• Viduthalai
பரவலாக அறியப்படாத விளையாட்டைத் தேர்ந்தெடுப்பதற்குத் துணிச்சல் வேண்டும் என்றால், அதில் அடையாளம் கிடைக்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது சவாலானது. இந்த இரண்டையும் ஏற்றுக்கொண்டதால்தான் இன்று உலக அரங்கில் இந்தியாவின் அடையாளங்களுள் ஒருவராக மாறியிருக்கிறார் நேத்ரா குமணன். சாகச விளையாட்டுகளாக அறியப்படுபவை எல்லாமே ஆண்களுக்குத்தான் கைவரும் என்கிற நினைப்பைத் தங்கள் திறமையால் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றியமைத்தபடியே இருக்கிறார்கள் பெண்கள். நேத்ராவும் அப்படித்தான். கடலில் சறுக்கிச் செல்லும் பாய்மரப் படகோட்டும் வீராங்கனையான இவர், டோக்கியோவில் ஜூலை 23 முதல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கிறார். இதன் மூலம், இந்தப் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவரது கனவு விளையாட்டல்ல இது. பள்ளி நாட்களின் கோடை விடுமுறைகளில் ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு பயிற்சி வகுப்பில் மகளைச் சேர்த்துவிடுவாராம் நேத்ராவின் அம்மா. டென்னிஸ், சைக்கிள் ஓட்டுவது, கூடைப் பந்து, பரதநாட்டியம் என்று பலவற்றையும் முயன்றவரது மனம் பாய்மரப் படகுப் போட்டியில் நிலைகொண்டுவிட்டது. அதுதான் தான் செல்ல வேண்டிய பாதை என்பதை முடிவெடுத்து அதில் முழு மூச்சுடன் இறங்கிவிட்டார். தொடர்ச்சியான பயிற்சிகள் மூலம் தன்னை அந்த விளையாட்டுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தார் நேத்ரா. 2014, 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றார். அவற்றில் வாகை சூடாத மனக்குறையை 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நிவர்த்திசெய்தார். பாய்மரப் படகுப் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்ணும் இவர்தான்.
மனத்துக்கும் பயிற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் வெல்வதுதான் விளையாட்டுத் துறையில் ஈடுபடுகிறவர்களின் அதிகபட்ச இலக்காக இருக்கும். நேத்ராவும் அந்த இலக்கை நோக்கிச் செல்வதற்கான தகுதியைப் பெற்றுவிட்டார். ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற ஹங்கேரிப் பயிற்சியாளர் தாமஸ் எசெஷ் என்பவரிடம் பயிற்சிபெற்றுவரும் நேத்ரா.ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகக் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து பயிற்சிபெற்றுவரும் தனக்குக் கிடைத்த அங்கீகாரமாகத்தான் ஒலிம்பிக் நுழைவைப் பார்க்கிறார்.
கரோனா ஊரடங்கால் கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் நடந்ததால் ஒரு பக்கம் படிப்பும் மறுபக்கம் பயிற்சியுமாக இருந்திருக்கிறார். லேசர் ரேடியல் எனப்படும் தனிநபர் பாய்மரப் படகோட்டும் பிரிவில் பங்கேற்கவிருக்கிறார் நேத்ரா. பெருங்கடலில் சீறிப்பாயும் அலைகளுக்கு நடுவே தனியாகப் படகோட்டிச் செல்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதைக் கையாள்வதற்கும் சேர்த்தே பயிற்சி தரப்படுகிறது. நேத்ராவின் முதல் ஒலிம்பிக் போட்டி இது என்பதால் அவருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே அவர் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக