சனி, 21 மார்ச், 2015

நாகம்மாள் தகனம்

தோழர் .வெ.ரா.நாகம்மாள் அவர்கள் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு இனிதாங்காது என்ற நிலையில் ஆஸ்பத் திரியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வந்ததும் கடைசி ஸ்திதியில் செய்யக்கூடிய சிகிச்சைகளை செய்து பார்த்ததும் இரவு 7-45 மணிக்கு அம்மையார் ஆவி நீத்தார்கள்.
உடனே அம்மையாரின் உடல் சுத்தம் செய்யப் பட்டு நன்கு அலங்கரித்து .வெ.ரா. அவர்கள் இல்லத்தின் முன் மண்டபத்தில் யாவரும் எளிதில் பார்த்துச்செல்ல வசதியுடன் அழகிய பெட்டியில் அடக்கம் செய்து வைக்கப்பட்டது. உடனே 8-30 மணிக்கு யாவருக்கும் (.வெ.ரா. உள்பட) சாப்பாடு நடந்தது. ஊர் பிரமுகர்களும், வெளியூர் தோழர்களும் இரவு முழுவதும் வந்து கொண்டே இருந்தார்கள்.
அநேகமாக எல்லோரும் இரவு முழுவதும் விழித்துக்கொண்டே கேளிக்கையாய் இருந்ததோடு இடை இடையே டீ வழங்கப்பட்டு வந்தது. முக்கியமாய் யாவரும் கவனிக்க வேண்டியதும், கவனித்ததுமான சம்பவம் யாதெனில் நெருங்கிய உறவினர் முதல் உற்ற தோழர்கள் வரை யாவரும் அழுதல் என்னும் அநாகரிகமான காரியத்தை அறவே ஒழித்து ஆண் பெண் அடங்கலும் ஒற்றுமையாய் பேசிக்கொண்டும் நாளைய காரியங்கள் கவனித்தும் வந்ததே.
மறுநாள் காலை 9 மணி அளவிற்கு தகனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று இரவே துண்டுப் பிரசுரம் ஊரெல்லாம் வழங்கப்பட்டது. அந்தப்படிக்கே மறுநாள் காலையில் எவ்வித சடங்கும் இல்லாமல் ஒரு இரதத்திற்கு ஒப்பான ஒர் அழகிய நாலு சக்கரவண்டியில் அம்மாளின் உடல் மூடப்பட்ட பெட்டி வைக்கப்பட்டு பெட்டியை பட்டாடைகளாலும், புஷ்பங் களாலும்,
அலங்கரித்து வைத்து பல ஆயிரக்கணக்கான ஜனங்கள் பின்தொடர தகனம் செய்ய குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கி வண்டி மெல்ல தள்ளிக்கொண்டு செல்லப்பட்டது. ஊர்வல ஆரம்பத்தில் போட்டோ படக்காரர்கள் பலர் படம் எடுத்தார்கள்.
வழிநெடுக அநேக கடைகளிலும், முக்கியமாய் சுயமரியாதை வாலிபர் சங்கத்தின் முன்னிலும் (மகாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் தலைவருக்கு மாலைகள் சூட்டி உபசரிப்பதை போல்) நிறுத்தி நிறுத்தி மாலைகள் போடப்பட்டு புஷ்பங்கள் வாரி வாரி இறைக்கப்பட்டன.
தகனம் நடக்கும் இடமாகிய காவேரிக்கரை அணுகியதும் உடனே தகன ஏற்பாடுகள் நடந்து
கொண்டேயிருக்கும் போது தோழர் எஸ். மீனாட்சி சுந்தரம் பி.., எல்.டி., அவர்கள் தலைமையில் ஒர் கூட்டம் கூடி வந்திருந்த பிரமுகர்களும், இயக்க தோழர்களும் தங்கள் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் தோழர்கள் சாமி சிதம்பரனார், ராவணதாஸ், சேலம் நடேசன், டாக்டர் கிருஷ்ணசாமி, மாயவரம் சி. நடராஜன், .வி.நஞ்சப்ப செட்டியார், எம்.சிக்கையா, மைதீன் பாட்சா முதலியவர்கள் அம்மையாரின் குணாதிசயங்களைப் பற்றியும்,
வரலாற்றைப் பற்றியும் பேசினார்கள். பின் தோழர் .வெ.ரா அவர்கள் பதில் சொல்லி முடித்தவுடன் கூட்டம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பினார்கள். வெளியூர் பிரமுகர்கள் வந்துகொண்டே இருப்பதுடன், தந்திகளும், கடிதங்களும் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
ஒரு மணி நேரத்தில் எல்லாம் முடிந்தது. தகனம் செய்த பின்பு எவ்வித சடங்கும் அது சம்பந்தமான நடவடிக்கையும் இல்லை. .வெ.ரா. சனிக்கிழமை இரவு சுற்றுப்பிரயாணம் செய்வதற்குத் திருச்சிக்குப் புறப்பட்டு விட்டார்.
குடி அரசு - கட்டுரை - 14.05.1933
- விடுதலை,21.3.15 பக்கம்-7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக