ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

பெண்கள் விடுதலை மாநாடு 26.8.1979 அன்று சென்னை

பெண்ணுரிமை கொடுத்துப் பெறப்படுவதல்ல! எடுத்துக்கொள்ள வேண்டியது
பகுத்தறிவு மகளிர் அணியினர் சார்பில் பெரியார் நூற்றாண்டு விழா மற்றும் பெண்கள் விடுதலை மாநாடு 26.8.1979 அன்று சென்னையில் நடைபெற்றது.

மாநாட்டு தலைமை வகித்து திருமதி சரஸ்வதி கோரா அவர்கள் உரையாற்றும் போது, “பல நூற்றாண்டு காலமாக அடக்கப்-பட்டு கிடந்த பெண்கள் சமுதாய விடுதலைக்கு அரும்பாடுபட்ட தந்தை பெரியாருக்கு பெண்களே விழா எடுப்பது மிகச் சரியான ஒன்றாகும். பெண்கள் அடிமைத்தனத்திற்கு மூலவேர் எங்கிருக்கிறது என்பதை பெரியார் ஆராய்ந்தவர். கடவுளும், மதமும், ஜாதி அமைப்பும், மூடநம்பிக்கையும் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கும் கருவிகள் என்பதை ஆழமாக விளக்கினார். பெண்கள் விடுதலையில் அவர் உறுதியாக இருந்தார். எந்த சமரசத்துக்கும் அவர் தயாரில்லை.

மனுசாஸ்திர காலத்திலிருந்து தற்போதுள்ள சட்டம் வரை எல்லாம் பெண்களை அடிமைப்-படுத்துவதாகவே இருந்தன. நாத்திகத்தை வாழ்க்கை நெறியாக நாம் பின்பற்றுவோ-மேயானால் வாழ்க்கையைப் பற்றிய நமது கண்ணோட்டப் பாதை மாறும். சமத்துவ வாழ்க்கையை வாழ்ந்துகாட்ட முடியும்’’ என்று எடுத்துக் கூறினார்கள்.
மாநாட்டில், பேராசிரியை சக்குபாய் அவர்கள், பெண்கள் விடுதலை மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
பிற்பகலில் நிகழ்ச்சிகள் தொடங்கின. சின்னாளப்பட்டி சண்முகம் குழுவினரின் ‘அண்டசராசரம்’ எனும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநாட்டில், நாகம்மையார் படத்தை சிவகாமி சிதம்பரனார் அவர்கள் திறந்து வைத்தார். அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் அவர்கள் தலைமையில் திருமணம் செய்து-கொண்டவர் இவர். மஞ்சுளாபாய் உள்ளிட்ட கழக தோழியர்கள் கலந்துகொண்டார்கள். மாநாட்டில் பட்டிமன்றம் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ ‘பொருளாதாரக் கட்டுப்-பாட்டினாலா? சமுதாயக் கட்டுப்பாட்டினாலா?’ என்ற தலைப்பில் நிகழ்ந்த பட்டிமன்றத்திற்கு டாக்டர் லீலாவதி அவர்கள் தலைமையில் பெண்கள் கலந்துகொண்டு வாதிட்டனர்.

பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.

பெண்கள் விடுதலைக்காக, தந்தை பெரியார் அவர்கள் அரும்பாடுபட்ட கரணத்தால், அதன் நன்றியின் அறிகுறியாக தமிழ்நாட்டுப் பெண்கள் அவருக்கு “பெரியார்’’ என்ற பட்டத்தை, சரித்திரச் சிறப்புடன் சூட்டியதை, இப்பெண்கள் மாநாடு பெருமையுடன் நினைவு கூர்ந்து, தந்தை பெரியார் அவர்களது தொண்டுக்கு தலைவணங்கி, தந்தை பெரியார் அவர்கள் விட்டுச்சென்று இருக்கிற புரட்சிகரமான அடிச்சுவட்டில் சென்று, பெண் சமுதாயத்தின் முழு விடுதலையைப் பெற்றே தீர்வது, பெண்களை அலங்காரப் பொருள்களாக்கி, அவர்கள் சுரண்டப்படும் நிலையைத் தடுத்து,  தற்போது சீனா போன்ற சோஷலிச நாடுகளில் உள்ளதுபோல் உடைகளில் ஆண், பெண் என்ற வித்தியாசமில்லாமல் ஒரே மாதிரியான உடைகளை (Unisex Dresses) அணியமுன் வரவேண்டும்.
ஒருவர் காலில் மற்றொருவர் விழுந்து வணங்குவது என்பது, மனித சுயமரியாதைக்கும், சமத்துவத்துக்கும் எதிரானது. இந்நிலை எல்லா வழிகளிலும் தடுக்கப்பட வேண்டும்.

தாய் பெயரின் முதல் எழுத்தையே ‘இனிஷியலாகப்’ போட அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

திருமணமான, ஆகாத ஆண்கள் அனைவருக்கும் திரு. என்ற ஒரு சொல்லே பொதுவாக பயன்படுத்தப்படும்போது, பெண்களுக்கு மட்டும் ‘குமாரி’, ‘செல்வி’, ‘திருமதி’ என்ற வேறுபாடுகள் இருக்கத் தேவையில்லை என்றும், எல்லோருக்கும் பொதுவாக ‘திரு’ என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்றும்,தந்தை பெரியார் அறிவுரைப்படி, இந்தியாவில் கல்வி, உத்தியோகங்களில், சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், மற்றும் எல்லாத் துறைகளிலும் சரி பகுதியாக 50 சதவிகித இடங்கள் பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்தாக வேண்டும்,


உயர்நீதிமன்ற நீதிபதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அரசு பணியாளர் தேர்வுக்குழுத் தலைவர் போன்ற பல பொறுப்பு வாய்ந்த முக்கியப் பணிகளில் பெண்களே இல்லாத நிலை வெட்கமும், வேதனையும் அடையக் கூடியதாகும். இந்தத் துறைகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும், ஆண்களைப் போன்றே பிறப்புரிமை அடிப்படையில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்-கொள்கிறது என்றும் தீர்மானங்கள்
நிறை-வேற்றப்பட்டன. 2006இல் இது மத்திய அரசால் _ (தி.மு.க. இடம்பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) அரசால்) நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

இறுதியாக நான் பல்வேறு கருத்துக்களை கூறி உரையாற்றினேன். எனது உரையில், “தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை எல்லாம் கொள்கைப் பிழிவாக தர வேண்டுமானால் ஒன்றைத்தான் சொல்ல முடியும். பிறவியின் பெயரால் பேதம் கூடாது என்பதுதான் தந்தை
பெரியார் அவர்களின் எல்லா கொள்கைக்கும் அடிப்படை என்பதை விளக்கினேன்.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இவ்வாண்டில் இம்மாநாடு  துவக்கமே தவிர இது முடிவானதல்ல.

பலநூறு ஆண்டுகளாக அடிமைகளாக இருந்து விட்டோம்; இனியும் அடிமையாக இருக்கப் போவதில்லை என்று தோழியர்கள் இங்கே ஒலித்தக் குரலை நாடெங்கும் ஒலிக்கத் தயாராக வேண்டும். எங்கு பார்த்தாலும் இந்த உரிமை முழக்கங்கள் ஒலித்தாக வேண்டும்.

இந்த நாட்டு அரசியல்வாதிகள் என்பவர்கள் எல்லாம், பெண்களின் ஓட்டுகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்களே தவிர அவர்கள் சமுதாயத்தில் அடிமைகளாக நடத்தப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது.
உரிமை, விடுதலை என்பவை ஒருவர் பார்த்து மற்றவருக்குக் கொடுக்கப்படுபவை யல்ல; தட்டிப் பறிக்கப்பட வேண்டிய ஒன்று. நீங்கள் கிளர்ந்து எழுந்தால் விடுதலை கிடைக்கும்.

“ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது; பூனைகளால் எலிக்கு விடுதலை கிடைக்க முடியுமா?’’ என்று கேட்டார் தந்தை பெரியார்.

இதுபோல் பெண்கள் விடுதலை மாநாடுகள் நாடு தழுவிய அளவிலே ஏராளமாக நடத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துக்கூறி, தாய்ப் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகப் போடவேண்டும், ஆண்களைப் போலவே பெண்கள் உடுத்த வேண்டும், அலங்காரம், நகை ஆசை கூடாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ‘திரு’ என்றே போடவேண்டும், பெண்களுக்கு ஆண்களைப் போல சொத்துரிமை வேண்டும். கற்பு என்பது இருபாலர்க்கும் வேண்டும் என்று மாநாட்டுத் தீர்மானக் கருத்துக்களை விளக்கிப் பேசினேன்.

இந்து மதமும், இஸ்லாம் மதமும், கிறித்தவ மதமும், மற்ற மதங்களும் பெண்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்பதை புல்ரேணுகா என்ற அம்மையார் தன் அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பெண் அடிமை தீர மதம் ஒழிய வேண்டும்.

இதுபோல் பெண்கள் விடுதலை மாநாடுகள் நாடு தழுவிய அளவில் ஏராளமாக நடக்க வேண்டும் என்று கூறி என் பேச்சை நிறைவு செய்தேன்.

மாநாட்டில், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் அலமேலு அப்பாதுரை, அருணா சிவகாமி, சங்கரவல்லி, சற்குணம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.என்.அனந்தநாயகி, பேராசிரியர் நன்னன் உள்ளிட்ட ஏராளமான கழக தோழியர்கள் மற்றும் தோழர்கள் பலரும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு அய்யாவின் பெண்ணுரிமை பணியைச் சிறப்பாக செய்தனர்.
அய்யாவின் அடிச்சுவட்டில்.... 159  - கி.வீரமணி
-உண்மை இதழ்,1-15.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக