வெள்ளி, 20 மார்ச், 2015

அன்னை மணியம்மையாரும் சாவித்திரிபாய் புலேயும்


சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 -_ 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதி மற்றும் கவிஞர் ஆவார். இவர் தம் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவில் நிறுவியவர்கள் ஆவர்.
வாழ்க்கை: இவர் 1831இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர்தம் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840இல் மணந்தார்.
ஜோதிராவ் புலே அவர்கள் தமது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு அந்தண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.
கல்விப் பணிகள்: ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது.
பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.
பிற பணிகள்: விதவைப் பெண்களின் தலையை மொட்டை யடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம்ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதை களான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.
கவிதை நூல்: 1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத் தும் கவிதைகளான 'கவிதை மலர்கள்' என்ற நூலை வெளியிட்டார்கள். கவிதை வரிகளில் சில: கல்வி கற்றுக் கொள். போ.
சுய சார்புள்ளவராக சுறுசுறுப்பானவராக இருங்கள்: வேலை செய்யுங்கள் அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள் . அறிவில்லாதிருந்தால் இழந்து நிற்போம் அனைத்தையும் . அறிவிழந்து போனால் நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்.
சும்மா இராதீர்கள். போய் இனியேனும் கல்வியைப் பெறுங்கள் ஒடுக்கப்பட்டோர் மற்றும் கைவிடப்பட்டோர் அனைவரது துன்பங்களையும்  போக்குங்கள்.
படிக்க உங்களுக்கு  வாய்த்துள்ளது  ஒரு  பொன்னான நேரம்  எனவே படியுங்கள்!
குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்ததிலும் கல்விப் பணியில் சிறப்பாக ஈடுபட்டதிலும் சாவித்திரிபாய் புலே _- அன்னை மணியம்மையார் அவர்களை ஒத்திருப்பதைக் காண முடிகிறது. ஒருவருடைய பிறந்த நாள் (மார்ச் 10) மற்றொருவருடைய மறைந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விடுதலை ஞாயிறு மலர்,14.3.15 பக்கம்-5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக