புதன், 9 நவம்பர், 2016

ஆஸ்திரேலியாவில் சாதித்த உப்மா


நம் நாட்டில் பலருக்கும் ஒவ்வொரு நாளும் தேநீருடன்தான் தொடங்குகிறது. புத்துணர்ச்சி பெறுவது முதல் எடை குறைப்புவரை ஒவ் வொரு வீட்டிலும் ஒவ்வொரு பரிமாணத்துடன் இடம் பெற்று விடுகிறது தேநீர்.

தேநீரைத் தன் உற்சாகத்துக்கு மட்டு மல்ல, வியாபாரத்துக்கான உத்தியாகவும் பயன்படுத்தி வருகிறார் உப்மா. ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரில் வசிக்கும் உப்மா விரதியின் அடையாளம் விதவிதமான சுவைகளில் தயா ராகும் தேநீர் வகைகள்!

சண்டிகரைச் சேர்ந்த உப்மா, தேநீர் தயாரிப்பதற்காக ஆர்ட் ஆஃப் சாய் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகிறார். அத்துடன் தேயிலை கலவைகளை ஆன்லைனில் விற் பனையும் செய்து வருகிறார். இந்தியக் கலாச் சாரத்தில் தேநீர் குடிப்பதற்காக மக்கள் எப் போதும் ஒன்று கூட விரும்புவார்கள். இங்கே மகிழ்ச்சியான நேரங்களிலும் கடினமான நேரங் களிலும் தேநீர் தவறாமல் இடம்பெறுகிறது.

ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் நான் எவ்வளவோ தேடிப் பார்த்தும் ஒரு டீயைக் குடிக்க முடியவில்லை. அப்போதுதான் டீத்தூள் கலவை தயாரிக்கும் அய்டியா பிறந்தது என்று சொல்லும் இவர், முதலில் இந்தத் தொழிலைத் தன் குடும்ப உறவுகள், நண்பர்களிடமிருந்து தொடங்கியிருக்கிறார்.  பின்னர், அருகிலுள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடை களில் தேயிலைக் கலவையை விற்பனைக்கு வைத்தி ருக்கிறார். இன்று நிற்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டு இருக்கிறார்.

வழக்குரைஞராகத் தன் பணியைத் தொட ரும் உப்மாவுக்கு, அவருடைய தாத்தா தான், மூலிகைகள், வாசனை மசாலாக்களைக் கெண்டு ஆயுர்வேத தேநீர் போடக் கற்றுத்தந்திருக்கிறார். மெல்போர்னில் சாய்வாலி (பெண் டீ விற்பனை யாளர்) என்ற பெயரில் ஆன்லைனில் தேயிலை கலவையை விற்பனை செய்து வருகிறார்.

அருமையான மணமும் சுவையும் ஆஸ்தி ரேலியர்களின் ருசியுணர்வைத் தூண்ட 26 வயதில் உப்மா, வெற்றிபெற்ற தொழில் முனை வோராக மாறியிருக்கிறார். இந்த ஆண்டுக்கான இந்திய ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் சமூக விருது வழங்கும் விழாவில், சிறந்த பெண் தொழிலதிபர் விருதை கடந்த வாரம் சிட்னியில் பெற்றிருக்கிறார்.  விருதைப் பெற்ற உப்மா, ஆஸ்திரேலிய மக்கள் காபிக்கு மாற்று ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தனர்.

இதுவே சரியான நேரம் என்று தேயிலை விற் பனைத் தொழிலைக் கையில் எடுத்தேன். ஆஸ்திரேலிய சமூகத்துக்கு, தேயிலை மூலம் இந்தியக் கலாச்சாரத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் என்னு டைய குறிக் கோள் என்று சொல்லியிருக்கிறார்.
-விடுதலை,8.11.16

ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் தெரிந்திருக்க வேண்டிய சட்டங்களும் உரிமைகளும்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஆண், பெண் விகிதாச்சாரம் 943. அதாவது ஜனத்தொகை அடிப்படையில், இந்தியா வில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் எதிராக 943 பெண்கள் இருக்கிறார்கள். ஆகையினால், பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் எதிராக நீதிமுறை சட்டங்கள் இயற்ற வேண்டும்.
உலகின் மிகப் பெரிய இந்திய நியாய அமைப்புக்கு, இந்த பிரச்சினையைத் தீர்க்க பல சட்டங்கள் உள்ளன. மக் களின் அறியாமையினால், இந்த சட்டங் கள் செயல்படாமல் தோற்றுவிட்டன.
சர்வதேச களத்தில், நாம் பொரு ளாதாரம் அரசியலில் சக்தியடைந்து வருவதால், நம்முடைய அரசியல் சட்டத் தில் நம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட உரிமைகள் வாய்ப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இதற்குக் கூடுதலாக பெண்கள் சிறிது சிறிதாக மத்திய அரங்கத்தை எடுத்துக் கொண்டு ஒரு தொழில் திறனுடன் கூடிய பணிபுரியும் சக்தியாக மாறிவருகிறார்கள். இருந்த போதிலும், மனது. உடல், பாலியல் வன்முறை, பெண்கள் மீதான வெறுப்பு ஆண் பெண் ஏற்றத்தாழ்வு முதலியன பெரும்பாலானோரின் வாழ்வில் தொடர்கிறது. இந்த சூழலால் இந்திய சட்டத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணை சட்ட உரிமைகள் குறித்த அவர்களுடைய உணர்திறன் வளர வேண்டியது முக்கியத் துவம் பெறுகிறது.
முக்கியமாக பெண்களுக்கு எதிராக இங்கு அடிக்கடி நடைபெறும் பலவித மான அநீதிகள், அவர்களுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்த விளக்கம் மற்றும் பாதுகாப்பு இதோ...
பெண்களிடம் செய்யும் கேலி: இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294, 509 எந்த ஒரு தனி நபரோ மக்கள் கூட்டமோ எந்த வயதைச் சேர்ந்த பெண்ணுக்கு எதிராகவும் எந்த வித வன்மையான பேச்சோ அல்லது குறும்புச் செயலோ செய்வதைத் தடுக்கிறது.
பால்ய விவாகம்: இது பெண்களுக்கு மாத்திரம் அல்ல. இருந்தபோதிலும், நடைபெறும் நிகழ்வுகள் வயதுக்கு வராத பெண்களையே குறிக்கிறது. குழந்தைத் திருமணத் தடை சட்டம் 1929, 18 வயதைத் தாண்டாத பெண்ணுக்கு (இந்து திருமண சட்டத்தில் வரையறுக்கப்பட் டுள்ள வயது) திருமணம் செய்வதைத் தடை செய்கிறது.
முறையற்ற காவல்துறை செயல் முறை: உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தலைமைக் காவலர் பதவிக்குக் குறையாத ஒரு பெண் அதிகாரி எல்லா சமயங்களி லும் இருக்க வேண்டும். எந்தவித  வன்முறைக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட நபருக்கும் காவல்துறை ஆலோசனை உதவி புரிய வேண்டும். பாதிக்கப்பட்ட வரின் நலனுக்கும் உதவ வேண்டும். அல் லது, ஒரு பெண் ஒரு பெண் அதிகாரி யால் மாத்திரமே சோதனை செய்யப்பட லாம். ஒரு பெண் அதிகாரி முன்னா லேயே கைது செய்யப்படலாம். சூரிய உதயத்துக்கு முன்போ சூரிய அஸ்த மனத்துக்குப் பின்போ ஒரு பெண்ணைக் கைது செய்ய இயலாது. இருந்தபோதிலும் நீதியரசரின் உத்தரவின் கீழ் இதற்கு விதிவிலக்கு அளிக்கலாம்.
குறைந்த பட்ச கூலி: குறைந்த பட்ச கூலிகள் சட்டம் 1948ன் படி இந்திய அரசாங்கம் தேர்ந்த பயிற்சியுடைய, பகுதி பயிற்சியுடைய பயிற்சியற்ற ஒவ்வொரு பிரிவுத் தொழிலையும் சேர்ந்த தொழி லாளர்களுக்கும் குறைந்த பட்ச கூலிகள் நிர்ணயித்துள்ளது. ஆணாக இருந்தா லும் பெண்ணாக இருந்தாலும், டில்லி யில் குறைந்த பட்ச கூலி ரூபாய் 423/ ஆகும்.
சொத்துக்கு வாரிசு: இந்து வாரிசு சட்டம், 1956, ஆண் பெண் யாராக இருந்தாலும் மூதாதையர் சொத்துக்கு சம பங்கீடு வாரிசாக இருக்கும் தகுதி உண்டு என அனுமதிக்கிறது. இதன் மூலம் புதிய விதிமுறைகளையும் நிபந் தனைகளையும் நிர்ணயிக்கிறது.
வரதட்சனை: வரதட்சணை தடுப்பு சட்டம், 1961 கூறுவது என்னவென்றால் எந்த ஒருவரும் கொடுத்தாலோ, பெற் றாலோ, இந்தப் பரிமாற்றத்துக்கு உதவி னாலோ கூட அய்ந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான காலத்துக்கு சிறைத் தண்டனை அல்லாது ரூபாய் 15,000 அல்லது வரதட்சணைத் தொகை, இதில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்படும்.
குடும்ப வன்முறை: இது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498இன் கீழ் வருகிறது. இந்த சட்டம் முக்கியமாக ஒரு மனைவி ஒன்றாக வசிக்கும் பெண் இணை அல்லது குடும்பத்தில் ஒரு தாயாராக ஒரு சகோதரியாக இருப்ப வருக்குக் கணவரால் ஆண் இணையால் அல்லது உறவினர்களால் ஏற்படும் குடும்ப வன்முறையிலிருந்து காப்பாற்று வதற்கானது. அவரோ அவருக்கு பதிலாக வேறு எவரோ அவருக்காக புகார் தாக்கல் செய்யலாம்.
இரக்கமற்ற துஷ்பிரச்சாரம்: பெண்கள் குறித்து பண்பற்ற வர்ணனை (தடை) சட்டம், 1986, எந்த ஒரு நபரோ அமைப்போ எந்த விதமான பண்பற்றது எனக் கருதப்படும் பெண்கள் குறித்த வர்ணனையைப் பிரசுரிக்க, பிரசுரிக்க உதவ பதிப்பிக்க, வெளிக்காட்ட அல்லது விளம்பரப்படுத்த, இணைய தளத்திலோ,     .அதற்கு வெளியிலோ செய்ய தடை விதிக்கிறது.
சமமான ஊதிய உரிமை: சம ஊதிய சட்டத்தின் கீழான ஷரத்துக்களின்படி, சம்பளம் அல்லது கூலிக்கு ஒருவரை ஆணா பெண்ணா பேதம் பார்த்து பாகுபடுத்த இயலாது.
பணியில் உளைச்சலுக்கு எதிரான உரிமை: பணிபுரியும் இடத்தில் பெண் களுக்கு நேரும் பாலியல் வன்முறைக்கு  எதிராக இயற்றப்பட்ட சட்டம் உங் களுக்கு பாலியல் வன்முறைக்கு எதிராக ஒரு புகார் தாக்கல் செய்ய உரிமை கொடுக்கிறது.
பெயர் குறிப்பிடாதிருக்கும் உரிமை: மானபங்கத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு பெயர் குறிப்பிடாதிருக்கும் உரிமை உண்டு. அவருடைய அந்தரங்கம் பாதுகாக்கப்படுவதற்காக, வழக்கு விசாரணையில் இருக்கும்போது பாலியல் வன்முறை செய்யப்பட்ட ஒரு பெண் அவர் மாத்திரம் அவருடைய வாக்கு மூலத்தை மாவட்ட விசாரணை நீதியரசர் முன் அல்லது ஒரு பெண் காவல்துறை அதிகாரி முன்பு கொடுக்கலாம்.
பிரசவம் சம்பந்தப்பட்ட ஆதாயங் களுக்கான உரிமை: பிரசவ ஆதாயங்கள், வேலை பார்க்கும் பெண்ணின் ஒரு சாதாரணமான சலுகை மாத்திரம் இல்லை. அவர்களுடைய உரிமை. பிரசவ ஆதாய சட்டம், ஒரு புதிய தாய்க்கு அவருடைய பிரசவத்துக்கு பன்னிரண்டு வாரங்களுக்குப் பின்னர் அவரை வேலை யில் திரும்பச் சேர அனுமதிப்பதன் மூலம் அவருக்கு வருமானத்தில் எந்த நஷ்டமும் இருக்காது.
பெண் குழந்தை கருச்சிதைவுக்கு எதிராக உரிமை: எல்லா உரிமைகளி லும் முக்கியமான அடிப்படை உரிமை யான ஒரு பெண்ணை வாழ்ந்து அனுப விக்க விடுவது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமையாக சுமத்தப்பட்டி ருக்கிறது. பிறக்கும் முன்பாக அறியும் வழிமுறைகள் குறித்த எண்ணம் (ஆணா பெண்ணா எனத் தேர்வு செய்யப்படுதல் தடை) சட்டம்  அவருக்கு பெண் குழந்தை கருச்சிதைவுக்கு எதிராக உரிமையை உறுதி செய்கிறது.
இலவச சட்ட உதவிக்கு உரிமை: சட்ட சேவைகள் அமைப்பு சட்டத்தின் கீழ் பாலியல் வன்முறையில் பாதிக்கப் பட்ட எல்லா பெண்களுக்கும் இலவச சட்ட உதவி பெற உரிமை உண்டு. சட்ட சேவைகள் அமைப்புக்கு காவல் நிலைய தலைமை அலுவலர் தகவல் கொடுத்து அவர்கள் மூலம் வழக்குரைஞர் ஏற்பாடு செய்வது கட்டாயமாகும்.
கண்ணியம், நடத்தை ஒழுங்கு உரிமை: குற்றம் சுமத்தப்பட்டவர் ஒரு பெண்ணாக இருந்தால் எந்த மருத்துவ பரிசோதனை செயல்முறையும் ஒரு பெண் ணால் அல்லது மற்றொரு பெண்ணின் முன்னிலையில் நடத்த வேண்டும்.
-விடுதலை ஞா.ம.,9.4.16

உடன்கட்டை



மொகலாய மாமன்னர் அக்பரின் ஆட்சிக் காலத்தில் (1556-1605) இருந்து முயன்று, வில்லியம் பெண்டிங் காலத்தில் (1829) சனாதன இந்துக்களின் பெரும் எதிர்ப்பு களுக்கு இடையே உடன்கட்டை யேற்றும் இரக்கமற்ற கொடிய பழக்கத்தைத் தடுக்கச் சட்டம் இயற்றினர். சட்டத்தால் தடுப்பதற்கு முன்பு கல்கத்தாவைச் சுற்றியிருந்த மாவட்டங்களில் ஆண்டிற்குச் சுமார் அய்நூறு பெண்கள் உடன் கட்டை ஏறியதற்குத் தக்க சான் றுகள் உள என்று ஆர்.சி.மஜூம்தார் எழுதுகிறார்.
“மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம்” - பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான், ப: 25
-விடுதலை ஞா.ம.,18.6.16

வெள்ளி, 28 அக்டோபர், 2016

சரித்திர சாதனை படைத்த தீபா மாலிக்

பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் தீபா மாலிக். ரியே நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வீல் சேரில் உட்கார்ந்தபடியே சக்கர நாற்காலியில் பங்கேற்று, குண்டு எறிதல் போட்டியில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றபோது பார்வை யாளர்கள் இமைக்க மறந்தனர்.
டில்லியைச் சேர்ந்த 45 வயதான தீபாவுக்கு, கடந்த 14 ஆண்டுகளில் முதுகில் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்தபோதும் மார்புக்குக் கீழ் உடல் இயங்கவில்லை. அதற்காக அவர் சோர்ந்துவிடவும் இல்லை. மோட்டார் ஸ்போர்ட்ஸ், நீச்சல், ஈட்டி எறிதல் வீராங்கனையாகத் தன்னை மாற்றிக்கெண்டு, தன்னம்பிக்கையூட்டும் பேச் சாளராகவும் மாறினார்.
வெளிநாடுகளில் பயிற்சிகள் பெற வாய்ப்பு கிடைத்தபோதும் அதை மறுத்து டில்லியிலேயே பயிற்சியைத் தொடர்ந்தார் தீபா. விளையாட்டில் சாதிக்க வெளிநாடுதான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை என தீவிரமாக நம்பியவர், பயிற்சியாளர் வைபவ் சிரேஹி வழங்கிய கடும் பயிற்சிகளையும் தட்டாமல் செய்து இந்த உயரத்தைத் தொட்டிருக்கிறார்.
என் உடலில் கட்டி இருப்பது கண்டறியப் பட்டபோது, அனைத்துத் தேவைகளுக்கும் பிறரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதால், நான் வீட்டேடு முடங்கிப் போவேன் என்று பலரும் நினைத்தார்கள். அதைப் பொய்யாக்க வேண்டும் என்பதற்காகவே நீச்சல், குண்டு எறிதல் என நிறையப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். அறுவை சிகிச்சை தந்த வலியும் வேதனையும் என்னை நானே உணரும் புதிய பாதையில் என்னை இட்டுச் சென்றன. பாராலிம்பிக் போட்டிக்குத் தேர்வான பின், கண்டிப்பாகப் பதக்கம் வென்றுதான் வீடு திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்தேன். சரியான திட்டமிடல் இந்த வெற்றியைச் சாத்திய மாக்கி யிருக்கிறது.
மீதமுள்ள வாழ்க்கை முழு வதும் நினைவுகூர இந்த வெற்றி போதும் என்று சொல்லும் தீபா, தான் பெற்ற இந்த வெற்றி, நாட்டில் உள்ள பிற மாற்றுத் திறனாளிப் பெண்கள் சமூகத் தடைகளை உடைத்து, அவர்களின் கனவை நோக்கிப் பயணிக்க உந்து சக்தியாக இருக்கும் என நம்புவதாகச் சொல்கிறார். அவரது நம்பிக்கை இன் னும் பல வீராங்கனைகளை உரு வாக்கும்!
எனக்காக என் கணவர் தன் வேலையைக்கூட விட்டுவிட்டார். பைக்கராகத் தொடர் வதே என் விருப் பம். விளையாட்டு வீராங்கனையாக இருப்பது இன்னும் சவால்தான். ஆனால் நாம் பெறும் வெற்றிதான் அந்தச் சவாலுக்குக் கிடைக் கிற பரிசு! என்கிறார் தீபா.


கலாம்களை உருவாக்கும் ஆசிரியை!

மாணவர்களைப் புத்தகப் படிப்பில் தேர்ச்சியடைய வைப்பது தான் தலைசிறந்த பள்ளி என்பதை நான் ஏற்க மாட்டேன். பாடத்தைத் தாண்டி அந்த மாணவர்களிடம் எந்த அளவுக்கு தேச பக்தி வளர்ந்திருக்கிறது, மாணவர்களின் தனித்திறமை என்ன, விளையாட்டில் அவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள், மாணவர்களின் புதிய முயற்சி என்ன? இதற்கெல்லாம் ஆரோக்கியமான பதிலைச் சொல்லும் பள்ளிதான் உண்மையிலேயே தலைசிறந்த பள்ளி என்கிறார் சபரிமாலா.
திண்டிவனம் அருகிலுள்ள வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர். பட்டிமன்றப் பேச்சாளராக இருந்து ஆசிரியப் பணிக்கு வந்தவர். சரியான போக்குவரத்துக்கூட இல்லாத வைரபுரம் பள்ளி மாணவர்கள், இப்போது கடல் கடந்தும் பேசப்படுகிறார்கள். அதற்குக் காரணம் சபரிமாலா.
அப்துல் கலாம் மறைந்தபோது, அவரைப் போன்ற மாணவர் களை நம்மால் ஏன் உருவாக்க முடியாது என்று களமிறங்கினார் சபரிமாலா. `அப்துல் கலாம் ஆகலாம் மாணவர் இயக்கத்தை உருவாக்கினார். பேச்சு வல்லமை கொண்ட மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இதில் சேர்த்தார். அந்த மாணவர்களுக்கு கலாமின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கக் கொடுத்தார். அவர்களைக் கொண்டே கலாமின் கருத்துகளை மடை திறந்த வெள்ளமாகக் கொட்டும் பேச்சாளர் அணிகளை உருவாக்கினார் சபரிமாலா. இவரிடம் பேச்சுப் பயிற்சி பெற்ற மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் முதல் பரிசுகளை அள்ளிக்கொண்டு வந்தார்கள்.
வைரபுரம் பள்ளியை மற்ற பள்ளிகளும் திரும்பிப் பார்க்க, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 75 மாணவர்கள் கலாம் ஆகலாம் மாணவர் இயக்கத்தில் உறுப்பினரானார்கள். இவர்களைக் கொண்டு கலாம் போல் ஆகலாம் மாணவர் பட்டிமன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். கலாமின் நினைவு தினத்தில் அய்ம்பதாவது பட்டிமன்றத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.
சரியாகப் பேச முடியாமல் திக்கிப் பேசும் மாணவர் ஒருவர், பட்டிமன்றத்தில் பேச ஆரம்பித்த பிறகு  இதில் கிடைத்த வருமானத்தில்   15 ஆயிரம் ரூபாயில் தனது தந்தையின் கடனை அடைத்திருக்கிறார். எட்டாம் வகுப்பு மாணவி சுஜித்ரா மதுரையில் திருக்குறள் தமிழ் என்ற தலைப்பில் 45 நிமிடம் பேசினார். அந்த உரைவீச்சைக் கேட்டு வியந்த தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று, தங்கள் பள்ளி விழாவுக்கு சுஜித்ராவைச் சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தது.
24 குழந்தைப் பாடல்களைத் தொகுத்து ஆடல் பாடல் ஏ.பி.எல். என்ற தலைப்பில் இசை மாலையாக்கி, மாணவிகள் நளினியும் கமலியும் நடனமாடும் குறுந்தகடு ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் சபரிமாலா.
ஆரம்ப வகுப்புகளிலிருந்தே மாணவர்கள் தமிழை இலக் கணப் பிழை இல்லாமல் வாசிக்கப் பழக வேண்டும் என்பதற்காகவே தாய்மொழி பயிலகம் ஒன்றை உருவாக்கி யிருக்கிறார். வகுப்பறைக்குள் திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் மணக்கிறது.
எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைத் தமிழன்னை தந்த வரமாக நினைக்கிறேன். கலாம் வாழ்க்கையைப் படித்த மாணவர்களிடம் வித்தியாசத்தைப் பார்க்கிறேன். அவர்கள் டியூஷன் செல்வதில்லை. இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பிறருக்கு உதவ நினைக்கிறார்கள். நல்ல பண்புகள் மேலோங்கியிருக்கின்றன.
அப்துல் கலாம் அமைப்பில் உள்ள மாணவர்கள் பள்ளியை விட்டுச் சென்ற பிறகும் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். மாணவர்களின் பேச்சுகளை நூலாக்கி, அனைத்துப் பள்ளி களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். கலாம் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடர்கிறோம். நிச்சயம் எங்களிடமிருந்தும் கலாம்கள் தோன்றுவார்கள்! நம்பிக் கையோடு கூறுகிறார் சபரிமாலா.
-விடுதலை,20.9.16

மதராஸ் மாகாணத்தின் ஒரே பெண் அமைச்சர்


தமிழக மாநில எல்லை வரையறுக்கப்படுவதற்கு முந்தைய மதராஸ் மாகாணத்தின் ஒரே பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் விடுதலைப் போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி.
சமூக சீர்திருத்தவாதியான அவர் சிறு வயதிலிருந்தே பெண்கள் மேம்பாட்டுக்காக உழைத்தவர். 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்களில் முன்னின்றாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று சேவை செய்யவும் ருக்மிணி லட்சுமிபதி தவறவில்லை.
தேர்வு பெற்ற முதல் பெண்
மதராஸ் மாகாணத்தில் ஆங்கிலேயர் - இந்தியர் என்ற இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்ட பிறகு, மதராஸ் மாகாண சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் 1934-ல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் சார்பில் ருக்மிணி வெற்றி பெற்றார். இதன் மூலம் மதராஸ் மாகாணத்துக்கான தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் பெண் என்ற பெரு மையை அவர் பெற்றார். 1937-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற அவர், மதராஸ் மாகாண சட்டப் பேரவையின் துணை சபாநாயகராகவும் பொறுப்பேற்றார்.
இரண்டாவது உலகப் போருக்கு முன்னதாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1939இல் மதராஸ் மாகாண காங்கிரஸ், அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகியது. தொடர்ந்து காந்தி விடுத்த அழைப்பின் பேரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். அதில் ஈடுபட்ட ருக்மிணி லட்சுமிபதி 1940இல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மருத்துவ வளர்ச்சிக்கு ஊக்கம்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946இல் நடைபெற்ற மதராஸ் மாகாண இரண்டாவது சட்டப்பேரவை தேர்தலில் ருக்மிணி லட்சுமிபதி வெற்றிபெற்றார். அப்போது டி. பிரகாசம் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் ருக்மிணி இடம்பெற்றார். அவருக்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டது.
மதராஸ் மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த முதல் பெண் அமைச்சர் அவரே. மாகாணத்தில் நல்ல மருத்துவக் கல்லூரிகளின் தேவையையும், மருத்துவப் பணியில் இந்தியர்களை நியமிக்க வேண்டியதன் முக்கியத் துவத்தையும் வலியுறுத்தினார். அப்போது மதுரையிலும் ஆந்திரத்தின் குண்டூரிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க ருக்மிணி கையெழுத்திட்டார். இந்திய மருத்துவ முறைகளுக்குக் கவனம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். அவருடைய கணவர் அசண்ட லட்சுமி பதி பிரபல ஆயுர்வேத மருத்துவர் என்பது குறிப் பிடத்தக்கது.
நாடு விடுதலை பெற்ற பிறகு மதராஸ் மாகாண அமைச்சரவை கலைக்கப்பட்டாலும், 1951இல் இறக்கும் வரை ருக்மிணி எம்.எல்.ஏவாகத் தொடர்ந்தார். அதன் பிறகு மதராஸ் மாகாணம் மறுவரையறை செய்யப்பட்டதால், பழைய மாகாணத்தில் செயல்பட்ட ஒரே பெண் அமைச்சர் அவரே.
அவரை கவுரவப்படுத்தும் வகையில் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்கள் அமைந் துள்ள சாலைக்கு ருக்மிணி லட்சுமிபதி சாலை  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 -விடுதலை,20.9.16

செவ்வாய், 18 அக்டோபர், 2016

தன் உடலையே சோதனைக் களமாக  மாற்றிய ஆராய்ச்சியாளர்

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக, மருத்துவ குணமுள்ள தாவரங்கள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த வி.மஞ்சுளா.  தற்போது வரை 90 வகையான செடிகளை ஆய்வு செய்துள்ள இவர், அவற்றின் மூலம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் பாதிக்கப்பட்டு வரும் பல்வேறு நோய்களை தீர்க்க முடியும் என்பதை கண்டறிந்துள்ளார்.

நோய் தீர்க்கக் கூடிய மருந்துக்கான செடிகளை தேடி காடு, மலைகளில் இவர் சுற்றித் திரியவில்லை. ஆனால், குடியிருப்புகளைச் சுற்றிலும், குப்பை மேடுகளிலும் சாதாரணமாக வளர்ந்து நிற்கும் தாவரங்களிலிருந்தே பல்வேறு நோய்களுக்கும் தீர்வு கண்டுள்ளார்.

செடியின் ஒவ்வொரு உறுப்பையும் எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்ற தேடலையும் தொடங்கியுள்ள இவர், மாரடைப்புக்கு (நெஞ்சு வலி) முக்கிய காரணமான கொழுப்பை கட்டுப்படுத்துவ தற்கான ஆராய்ச்சிக்கு தன் உடலையே பரி சோதனைக் களமாக மாற்றி, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டவை: “எங்களது குடும்பம் பாரம்பரிய முறையில் தாவரங்களை பயன்படுத்தி வைத்தியம் செய்து வரும் குடும்பம். எனது தாத்தா, தந்தை ஆகியோரின் வழியில் எனக்கும் அதில் நாட்டம் ஏற்பட்டது.

திருமணத்திற்கு பின், மருத்துவத் துறையில் இணை இயக்குநராக பொறுப்பு வகித்த எனது மாமனார் எஸ்.சுப்பிரமணியனும் எனது முயற்சி களுக்கு ஊக்கமாக இருந்தார். ஆங்கில மருத் துவத்தில் (அலோபதி) பல நோய்களுக்கு மருந்து இல்லை, அதுபோன்ற நோய்களுக்கு பாரம்பரிய முறையில் மட்டுமே தீர்வு காண முடியும் ” என கூறி எனது நம்பிக்கைக்கு வலு சேர்த்தார்.

அதன் பின்னரே, அதற்கான முயற்சியில் தீவிரமாக களம் இறங்கினேன். நம் உடம்பில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக விளங்குவது கல்லீரல். இதன் செயல்பாடு பாதிக்கப் படும் போது, ஒவ்வொரு உறுப்புகளும் தன் பணியை முறையாகச் செய்வதில்லை. இதன் காரணமாகவே நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

மனிதனின் ஆயுளுக்கு திடீர் முற்றுப்புள்ளி வைக்க கூடிய நெஞ்சுவலிக்கு முக்கிய காரணம் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதே. இந்த பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என திட்டமிட்டு, எனது உடலையே பரிசோதனை களமாக்க முடிவு செய்தேன்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை 400 மி.கிராம் வரை உயர்த்தினேன். இதனால் படபடப்பு, மூச்சு திணறல், தோள்பட்டைகளில் வலி, தலைவலி, கண் தெளிவின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட பின், மருத்துவ பரிசோதனைக்குச் சென்றேன்.

பரிசோதனை முடிவுகள் வந்தபோது, உடனடியாக அறுவை சிகிச்சை  செய்யாவிடில், உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள்(அலோபதி) எச்சரித்தனர். ஆனால், பதட்டமின்றி வீடு திரும்பிய நான், ஏற்கெனவே கண்டறிந்த 3 தாவரங்களை சாப்பிடத் தொடங்கினேன்.

3 நாள்களில் மூச்சுத் திணறல், வலி உள்ளிட்ட பாதிப்புகள் சீராகத் தொடங்கின. பயணம் செய்யக் கூடாது என்ற மருத்துவர்களின் ஆலோசனைகளை கடந்து, என்னால் பேருந்தில் எளிதாக பயணிக்க முடிந்தது.

2 மாதங்களுக்கு பின், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு 180 மி.கிராமாக குறைந்தது. 3 வேளையிலும் இனிப்பு சாப்பிட்ட போதும், சர்க்கரையின் அளவு அதிகரிக்கவில்லை. இதனை அறிவியல் பூர்வமாக விரைவில் நிரூபித்துக் காட்டி, குறிப்பிட்ட 3 தாவரங்களில் உள்ள மருத்துவப் பொருள்களை பிரித்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளேன்.

சளி, காய்ச்சல், இருமல், பல் வலி, கண் வலி, தோல் வியாதிகள் உள்ளிட்ட பாதிப்புகள் தொடங்கி, சர்க்கரை நோய், கல்லீரல், சிறுநீரகம், பெண் களுக்கான எலும்பு தேய்மானம் மற்றும் கர்ப்பப்பை பிரச்சினை, எலும்பு முறிவு, மூட்டுவலி, மஞ்சள் காமாலை, மலச்சிக்கல்  உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கும், நம் வீட்டைச் சுற்றி வளரும் தாவரங்களின் மூலம் குணப்படுத்த முடியும்‘’  என்றார்
_விடுதலை,18.10.16

திங்கள், 17 அக்டோபர், 2016

அன்று ஆடு மேய்த்த சிறுமி இன்று கல்வித்துறை அமைச்சர்!


வாழ்க்கை என்பது பெரும் போராட்டம்தான்; அதற்காகப் போராடாமல் விட்டுவிட முடியுமா? என்பதை இளம் வயதிலேயே உணரத் தொடங்கியவர் நஜா வெலு பெல்காசம் (Najat Vallaud-Balkacem) இன்று பிரான்ஸின் புதிய முகம் எனக் கொண்டாடப்படும் இவர் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் ஒரு குக்கிராமத்தில் வறுமைப் பிடியில் வாடிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர்.
அப்பா கட்டிடத் தொழிலாளர்; உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இளந்தளிர் நஜா நான்கு வயதில் ஆடு மேய்க்க விடப்பட்டார். வறுமை வாழ்க்கை விளிம் புக்குத் தள்ள ஆப்பிரிக்காவை விட்டுப் புலம்பெயர்ந்து பிரான்ஸில் குடியேறும் நிலைக்கு நஜாவின் குடும்பம் தள்ளப்பட்டது.
பிறந்த பூமியை, உறவினரை, நண்பர்களை, பழக்கப் பட்ட கலாச்சாரத்தை திடீரென்று உதறிவிட்டு முற்றிலும் அந்நியமான சூழலில் வாழ்க்கையைத் தொடங்குவது மிகப் பெரிய சவால்! பள்ளிப் பாடங்களைப் படிப்பது முதல் பிரெஞ்சு மொழியைப் பேசுவது அதன் கலாச்சாரத்தைப் பழகிக்கொள்வதுவரை திகைப்பும் தடுமாற்றமும் ஆரம்ப நாட்களில் நஜாவுக்கு இருந்தது. ஆனால் தனக்கு நேர்ந்த அனுபவத்தைத் துணிச்சலாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டார் இளம் நஜா.
பிரான்ஸின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான பாரிஸ் அரசியல் ஆய்வுகள் கல்வி நிறுவனத்தில் 2002இல் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே வேளையில் பகுதி நேர வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தையும் தாங்கினார். சக மாணவர் போரிஸ் வெலு வோடு காதல் மலரவே கல்வியோடு காதலும் கைகூடியது. இருவரும் 2005இல் தம்பதிகள் ஆனார்கள்.
அரசியல் கல்வி அரசியலுக்கான கதவுகளைத் திறந்தது. வேலையில்லாத் திண்டாட்டம், அகதிகள், புலம் பெயர்ந்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்தல், நிறப் பாகுபாடு உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகள் அன்றைய காலகட்டத்தில் பிரான்ஸில் நிறைந்திருந்தன.
இது போன்ற பிரச்சினைகளில் பிரெஞ்சு அரசு கொண்டிருந்த கொள் கைகள் மீது நஜாவுக்குக் கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. ஜனநாயகத்தை நிலைநாட்டவும், குடிமக்களின் உரிமை களைப் பாதுகாக்கவும் அரசியலில் ஈடுபடுவது என முடிவெடுத்து சோஷலிஸ்ட் கட்சியில் 2002இல் சேர்ந்தார். லியான் நகர மேயரான ஜெரார்து கோலம்பை ஆதரித்து முழு மூச்சாக அரசியலில் 2003இல் இறங்கினார். ரோன் - ஆப்ஸ் பிராந்திய சபையின் கலாச்சாரக் கழகத் தலைவராக 2004இல் நஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே சோஷலிஸ்ட் கட்சியின் ஆலோசகரானார்.
2008இல் அவர் முதன்முதலில் களமிறங்கிய லியான் நகருக்கே கவுன்சிலரானார். 2012இல் பெண்கள் அமைச் சகத்தின் அமைச்சரானார். 2013இல் தன்பாலின உறவாளர் களின் திருமணத்தைச் சட்டரீதியாக பிரான்ஸ் அங்கீ கரித்ததை இது வரலாற்று முன்னேற்றம் என துணிச்சலாகப் பாராட்டி ஆதரித்தார். சமூக வலைத்தளமான டிவிட்டரை வெறுப்பு அரசியலுக்குப் பிரயோகிக்கக் கூடாது என்கிற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்காற் றினார். அதை அடுத்து, நகர்சார் விவ காரங்களுக்கான அமைச்சர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், அரசாங்கச் செய்தி தொடர்பாளர் எனப் பல பதவிகள் வகித்தார்.
சாதனைப் பெண்
2014இல் பிரான்ஸ் அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தபோது பல அமைச்சர்களின் பதவிகள் பறி போயின. ஆனால், நஜாவின் திறமைக்காகவும் போராட்டக் குணத்துக் காகவும், அதுவரை அவர் வகித்துவந்த பொறுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றியதற்காகவும் 2014இல் கல்வித் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புலம்பெயர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் 38 வயதில் பிரான்ஸின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சராக ஆனது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு. பிரான்ஸின் முதல் பெண் கல்வி அமைச்சர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் அவர். நிஜமாகவே நஜா பிரான்ஸுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உற்சாக மூட்டும் புதிய முகம்தான்!
-விடுதலை,6.9.16