புதன், 15 மார்ச், 2017

பெண்களுக்குத் தொழிற்கல்வி கொடுக்க வேண்டும்




 

- தந்தை பெரியார்

இந்த வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி ஒரு புதிய திருப்பத்தில் நடைபெறும் ஒன்றாகும். இதுவரையிலும் நம்மிடையே நடைபெற்று வந்த நிகழ்ச்சி, ஒரு ஜாதிக்கு நாம் கீழான மக்கள் - கீழானவர்கள் என்கின்ற முறையை அடிப் படையாகக் கொண்டு நடத்தி வைத்தோம். இப்போது நாம் கீழ் மக்களல்ல. ஆணுக்குப் பெண் அடிமையல்ல. ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் உண்டு. பெண் சுதந்திர-முடையவள் என்பதை நிலைநிறுத்தும் வகையில், இம்முறை திருமணமானது தோற்றுவிக்கப்பட்டு, பல்லாயிரக் கணக்கான மக்களால் நடத்தப்பட்டு வருகிறது! இதில் பல காரியங்கள் மதத்திற்கு, சாஸ்திர, சம்பிரதாயத்திற்கு மாறாக இருப்பதோடு இதுவரை இருந்த இழிவான நிலையை மாற்றக்கூடியதாகவும் இருக்கின்றது. மாற்றம் ஏற்படுவதென்றால் சிறப்பான காரியங்களைச் செய்துதானாக வேண்டும். அப்படிப்பட்ட காரியங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதுவரை இருந்த ஆட்சி அனைத்தும் நம்மை அடிமை யாகவே கருதி நடத்தப்பட்டு வந்ததேயாகும். இப்போதுள்ள ஆட்சியானது நம்மை மக்களாக மதித்து வருகின்ற ஆட்சி என்பதோடு, நாமெல்லாம் அடிமைகள் அல்ல மனிதர்கள் என்பதை உணர்ந்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியானதால், இதுவரை சட்டப்படிச் செல்லுபடியற்ற முறையாக இருந்த இதை இன்றைய அரசு சட்டப்படிச் செல்லும் என்று சட்டம் இயற்றியுள்ளது. இது சட்டப்படிச் செல்லாதிருந்த காலத்திலேயே பல்லாயிரக்கணக்கில் மக்கள் இம்முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சட்டத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. இப்போதும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்-கிறவர்கள் தான், இன்றைக்கும் பழைய முறையில் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். நாங்கள் பார்ப்பனருக்கு அடிமைகளல்ல - சூத்திரர்களல்ல என்று கருதுகின்றவர்கள் அனைவரும் இப்புதிய - மாறுபாடான முறையினையே பின்பற்றி நடத்தி வருகின்றனர்.

தாய்மார்களே! தோழர்களே! நாம் நன்றாகச் சிந்திப் போமானால், தமிழர்களாகிய நமக்கு இப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை முறையென்றோ, விவாகம் என்றோ, திருமணம் என்றோ, ஒரு முறை இருந்ததே இல்லை. இன்றையத் தினம் நமக்கு நீதியாக இருக்கும். மனுதர்ம முறையில் சூத்திரனுக்குத் திருமண முறையில்லை என்றிருக்கிறது. இதுவரை நடைபெற்ற பல புரட்டுகளின் காரணமாகக் கடந்த 20, 30 வருஷ காலமாக அச்சிடப்பட்டு வெளியாகியுள்ள மனுதர்மத்தில் தான் சூத்திரனுக்குத் திருமண முறை உண்டு என்றிருக்கின்றது. பழைய 25 வருடத்திற்கு முன் அச்சிடப்பட்ட எல்லா மனு தர்மத்திலும் சதிபதியாக வாழும் உரிமை சூத்திரனுக்கு இல்லையென்றே இருக்கிறது. இதற்குக் காரணம் நம் பெண்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டியாக இருக்க வேண்டியவர்கள்; சூத்திரச்சிகள். எனவே அவர்களுக்குத் திருமண உரிமை இல்லை என்பதேயாகும்.

இம்முறை தவிர்த்து இதுவரை நம்மில் நடைபெற்று வந்த திருமண முறையும் நம்நாட்டிற்கு உரிய முறை இல்லை. பார்ப்பன நாட்டிலிருந்து வந்ததேயாகும். திருமணம் என்கின்ற மன்றல் என்பது மறையோர் தேசத்திலிருந்து வந்தது _- இங்கு புகுத்தப்பட்டது என்பதனைத் தொல்காப்பியத்திலேயே குறிப்பிடப்-பட்டிருக்கிறது. அதாவது, “மறையோர் தேயத்து மன்றல் எட்டனுள்’’ என்கிற சூத்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதுவும் பார்ப்பனரிடம் ஒழுக்கக் கேடும், பொய்யும் புகுந்த பின்னர், பார்ப்பானே சடங்குகளை உண்டாக்கினான் என்பதும் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது. ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப’ என்கின்ற சூத்திரத்தின் மூலம் இதனை விளக்கியதோடு இப்படிப் பார்ப்பனருக்காக _- மேல்ஜாதிக்காரனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள், கீழ்ஜாதிக்காரர்களுக்கு ஆன காலமும்  உண்டு என்பதை, “மேலோர்  மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே’’ என்கின்ற சூத்திரத்தின் மூலம் விளக்கியிருக்கிறார். இதையெல்லாம் நான் பாமர மக்களுக்காகச் சொல்லவில்லை. அவர்களுக்கு இதெல்லாம் புரியவும் புரியாது. எப்படியோ நடந்தால் சரி என்றுதான் கருதுவார்கள். பின் யாருக்காக இதைச் சொல்கிறேனென்றால் நம்மிடையே இருக்கிற படித்த _ பட்டம் பெற்ற முட்டாள் களுக்காகவே சொல்-கின்றேன்.

நமது புலவர்கள் எல்லாம் பெருமையாக -_ சிறந்த இலக்கியமாகக் கருதி பரப்பி வருகின்றார்களே, எதற்கெடுத்தாலும் பயன் படுத்துகின்றார்களே திருக்குறள். மனுதர்மத்தில் எப்படிப் பார்ப்பானுக்கும், சூத்திரனுக்கும் பேதம் கற்பிக்கப்பட்டிருக்கிறதோ, அதுபோல, அதைவிட மேலேயே பெண்களுக்கும், ஆண்களுக்கும் அதில் கற்பிக்கப்பட்டிருக்கிறது. பெண் நிரந்தர அடிமையாகக் கணவனுக்குத் தொண்டு செய்யும் ஏவலாளாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப் பட்டிருக்கிறது. தோழர்களே! பெண்கள் ஆண்களுக்கு நிபந்தனையற்ற அடிமைகளாக இருக்க வேண்டும். சூத்திரர்கள் அறிவு பெறக் கூடாது. பாமரர்களாகவே இருக்க வேண்டும்; ஜாதி இழிவு காக்கப்பட வேண்டும் என்கின்ற மூன்று காரியங்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டு வந்ததுதான் _ - புரோகித வைதிகத் திருமணங்களாகும்.

ஆனால், சுயமரியாதைத் திருமணங்கள் பெண்களைச் சம உரிமையுடையவர்களாக்கவும், மக்கள் அறிவோடு நடக்க வேண்டுமென்ப தற்காகவும், மக்கள் அனைவரும் சமம், ஜாதியின் காரணமாக உயர்வு, தாழ்வு இல்லை என்பதை வலியுறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டதேயாகும். இதன் காரணமாகப் பெண்கள் விடுதலை பெற்று சுதந்திரமுடையவர் களானதோடு, அதுவரை பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்த கணவன் - தகப்பன் சொத்தில் உரிமை, மறுமணம் செய்து கொள்ளும் உரிமை - மணவிலக்குப் பெறும் உரிமை, விதவா, விவாக உரிமை, ஆண்களைப் போன்று சகலத் துறைகளிலும் போட்டியிடும் உரிமை, கல்வி உரிமை முதலியவை அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ளன.

பொதுவாக இந்துக்கள் என்பவர்கள் திருமணம், ஜாதி உணர்ச்சியோ, மத உணர்ச்சியோ இல்லாவிட்டாலும், அவர்கள் சமுதாயத்தில் அதுவரை நடைபெற்று வந்த பழக்க வழக்கப்படி நடைபெற வேண்டும். அதுதான் சட்டப்படிச் செல்லுமென்பது இந்து லாவாகும். அதனால்தான் இப்போது இங்கு நடைபெற்ற இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியற்றதாகவே மதிக்கப்பட்டுக் கருதப்பட்டு வந்தது.

நம் நாட்டில் பெண்கள் விடுதலைக்காக இதுவரை - சரித்திரக் காலம் முதல் எவனுமே பாடுபடவில்லை. நம் இலக்கியங்கள் அத்தனையும் பெண் அடிமையை வலியுறுத்து வதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றனவே ஒழிய, பெண்களுக்குச் சம உரிமை, சுதந்திரம் கொடுக்கக்கூடிய, அறிவு கொடுக்கக்கூடிய இலக்கியம் என்று எதுவுமே கிடையாது. நாம் பூரணமாக சுதந்தரம் அடைய இன்னும் பல தடைகள் இருக்கின்றன. நாம் வளர்ச்சியடைய வேண்டியதும் நிறைய இருக்கின்றன என்றாலும், நம் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருப்பவர்கள் நம் பெண்களே யாவார்கள்.

நம் பெண்கள் இன்னமும் சமுதாயத்திற்குப் பெரும் பாரமாக இருக்கிறார்களே ஒழிய, சமுதாய வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்குப் பயன்படக் கூடியவர்களாக இல்லை. ஏனில்லை யென்றால், நாம் அவர்களுக்குப் போதிய அறிவை, கல்வியைக் கொடுக்காததாலே யாகும்.  பெண்கள் சமுதாயம் சுதந்திரம் பெற்றுச் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமானால் பெற்றோர்கள் அவர்களை நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும். அவர்கள் வாழ்வை அவர்களே நடத்திக் கொள்ளும் படியான தொழிலை அவர்களுக்கு பயில்விக்க வேண்டும். அவர்களாக முன்வருகிற வரை அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது. கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமையினை அவர்களுக்கே கொடுத்து விட வேண்டும். மேல் நாடுகளிலெல்லாம் இப்படித் தான் நடக்கின்றன. எந்தப் பெற்றோரும் அவர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது கிடையாது. அவர்களாகப் பார்த்துத்தான் செய்து கொள்வார்கள்.

வெள்ளைக்காரன் இங்கு வருகிறவரை நம் நாட்டில் 8 வயது, 9 வயதில் திருமணங்கள் நடைபெற்று வந்தன. வெள்ளைக்காரன் வந்த பின்தான் இக்கொடுமையை நிறுத்தினான். இம்முறையில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் கோயிலுக்கே போகக் கூடாது; குழவிக் கல்லைக் கும்பிடக் கூடாது, புராண - இதிகாசங்களில் வரும் எந்த விழாக்களையும் கொண்டாடக் கூடாது; சினிமாவிற்குப் போகவே கூடாது. சினிமாவால் ஏற்பட்ட கேட்டால் - உணர்ச்சியால் 10 வயதாவதற்குள் பெண்கள் ஆளாகி விடுகின்றனர். காரணம், உணர்ச்சிப் பெருக்காலேயே யாகும். ஆடம்பரமாக இருக்கக் கூடாது; சிக்கனமாகச் செலவிட வேண்டும். பிற மக்களுக்கு நம்மாலான உதவியினைச் செய்ய வேண்டும். இன்னொரு வரிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்கா மலிருப்பதே ஆண்மையாகும். பிறருக்கு நம்மாலான உதவியைச் செய்வதே பெருமையாகும். குழந்தைகள் பெறாமல் இருப்பதே நல்லது. இல்லையென்றால் ஒன்று, இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதனை நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்காகப் பிறரிடம் போய்ப் பல்லைக்காட்டிக் கெஞ்சாத வகையில் நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, இம்முறையில் ஏற்பாடு செய்த மணமக்களின் பெற்றோர்களையும், சுற்றத்தாரையும் பாராட்டுகின்றேன்.

(19.1.1969 அன்று திருச்சியில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள்

ஆற்றிய அறிவுரை)

 ‘விடுதலை’ 23.1.1969

-உண்மை,1-15.3.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக