புதன், 11 நவம்பர், 2015

பெண் எனும் ஓர் ஆற்றல் அச்சமூட்டும் ஒரு செய்தி


- முனைவர் பேரா. ந.க. மங்களமுருகேசன்
தமிழகத்தையும், இந்தியாவையும் மட்டுமல்லாது சீனா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான தெற்காசிய நாடுகளையும் அச்ச மூட்டும் ஒரு விஷயம் இது பாலியல் வன்கொடுமை என்று இப்போது அதிகம் பேசப்படும் விஷயமா? இல்லை அதைவிட மிக மிக முக்கியமான அடிப்படை விஷயம் இது. அது -_- இது. விகிதாச்சார வேறுபாடு
பெண் குழந்தைகளின் பிறப்பு வீதத்தில் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வீழ்ச்சி குறித்த தகவல்கள் இவை. ஆண் குழந்தை களுக்குச் சமமான பெண் குழந்தை களின் இந்த விகிதாச்சார வேறுபாடு உலகின் பெண் குழந்தைகள் அதாவது பெண்கள் அரிதாகும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடக் கூடிய ஆபத்துதான் அது.
பெரியாரும், திரு.வி.க.வும்
பெண்ணிய சிந்தனாவாதிகளான தந்தை பெரியாரும், தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும் போற்றி வளர்த்த பெண்மைக்கு மட்டுமல்ல, பெண்ணி யத்துக்கு மட்டுமல்ல, பெண் குழந்தை களின் எண்ணிக்கைக்கே ஏற்படும் குறைவுச் சிக்கல் இது. பெண்களின் முன்னேற்றத்திற்கான தலையாய விஷயங்கள், பெண்களின் இடஒதுக் கீடு, பெண்களின் நலனுக்கான சட்டப் பாதுகாப்புகள், ஆண்களுக்கு இணையான வாய்ப்பு ஆகியன குறித்தெல்லாம் பேசப்பட்டாலும் கூடப் பெண் குழந்தை களின் பிறப்பு பெரிய சோதனைக்கு, வேத னைக்கு ஆளாகிவிடும் உண்மை இது.
ஒன்றே போதும்
நாமிருவர் நமக் கிருவர் என்பதெல்லாம் போய், நாமிருவர் நமக்கொருவர் என்று ஆனபின், குடும்பம் ஒன்றுக்குக் குழந்தை ஒன்று எனும் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையினை அடைந்தபோது பெண் குழந்தையின் எண்ணிக்கை மிகவும் சரிந்தது. ஒரே ஒரு குழந்தை மட்டுமே போதும் எனும் எண்ணம் கொண்ட பெற்றோர், அந்த ஒன்றும் ஆண் குழந்தையாக இருக்கையில் அத்தோடு போதும் பிள்ளைகள் என்று நிறுத்தி விடுகின்றனர். இது பிறப்பு விகிதக் கணக்கீட்டில் பலத்த வேறுபாட்டை ஏற்படுத்தி விட்டது. இன்னும் பிறக்கும் முதல் மகவு ஆண் மகவு வேண்டும் என எண்ணும் பெற்றோரே பெரும்பான்மை.
முதல் குழந்தை ஆணாக இருந்தால் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வமுடையவர்கள் தயங்காமல் அடுத்த குழந்தையைப் பெற விழைகின்றனர். அடுத்துப் பெண் பிறந்தால், ஆஸ்திக்கு ஓர் ஆண், ஆசைக்கு ஒரு பெண் எனப் பழமொழியைப் பகிர்ந்து கொண்டு நிறைவு அடைகின்றனர். முதல் குழந்தை பெண் எனில் அடுத்து ஆண்தான் பிறக்க வேண்டும் எனும் மனப்போக்குப் பெரும்பான்மை இந்தியப் பெற்றோர்களிடம் உண்டு என்று தெற்காசிய நாடுகளின் குழந்தைப் பிறப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையிலான அய்.நா.வின் புள்ளி விவரங்கள் துள்ளி வரு கின்றன.
பெற்றோர்களின் இத்தகு மனப் போக்கே பெண் சிசுக்களின் பிறப்பு வீதத்தில் மாபெரும் வீழ்ச்சியை உண்டாக்கியது.
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தைக் குறைப்பன 1. பெண் சிசுக் கொலைகள் 2. செலக்டிவ் அபார்ஷன் (கருச்சிதைவு) 3. வறுமை 4. உளவியல் மூடநம்பிக்கைகள், 5. விலைவாசி உயர்வு என ஆய்வில கண்டறிந்துள்ளனர்.
பெண் சிசுக் கொலை: பெண் சிசுக்கொலை புரியும் பேய்கள், மாபாவிகள், இரக்கமில்லா அரக்கமன நிலையாளர் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் பரவிக் கிடக்கின்றனர். நம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் எத்தனை கருத்தம்மாக்கள் வந்தாலும், தொட்டில் குழந்தைகள் திட்டம் வந்தாலும், வலிமையான சட்டங்கள், வாதங்கள் வைத்த போதும், கடுமையான தண்டனை விதித்தபோதிலும் அங்கொன்றும் இங்கொன்றும் கமுக்கமாக நடைபெற்றுக் கொண்டுள்ளன என்பது வேதனைக்குரியதே.
பெண் சிசுக்கொலைக்கு வறுமை, ஆண் வாரிசு வேண்டும் எனும் அவா, பெண் சிசுக் கொலை என்பது கொடூரச் செயல் என்ற உணர் வின்மை, அதிக வரதட்சணை கொடுக்க வேண்டிய சமூகச் சூழல், பெண் குழந்தைகளுக்கு மரபு வழியே செய்யப்படும் செலவினம், கல்விச் செலவு என்று முதன்மைக் காரணங் களை அடுக்கினால் இதனை எவரும் ஏற்க மாட்டார்கள்.
தொட்டில் குழந்தை
2001-இல் அரசுக் கட்டில் எறிய அம்மையார் அறிவித்த தொட்டில் குழந்தைத் திட்டம் இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் அனேக கவனம் பெற்ற திட்டம் என்று அரசு கூறுகிற 3200--_க்கும் அதிகமான பெண் குழந்தைகளும், 520 ஆண் குழந்தைகளும் காப்பாற் றப்பட்டதோடு, 2088 பெண் குழந் தைகளும் 372 ஆண் குழந்தைகளும்,  ஆக மொத்தம் 2460 குழந்தைகள் உள் நாட்டிலும், 197 குழந்தைகள் வெளி நாட்டிலுமாகத் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப் பட்டுள்ளன என்று அரசின் புள்ளி விவரம் கொட்டினாலும், பிறப்பு விகிதத்தில் பெண் குழந்தைகளின் சரிவைச் சரிக்கட்ட இத்திட்டம் உதவி யுள்ளது என்று கூறத்தான் முடியும். பெண் சிசுக்கள் கொலையைத் தடுக்கும் நல்ல செயல் என்று பாராட்டி விட்டுப் போகலாம்.
செலக்டிவ் அபார்ஷன்
ஆண் - பெண் வீதத்தில் ஏற்பட் டுள்ள கவலை தரும் சரிவு இருபது ஆண்டுகளாகத்தான் வேகமடைந்து வருகிறது. அல்ட்ராசோனோகிராபி எனும் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து பார்க்கும் முறை நகர்ப்புற மய்ய நிலைக் குடும்பங்களிலே நன்கு அறிமுகமானதிலிருந்து இச்சரிவு அளவுக்கு மிஞ்சி வேகம் காணத் தலைப்பட்டிருக்கிறது. இந்திய அரசு கருவிலிருக்கும் சிசுவை ஸ்கேன் செய்து பார்க்கும் வழக்கத்தைத் தடை செய்துள்ளது.
இரண்டு கடுமையான சட்டங் களை Pre-Natal Diagnotic Technique gululation Act 1974, Medical Termination of Pragnation Act 1971 என்பதை நிறை வேற்றியது. ஆனாலும் நிலையில் மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. படித்த நடுத்தரப் பிரிவு அறிவியல் வளர்ச்சியை - அறிவியல் கண்டு பிடிப்பான தொலைக்காட்சியை, ஜாதகம், ஜோதிடம், வாஸ்து, கர்த்தரின் சுவிசேஷப் பிரசங்கம் என்று செல வழிக்கிறதோ அது போல் சுயநலனை முன்னிட்டு இயல்பு வாழ்க்கைக்கு முர ணாக, எவ்வித வெட்கமும் இல்லாமல் பயன்படுத்தத் தயங்குவதில்லை என்பதற்கு இதுஒரு கோடிப் பெண் சிசுக்கொலைகள் ஓர் எடுத்துக்காட்டு.
பாதகமான வழிமுறைதான் ஸ்கேன் வாயிலாகப் பிறக்கும் முன்பே சிசுக்கள், ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து அழிக்கப்படும் முறை என அறிவியல்மீது குறை காணப்பட்டது. ஸ்கேன் வாயிலாகக் கண்டறிந்துபெண் குழந்தை எனில் செலக்டிவ் அபார்ஷன் எனும் முறையில் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவதைத் தடுக்கவே 1994-ல் இயற்றப்பட்ட சட்டம் வந்தது. அச்சட்டப்படி அனைத்து அலட்ரா சோனோகிராபி கருவிகளும் பதிவு செய்யப்பட வேண்டும். கருவுற்றி ருக்கும் பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினம் குறித் துத் தெரிவிக்கக் கூடாது. மீறுபவர் களுக்கு அபராதம் மட்டுமின்றிச் சிறைத் தண்டனையும் உண்டு.
ஆனால் மக்கள் இதைப் பொருட் படுத்தாமல் பணம் வாயிலாக நினைத்ததைச் சாதித்துக் கொள்வ தாகக் கூறப்படுகிறது.
உண்மைதான்
கீழ்க்கண்ட தகவல் அது உண்மை தான் என்று காட்டும் அரியானாவில் பணக்காரக் குடும்பங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 541. ஆனால் ஏழைக் குடும்பங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1567 எனும் அளவில் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தியாவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு நிகர் பெண் குழந்தைகளின் வீதம் 957.
வறுமை
அய்.நா.வின் பன்னாட்டு ஆய்வறிக்கையின் அடிப்படையில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கவும், ஆணுக்கு நிகரான எண்ணிக்கையில் இருந்து பெரிதும் வேறுபடவும் வறுமையும் காரணம் என மக்கள் நலம், பெண்கள் குழந்தைகள் நலனுக்கான செய்தி ஏடுகள் கூறுகின்றன. குழந்தைகளில் ஆண் குழந்தை பெண் குழந்தை எனும் பாகுபாடு காட்டப்படும் வேறுபாட்டு நிலை, ஏழைக் குடும்பங்களில் உணவில் முன்னுரிமை ஆண் குழந்தைக்கே என்றாகிறது. இது பெண் குழந்தை கள் பலவீனமடைந்து டைபாய்டு, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் பரவும் போது சரி விகித உணவோ, மருத்துவ உதவியோ கிட்டாமல் வாழ்வு மறுக்கப்பட்டவை ஆகின்றன.
உளவியல் அடிப்படையான விளிம்பு நிலை, மத்திய தர, மேல் மத்திய தரக் குடும்பங்களிலும் பெண் குழந்தையைக் காட்டிலும் ஆண் குழந்தைக்கான வரவேற்பு என்றுமே அதிகமாகத் தானிருக்கிறது. ஏனென் றால் பெண்ணை மணம் செய்து கொள்ள மணமகள் வீட்டில் இன்னும் பேராசையோடு எதிர்பார்க் கப்படும் நாகரிகப் பிச்சை எனும் உணர்வு இல்லாமல் எதிர்பார்க்கும், வரதட்சணை, தலைத் தீபாவளி, தலை ஆடி, தலைப்பொங்கல் சீர் வரிசை கள், தலைப்பிரசவம், காதணி விழா தாய்மாமன் சீர் ஆகியன பொரு ளாதார நிர்ப்பந்தங்கள் எந்தக் கட்டத்திலும் பெண் வீட்டாருக்கு முடிவடைவதில்லை.
சுயமரியாதைத் திருமணங்கள், காதல் திருமணங்கள் மேற்கொள்ளும் குடும்பங்களில் சமூகப் பழிக்கு அஞ்சியோ, அல்லது தந்தை பெரியார் காட்டிய, திராவிட இயக்கம் காட் டிய வழிமுறைகள், வலியுறுத்தலின் பயனாலோ இதுமுற்றிலும் மறை யாவிடினும் மறைந்து விடுவது ஓர் ஆறுதல் பெண்ணைப் பாதுகாத்து வளர்த்து, படிப்பு அளித்து, உரிய வயதில் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பதோடு திருமணத்திற்குப் பின்னரும் அதன் வாழ்வு கவலை படர்ந்ததாக இல்லாமல் நிம்மதியாய், நிறைவுடன் இருக்க வேண்டுமே எனும் கவலை எப்போதும் பெண்ணைப் பெற்றவர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டே, அரித்துக் கொண்டே இருக்கும்.
செலக்டிவ் அபார்ஷன் ஏன்? மூடநம்பிக்கை ஊட்டும் ஊடகங்கள்
தினசரிகளில் காணும் வரதட் சணைக் கொலைகள், தொலைக் காட்சிகள் பளிச்சிடும் நிஜம், சொல்வதெல்லாம் உண்மை  ஆகியன பார்த்து எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் பெண் என்பதாலேயே கீழாக மதிக்கப்பட்டு, அடக்கி வைக்கப்பட்டு இழிவுபடுத் தப்படும் பெண்களைப் பற்றிய செய்திகள், கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளை, பிரிந்து வாழும் பெற்றோரால் பேதலித்து விடப்பட்டு நிற்கும் குழந்தைகள் ஆகிய செய்திகளை வெளிச்சப்படுத்தும் மட்டமான ரசனைக்குத் தீனி போடும் சில மட்டமான ஊட கங்கள் ஆகியன, படிப்பறிவு குறை வான பெண்டிரையே மட்டுமல்லாது, ஆட வரிடையேயும் உள வியல் அடிப்படை யில் பெண் குழந்தை யென்றாலே பெற்ற வயிற்றில் பெரு நெருப்பைக் கட்டிக் கொண்ட நிலை எனும் மூடத் தனத்தை வளர்க் கிறது. இதன் விளைவுதான் தென் மாவட்டங்களில் கருக்கலைப்பு முயற்சிகள்.
விளிம்பு நிலை மக்கள் இடையே, முதலாவதாக, தான் பட்ட துன்பம், அனு பவித்த அல்லல்கள் அத்தனையும் தன்செல்லமகள் அனுபவிக்கக்கூடாது எனும் விரக்தியே பெரும்பாலான சிசுக் கொலைகளுக்குக் காரணமா கின்றன.
ஆண் பிள்ளைகளை வரிசையாகப் பெறுவது மட்டும் தான் காரண மில்லை இறைவன் கொடுத்தது என்று பெற்றுத் தள்ளுபவர்கள், பெண் குழந்தை எனில் மட்டும் அதுவும் இறைவன் கொடுத்தது என்று எண்ண வேண்டியதுதானே. இது மட்டும் என்ன கடவுள் நம் பிக்கையோ, செலக்டிவ் அபார்ஷ னுக்கு இரண்டாவதாக முதன்மைக் காரணங்களாக இருப்பவை, தாம் பெற்ற குழந்தையை வளர்க்கும் பொறுப்பில் இன்றைய மாடர்ன் ஏஜ் பெற்றோர்களுக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் கூற வேண்டும்.
கணவன், - மனைவி இருவரும் மிக இளம் வயதில் உயர் பதவியில் இருப்பவர்களாயின் ஆண் அல்லது பெண் என ஒரே குழந்தையோடு  குழந்தை பேற்றை முடித்துக் கொள்கின்றனர். அடுத்த முறை தாய்மையடையும் நிலைவரின் ஆண் குழந்தையா, பெண் குழந்தையா எனும் நிகழ்வின் அடிப்படையில் அது செலக்டிவ் அபார்ஷன் செய்யத் தூண்டுகிறது.
ஒன்றாயின், இரண்டாயின்
ஒரே குழந்தை எனில் அதன் தேவைகளை முழுமையாக நிறை வேற்றிக் குழந்தையின் விருப்பங்களை நிறைவடையச் செய்வது என்பது பெற்றோர்களுக்கு எளிதாக தோன்றுகிறது. இதே இரண்டு குழந்தைகள் எனில் செலவுகளும் இரண்டு மடங்காகுமே என விண்ணைத் தொடும் விலைவாசி, உயர்வினால் யோசிக்கத் தொடங்கி அதன் விளைவால் செலக்டிவ் அபார் ஷன் முறையில் இரண்டாம் குழந்தை பெண் எனில் அதைக் கருவிலேயே கொலை செய்து விடுகின்றனர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு
பெண் சிசுக் கொலை குழந்தைகள கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாகத் திகழ்வது ஆப்கானித்தான். 2ஆவது இடத்தில் காங்கோவும், 3ஆவது இடத்தில் பாகிஸ்தானும், நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதனைப் பெண் உரிமைக்காக சட்டபூர்வ தகவல், சட்ட ஆதரவு ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
தமிழக நிலை
தமிழக மக்கள் தொகையில் பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் தமிழகத்தில் மக்கள் தொகை 7,21,38,958. இதில் ஆண்களின் எண்ணிக்கை 3,71,89,229. பெண்களின் எண்ணிக்கை 3,49,49,729.
குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தால் 2030-இல் பெண் குழந்தைகளைவிட ஆண்கள் 20 விழுக்காடு அதிகமாக இருப்பார்கள் என லண்டனில் பன்னாட்டு மக்கள் நல, வளர்ச்சிக் கான ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் சமூகத்தில் ஆண்கள் திருமணம் செய்யத் தேவையான பெண்கள் கிடைக்காமல் பற்றாக் குறை நிலவும். உரிய வயதில் திரு மணத்திற்கும் பெண் கிடைப்பது தாமதமாவதால் திருமணத் தடை ஏற்பட்டு மனச்சிதறல் அடையும். பலவீனமான வக்கிரபுத்தி ஆண் களால் சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகலாம்.
வரதட்சணை வாங்கிய காலம் போய், பொருத்தமான பெண் கிடைக்காமல் மகன்களின் திரு மணம் தாமதமாகி விடும் எனும் பயத்தினால், மாப்பிள்ளை வீட் டாரே கல்யாணச் செலவுகளை, ஏற்றுக் கொண்டு பெண்ணுக்கு இத்தனை சவரன் நகை போடுகிறோம் என்று பெண் வீட்டடாரிடம் பேசி மணம் செய்து கொள்ளும் நிலை- நல்லதுதான் - என்றாலும்  மணப் பெண்கள் டிமாண்ட் என்பது வதந்தி இல்லை என்பது உண்மை யாகலாம். எழுத்தாளர் சுஜாதா ஒரு கதை ஒன்றில் எழுதியது போல் பெண்கள் உலகின் அதிசயங்களில் அரிதான விஷயங்களில் ஒன்றென வும் ஆகலாம்.
எந்த நாட்டின் வளர்ச்சிக்கும் மனித வளம் இன்றியமையாதது.
பெண் கடவுள்களை வணங்கு கிறான். சக்தி என்று போற்றுகிறான். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாரதி பாடலை முழுமையாக முழங்குகிறான். ஆனால் பெண் குழந்தைகளைச் சுமையாகக் கருது கிறான். இந்த நிலை மாற வேண்டும். ஆணுக்கும் பெண்தான் மிகச் சிறந்த துணையாக அமைய இயலும் ஆதலால், ஆண் குழந்தைகளுக்குச் சமமாகப் பெண் குழந்தை பிறப்பைப் போற்ற வேண்டும். எங்கள் வீட்டு மகாலட்சுமி என்று போலித்தனமாகக் கூறுவது மறைய வேண்டும்.
-விடுதலை ஞா.ம.,23.2.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக