திங்கள், 5 பிப்ரவரி, 2018

2017: அனிதா முதல் ஆரிபா வரை

அனிதா



பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்களை பெற்றும் நீட் தேர்வின் காரணமாக தான் மருத்துவராக வேண்டும் என்ற கனவு தகர்ந்ததால், தற்கொலை செய்து கொண் டார் அனிதா. அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நீட் தொடர்பான வழக்கில் பங்கேற்ற அனிதா செய்தியாளர்களை சந்தித்து நீட் தேர்விற்கு எதிரான தன் நிலையை முன்வைத்தார்.

இருப்பினும், நீட் தேர்வின் அடிப் படையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால் அனிதாவின் கனவு தகர்ந்தது.

இதைத் தொடர்ந்து அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனி தாவின் மரணத்தை தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக மறப்பதற்கு வாய்ப்பில்லை. அனிதாவிற்கான நீதிகோரிய போராட்டம் ஓய்ந்துவிட வில்லை. நாடு முழுவதும் பல அனி தாக்கள் உருவாகியுள்ளார்கள். இந்த அனிதாக்களால் ஆட்சியாளர்களின் ஆணவப்போக்கு விரைவில் ஒழிந்து விடும் என்கிற விதமான நம்பிக்கையை நுங்கம் பாக்கப் பள்ளி மாணவிகள் விதைக்கத் தொடங்கியுள்ளனர்.

சாதி எதிர்ப்பு போராளி கவுசல்யா



திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். ஆனால், கவுசல்யாவின் உறவினர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இது ஆணவப் படுகொலை என்று கூறி நீதிமன்றத்தில் நீதி கேட்டு போராடி வந்தார் கவுசல்யா. தீர்ப்பின்படி, இந்த வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தனது கணவரின் மரணத்திற்காக நீதி கேட்டு போராடிய கவுசல்யா சாதி எதிர்ப்புப் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். இன்று சாதி எதிர்ப்பு போராளியாக பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு முன்னு தாரணமாகவும் இருந்து வருகிறார் கவுசல்யா.

ஹாதியா



காதலுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் அதிகம் பேசப்பட்டார் ஹாதியா. தற்போதைய இந்த நவீன உலகத்திலும், தங்களது துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மறுக்கப்பட்டுதான் வருகிறது. அது மதத்தின் பெயராலோ அல்லது சாதியின் பெயராலோ பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது.

கேரளாவில் இந்து குடும்பத்தில் பிறந்த ஹாதியா இசுலாம் மதத்திற்கு மாறி இசுலாமிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஹாதியா மூளைச் சலவை செய்யப்பட்டார் என்றும், இது ‘லவ் ஜிஹாத்’ என்றும் அவரின் தந்தை தெரிவித்தார். ஆனால், தன்னை மதம் மாறும்படி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று ஹாதியா தெரிவித்தார்.

பத்மாவதி



இந்த வருடத்தில் பரபரப்பை பஞ்ச மில்லாமல் ஏற்படுத்தியது பத்மாவதி திரைப்படம். இந்த திரைப்படம் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மாவதியின் கதை என்று கூறப்படுகிறது. தாங்கள் தெய்வமாக மதிக்கும் பத்மாவதியை "தவறாக சித்தரிப்பதால்" இத்திரைப்படம் வெளி வரக்கூடாது என்று தீவிர வலதுசாரி இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திரைப்படத்தில் பத்மாவதியாக நடித்துள்ள தீபிகாவின் மூக்கை அறுக்க வேண்டும் என்றும், அவரின் தலையை வெட்டி வருபவர்களுக்கு 10 கோடி பரிசு என்றும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. கற்பனை கதாப்பாத்திரமான பத்மாவதிக்காக போராடும் குழுக்கள் இயல்பு நிலையில் இன்றைய அளவில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறை குறித்து போராடினால் நன்றாக இருக்கும் என்றே சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டது.

ஆரிபா



ராஜஸ்தானைச்சேர்ந்தபாயல் என்ற 22 வயது ஆசிரியை ஏற்றுமதி வணிகம் செய்யும் பயஸ்முகமது என்பவரை காதலித்துவந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக பாயலின் வீட்டார் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் பஜ்ரங் தள் அமைப்பைச்சேர்ந்தவர்களிடம் இவ்விவகாரத்தைச் சொல்ல பாயல் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி பயஸ் முகமதுவை திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது விருப்பத்துடன் கணவரின் மதமான இசுலாத்தை தழுவி தனது பெயரை ஆரிபா என்று மாற்றிக் கொண்டார்.

இவ்விவகாரம் ராஜஸ்தானில் பூதாகர மாக வெடித்தது. இந்து அமைப்புகள் பாயல் என்ற ஆரிபாவின் பிறப்புச்சான்றிதழையே மாற்றி அவரின் வயதைக் குறைத்துக் காட்ட முயற்சி செய்தார்கள். இவர்களுக்கு மாநில நிர்வாகத் தைச்சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்தனர்.

மோசடியாக தயாரிக்கப்பட்ட வயதுச் சான்றிதழ் விவகாரம் நீதிமன்றம் சென்றது. இந்த நிலையில் சான்றிதழ் தொடர்பான வழக்கு முடியும் வரை ஆரிபா கணவனை விட்டு தனது வீடு செல்லவேண்டும் என்று கூறியது. ஆனால் தான் தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்று உறுதி யாக கூறியதால் நீதிமன்றம் ஆரிபாவை பெண்கள் காப்பகத்தில் வைக்க உத்தர விட்டது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் இந்து அமைப்பினரும் ஆரிபாவின் பெற்றோரும் பயஸ்முகமது மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை செய்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் புகார் செய்தனர். நீதிமன்ற விசாரணையில் ஆரிபா இதை முழுமையாக மறுத்தார். மேலும் தனக்கு 22 வயதாகிவிட்டதை உறுதிசெய்யும் கல்லூரிச் சான்றிதழ்களைக் கொடுத்தார்.  இதனை ஆய்வு செய்த ராஜஸ்தான் தலைமை நீதிபதி கோபால கிருஷ்ண வியாஸ் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில் ''ஆரிபாவுக்கு அவரின் சுய விருப்பத் தின் பேரில் திருமணம் செய்துகொள்ள முழு உரிமை உண்டு, அதற்கான வயதை அவர் அடைந்துவிட்டார்.

அவரின் பாதுகாப்பைக் காவல் துறை யினரே உறுதி செய்யவேண்டும் என்று கூறி ஆரிபா அவர் கணவருடன் வாழ முழு உரிமை உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது.  அதன் பிறகு காப்பகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வந்த ஆரிபா தனது கணவர் பயஸ் முகமதுவுடன் சென்றார்.

இவ்வாறு எத்தனை அனிதாக்களும், ஆரிபாக்களும், ஹாதியாக்களும், கவுசல் யாக்களும் நீதிமன்றம் செல்ல வேண்டுமோ?

- விடுதலை ஞாயிறுமலர்,20.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக