புதன், 15 மார்ச், 2017

பெண்களுக்கு வாக்குரிமையை வென்றெடுத்த அந்தோனி சூசன் பிரான்வெல்

அந்தோனி சூசன் பிரான்வெல் நினைவுநாள் மார்ச் 13

பெண்களுக்கு வாக்குரிமையை வென்றெடுத்த அந்தோனி சூசன் பிரான்வெல்



சுயமரியாதைத் திருமண விழாக்களில் அதாவது, வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசும்போது தந்தை பெரியார் அவர்கள் பெண்களின் மூடநம்பிக்கையைத் தொட்டுக் காட்டாமலிருக்க மாட்டார்.

பெண்கள் சீர்திருந்தினால்தான் சமூகம் சீர்திருந்தும் என்பது இதன் அடிப்படைக் கருத்து.

“ஓர் ஆண் சீர்திருந்தினால் அது ஒரு தனி மனிதன் சீர்திருந்தியதாகத்தான் கணக்கு; ஒரு பெண் சீர்திருந்தினாலோ ஒரு குடும்பமே சீர்திருந்தியதாகக் கணக்கு’’ என்பதுதான் உலகமறிந்த உண்மை.

பெண்களைச் சீர்திருத்திய சீர்திருத்தச் செம்மல்கள் உலகில் எத்தனையோ பேர் இருப்பதாகக் கூறுவார்கள். ஆனால், உண்மையான பெண் சீர்திருத்தவாதிகள் எப்படி இருப்பார்கள்?

இந்தக் கேள்விக்குப் பதிலாக உலகப் பகுத்தறிவு வரலாற்றில் நிற்கிறார் குமாரி அந்தோணி சூசன் பிராம்வெல்.

1820ஆம் ஆண்டில் பிறந்த இந்த அமெரிக்கப் பெண்மணி ஆசிரியையாகத் தொழில் புரிந்துவந்தார். ஆனால், 1906ஆம் ஆண்டு மரணமடையும் வரைஅவர் அமெரிக்கப் பெண்ணுலகுக்குச் செய்த தொண்டுகள் எண்ணில் அடங்காது.

“அடிமை ஒழிப்புப் போர்’’ அதிலே அவரைக் காணலாம்; பெண்களுக்கு வாக்குரிமை கேட்கும் இயக்கமா? அங்கேயும் அவரைச் சந்திக்கலாம்; வேறு எந்தச் சமூகச் சீர்திருத்தமானாலும் அங்கே முதல் வரிசையில் நிற்பவராக இவர்தான் இருப்பார்.

இதுபோன்ற பெண்மணிகள் பிற நாடு-களிலும் எத்தனையோ பேர் இருந்திருப்பார்கள்; இருப்பார்கள். ஆனால், இவர்களில் எல்லாம் சிறப்பான ஒரு தகுதி பெற்றவர் குமாரி அந்தோணி சூசன்.

இவர் ஒரு அக்னாஸ்டிக் (கடவுள் கவலை அற்றவர் _ நாத்திகத்தின் முதல்படி இது) என்பதே அந்தச் சிறப்புத் தகுதி.

இவர் அக்னாஸ்டிக் ஆனது எப்படி? பெண்களின் சமூக வாழ்வு சீர்பெற ஏதாவது ஒரு சீர்திருத்தம் வேண்டும் என்று யார் கோரினாலும் சரி. அதை அக்காலத்தில் மதச்சபை எதிர்த்து வந்ததுதான் காரணம்.

இந்த நிலையை அணுகி ஆராய்ந்து குமாரி அந்தோணி தமது போராட்டங்களில் பிரதான எதிரி சமூகமோ அரசோ அல்ல. மதமேதான் முதல் எதிரி என்று கண்டுபிடித்தார். தம்மை ஒரு அக்னாஸ்டிக் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார்.

இன்று அமெரிக்கப் பெண்கள் படுபயங்கரமான புரட்சிகளையெல்லாம் முன் நின்று நடத்துகிறார்கள். சமீபத்தில் அமெரிக்கப் பெண்கள் தாங்கள் ஆண்களுக்கு எவ்வகை-யிலும் இளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டி, ‘காதல் மறுப்பு’ போராட்டம் வரை நடத்தத் திட்டமிட்டனர்.

இதற்கெல்லாம் காரணம் குமாரி அந்தோணி சூசன்தான்! அமெரிக்கப் பெண்களின் மிகச் சிறந்த தலைவியாக அன்றும் ஏன் இன்றும்கூட கருதப்படுகிறார்; பகுத்தறிவுச் சுடராகவும் புகழப்படுகிறார்.

 -உண்மை,1-15.3.17


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக