வியாழன், 23 செப்டம்பர், 2021

பெண்களுக்கு 40 விழுக்காடு இடஒதுக்கீடு வரவேற்கத்தக்கது!


தமிழ்நாடு அரசு நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்படும். மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியமானது என்பதை உணர்ந்து நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும்

30 விழுக்காடு இடஒதுக்கீட்டினை 40 விழுக்காடாக உயர்த்திட உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் - என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார் (13.9.2021)

உண்மையிலே இது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு எல்லா உரிமைகளும்  வழங்கப்பட்ட வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் கொள்கை.

1929ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடத்தப்பட்ட முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் பெண்கள் குறித்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

"பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமாகச் சொத் துரிமைகளும், வாரிசு பாத்தியதைகளும் கொடுக்கப்பட வேண்டு மென்றும், பெண்களுக்கு ஆண்களைப் போலவே எந்தத் தொழிலையும் மேற்கொண்டு நடத்தி வருவதற்கு அவர்களுக்குச் சம உரிமையும், அவகாசமும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் (தீர்மானம் எண் 24), பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் வேலையில் பெண்களே அதிகமாக நியமிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், ஆரம்பக் கல்வி கற்றுக் கொடுக்கும். உபாத் தியாயர் வேலைக்குப் பெண்களையே நியமிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது (தீர்மானம் எண் 25).

1931 ஆகஸ்டில் விருதுநகரில் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

பெண்களை வைத்தியத் தொழிலுக்கும், உபாத்திமைத் தொழிலுக்கும் மாத்திரம் தற்போது எடுப்பது போதாது. அவர்களைப் போலீஸ் இலாகாவிலும் இராணுவத்திலும் சேர்க்க வேண்டும் (தீர்மானம் எண் 3) என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மக்கள் தொகைக் கட்டுப்பாடு விடயத்தில் ஆண்  குழந்தைள் பிறப்பையே பொதுவாக மக்கள் விரும்புகிறார்கள் என்றும், அதற்காக கருத்தடை முறையைத் தள்ளிப் போடுகின்றனர் என்றும் ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் சந்திரசேகர் சொன்னபோது - தந்தை பெரியார் அதற்குக் கூறிய தீர்வு புதிது மட்டுமல்ல - புதிய சிந்தனை வழி மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதாகும்.

ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குக் கல்வி வேலை வாய்ப்பில் 50 விழுக்காடு அளித்தால் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என்றார் தந்தை பெரியார்.

ஆண்கள் எதிர்ப்பார்களே என்று டாக்டர் சந்திரசேகர் சொன்ன போது 'அது எப்படி எதிர்ப்பார்கள்? தன் மகளுக்கும், சகோதரிக்கும் அந்த வாய்ப்புக் கிட்டும்போது, ஆண்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளத்தானே செய்வார்கள்' என்ற தந்தை பெரியாரின் பதிலைக் கேட்டு 'Wonderful Wonderful' - இதுவரை இந்தக் கோணத்தில் யாரும் சிந்திக்கவில்லை என்று ஆச்சரியப்பட்டார்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன் முதல் பெண்களுக்கு வாக்குரிமை 1920இல் அளித்தது நீதிக்கட்சி ஆட்சியில்தான்.

இப்பொழுது தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் அறிவித்த பெண்களுக்கு 40 விழுக்காடு இடஒதுக்கீடு இந்தியத் துணைக் கண்டத்தில் புதிய சிந்தனை அலைகளை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது கடந்த 25 ஆண்டுகளாக நிலுவை யில் உள்ளது - கட்சி சார்பற்ற முறையில் ஆண்கள் இதற்கு எதிர் நிலை எடுத்து வருவது கவனிக்கத்தக்கது. "பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? அது போன்றதே ஆண்களால் பெண் களுக்கு எளிதாக கிடைக்கும் என்பதும்" என்றார் தந்தை பெரியார்.

இதுவரை நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் 12 விழுக் காட்டைத் தாண்டியது கிடையாது. இஸ்லாமிய நாடுகளில்கூட நாடாளுமன்றங்களில் பெண்கள் இந்தியாவைவிட அதிக விகிதாச் சாரத்தில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

திராவிடர் கழகம் இதற்காகப் பல நிலைகளில் போராடி வந் திருக்கிறது - மாநாடுகளை நடத்தி வந்திருக்கிறது.  தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறது.

இன்னொரு பிரச்சினையும் முக்கியமானது, அரசு அலுவலகங் களில் பெண்களுக்குக் கொடுக்கப்படும் பாலியல் தொல்லைதான் அது! அதற்கான விதிமுறை இருந்தும், அவை எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்பது முக்கியமான வினாவாகும்.

நிதி அமைச்சரின் அறிவிப்பில் இன்னொன்று மிக முக்கியமானது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ் இளைஞர்களுக்கு 100 விழுக்காடு நியமனம் செய்யும் பொருட்டு தேர்வுகள் நடத்தப்படும். அனைத்துப் போட்டி தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதி கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பு - போற்றி வரவேற்கத்தக்கது.

கடந்த அஇஅதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை தமிழ்நாட்டைக் கடந்து பிற மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று திறக்கப்பட்ட கதவினை அடைக்கும் ஆக்கப் பூர்வமான அணுகுமுறை இது - வரவேற்கிறோம் - வரவேற்கிறோம்.

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நாளும் சாதனைப் பொன்னேடுகளை உருவாக்கிக் கொண்டுள்ளது  - வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக