று ஜெர்மனியில் அவரது சகோதரியிடம் அடைக்கலமானார். போரில் ஆண்களைக் கொன்று பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் அவலத்தை நாடியா வெளிப் படுத்தியதோடு, தன்னுடைய யாசிடி இன மக்களுக்காகவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்காகவும் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வரு கிறார். 2016-ஆம் ஆண்டு முதல் பாலியல் அடிமைகளுக்காக அய்.நா.வின் நல்லெண்ண தூதராக உள்ள நாடியா முராட் தன்அனுப வத்தை கூறுகிறார்:


2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று இரவு வடக்கு ஈராக் எல்லைப் பகுதியில் உள்ள சின்ஜார் நகரத்திற்குள் நுழைந்த அய். எஸ். தீவிரவாதிகள் சிறிய கிராமத்தில் இருந்த எங்களை சிறைப்பிடித்த போது, என்னுடைய தாயார் மற்றும் ஆறு சகோதரர்களை சுட்டுக் கொன்றனர். என்னையும், மற்ற இளம் பெண்களையும் மொசூலுக்கு கடத்திச் சென்றனர். எங்களை சிறை வைத்த இடத்தில் ஏராளமான பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.  அவர்கள் அனைவருமே எங்களை பாலியல் அடிமை களாகவே நடத்தினர். ஆனால் அவர்கள் நடத்தும் பத்திரி கையில், மேலும் பல புதிய பெண்களை கவர்வதற்காக பெண்களைப் பற்றி உயர்வாக எழுதுவார்கள். நாங்கள் சிறைவைக்கப்பட்ட இடம் திறந்த வெளியாக இருந்ததால் சுலபமாக என்னால் தப்பிக்க முடிந்தது. சிலரது உதவி யால் ஜெர்மனியில் உள்ள என் சகோதரியிடம் தஞ்சமடைந்தேன்.


என்னுடைய மிகப்பெரிய மூன்று தவறுகளில் முதலாவது நான் குர்து இனத்தைச் சேர்ந்தவள், துருக்கி, ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் வசிக்கும் குர்து இன மக்கள், பல நூற்றாண்டுகளாக தங்களுக்குரிய உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். இரண்டாவது நான் உலகிலேயே மிக பழமை யான யாசிடி பிரிவை சேர்ந்தவள். நாங்கள் சாத்தானை வணங்குபவர்கள் என்பது சன்னி பிரிவினர் நம்பிக்கையாகும். மூன்றாவது நான் ஒரு பெண்ணாக பிறந்தது. எந்த ஆண் வேண்டுமானாலும் என்னை சுலபமாக அடையமுடியும்.


குர்து பிரிவினரோ, சன்னி பிரிவினரோ அவர்களில் ஒரு அங்கமாக யாசிடி பிரிவினரை அங்கீகரிப்பதில்லை. எங்களை சிறை பிடித்த தீவிரவாதிகள் அன்றிரவு கிராமங் களையும், வழிபாட்டு தலங்களையும் அடித்து நொறுக்கி கொளுத்தியதோடு, கல்லறைகளை கூட சேதப்படுத்தினர். ஆண்களை வரிசை யாக நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இவர்களை எதிர்த்து போராட வேண்டிய குர்து ராணுவப் படையினர் சந்தடி யில்லாமல் இருட்டில் மறைந்தனர். தப்பிவந்த நான் பெண்களை வணிக பொருளாக கருது வதை எதிர்த்தும், என் இன மக்களை காப் பாற்றுவதற்காகவும் போராடத் தொடங் கினேன். இது குறித்து அதிகம் பேசினேன். நான் பட்ட துயரங்கள் என்னோடு முடியட்டும் என்ற நினைப்பில் கடைசிப் பெண் என்ற தலைப்பில் என் சுயசரிதையை எழுதி வெளியிட்டேன்.  என்னைப்போன்று பாலியல் வன் முறைக்கு ஆளான பெண்களை இந்த சமூகம் குற்றவாளிகள் போல் பார்ப்பதை எதிர்த்தேன். நாஜிக்களை போல் இந்த அய்.எஸ். தீவிரவாதிகளையும் போர்க் குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டுமென்று குரல் எழுப்பினேன். இதற்கு மனித உரிமை ஆர்வலர்களும், வழக் குரைஞர்களும் ஆதரவளிக்க முன்வந்தனர்.


இன்று எனக்கு உலகின் மிகப்பெரிய விருதான நோபல் பரிசு கிடைத்தது குறித்து பெருமைப்படுகிறேன். பெரும்பாலான உலக நாடுகளில் சரிசமமான அளவில் பெண்கள் எண்ணிக்கை உள்ளது. அவர்களில் பாலின வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு எதிராக போராடுவதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்த பெண்கள் அனைவரும் முன்வர வேண்டும். அதற்கு வழிகாட்டியாக நான் இருப்பேன். பெண்கள் உரிமைக்காக இறுதி வரை போராடுவேன் என்று கூறும் நாடியா முராட், இம்மாத இறுதியில் மும்பை வரவுள் ளார். அப்போது அவருக்கு இங்குள்ள ஹார்மனி பவுண்டேஷன் பெருமைக்குரிய மதர்தெரசா நினைவு விருது வழங்கி கவுர விக்கவுள்ளது.


-  விடுதலை நாளேடு, 4.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக