வெள்ளி, 5 அக்டோபர், 2018

பெண்ணால் முடியும்!

மெட்ரோ ரயில் நிலையங்களை நிர்வகிக்கும்  மகளிர் அணி!
பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் பலகீனமானவர்கள் என்கிற பொய்மைக் கருத்து ஆணாதிக்க சமூகத்தில் இன்றளவும் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. இது முற்றிலும் அறியாமை என்று நிரூபிக்கும் வகையில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் இன்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை மற்றும் மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வரை என இரண்டு வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மொத்தம் 26 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றில் சென்னை கோயம்பேடு மற்றும் ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

நிலையத்தில் அறிவிப்பு செய்வதில் தொடங்கி, பயணச் சீட்டு வழங்குதல், பயணிகளை கையாளுதல், கண்காணிப்புப் பணி, பயணிகளை பரிசோதனை செய்வது, வாடிக்கையாளர் சேவை, ரயில் நிலையத்தை பராமரிப்பது, துப்புரவுப் பணி என அனைத்து வேலைகளிலும் முழுக்க முழுக்க பெண்களே உள்ளனர்.

எல்லாத் துறையிலும் நுண்ணிய பயிற்சி அளித்தால் மிகப் பெரிய அளவில் பெண்கள் சாதனைகளை செய்வார்கள். ஆட்சி நிர்வாகத்திலிருந்து அடிமட்ட வேலைவரை அத்தனைத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராய் பங்கு பெற வேண்டும். அப்பொழுதுதான் நாடும் வீடும் நலம் பெறும். 
                          

                                          விமானம் ஒட்டி சாதித்த வீரப்பெண்!


“ஆண்கள் மட்டும்தான் விமானியாக முடியும். உன்னால் முடியாது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த உனக்கு எதற்கு இந்த கனவு?’’ என்று எத்தனையோ பேர் ஏளனம் செய்த பின்பும் அந்த இலக்கிலிருந்து  காவ்யா பின்வாங்கவில்லை. ஆனால், அவருடைய தந்தை அவருக்கு உறுதுணையாக இருந்தார். விமானி ஆவதற்கான பயிற்சி எடுக்க வேண்டிய கட்டணத்தைச் செலுத்த அவரது பொருளாதாரச் சூழல் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும், அவர் மனம் தளரவில்லை.

அரசு கல்வி உதவியுடன், விமானிக்கான பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற்றார். அரசு உதவியுடன் பெங்களூருவில் விமானி பயிற்சி வகுப்பிற்குச் சென்றார்.வகுப்பில் இரண்டு பெண்கள் மட்டுமே, மற்ற அனைவரும் ஆண்கள், ஆரம்பத்தில் காவ்யாவிற்கு ஆங்கிலம் சரளமாக வரவில்லை. மிகவும் கஷ்டப்பட்டார். தினமும் ஆங்கிலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். நாளடைவில் பயிற்சி முடியும் தருவாயில் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசக் கூடியவராக உருவானார். 2 வருட விமானிக்கான பயிற்சியில் 200 மணி நேரம் விமானத்தை ஓட்டிச் சாதித்தார்.

ஒரு முறை “யார் துணையும் இல்லாமல் விமானத்தில் செல்ல வேண்டும். யார் செல்கிறீர்கள்?’’ என்று பயிற்சியாளர் கேட்ட போது, தயங்காமல், ‘நான் செல்கிறேன்’ என்றார். அப்போது பயிற்சியாளர், ‘நீங்கள் ஒரு பெண்... எவ்வாறு...?’’ என்று தயங்கியுள்ளார். “எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு பெண்களும் நிகரானவர்கள்தான். இதிலும் நான் நிரூபித்துக் காட்டுகிறேன்...’’ என்று சொல்லி, தனியாக விமானத்தை ஓட்டிச் சாதித்து, தமிழகத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை காவ்யா பெற்றார். வறுமையிலும் வெல்ல முடியும் என்று நிரூபித்த இந்த சாதனைப் பெண், சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊக்கசக்தி என்பதில் அய்யமில்லை!  

- உண்மை இதழ், 1-15.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக