மரணத்தைத் தொட்டு மீள்வது ஒருவரது தோற்றத்தில் நிலையான பாதிப்பை ஏற்படுத்தி அவரது இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடும். இதுபோன்ற அனுபவத்துக்குப் பிறகு அவர்கள் மரண பயத்தை வென்றுவிடுவார்கள் அல்லது நடந்ததையே நினைத்து ஒவ்வொரு நொடியையும் கழிக்கலாம்.
ஃப்ரீடா காலோ (1907-1954) இப்படியொரு அனுபவத்தின் நிழலில்தான் வாழ்ந்தார். அவர் மரண பயத்தை வென்றதோடு அதை எதிர்த்துப் போராடினார். மிகச் சிறந்த ஓவியரான அவர், இன்றைக்கு மட்டுமல்ல, அவர் வாழ்ந்த காலத்திலேயே முன்னோடியாக இருந்தார். தனக்கெனத் தனித்த பாணியை உருவாக்கிக்கொண்டு தன்னிகரில்லாத அடையாளத்தோடு வெளிப்பட்டார். ஜெர்மன் தந்தைக்கும் ஸ்பெயின் கலப்பினத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த மக்தலீனா கார்மென் ஃப்ரீடா தன் இளமைக் காலத்தை மெக்சிகோவில் உள்ள ஒரு நகரத்தில் கழித்தார். 18 வயதில் நிகழ்ந்த பேருந்து விபத்து, சிறு வயதில் ஆர்வத்துடன் ஈடுபட்ட ஓவியத்துக்குள் அவரை அழைத்துச் சென்றது. அவரது உடல் வலியும் ஊனமும் தனிமையும் ஓவியத் திறனில் கலந்து அற்புதமான படைப்புகளை உருவாக்கின. ஓவியங்கள் மூலமாகத் தன் வலிக்கு அழியாத தன்மையை அவர் கொடுத்தார்.
கனவும் நனவும் பிணைந்த கலை
பாலினம், வர்க்கம், நிறப் பாகுபாடு போன்ற வற்றுக்கு எதிரான சோஷலிசக் கொள்கைகள் அவரை ஈர்த்தன. அநீதிக்கும், அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக நின்றார். இந்தக் கொள்கைகளில் வலுவான பிடிப்பு கொண்டவர்கள் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் டியாகோ ரிவேரா மீதான ஃப்ரீடாவின் ஈர்ப்புக்கும் இதுதான் காரணம். ஃப்ரீடாவின் அறிவுத் தேடலுக்கு விடையாக அமைந்தார் ரிவேரா. அவர்களது தீவிரமான காதல் திருமணத்தில் முடிந்தது. தனித்த பாணியில் ஓவியங்களை வரைந்தபோதும் ஃப்ரீடா தன் கணவரது நிழலிலேயே மறைந்து நின்றார். டியாகோ நடத்திய கண்காட்சிகளில் ஃப்ரீடாவின் ஓவியங்கள் இடம்பெறவில்லை.
ஒருகட்டத்தில் அடையாளமற்ற அந்த நிழலில் இருந்து வெளியேறினார் ஃப்ரீடா. எடுத்ததுமே அந்தப் பயணம் சிறப்படையவில்லை. ஆனால், அவர் கண்காட்சிகளை நடத்திய பிறகு அங்கீகாரம் அவரைத் தேடி வந்தது. ஆழ்ந்த சிவப்பும் மெக்சிகன் மஞ்சளும் நிறைந்த ஃப்ரீடாவின் ஓவியங்களைப் பற்றி டைம் இதழ், எழுதியது. ஃப்ரீடாவின் கலையுணர்வு முழுமையாக மலர டியாகோ உதவினார். சர்ரியலிசக் கலையை உருவாக்கிய ஆண்ட்ரே பிரெட்டனை அறிமுகப்படுத்திவைத்தார். ஃப்ரீடாவின் ஓவியங்களில் கனவும் நனவும் இரண்டறக் கலந்து மிளிரும் அற்புதத்தை அவர் கண்டுகொண்டார். பிரெட்டனின் ஆதரவும் ஊக்குவிப்பும் தனக்கென தனி அடையாளத்தை நிறுவ ஃப்ரீடாவுக்கு உதவின.
உணர்வைச் சொல்லும் ஓவியம்
டியாகோவின் நடத்தையும் பிற பெண்கள் மீது அவருக்கு ஏற்பட்ட ஈடுபாடும் அவரை விட்டுப் பிரிய ஃப்ரீடாவுக்குக் காரணமாக அமைந்தன. மனச்சோர்வும் ஆற்றாமையும் நிறைந்த பிரிவுக் காலத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் கையறுநிலையையும் ஆத்திரத்தையும் குரோதத் தையும் அன்பையும் ஒருசேர பிரதிபலித்தன. ஆண் மீது ஒரு பெண் கொண்டிருக்கும் ஈர்ப்பையும் சார்பையும் இதைவிட அற்புதமாக வரைந்துவிட முடியாது என்கிற அளவில் அவரது ஓவியங்கள் அமைந்தன. ஒரு பெண்ணை இப்படித்தான் வரைய வேண்டும் என்று சமூகம் அதுவரை கற்பித்துவைத்திருந்த அனைத்தையும் அவரது ஓவியங்கள் கேள்விக்குள்ளாக்கின. உணர்வுகளை வெளிபடுத்திய அவரது தற்படங்கள் கற்பனைக்கும் எட்டாதவை. அவர் வரைந்த 200 ஓவியங்களில் 55 ஓவியங்களில் தன்னையே வரைந்திருக்கிறார்.
தனித்த மூன்று
ஃப்ரீடாவின் ஓவியங்களில் மூன்று அம்சங் களுக்கு முக்கியப் பங்குண்டு அவருக்கு வேறெந்த முகமும் உடலும் தேவையில்லை. தன்னையே வரைந்தார். சிறு வயதில் அவரது உடலையும் நோகச் செய்த, வலியும் வேதனையும் நிறைந்த அனுபவங்களே மிகச் சிறந்த ஓவியங்கள் உருவாகக் காரணமாக அமைந்தன. இரண்டாவது, மெக்சிகோவின் தனித்த கலை வடிவங்களில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாடு. தன் நிலத்தின் பண்பாட்டுப் பாணியை ஓவியங்கள் மூலமாகப் படியெடுத்தார். மூன்றாவது, சமரசமோ சலுகையோ தேவைப்படாத அவரது பெண்ணியப் பார்வை. அவரது ஒவ்வொரு படைப்பிலும் ஆழமான, வெளித்தெரியாத பெண்ணியக் கோணம் வெளிப்படும். தனக்குள் மோதிச் சிதையும் கேள்விகளுக்கான, புதிர்களுக்கான விடையாகவே ஓவியங்களை வரைந்தார் ஃப்ரீடா காலோ. அப்போது மெக்சிகோவில் புகழ்பெற்றிருந்த சுவரோவியத்துக்கு முற்றிலும் எதிரான பட்டய ஓவியத்தில் ஆர்வத்துடன் இருந்தார். உலோகப் பட்டைகளில் வரையப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களைச் சேகரித்து வைத்திருந்தார். மரணம் - வாழ்வு, நம்பிக்கை - விரக்தி, அழிவு - வளர்ச்சி என்று ஒன்றுக்கொன்று எதிரான இந்த முரணை ஓவியங்களில் வெளிப்படுத்தினார் ஃப்ரீடா.
மரங்கள், வேர்கள், முட்கள், கூந்தல், கண் புருவம், உடற்கூறு போன்றவற்றைத்தான் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகங்களாக அவர் பயன்படுத்தினார். மனித மனத்தின் சிடுக்குகளை இதைவிடச் சிறப்பாகச் சொல்ல முடியாத அளவுக்கு நுட்பத்துடன் அவரது ஓவியங்கள் விளங்கின. பெண்ணியமும் நவீனமும் கலந்த அசாதாரண கலைவடிவத்தைத் தன் அடையாளமாகக் கொண்டிருந்த, பெண் குறித்த அடையாளப்படுத்துதலுக்கு எதிராகச் செயல்பட்ட ஃப்ரீடா காலோ, மிகச் சிறந்த போராளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக