புதன், 21 பிப்ரவரி, 2018

பெண்களுக்கு முதுகலை படிப்பு வரை இலவச கல்வி கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு


பெங்களூரு, பிப்.20 கருநாடகா வில் பெண்களுக்கு தொடக்கக் கல்வி முதல் முது கலை படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என அம் மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கருநாடக முதல்வர் சித்த ராமையா 17ஆம் தேதி சட்டப் பேரவையில் 2018-  -  2019-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். 
அப்போது அவர் தனது உரையில், கருநாடகாவில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 2017- 2018-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் 1-ஆம் வகுப்பு முதல் இளங்கலை படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு அந்த திட்டம், அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரி களுக்கும் விரிவுபடுத்தப்படு கிறது.

மேலும் பெண்கள் உயர் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.95 கோடி செலவில் முதுகலை படிப்பு வரை அவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3.75 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள். மொத்தமாக பெண்களின் கல்வி மற்றும் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக ரூ.4514 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு கர்நாடகாவில் உள்ள மகளிர் அமைப்பினரும், சமூக நல அமைப்பினரும் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மகளிர் அமைப்பினர், கர்நாடக அரசின் இந்த அறிவிப்பால் மாநிலத்தில் பெண்களின் கல்வி நிலை உயரும்.

பெண்கள் அனைத்து துறை களிலும் முன்னேற்றம் அடைய, இந்த திட்டம் பெரிதும் உதவும். பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கியதற்காக முதல்வர் சித்த ராமையா வரலாற்றில் போற்றப் படுவார் என பாராட்டு தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 20.2.18

திங்கள், 5 பிப்ரவரி, 2018

2017: அனிதா முதல் ஆரிபா வரை

அனிதா



பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்களை பெற்றும் நீட் தேர்வின் காரணமாக தான் மருத்துவராக வேண்டும் என்ற கனவு தகர்ந்ததால், தற்கொலை செய்து கொண் டார் அனிதா. அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நீட் தொடர்பான வழக்கில் பங்கேற்ற அனிதா செய்தியாளர்களை சந்தித்து நீட் தேர்விற்கு எதிரான தன் நிலையை முன்வைத்தார்.

இருப்பினும், நீட் தேர்வின் அடிப் படையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால் அனிதாவின் கனவு தகர்ந்தது.

இதைத் தொடர்ந்து அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனி தாவின் மரணத்தை தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக மறப்பதற்கு வாய்ப்பில்லை. அனிதாவிற்கான நீதிகோரிய போராட்டம் ஓய்ந்துவிட வில்லை. நாடு முழுவதும் பல அனி தாக்கள் உருவாகியுள்ளார்கள். இந்த அனிதாக்களால் ஆட்சியாளர்களின் ஆணவப்போக்கு விரைவில் ஒழிந்து விடும் என்கிற விதமான நம்பிக்கையை நுங்கம் பாக்கப் பள்ளி மாணவிகள் விதைக்கத் தொடங்கியுள்ளனர்.

சாதி எதிர்ப்பு போராளி கவுசல்யா



திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். ஆனால், கவுசல்யாவின் உறவினர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இது ஆணவப் படுகொலை என்று கூறி நீதிமன்றத்தில் நீதி கேட்டு போராடி வந்தார் கவுசல்யா. தீர்ப்பின்படி, இந்த வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தனது கணவரின் மரணத்திற்காக நீதி கேட்டு போராடிய கவுசல்யா சாதி எதிர்ப்புப் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். இன்று சாதி எதிர்ப்பு போராளியாக பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு முன்னு தாரணமாகவும் இருந்து வருகிறார் கவுசல்யா.

ஹாதியா



காதலுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் அதிகம் பேசப்பட்டார் ஹாதியா. தற்போதைய இந்த நவீன உலகத்திலும், தங்களது துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மறுக்கப்பட்டுதான் வருகிறது. அது மதத்தின் பெயராலோ அல்லது சாதியின் பெயராலோ பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது.

கேரளாவில் இந்து குடும்பத்தில் பிறந்த ஹாதியா இசுலாம் மதத்திற்கு மாறி இசுலாமிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஹாதியா மூளைச் சலவை செய்யப்பட்டார் என்றும், இது ‘லவ் ஜிஹாத்’ என்றும் அவரின் தந்தை தெரிவித்தார். ஆனால், தன்னை மதம் மாறும்படி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று ஹாதியா தெரிவித்தார்.

பத்மாவதி



இந்த வருடத்தில் பரபரப்பை பஞ்ச மில்லாமல் ஏற்படுத்தியது பத்மாவதி திரைப்படம். இந்த திரைப்படம் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மாவதியின் கதை என்று கூறப்படுகிறது. தாங்கள் தெய்வமாக மதிக்கும் பத்மாவதியை "தவறாக சித்தரிப்பதால்" இத்திரைப்படம் வெளி வரக்கூடாது என்று தீவிர வலதுசாரி இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திரைப்படத்தில் பத்மாவதியாக நடித்துள்ள தீபிகாவின் மூக்கை அறுக்க வேண்டும் என்றும், அவரின் தலையை வெட்டி வருபவர்களுக்கு 10 கோடி பரிசு என்றும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. கற்பனை கதாப்பாத்திரமான பத்மாவதிக்காக போராடும் குழுக்கள் இயல்பு நிலையில் இன்றைய அளவில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறை குறித்து போராடினால் நன்றாக இருக்கும் என்றே சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டது.

ஆரிபா



ராஜஸ்தானைச்சேர்ந்தபாயல் என்ற 22 வயது ஆசிரியை ஏற்றுமதி வணிகம் செய்யும் பயஸ்முகமது என்பவரை காதலித்துவந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக பாயலின் வீட்டார் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் பஜ்ரங் தள் அமைப்பைச்சேர்ந்தவர்களிடம் இவ்விவகாரத்தைச் சொல்ல பாயல் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி பயஸ் முகமதுவை திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது விருப்பத்துடன் கணவரின் மதமான இசுலாத்தை தழுவி தனது பெயரை ஆரிபா என்று மாற்றிக் கொண்டார்.

இவ்விவகாரம் ராஜஸ்தானில் பூதாகர மாக வெடித்தது. இந்து அமைப்புகள் பாயல் என்ற ஆரிபாவின் பிறப்புச்சான்றிதழையே மாற்றி அவரின் வயதைக் குறைத்துக் காட்ட முயற்சி செய்தார்கள். இவர்களுக்கு மாநில நிர்வாகத் தைச்சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்தனர்.

மோசடியாக தயாரிக்கப்பட்ட வயதுச் சான்றிதழ் விவகாரம் நீதிமன்றம் சென்றது. இந்த நிலையில் சான்றிதழ் தொடர்பான வழக்கு முடியும் வரை ஆரிபா கணவனை விட்டு தனது வீடு செல்லவேண்டும் என்று கூறியது. ஆனால் தான் தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்று உறுதி யாக கூறியதால் நீதிமன்றம் ஆரிபாவை பெண்கள் காப்பகத்தில் வைக்க உத்தர விட்டது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் இந்து அமைப்பினரும் ஆரிபாவின் பெற்றோரும் பயஸ்முகமது மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை செய்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் புகார் செய்தனர். நீதிமன்ற விசாரணையில் ஆரிபா இதை முழுமையாக மறுத்தார். மேலும் தனக்கு 22 வயதாகிவிட்டதை உறுதிசெய்யும் கல்லூரிச் சான்றிதழ்களைக் கொடுத்தார்.  இதனை ஆய்வு செய்த ராஜஸ்தான் தலைமை நீதிபதி கோபால கிருஷ்ண வியாஸ் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில் ''ஆரிபாவுக்கு அவரின் சுய விருப்பத் தின் பேரில் திருமணம் செய்துகொள்ள முழு உரிமை உண்டு, அதற்கான வயதை அவர் அடைந்துவிட்டார்.

அவரின் பாதுகாப்பைக் காவல் துறை யினரே உறுதி செய்யவேண்டும் என்று கூறி ஆரிபா அவர் கணவருடன் வாழ முழு உரிமை உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது.  அதன் பிறகு காப்பகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வந்த ஆரிபா தனது கணவர் பயஸ் முகமதுவுடன் சென்றார்.

இவ்வாறு எத்தனை அனிதாக்களும், ஆரிபாக்களும், ஹாதியாக்களும், கவுசல் யாக்களும் நீதிமன்றம் செல்ல வேண்டுமோ?

- விடுதலை ஞாயிறுமலர்,20.1.18

செவ்வாய், 30 ஜனவரி, 2018

ராணுவக்கல்லூரியின் முதல் பெண் முதல்வர்




புனேவிலுள்ள ராணுவ மருத்துவக் கல்லூரி 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சுமார் 70 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்தக் கல்லூரியின் முதல்வராக முதன்முதலாக பெண் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர், மாதுரி கனித்கர், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். தனது பெயரைக் காட்டிலும் அதிக நீளமான மருத்துவப் பட்டங்களைப் பெற்றவர்.

எம்.பி.பி.எஸ்., எம்டி (குழந்தைகள் நலம்), டிஎன்பி (குழந்தைகள் நலம்), குழந்தைகள் சிறுநீரகவியல் துறையில் ஃபெலோ ஷிப், மருத்துவக் கல்வியில் சர்வதேச ஃபெலோஷிப் என இவர் பெற்ற பட்டங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ராணு வத்திலும் தனது முத்திரையைப் பதித்தவர் இவர். ராணுவத்தில் அமைதிப் பணிகளுக்கான விஷிஸ்ட் சேவா பதக்கம் பெற்றவர், இன்று ராணுவ மருத்துவக் கல்லூரிக்கே முதல்வராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.

ஆணாதிக்கம் நிறைந்த துறைகளில் ராணுவமும் ஒன்று, அந்தத் துறையில் கோலோச்சி வரும் மேஜர் ஜெனரல் மாதுரி கனித்கர், பல பெண்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளார்.
- விடுதலை நாளேடு, 30.1.18

வியாழன், 14 டிசம்பர், 2017

வங்காளதேசம்: பெண்கள் வயல் வேலைக்கு செல்ல தடை விதித்த மதத் தலைவர்கள் கைது


டாக்கா, டிச. 14- இசுலாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை யில் இருக்கும் வங்காளம் தேசம் நாட்டில் முன்னர் பெண்கள் கொத்தடிமைகள் போல் நடத் தப்பட்டு வந்தனர். வீடுகளுக் குள்ளே முடங்கி கிடந்த அவர் கள் பிற்காலத்தில் மெல்ல, மெல்ல ஆண்களுக்கு நிகராக வெளி வேலைகளுக்கு செல்ல தொடங்கினர்.

தற்போது அந்நாட்டில் உள்ள 40 லட்சம் தொழிலாளர் களில் சுமார் 80 சதவீதம் பேர் பெண்களாக காணப்படுகின்ற னர். நாடு முழுவதும் உள்ள சுமார் 4500 ஜவுளி தொழிற் சாலைகளில் இவர்கள் பணி யாற்றி வருகின்றனர். இந்நிலை யில், வங்காளதேசம் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள குமர் காலி நகரில் உள்ள மசூதி ஒலி பெருக்கியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஒரு மத அறிவிப்பு (பத்வா) வெளியானது.
அப்பகுதியில் உள்ள பெண் களில் யாரும் இன்று முதல் வயல் வேலைகளுக்கு செல்லக் கூடாது என்று

உத்தரவாக வெளி யான அறிவிப்பு அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.

மதத் தலைவர்கள் இது போன்ற பொது அறிவிப்பு களை (பத்வா) வெளியிடுவ தற்கு கடந்த 2001ஆ-ம் ஆண்டு அந்நாட்டு அரசு தடை விதித் திருந்தது. பின்னர், இந்த உத்த ரவை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த தடையை நீக்கி உத்தர விடப்பட்டது.

மதம் சார்ந்த விவகாரங்க ளில் உடலுக்கு காயம் விளை விக்காத உத்தரவுகளை இமாம் கள் பிறப்பிக்க அனுமதி அளிக் கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பெண்களில் யாரும் வயல் வேலைகளுக்கு செல்ல கூடாது என்று மத உத்தரவு (பத்வா) பிறப்பித்த குமர்காலி பகுதி மதத் தலைவர் மற்றும் அங்குள்ள 5 மசூதி களின் இமாம்களை காவல் துறையினர் கைது செய்துள்ள னர். இவர்கள் 6 பேரின் மீதும் ராணுவ காலத்து சிறப்பு அதி கார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
- விடுதலை நாளேடு, 14.12.17

செவ்வாய், 12 டிசம்பர், 2017

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர்

எல்லோருக்கும் பொதுவானவர்!



“இனம், மொழி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அதிபராகப் பணியாற்றுவேன்’’ என்று தனது முதல் உரையிலேயே கவனம் ஈர்த்துள்ளார் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹாலிமா யாக்கோப். சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட எந்த வேட்பாளரும் தகுதி பெறாத நிலையில் ஹாலிமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹாலிமா மலாய் இசுலாமியர்கள் என்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு சிங்கப்பூர் விடுதலை பெற்ற சமயத்தில் 1965 முதல் 1970 வரை யூசுஃப் இஷ்ஹாக் என்ற மலாய் இசுலாமியர் அதிபராக பணியாற்றினார். 47 ஆண்டுகளுக்கு பிறகு அதே இனத்தைச் சேர்ந்த ஹாலிமா அதிபராகப் பதவியேற்றுள்ளார்.

63 வயதாகும் ஹாலிமாவுக்கு இந்த உயரம் எளிதில் கிடைத்துவிடவில்லை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தைக்கும், மலாய் தாய்க்கும் பிறந்தவர் ஹாலிமா. காவலாளியாக பணியாற்றி வந்த ஹாலிமாவின் தந்தை சிறுவயதிலேயே மாரடைப்பால் காலமானார். ஹாலி மாவுடன் சேர்த்து 5 குழந்தைகளையும் அவர் அம்மாதான் கடினமான சூழலில் வளர்த்தெடுத்தார்.

தந்தை காலமானபோது ஹாலிமாவுக்கு 8 வயது. தந்தையின் மறைவுக்குப் பின்னர் வறுமை அவர்களைச் சூழ சிறு வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார் அவரின் அம்மா. ஒரு பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்பாக சாப்பாட்டு கடை வைத்திருந்தார் ஹாலிமாவின் தாய். பள்ளிக்குச் செல்லும் முன்பு அம்மாவுக்கு தேவையான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு செல்வது ஹாலிமாவின் வழக்கம்.

பள்ளிப் படிப்பை முடித்ததும் சட்டப்படிப்பை முடித்து சிங்கப்பூர் பார் கவுன்சிலில் பதிவு பெற்று பணியாற்றினார். இவருக்கு சட்டப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டமும் கடந்த ஆண்டு அளித்துள்ளது. அதன் பின்பு தேசிய தொழிற்சங்க காங்கிரசில் பணியைத் தொடங்கி, அதன் துணைத் தலைமைச் செயலாளர் பதவி வரை பல்வேறு பொறுப்புகளை தொழிற்சங்கத்தில் வகித்தார். சிங்கப்பூர் தொழிலாளர் படிப்புகள் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டு அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்தார் ஹாலிமா. 2011-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சமூக மேம்பாட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சராகவும், சமுதாய மற்றும் குடும்ப மேம் பாட்டுத் துறையின் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக 2013-ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டதால் சபாநாயகர் பதவியையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்.

அதிபர் தேர்தலில் இவரை எதிர்த்து 4 பேர் போட்டியிட்டனர். ஆனால் இவரைத் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே, போட்டியின்றி ஹாலிமா அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

சந்தோஷ தருணங்களை குறிப்பிடும் அதே சமயத்தில், ஹாலிமாவுக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி ஹாலிமா தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்று சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

50 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட சிங்கப்பூரில், சீன வம்சவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூரில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஹாலிமா அதிபராகப் பொறுப்பேற்றுள்ளது சிறுபான்மையினருக்கு குதூகலத்தை அளித்துள்ளது. சிறுபான்மையினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்று அவர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஆனால் தான் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, அனைத்து சிங்கப்பூர் குடிமக்களுக்கும் பொதுவான அதிபராக பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார் ஹாலிமா.

அதிபராக பொறுப்பேற்று அவர் பேசுகையில், “பன்முக கலாச்சாரத்துக்கும் பல இனவாதங்களும் ஒன்றிணைய உள்ளதால் இது சிங்கப்பூர் மக்களுக்கு பெருமை தரும் தருணம். போட்டியின்றி நான் தேர்வு செய்யப்பட்டாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற அர்பணிப்பு என்னிடம் இருந்து மாறாது.

திறமை, தகுதிக்கு முன்னுரிமை என்ற நமது அமைப்பின் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அது இல்லாமல் இன்று நான் இந்த நிலையை எட்டியிருக்க முடியாது!

அதிபர்களை ஜாதி, மத, இன வேறுபாடின்றி  சிங்கப்பூர் குடிமக்கள் தேர்ந்தெடுக்கும் நாளைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்’’ என்றார்.
- விடுதலை நாளேடு,12.12.17

கப்பல்படையின்  முதல் பெண் விமானி!




இந்திய கப்பல்படையின் முதல் பெண் விமானியாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் தேர்ச்சி பெற் றுள்ளார்.

கேரளத்தில் உள்ள எழிமலா கப்பல்படை அகாதெமியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ள இவர் விரைவில் கப்பல்படைக்குச் சொந்தமான உளவு விமானத்தில் பைலட்டாக உயரப் பறக்கப் போகிறார். 
இவரின் தந்தை கியான் ஸ்வரூப் கப்பல்படை கமாண்டராக உள்ளார்.

இவருடன் டில்லியைச் சேர்ந்த அஸ்தா சீகல், புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா, கேரளத்தைச் சேர்ந்த சக்தி மாயா ஆகிய மூன்று அதிகாரிகளும் இந்தியாவின் முதல் கப்பல்படை போர்தளவாட பெண் ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் பெண் விஞ்ஞானி



கேரளத்தைச் சேர்ந்த அன்னாமணி ஒரு விஞ்ஞானி. 1918-இல் கேரள மாநிலம் பீர்மேட்டில் பிறந்த இவர் விண்வெளி குறித்தும் கோள்கள் குறித்தும் ஆய்வு செய்த முதல் பெண் விஞ்ஞானி. புனேவிலுள்ள விண் வெளி ஆராய்ச்சி நிலைய அலுவலகத்தில் 1948-இல் விஞ்ஞானியாகச் சேர்ந்து படிப்படியாக அதன் இயக்குநராக உயர்வு பெற்று 1960-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இந்திய விஞ்ஞானக் கழகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு, வெளிநாடு மற்றும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிக் குழு, கோள்கள் ஆராய்ச்சி குழு ஆகியவற்றில் சிறப்பு உறுப்பினராக பணியாற்றிய முதல் பெண் இவர்தான். விண்வெளி பாதை மற்றும் கோள்கள் குறித்த தனது எண்ணற்ற ஆராய்ச்சி முடிவுகளை புத்தகங்களாக எழுதி வெளியிட்டும் உள்ளார்.
- விடுதலை நாளேடு,12.12.17

திங்கள், 4 டிசம்பர், 2017

வனத்தைக் காக்கும் பெண்கள்




ஜார்க்கண்டில் வன மாஃபி யாக்களிடமிருந்து குங்கிலிய வனத்தை 60 பெண்கள், வன சுரக்சா சமிதி அமைப்பின் மூலம் காத்துவருகின்றனர். இதன் தலைவியான ஜமுனா குன்ட், தங்கள் பகுதியில் உள்ள வனத் தைப் பாதுகாப்பதற்காக இருபது ஆண்டுகளாகப் பெண்களை இணைத்துப் போராடிவருகிறார். ஆரம்பத்தில் ஆண்களை எதிர்த்துப் போராடத் தயங்கிய பெண்களிடம், தங்கள் முதன்மை வாழ்வாதாரமான வனம் கொள்ளையர்களால் சாராயத்துக்காகக் கொள்ளையடிக்கப் படுவதை விளக்கியுள்ளார்.

இந்த அமைப்பினர் தினசரி மூன்று முறை ரோந்து செல்கின்றனர். வில், அம்பு, கம்பு, ஈட்டிகள்தாம் கொள்ளை யர்களை விரட்டுவதற்கான ஆயுதங்கள். நாய்களும் இவர் களுக்கு உதவுகின்றன. இவர்களின் முயற்சியால் அய்ம்பது ஹெக்டேர் வனப்பகுதி தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுவருகிறது. மாஃபியாக்களின் கல் எறிதல் உள்ளிட்ட தாக்குதல்களையும் ஜமுனாவின் படையினர் சந்தித்துப் போராடி வருகின்றனர்.

விடுதலை நாளேடு,21.11.17