மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப் - பிரிட்டனின் முதல் மருத்துவர்
தேசிய அளவிலும், ஏன் உலக அளவிலும் சாதனை படைத்த பல பெண்களை பற்றி பார்ப்போம்.
பிரிட்டனின் முதல் மருத்துவர்
பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகள் எதிலும் மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்படாத காலத்தில், முதன்முதலில் 1875இல் சென்னை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப். அதற்கு முன்னர் அமெரிக்காவில் மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஷார்லீபுக்குப் பிறகு மிசஸ் ஒயிட், பியேல், மிட்ஷெல் ஆகிய மூன்று ஆங்கிலோ-இந்தியப் பெண்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.
சென்னையில் படித்த பிறகு இங்கிலாந்தில் உள்ள ராயல் லண்டன் மருத்துவப் பள்ளியில் படித்து, பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை ஷார்லீப் பெற்றார். சென்னையில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையை நிறுவியவர் இவரே.
பெண்களின் வழிகாட்டி டோரதி தி லா ஹே
சென்னையின் முதல் கல்லூரி ராணி மேரி கல்லூரி. இதுவே தேசிய அளவில் மூன்றாவது பெண்கள் கல்லூரி, தென்னிந் தியாவின் இரண்டாவது கல்லூரியும்கூட. 1914இல் இந்தக் கல்லூரி நிறுவப்படக் காரணமாக இருந்தவர் டோரதி தி லா ஹே. 1936 வரை அவரே கல்லூரி முதல்வராகச் செயல்பட்டார்.
மதராஸ் மாகாண பெண்களின் உயர்கல்வி வளர்ச்சியில் ராணி மேரி கல்லூரியின் பங்கு ஈடு இணையற்றது. கல்லூரி தொடங்கப்பட்ட காலத்திலேயே குழந்தைத் திருமணம் காரணமாக, சின்ன வயதிலேயே கணவரை இழந்த பெண்கள் இங்கே படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இங்கே சிறப்பாகப் படித்த பெண்கள் மாநிலக் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்கள்.
முதல் வாக்குரிமை
பிரிட்டனிலும் அதன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான தீர்மானத்தை, 1921இல் முதலில் நிறைவேற்றிய சட்டப்பேரவை மதராஸ் மாகாண சட்டப்பேரவைதான்.
அந்த வகையில் பெண் களுக்கான சுதந்திரம், சமஉரிமை சார்ந்த பயணம் தேசிய அளவில் சென்னையில்தான் தொடங்கியது. அதன் பிறகுதான் பம்பாய் மாகாணமும், ஒருங்கிணைந்த மாகாணமும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றின.
இதிலும் வாக்கு வித்தியாச அடிப்படையில் சென்னையே முதலிடம் பிடித்தது. மாகாணத்தின் 90 உறுப்பினர்களில் 40 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 40 பேர் வாக்கு அளிக்காமலும் இருந்தனர். 10 பேர் மட்டுமே தீர்மானத்தை எதிர்த்தது வரலாற்று சாதனையாக மாறியது. 1917இல் சர்வதேச பெண்கள் வாக்குரிமை இயக்கத்துடன் தொடர்புடைய இந்திய பெண்கள் சங்கத்தை அன்னி பெசன்ட், டோரதி ஜின்ராஜ தாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கினர்.
இந்த அமைப்பின் பணிகளைத் தொடர்ந்தே மதராஸ் மாகாண சட்டப்பேரவையில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
-விடுதலை,22.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக