• Viduthalai
மருத்துவர் முத்துலட்சுமியின் 135ஆம் பிறந்த நாள்: ஜூலை 30
சமூகவெளியில் பெண்கள் அனு மதிக்கப்பட்டிராத அந்தக் காலத்தில், தடைகளை எதிர்த்துக் கடுமையாகப் போராடித்தான் பெண்கள் வெளியே வந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் முத்துலட்சுமி.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதுக்கோட்டை போன்ற அதிகம் வளர்ச்சி பெற்றிராத ஊரில் அவர் வளர்ந்தார். 1902இல் புதுக்கோட்டை மாகாண அளவிலான மெட்ரிக் தேர்வில் தேறிய பத்துப் பேரில் ஒரே பெண்ணாக இருந்தார். அவருடைய முதல் சாதனைப் பட்டியல் இப்படித்தான் தொடங்கியது.
பெண்களுக்கான பள்ளிக்கல்வியே சாதனையாகக் கருதப்பட்ட நிலையில், உயர்கல்வி என்பது பெருங்கனவாகவே இருந்தது. இண்டர்மீடியேட் படிக்க அவர் விரும்பினார்.
பெண்களுக்கென இண்டர்மீடியேட் கல்லூரி இல்லாததால், ஆண்களுக்கான கல்லூரிக்கே அவருடைய தந்தை விண்ணப்பித்தார். முதலில் பாலினத்தைக் கூறி மறுக்கப்பட்ட வாய்ப்பு, அடுத்ததாக அவருடைய தாயின் ஜாதியைக் காரணம் காட்டி மறுக்கப்பட்டது. முத்துலட்சுமியும் அவருடைய தந்தையும் அயர்ந்துவிடாமல் மாகாண அரசு அதிகாரிகளிடமும் புதுக்கோட்டை மாகாண அரசரிடமும் விண்ணப்பித்துப் போராடியதன் விளைவாக, அனுமதி கிடைத்தது. கல்லூரியில் ஒரே பெண்ணாக இருந்ததால் மூன்று புறமும் அடைக்கப்பட்ட கூண்டு போன்ற அமைப்பில், மாணவர்களுடன் கலக்காமல் அவர் உட்கார வைக்கப்பட்டார்.
அவருடைய படிப்புத் தாகம் அத்துடன் நிறைவு பெறவில்லை. 1907இல் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். தங்கள் வகுப்புகளில் பெண்களுக்கு அனுமதி யில்லை என மறுத்த பல ஆங்கிலேயப் பேராசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்று, சிறப்புத் தகுதியுடன் மருத்துவக் கல்வியை முத்துலட்சுமி நிறைவுசெய்தார். சிறு வயதிலேயே திருமணம் செய்தாக வேண்டுமென்கிற உறவினர்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலை மீறியே, அவருடைய கல்விப் பயணம் இவ்வளவு காலம் தொடர்ந்தது.
முத்துலட்சுமி படித்து முடித்த காலத்தில்தான் மாணவ-மாணவிகளுக்கு பல்கலைக்கழக மருத்துவப் பட்டம் வழங்கப்பட்டது. அந்த வகையில் பல்கலைக்கழக மருத்துவப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்கிற அடைமொழி முத்துலட்சுமிக்குப் பொருந்தும்.
முத்துலட்சுமி மருத்துவராவதற்கும் பிற்காலத்தில் புற்றுநோய் மருத்துவத்துக்கான சிறப்பு மருத்துவமனையான அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை உருவாக்குவதற்கும் இருவர் காரணமாக அமைந்தார்கள்.
மருத்துவராகச் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றிருந்த முத்துலட்சுமி பிற்காலத்தில் பல முன்னோடிச் சட்டங்களை இயற்றுவதிலும் பங்களித்தார். நாட்டிலேயே சட்டமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட இரண்டாம் பெண் உறுப்பினர் முத்துலட்சுமி (1927இல்). சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தேவதாசி முறை ஒழிப்பு மசோதா, குழந்தைத் திருமணத் தடை மசோதா போன்றவை அவருடைய முக்கியப் பங்களிப்புகள்.
கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு போராடிக்கொண்டிருந்த காலத்தில், தென்னிந்தியப் பெண்களின் நிலை மோசமாகவும் கேட்பாரற்றும் இருந்தது. அந்தப் பின்னணியில் பெண்களின் சமூக மேம்பாட்டுக்கு இந்தச் சட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பங்களித்தன.
அடிப்படையில் காந்தியவாதியான முத்துலட்சுமி தன் காலத்தைத் தாண்டி சிந்திப்பவராக இருந்தார். அதேநேரம் தீவிர முற்போக்காளர் என்று அவரை வரையறுத்துவிட முடியாது. சட்டமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மசோதா தொடர்பான விமர்சனங்கள், ஏற்படுத்தச் சாத்தியமுள்ள பின்விளைவுகள் சிலவற்றை அவர் முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருக்க வில்லை. அதேநேரம் பெண்களின் நிலையை முன்னேற்ற தன் வாழ்நாள் முழுக்க அர்ப்பணிப்புடன் அவர் பாடுபட்டார்.
மதம், சடங்குகளின் பெயரில் பெண்களுக்கு எதிராக வலியுறுத்தப்பட்ட ஒடுக்குமுறைகளைச் சட்டரீதியாகக் களைவதற்காகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருந்தார்.
பல வகைகளில் தான் ஒரு முதல் பெண்ணாக இருக்கிறோம் என்கிற பெருமையைப் பெரிதாகக் கருதாமல், சமூகத்தை அனைத்துப் பெண்களுக்குமானதாக மாற்றுவதற்காகக் கடைசிவரை மன உறுதியுடன் அவர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக