ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

குழந்தைகள் - சில குறிப்புகள்

குழந்தை அழுவற்கான காரணங்கள் என்ன?
1. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு பனிக்குடத் தண்ணீரில் நீந்திக் கொண்டு தொப்புள் கொடியைப் பிடித்துக் கொண்டு இருக்கும்போது வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணருகிறது. வெளியில் வந்தவுடன் அதற்கு சூழ்நிலை பிடிக்காமல் சில குழந்தைகள் அழலாம்.

2. பசிக்காக அழலாம். தாய்ப்பாலைக் குடிக்க குழந்தைகளுக்கு இரண்டு வகையான உணர்வுத்  தூண்டல்கள் உதவி செய்கின்றன. ஒன்று சப்பி உறிஞ்சி கடிக்க வேண்டிய தூண்டல் (Seeking reflex). மற்றொன்று கன்னத்தின் தூண்டல் உணர்வு (Rooting reflex). இதுபோன்று வாயினால் ஊட்டுவது போல் சமிக்ஞைகள் குழந்தை செய்யும்போது உடனே ஊட்டி விடவேண்டும். பசி நிறைய எடுக்க ஆரம்பித்தால் குழந்தை அழ ஆரம்பித்து விடும். எனவே, பசி அறிகுறி தெரிந்த உடனே தாய்ப்பாலைக் கொடுக்க வேண்டும்.

3. சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும்போது முக்கிக் கொண்டு திணறிக் கொண்டு சில குழந்தைகள் அழலாம்.

4. பால்குடிக்கும்போது காற்றை விழுங்கும் காரணத்தினால் பால் கொடுத்தவுடன் குழந்தையை தோளில் சாய்த்து தட்டிக்கொடுத்து ஏப்பம் வரச் செய்ய வேண்டும் (Burping).அவ்வாறு செய்தாலும் சிறிதளவு காற்று வயிற்றில் குடலுக்குள் சென்று விடுவதால் வயிற்றில் சுருட்டி வலி (Air colic) ஏற்படலாம். அதனால் குழந்தை நீண்ட நேரம் அழ நேரிடலாம்.

எனவே, குழந்தை அழுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. குழந்தையின் எல்லா அழுகையும் பால் கேட்பதற்காக என்று எண்ணி தாய்ப்பால் போதவில்லை என்ற தவறான எண்ணத்துடன் தாய்ப்பால் தவிர மற்ற பால்களை கொடுக்க வேண்டாம்.

முன் கூறியது போல குழந்தை பால் குடிக்க வேண்டும் என்று சமிக்ஞைகளை ஏற்படுத்தும்போது மட்டும் மார்பகத்தில் சரியான நிலையில் வைத்து ஊட்டிவிட வேண்டும். தூங்கும் குழந்தையை மீண்டும் மீண்டும் எழுப்பி பால் குடிக்க வைக்க வேண்டாம். குழந்தை பால் கேட்கும் போது மட்டும் கொடுத்தால் போதும்.
குழந்தையை முடிந்த அளவு தாய் மட்டுமே அல்லது யாராவது ஒருவர் மட்டுமே கையாளுவது நல்லது.
அனைவரும் தூக்கி முகத்தோடு முகம் வைத்து முத்தம் கொடுத்து கொஞ்சுவது, கைகளை சுத்தம் செய்யாமல் குழந்தையை தொட்டுத் தூக்குவது போன்ற செயல்களைத் தவிர்த்தால் குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு புரையேறும் நிலை (Fore milk),, பின்பால் (Hind milk) ஆகியவை இருப்பதை அறிந்து, ஒரு பக்க மார்பில் முழுமையாகக் கொடுத்த பிறகு அடுத்த மார்பில் கொடுப்பது நல்லது. முன்பாலில் சர்க்கரைச்சத்து அதிகமாகவும், பின்பாலில் புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது. முன்பாலை மட்டும் அதிகம் குடிக்கும் குழந்தைகள் அடிக்கடி மலம் கழிக்க வாய்ப்புள்ளது. முழுமையாக பின் பாலையும் சேர்த்துக் குடிக்கும் குழந்தைகளுக்கு புரதச்சத்து கிடைக்கப் பெற்று நன்கு வளர வாய்ப்புள்ளது.

குழந்தை அழுவதற்கு பயப்படாதீர்கள். ஆறு மாதங்கள் வரை நிறைய கைக்குழந்தைகள் அழுத வண்ணமே உள்ளன. நீண்டநேரம் தொடர்ந்து அழுதால் குழந்தை மருத்துவரிடம் காண்பித்து ஆபத்தான காரணங்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிறந்த குழந்தைக்கு சாதாரணமாக காணப்படும் இயற்கையான ஆபத்தில்லாத பிரச்சினைகள்

1. ஆபத்தில்லாத உடற்செயல் மாற்றத்தால் வரும் இயற்கையான மஞ்சள் காமாலை (Physiological Jaundice).

2. வாயின் மேல் அண்ணத்தில் ஏற்படும் வெண்மையான புள்ளி (Esteisis pearl).

3. தோலில் ஏற்படும் சிகப்பான புள்ளிகள்.

4. ‘கொர்... கொர்...’ என்ற மூக்குத் துவாரம் சிறியதாக இருப்பதால் சப்தத்துடன் கூடிய மூச்சு.

5. அவ்வப்போது ஏற்படும் இலேசான தும்மல் மற்றும் இருமல்.

6. பெண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்புகளில் ஏற்படும் வெள்ளைக்கசிவு மற்றும் இரத்தக்கசிவு.
மேற்கண்ட அறிகுறிகள், நிறைய குழந்தைகளில் ஏற்படும் இயற்கையான நிகழ்வுகள் ஆகும்.
குழந்தையை தினசரி பராமரிக்க பொதுவான அறிவுரைகள்

மேற்கூறிய அறிவுரைகள் தவிர மேலும் சிலவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்:

1. குழந்தையை குளிக்க வைக்க வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தவும். மிகவும் குளிர்ந்த நீரையோ மிகவும் சூடான நீரையோ பயன்படுத்த வேண்டாம்.

2.    மருத்துவமனையை விட்டு வீட்டுக்கு அழைத்து வந்தவுடன் குளிக்க வைத்து விடுவது நலம். ஏனெனில் மருத்துவமனையில் உள்ள கிருமிகளை குளிக்க வைத்து சுத்தம் செய்து விடுவது நலம்.

3.    குளிக்க வைக்கும்போது பயிற்சியில்லாத தாதிகளை வைத்து குளிக்க வைக்கக் கூடாது. வீட்டில் உள்ள தாத்தா _ பாட்டி அல்லது தாயே நன்றாக குளிக்க வைப்பார்கள்.

சில பயிற்சியில்லாத தாதிகள் மூக்கில் எண்ணெய் விடுவது, வாயில் வாய் வைத்து ஊதி சளியை எடுப்பது போன்ற அருவருக்கத்தக்க செயல்களைச் செய்வார்கள். அது அவர்களது தனிப்பட்ட கலையாக நினைத்து செய்கிறார்கள். அவ்வாறு செய்வதை பொதுமக்கள் அவசியம் என்று நினைக்கிறார்கள்.
அவர்களை மீண்டும் மீண்டும் குளிக்க வைக்க கூப்பிடுகிறார்கள். அவர்களை புறக்கணிப்பது குழந்தையின் உடல் நலத்திற்கு அவசியமான ஒன்றாகும்.

4. குழந்தைக்கு சாம்பிராணி புகை போடக்கூடாது.

5.    குழந்தைகளுக்கு முகப்பூச்சு மாவுகளை (பவுடர்) தெளிக்கவோ தடவவோ கூடாது.

6.    தொடர்ந்து சானிடரி நாப்கின் மற்றும் டயாபர்களை அணிவித்து இருப்பதால் அந்த சிறுநீர் மற்றும் மலம் வெளியேறும் பாதைகளில் புண்ணையோ கிருமித் தொற்றையோ ஏற்படுத்தலாம். அதனால் வெளியில் வரும்போது மட்டும் நம் வசதிக்காக சிறிது நேரம் டயாபர்களை பயன்படுத்தலாம். தொடர்ந்து இரவில் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
-உண்மை இதழ்,1-15.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக