திங்கள், 4 டிசம்பர், 2017

விமானத்தில் உலகைச் சுற்றிய பெண் ஊழியர்கள்


முற்றிலும் பெண் ஊழியர்களால் உலகை சுற்றிய விமானம் 


புதுடில்லி, மார்ச் 5 சர்வதேச பெண்கள் தினம், வருகிற 8-ஆம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஏர் இந்தியா நிறுவனம், உலக சாதனைக்காக முற்றிலும் பெண் ஊழியர்களை கொண்டு ஒரு சாதனைக்கு திட்டமிட்டது. அதுதான், விமானத்தில் உலகை சுற்றி வரும் திட்டம்.
அதன்படி, கடந்த 27ஆம் தேதி, டில்லியில் இருந்து போ யிங் ரக ஏர் இந்தியா விமானம், அமெரிக்காவின் சான் பிரான் சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. செல்லும்போது, பசிபிக் நாடுகள் வழியாக சென்ற விமானம், திரும்பி வரும்போது, அட்லாண்டிக் நாடுகள் வழியாக உலகை சுற்றி வந்து டெல்லி வந்தடைந்தது.

இந்த விமானத்தில், விமானிகள், சிப்பந்திகள் அனைவரும் பெண்கள் ஆவர். பயணிகளின் பொருட்களை பரிசோதித்த வர்கள், ஓடுபாதை பணியாளர்கள், விமானம் பரிசோதித்து பறக்க அனுமதித்த என்ஜினீயர்கள், விமானம் தரை இறங்க அனுமதி அளித்த விமான கட்டுப்பாட்டு கோபுர ஊழியர்கள் ஆகிய அனைவருமே பெண்களாக இருந்தனர்.

இது, புதிய உலக சாதனை ஆகும். இதை அங்கீகரிப்பதற்காக, கின்னஸ் நிறுவனத்திடமும், லிம்கா சாதனை புத்தக நிறுவனத் திடமும் ஏர் இந்தியா விண்ணப்பித்துள்ளது
-விடுதலை,5.3.17

குழந்தைத் தொழிலாளர்களின் நிலை குறித்து   நாடாளுமன்றத்தில் உரையாற்றிய  பெங்களூருவைச் சேர்ந்த தமிழ்பெண்




5 வயதில் இருந்து குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவங்கியவர் பெங்களூரு வாழ் தமிழ் சிறுமி கனகா. தன்னுடைய நம்பிக்கை மற்றும் துணிச்சலான முடிவுகள் காரணமாக வாழ்க்கையில் உயர்ந்து வரும் கனகா உலகக் குழந்தைகள் நாளன்று (நவ.20) இந்திய நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கருநாடக மாநிலம் பெங்களூருவில் குடிசை வாழ் பகுதியை சேர்ந்தவர் கனகா (வயது 17). தமிழர்களாக அவர்கள் பெங்களூருவில் தங்கியி ருந்த வேலைபார்த்துவந்தனர். இந்த நிலையில் கனகாவின் தந்தை உடல்நலம் சீர்குலைந்து படுத்த படுக்கையாகிவிட்டார்.

கனகாவின் தாயாருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். அப்போது கனகாவிற்கு 7 வயது. இந்த நிலையில் தனது வீட்டையும் தந்தையைக் காப்பாற்றவேண்டும் என்ற நிலையில் உறவினர்களிடம் உதவி கேட்டபோது அவர்கள் தங்களின் வீட்டுவேலைகளைச் செய்யுமாறு கனகாவை நிர்பந்தம் செய்தனர்.

அப்போது வீட்டுவேலை செய்யச்சென்ற கனகா குழந்தைத்தொழிலாளியாக மாறினார். குப்பை பொறுக்குவது, காகித ஆலையில் வேலைபார்ப்பது, பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிவது போன்ற பல்வேறு பணிகளை இவர் செய்துவந்தார். எந்த ஒரு இடத்திலும் சிறுமி ஒருவர் பணிசெய்கிறாரே என்று யாரும் இரக்கம் காட்டவில்லை, அவருக்கு மேலும் மேலும் பணிச் சுமையைத்தான் தந்தார்கள்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண மண்டபம் ஒன்றில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த கனகாவை ஒரு தொண்டு நிறுவனம் மீட்டது,  அதன் பிறகு கனகாவின் வாழ்க்கை மாறியது, தற்போது பியுசி படித்துக்கொண்டு இருக்கும் அவர் ஆங்கிலத்தில் நல்ல புலமைபெற்றுள்ளார்.   இவரை யூனிசெப் அமைப்பு இந்தியப் பிரிவின் ஆலோசகர் என்ற பதவியைத் தந்து கவுரவித்துள்ளது.

ஆங்கிலம் மற்றும் தமிழ், கன்னடம், போன்ற மொழிகளில் திறமைபடைத்த கனகா யுனிசெப் அமைப்பின் சார்பில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றியுள்ளார்.

உலகக் குழந்தைகள் நாள் நவம்பர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதுமிருந்து 30 குழந்தைகள் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய நபராக கனகாவிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அவர் 20ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

இதுகுறித்து கனகா கூறுகையில், குழந்தை களின் உரிமைகளை பாதுகாக்க எவ்வளவோ சட்டங்கள் இருந்தாலும், அவை முறையாக அமலாக்கப் படவில்லை. மேலும் சட்டத்தின் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி குழந்தைத் தொழி லாளர்களை நியமிப்பவர்கள் தப்பிவிடுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வளவு வேதனையானது என்பதை நானே அனுப வித்திருக்கிறேன், இதனை நான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். என்னைப்போன்று ஆயிரக்கணக் கான குழந்தைகள் பல சுரண்டல்களை எதிர்கொள் கின்றனர். நகரங்களில் உள்ள குழந்தைகள், அவர் களை காப்பாற்றிக்கொள்ள சிலரை அணுகவாவது முடியும். ஆனால், என்னை போன்று குடிசை பகுதிகள், கிராமங்களில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவிக்கரம் வேண்டும் என கூறினார்.

- விடுதலை நாளேடு,21.11.17

செவ்வாய், 14 நவம்பர், 2017

நாசாவுக்குச் சென்ற கிராமத்து மாணவி


விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை முன்னோடியாக நினைத்து, விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வுகூடத்துக்கு செல்ல வேண்டுமென்று கனவு கண்ட ஆஷ்னா சுதாகர் (27) அண்மையில் தன்னுடைய ஆசையை நிறை வேற்றியுள்ளார்.

கோழிக்கோடு, கொடுவேலி கிராமத்தைச் சேர்ந்த ஆஷ்னாவின் பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே கல்வியில் ஆர்வமாக இருந்தாலும், ஆஷ்னாவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு. 

2008-ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவுடன் நைனிதாலில் உள்ள ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வி.எஸ்.எஸ்.சி. மூலம் அமெரிக்காவில் உள்ள நாசாவில் குறிப்பிட்ட எல்லைக்குள் வசிக்கும் உரிமை அடிப்படையில் பயிற்சி பெற விண்ணப்பித்தார்.

கடுமையான நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் இவரது ஆய்வுக் கட்டுரைகளைப் பரிசீலித்து, மகாராஷ் டிரத்தில் உள்ள நாசா விண்வெளி பள்ளியில் 15 நாள் பயிற்சிக்கு அனுமதியளிக்கப்பட்டது. தொடர்ந்து “இன்டர்ன்சிப்’ அனுமதியின் பேரில் நாசாவுக்கு மூன்று மாத காலம் பயிற்சிக்குச் சென்று கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பியுள்ளார். 

தன்னுடைய கனவு நனவானது குறித்து மகிழ்ச்சி யடைந்துள்ள ஆஷ்னா, மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மீண்டும் நாசா செல்ல வுள்ளார். தற்போது செங்கனாச்சேரி என்.எஸ்.எஸ். இந்து கல்லூரியில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்து வரும் ஆஷ்னா, எழுதுவதிலும் நடனத்திலும் கூட ஆர்வமிக்கவர். 
- விடுதலை நாளேடு 14.11.17

சோதனையை சாதனையாக்கிய சாதனா



நாமெல்லாம் ஒரு மொழியை கற்றுக் கொள்ள  பல ஆண்டுகள் உழைக்க வேண்டி இருக்கும். படிக்க முடிந்தால், எழுத வராது. அப்படியே எழுதத் தெரிந்தால், பேச வராது. ஆனால்  ஒரே வருடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்ததோடு மட்டும் அல்லாமல் அந்த மொழியில் நடந்த ஒரு போட்டியில் பங்கு கொண்டு அதில் வெற்றியும் பெற்று பரிசும் வாங்கி வந்துள்ளார். அதுவும் இந்திய மொழி இல்லை, வெளிநாட்டு மொழி.  இப்படி பரிசு பெற்ற  மாணவி தான் சாதனா.

சென்னையில் சட்டம் பயின்று வரும் இந்த மாணவியிடம்  எப்படி முடிந்தது என்று கேட்டால் நம்  தமிழும், அவர்களது கொரிய மொழியும் கிட்டத்தட்ட ஒன்று போலவே உள்ளது என்று சிரித்துக் கொண்டே  கூறுகிறார். அவர் மேலும் கூறியது:

“எனக்கு எப்போதும் புது மொழிகள் மீது பற்று அதிகம்.  நான் 9ஆவது படிக்கும் போது எனது நெருங்கிய தோழி வெளிநாட்டு சீரியல் ஒன்றை பார்த்த தாகவும், அது மிகவும் நன்றாக இருந்ததாகவும் கூறினார். நானும் பார்க்கிறேன் கொடு என்றேன். தன்னிடம் உள்ள “பென் ட்ரைவில்’   அந்த சீரியலை காப்பி எடுத்துக் கொடுத்தார். 

அது கொரிய மொழியில் வந்த சீரியல் “பாய்ஸ் பிபோர்  பிளவர்ஸ்”. நான் அதை கொரிய மொழியிலே யே பார்த்து ரசித்தேன்.  அது பின்னர்  “புதுயுகம்” தொலைக்காட்சியில் தமிழில் வெளிவந்தது. கொரிய மொழி மீது அன்று முதல் ஒருவிதமான பற்று ஏற்பட்டது.  இந்த வெளிநாட்டு மொழியை சென்னையில் யாராவது கற்றுக் கொடுக்கிறார்களா? என்று தேடினேன். 

இன்கோ சென்டர்  என்ற ஒன்று கொரிய மொழிக்காக மட்டும் அல்லாமல், அந்த நாட் டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஒரு சிறந்த இடம் என தெரிந்தது.  அந்த மய்யத்தின்   தலைவி ரதி ஜாபர் அவர்களை சந்தித்து என் எண்ணத்தை கூறினேன். 

அவரும் சந்தோசத்துடன் கொரிய மொழியின் பயிற்சி வகுப்பில் சேர  சொன் னார். சேர்ந்த பிறகு தான் தெரிந்தது நம் தமிழ் மொழியும், கொரிய மொழியும்  பல விசயங்களில் ஒன்று போல உள்ளது என்று. நம் தமிழ் வார்த்தைகளான அம்மா, அப்பா, பாம்பு, வா, போன்று நிறைய தமிழ் வார்த்தைகள் போல், கொரிய மொழியிலும் கிட்டத்தட்ட அதே ஒலியுடன் இருக்கின்றன. 
அது மட்டும் அல்லாமல்  தமிழில் நாம் மரியாதை கொடுத்து பேசுவது   போல் கொரிய மொழியிலும் பேசுகிறார்கள். “நான் சிவே கந்தா’ என்று கூறினால், “நான் வீட்டிற்கு போறேன்’ என்று அர்த்தம்.    

சென்னையில் உள்ள கொரிய மொழி பள்ளியில் பலர் இரண்டு மூன்று ஆண்டு களாக படிக்கிறார்கள்.  இந்த ஆண்டு படிப்ப வர்களிடம் ஒரு சிறு போட்டி வைத்து மூன்று பேர்களை தேர்ந்தெடுத்தார்கள். 

அதில் நான் முதலில் வெற்றி பெற்றேன். பின்னர் எங்களை எல்லாம் வீடியோ படமெடுத்து அதை கொரியாவிற்கு அனுப் பினார்கள். அங்கு 56  நாடுகளில் உள்ள 105  கொரியன் மய்யத்தில் இருந்து 140  பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள்.  இந்த  140  பேர்களை  ஸ்கைப்  மூலம்  பேட்டி கண்டார்கள்.  அதில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து 12  பேர்கள் தேர்வானார்கள். இவர்கள் கொரியாவிற்கு பயணமானார்கள்.

அதில் நானும் ஒருத்தி என்பதில் நான் மிகவும் மகிழ்ந்தேன். அங்கு எங்களை மேடையில் பேசவிட்டு தேர்ந்தெடுத்தார்கள். அதில் நான் மூன்றாவது பரிசினை பெற்றேன். 

மற்ற இருவர் மட்டுமல்ல என்னுடன் வந்த பலரும் மூன்றாவது ஆண்டு கொரிய மொழியை படிக்கிறார்கள். நான் முதலாம் ஆண்டுதான் முடித்துள்ளேன்.  

எனக்கு மகிழ்ச்சியை தந்த விஷயங்கள் இரண்டு. கொரிய மொழியை கண்டுபிடித்த ராஜா செஜாங் இன்ஸ்டிடியூட் தான் இந்த போட்டிகளை  நடத்தியது.  

இரண்டாவது, இந்த பரிசினால் நான் அடுத்த ஆண்டு மீண்டும் கொரியா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 

மூன்று   மாதம் அங்கு தங்கி இருந்து மேலும் அதிகமாக கற்க இந்த வாய்ப்பையும் நான் பயன்படுத்திக் கொள்வேன்.    

கொரியா சென்றபோது அங்குள்ள ஜி ஜூ (ஒங் ஒன்) என்ற தீவிற்கு சென்றோம். யங்ஜின் என்ற இடத்தையும் பார்த்தோம். அங்குள்ள கிராமம், அவர்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவைகளையும் பார்த்து தெரிந்து கொண்டோம். பல்வேறு பூங்காக்கள், அருங்காட்சியகம் ஆகியவைகளையும் பார்த்து ரசித்தோம். 

எங்களுடைய சவுகரியத்தை அவர்கள் முதன்மையாக எடுத்துக் கொண்டார்கள் என்று தைரியமாக கூறலாம். 

அதற்கு ஒரு சிறு உதாரணம், இந்த போட்டியாளர்களுக்கு தேவையான சாப் பாட்டை அவர்கள் தயாரித்து  வழங்கினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு பார்த்துப் பார்த்து எங்களை எல்லாம் கவனித்தார்கள் என்றால் அது மிகை இல்லை. 

அடுத்த ஆண்டு மூன்று மாதம் தங்கி படித்த பின், பரீட்சை உண்டு. அதில் நான் தேர்ச்சி பெற வேண்டும்  என்று இப்பொழுதே கொரிய படிப்பை மேலும் கவனமாக படித்து வருகிறேன்.
- விடுதலை நாளேடு 14.11.17

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான சட்டங்கள் எழுத்துரு

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005 
இந்தச் சட்டத்தின்படி பெண்கள், தன் கணவரோ, மாமியாரோ துன்புறுத்தினால் தண்டனை பெற்றுத் தரலாம். கணவன் வீட்டில் மட்டும்தான் என்றில்லாமல் பெற்றோர் தன்னை துன்புறுத்தினாலும் இந்தச் சட்டத்தின் கீழ் புகாரளிக்கலாம். பெரும்பாலும் காதல் திருமணம் செய்ய விழையும் பெண்ணை அடித்து உதைத்துத் துன்புறுத்துவது போன்றவற்றில் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தலாம். இச்சட்டத்தின்படி காவல் நிலையம் சென்று புகாரளிக்கத் தேவை யில்லை. காவல் நிலையத்தில் புகாரளித்தால் எஃப்.அய்.ஆர். போடப்படுவதுபோல, மாவட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் புகாரளித்தால் டி.அய்.ஆர் பதிவு செய்யப்படும். இதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான பெண்கள் கணவனுக்கு எதிராக காவல்நிலையம் செல்லத் தயங்குவதால் இச்சட்டத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர் திருமண தடைச் சட்டம், 2006  
சர்வதேச மகளிர் ஆராய்ச்சி மய்யம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 48 சதவிகிதப் பெண்கள் 18 வயதுக்குள்ளேயே திருமணம் புரிந்து கொள்வதாகக் கூறுகிறது. குழந்தைத் திருமணத்தில் இந்தியா 13ஆவது இடத்தில் இருக்கிறது. இப்பழக்கம் தொன்றுதொட்டு இருப்பதால் அதைத் தடுப்பது சிரமமாக இருக்கிறது. 2007ஆம் ஆண்டு முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, பெண்ணுக்கு குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் ஆணுக்கு 21 ஆகவும் ஆக்கப்பட்டது.இச்சட்டத்தின்படி குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்துவைப்பது குற்றம். ஆயினும் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு இன்றும் பல குழந்தை திருமணங்கள் நடைபெற்றுதான் வருகின்றன.

சிறப்பு திருமணச் சட்டம், 1954
இந்தியாவில் பல மதங்களும், ஜாதி அமைப்புகளும் இருப்பதால் மதம் மற்றும் ஜாதி தாண்டி திருமணம் புரிகிறவர்கள் திருமணத்தை முறையாக பதிவு செய்ய வேண்டுமென்றாலோ,  திருமணத்துக்குப் பின்னான வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டு விவாகரத்து நோக்கிய பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வை நாடவோ இச்சட்டத்தின் படி முறையாக பதிவு செய்தால்தான் மண முறிவு கிடைக்கும். இச்சட்டத்தின்படி திருமணம் செய்ய விரும்புவோர் திருமணப் பதிவு அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பித்தபின் மணம் செய்ய விரும்புவோரின் பெயர்கள் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும். ஒரு மாதத்திற்குப் பின் திருமணம் முறையாக பதிவு செய்யப்படும்.

வரதட்சணை தடுப்புச் சட்டம்,1961 
வரதட்சணை என்பது காலம் காலமாக நம் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் கொடிய விஷம். வரதட்சணை கொடுக் காததற்காக கணவர் வீட்டில் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு பெண்கள் ஆளாகின்றனர். வரதட்சணைக்காக மனைவியை உயிருடன் எரித்த சம்பவங்களும் நாம் அறிந்ததுதான். வரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் எனக் கூறுகிறது இச்சட்டம். வரதட்சணை கேட்பவர்கள் மீதும் கொடுப்பவர்கள் மீதும் இச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம். இச்சட்டத்தின்படி பலர் தண்டனை பெற்றுள்ளனர்.

இந்திய  விவாகரத்துச் சட்டம், 1969

திருமண வாழ்வில் திருப்தியின்மை, வெறுமை, கட்டாயம் போன்ற பல காரணங்களால் இருவரும் மனமொத்தோ அல்லது இணையர்களில் ஒருவரோ விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு நடத்தப்பட்டு, விவாகரத்து வழங்கப்படும்.

பிரசவகால பலன்கள் சட்டம், 1861 
பிரசவ காலத்தின்போது பணிபுரியும் பெண்ணுக்கு அந்நிறுவனம் 80 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும், மருத்துவ செலவையும் வழங்க வேண்டும் எனக்கூறுகிறது இச்சட்டம். இச்சட்டம் பெண்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய சட்டம். பொருளாதாரரீதியாக பெண்களுக்கு உதவவும், வேலையை உறுதி செய்யவும் இச்சட்டம் உதவுகிறது.

மருத்துவரீதியிலான கருக்கலைப்புச் சட்டம், 1971
கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா?  என்பதைத் தெரிந்து கொண்டு, கருக்கலைப்பு செய்வதற்கு எதிராக இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றும் பல நகரங்களில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் பெண் ஆணா பெண்ணா என்று அறிந்துகொள்ளும் வசதியை ரகசியமாக தரும் இடங்களும் செயல்படுகின்றன என்பது உண்மைதான்.

பணியிடங்களில் பெண்களின் மேல் பாலியல் கொடுமை தடுப்புச் சட்டம் 2013  
பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளை தடுப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 36 சதவீத இந்திய நிறுவனங்களும், 25 சதவீத பன்னாட்டு நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நடப்பதில்லை என உறுதிப்படுத்தியிருக்கின்றன. பணியிடங்களில் பாலியல் தொந்தரவு, நெருக்கமாக அணுகுதல், பாலியல்ரீதியிலான சீண்டல் ஆகியவற்றுக்கெதிராக இச்சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தர முடியும்.

பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் தடைச் சட்டம், 1986 
எழுத்து, ஓவியம், விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்களில் பெண்களை தவறாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டம் இது. குறிப்பிட்ட ஒரு பெண்ணை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண் சமூகம் பற்றிய தவறான சித்தரிப்புக்கும் இதன் மூலம் தண்டனை பெற்றுத் தர முடியும். ஆனால் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறைவாகவே உள்ளது.

தேசிய மகளிர் ஆணையச் சட்டம், 1990  
இச்சட்டத்தின்படி லலிதா குமாரமங்கலம் தலைமையில் மகளிர் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. பெண்களின் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு எதிராக நடக்கக் கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறது. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பொருளாதார ரீதியில் வலுவுடையவர்களாக்குவதற்கான முன்னெடுப்புகளை இந்த ஆணையம் மேற்கொள்கிறது.

சம ஊதியச் சட்டம், 1976
எந்தப் பணியிலும் ஆண்-பெண் இருபாலினருக்கும் சமமான அளவிலான வாய்ப்பும், ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. எந்தப் பணியிடமாக இருந்தாலும் பெண் என்கிற காரணத்தால் ஊதியம் மறுக்கப்படக் கூடாது அல்லது குறைக்கப்படக்கூடாது. ஆண்கள் கற்றுக்கொள்ளும், மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.
-விடுதலை,1.8.17

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

பெண்களுக்கான சட்டங்கள்


1925    இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் மனைவி, பெண் குழந்தைகளுக்கு சொத்து உரிமை வழங்கப்பட்டது.

1929  குழந்தை திருமணத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது.

1955 திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பட்டு, தற்பொழுது 21 வயதாக உயர்த்தப்பட்டு பின்பற்றப் படுகின்றது.

1956  வாரிசுரிமைச் சட்டம், பெற்றோர்களின் சொத்துக்களையடைய பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

1956 விதவைகள் மறுமணச் சட்டம்,  விதவைகள்  மறுமணத்தை அங்கீகரிகத்து சட்டம்.

1961   மகப்பேறு நலச்சட்டம் - மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டது.

1961 வரதட்சணை ஒழிப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணை.

1986  பெண்களை அநாகரிகமாகக் காட்டுவதை தடை செய்யும் சட்டம்.

1989 வாரிசுரிமைச்  சட்டம் - பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை.

1990  பெண்களுக்கான தேசிய ஆணையம்.

1994      குழந்தை பிறப்புக்கு முன் பாலியல் பகுப்பாய்வு நுட்பங்கள் சட்டம் - பெண் சிசுவை கருவிலே அழிப்பதை தடுப்பதற்கு சட்டம்

2005 குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு சட்டம்.

2013  பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை, தீர்வு சட்டம்.
-விடுதலை,22.8.17

பெண்ணுக்கும், ஆணுக்கும் சம வாய்ப்பும், சம ஊதியமும் எப்போது?



ஆணாதிக்கம் காரணமாக 47 சதவீதம் பெண்கள் படித்தவர்களாக இருந்தாலும், உழைப்புப் பங்களிப்பு என்று வருகிறபோது பெண்கள் 29 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறார்கள்.

வேலைக்குப் போகும் பெண்கள் என்று வரும் போதே பொதுவாக வெள்ளுடைப் பணிகள் என்ற ழைக்கப்படும் அலுவலக வேலைகளை மட்டுமே நாம் நினைத்துப் பார்க்கிறோம். பெண்கள் வேலைக் குப் போகலாமா வேண்டாமா என்பது குறித்தெல்லாம் பெரும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டவை இந்தப் பணிகள் பற்றி மாத்திரம்தான். இந்த வேலைகளுக்குப் பெண்களை அனுப்புவதில்தான் இந்தச் சமுதாயத் துக்குச் சங்கடமெல்லாம். பெண் மென்மையானவள், அவளை வேலைக்கு அனுப்பி சிரமப்படுத்தக் கூடாது என்று சொல்வதெல்லாம்கூட இந்தப் பணி களுக்குப் பெண்களை அனுப்புவது குறித்து மட்டும் தான்.

இந்த விவாத வரையறைகளுக்குள் கிராமங் களில் காலங்காலமாகத் தங்கள் உடலுழைப்பைச் செலுத்திக் கொண்டிருக்கிற பெண்கள் வரமாட் டார்கள். வயல் காட்டில் சேற்றிலும் சகதியிலும் பெண்கள் இறங்காத காலம் என்ற ஒன்று எப்போதும் இருந்தது கிடையாது. உச்சி வெயிலில் அவர்கள் குனிந்தபடியே வேலை பார்க்கிறார்கள். பெண் வேலைக்குப் போகலாமா என்ற விவாதத்தில் இவர் களுக்கு இடமில்லை. இன்றும்கூட வேலைக்குச் செல்லும் பெண்கள் எண்ணிக்கை நகரத்தோடு ஒப்பிடும்போது கிராமத்தில் தான் அதிகம். ஆனால், பொதுப்புத்தியில் நகரங்களில் தான் பெண்கள் வேலைக்குப் போவதாகப் பதிந்துபோயுள்ளது.

பெண் உழைப்பு என்பதை கிராமம் சார்ந்தும், நகரம் சார்ந்தும் பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதை ஒருவகையில் உடல் சார்ந்த உழைப்பு, அறிவு சார்ந்த உழைப்பு என்று வகைப்படுத்தலாம். உடலு ழைப்பில் (பெரும்பகுதியும் கிராமத்தில்) பெண்கள் திருமணத்துக்கு முன் குறைவாகவும் திருமணத் துக்குப் பின் அதிகமாகவும் ஈடுபடுகிறார்கள். அறிவுசார் உழைப்பில் (பெரும்பகுதி நகரத்தில்) பெண்கள் திருமணத்துக்கு முன் அதிகமாகவும் திருமணத்துக்குப் பின் குறைவாகவும் ஈடுபடு கிறார்கள். கிராமங்களில் பெண்கள் திருமணத்துக்குப் பின் அதிகமாக வேலைக்கு அனுப்பப்படுவதோடு தள்ளாத முதுமையிலும் தங்கள் உழைப்பைத் தொடர வேண்டிய நெருக்கடி இருக்கிறது. 

அனைத்து நிலைகளிலும் குடும்ப வறுமையும் பல நேரங்களில் ஆதரவற்ற நிலையுமே வெளியில் வேலைக்குச் செல்லும் நிர்ப்பந்தத்தை இவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் பெண் வெளியில் வேலைக்குச் செல்ல நேர்வதே அவளுக்கு நேரும் துன்பமாகவே பார்க்கப்படுகிறது, உணரப்படுகிறது. அந்த வேலை அவளின் தன்மதிப்பை உயர்த்து வதாகப் பார்க்கப்படுவதில்லை. ஒருவகையில் அந்தப் பெண் வேலைக்குச் செல்வது என்பது அந்த வீட்டு ஆணின் இயலாமையாகவோ அவமான மாகவோ பார்க்கப்படுகிறது. எனவே, குடும்ப வருமானம் ஓரளவு அதிகரித்தால்கூட, உடனே பெண் வேலைக்குப் போவது நிறுத்தப்பட்டு விடுகிறது.

உழைப்புச் சந்தையில் அவள் எப்போதுமே உதிரியாகவே இருக்கிறாள். இந்தச் சமுதாயச் சூழலில் அந்தப் பெண்ணே தான் உழைக்க நேர்ந்தது குறித்து கழிவிரக்கத்துடனேயே சிந்திக் கிறாள். தன் உழைப் பின் மீது பெருமிதம் கொள்ள முடியாத நிலையில், அந்தப் பணியிடங்கள் அவ ளுக்குக் கவுரமான வையாக இல்லை என்பதன் தொடர்ச்சியாக அவை பாதுகாப்பானவையாகவும் இருப்பதில்லை. இந்தப் பின்னணியில்தான் பெண் ணின் உழைப்பு அந்தச் சந்தையில் பொருளாதார ரீதியாக ஆணின் உழைப் புக்குச் சமமான மதிப்பைப் பெறாமல் குறைவான ஊதியத்துக்குரியதாக இருக் கிறது.
-விடுதலை,22.8.17