வியாழன், 7 அக்டோபர், 2021

ஒலிம்பிக் மட்டுமல்ல இலக்கு

 

தற்போது குஜராத்தில் வசித்தாலும் இளவேனிலின் பூர்விகம் தமிழ்நாட்டில் உள்ள  கடலூர் மாவட்டம். நன்கு அறிமுகமானவர்களால் இளா என்று அழைக்கப்படும்  இவரது துப்பாக்கிச் சுடும் பயணம் 12 வயதில் தொடங்கியது. பயிற்சிக்கான துப்பாக்கியைக் கடனுதவி பெற்று வாங்கித் தந்துள்ளார் இவருடைய தந்தை. பின்னர் இளவேனில் துப்பாக்கிசுடும் போட்டிகளுக்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். அதன் விளைவாக 13 வயதில் முதல் பதக்கம் வென்றார்.

டில்லியில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற அய்.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் திவ்யான்ஷ் பன்வருடன் சேர்ந்து, தங்கப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெல்வதற்காக மட்டுமே தான் பயிற்சி பெறவில்லை என்று சொல்லும் இள வேனில், நீடித்த வெற்றிக்கான அடித்தளமாகவும் தற்போதைய பயிற்சியை அமைத்துக்கொண்டுள் ளார். மன உறுதி அதிகம் தேவைப்படும் துப்பாக்கிச் சுடும் போட்டி, தன்னை ஆட்கொண்டுவிட்டதாகக் குறிப்பிடுகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறவர்களில் இளவேனில் வாலறிவனும் ஒருவர்.

சென்னைப் பெண்ணின்

வரலாற்றுச் சாதனை

அந்தக் கால ராஜா ராணி திரைப்படங்களில் மட்டுமே வாள் சண்டையைப் பார்த்து பிரமித்திருந்த அந்தச் சிறுமிக்கு வாள் வீச்சுப் போட்டி குறித்துத் தெரிந்திருக்க  நியாயமில்லை. சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள முருகா தனுஷ்கோடி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோதுதான் சில விளையாட்டுகளுள் ஒன்றாக வாள் வீச்சு அறிமுகமானது. வாள் மீதான ஈர்ப்பே அந்த விளையாட்டை அந்த 11 வயதுச் சிறுமியைத் தேர்ந்தெடுக்கவும் வைத்தது.

அந்தச் சிறுமி யின் திறமை இந்திய விளையாட்டுக் கழகத்தின் பார்வை யில் பட, பத்தாம் வகுப்பு முடித்த கையோடு கேரளத்தில் உள்ள தலசேரியில் பயிற்சிக்குச் சென்றார். 2017ஆம் ஆண்டில் அய்ஸ்லாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, இந்தப் போட்டியில் முதல் பன்னாட்டுப் பதக்கத்தை வெல்லும் முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார் அந்தச் சிறுமி பவானி தேவி. டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள இவர், வாள் வீச்சுப் போட்டியில் பங்கேற்கும் முதல்  இந்தியர் என்கிற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்.

வாள் வீச்சு விளையாட்டை நான் தேர்ந்தெடுத்து விளையாடியபோது இது பெண்களுக்கு உகந்ததா என்பது போன்று பல கேள்விகளை எதிர்கொண்டேன். ஆனால், என் இலக்கை அடைவதில் உறுதியுடன் இருந்தேன்.

அதுதான் பல சவால்களை எதிர்கொண்டு நாட்டுக்காக என்னை வெற்றிபெறச் செய்தது. இப்போது வாள் வீச்சுப் போட்டி குறித்து மக்களுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது.

இது தொடக்கம்தான் என்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார் பவானி தேவி. தனது 17 வருட பயிற்சியும் அனுபவமும் ஒலிம்பிக்கில் வெற்றியைத் தேடித்தரும் என்று பவானி தேவி நம்புகிறார்.

மதம், சடங்குகளுக்கு எதிராக போராடிய மருத்துவர் முத்துலட்சுமி

 

மருத்துவர் முத்துலட்சுமியின் 135ஆம் பிறந்த நாள்: ஜூலை 30

சமூகவெளியில் பெண்கள் அனு மதிக்கப்பட்டிராத அந்தக் காலத்தில், தடைகளை எதிர்த்துக் கடுமையாகப் போராடித்தான் பெண்கள் வெளியே வந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் முத்துலட்சுமி.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதுக்கோட்டை போன்ற அதிகம் வளர்ச்சி பெற்றிராத ஊரில் அவர் வளர்ந்தார்.   1902இல் புதுக்கோட்டை மாகாண அளவிலான மெட்ரிக் தேர்வில் தேறிய பத்துப் பேரில் ஒரே பெண்ணாக இருந்தார். அவருடைய முதல் சாதனைப் பட்டியல் இப்படித்தான் தொடங்கியது.

பெண்களுக்கான பள்ளிக்கல்வியே சாதனையாகக் கருதப்பட்ட நிலையில், உயர்கல்வி என்பது பெருங்கனவாகவே இருந்தது. இண்டர்மீடியேட் படிக்க அவர் விரும்பினார்.

பெண்களுக்கென இண்டர்மீடியேட் கல்லூரி இல்லாததால், ஆண்களுக்கான கல்லூரிக்கே அவருடைய தந்தை விண்ணப்பித்தார். முதலில் பாலினத்தைக் கூறி மறுக்கப்பட்ட வாய்ப்பு, அடுத்ததாக அவருடைய தாயின் ஜாதியைக் காரணம் காட்டி மறுக்கப்பட்டது. முத்துலட்சுமியும் அவருடைய தந்தையும் அயர்ந்துவிடாமல் மாகாண அரசு அதிகாரிகளிடமும் புதுக்கோட்டை மாகாண அரசரிடமும் விண்ணப்பித்துப் போராடியதன் விளைவாக, அனுமதி கிடைத்தது. கல்லூரியில் ஒரே பெண்ணாக இருந்ததால் மூன்று புறமும் அடைக்கப்பட்ட கூண்டு போன்ற அமைப்பில், மாணவர்களுடன் கலக்காமல் அவர் உட்கார வைக்கப்பட்டார்.

அவருடைய படிப்புத் தாகம் அத்துடன் நிறைவு பெறவில்லை. 1907இல் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். தங்கள் வகுப்புகளில் பெண்களுக்கு அனுமதி யில்லை என மறுத்த பல ஆங்கிலேயப் பேராசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்று, சிறப்புத் தகுதியுடன் மருத்துவக் கல்வியை முத்துலட்சுமி நிறைவுசெய்தார். சிறு வயதிலேயே திருமணம் செய்தாக வேண்டுமென்கிற உறவினர்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலை மீறியே, அவருடைய கல்விப் பயணம் இவ்வளவு காலம் தொடர்ந்தது.

முத்துலட்சுமி படித்து முடித்த காலத்தில்தான் மாணவ-மாணவிகளுக்கு பல்கலைக்கழக மருத்துவப் பட்டம் வழங்கப்பட்டது. அந்த வகையில் பல்கலைக்கழக மருத்துவப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்கிற அடைமொழி முத்துலட்சுமிக்குப் பொருந்தும்.

முத்துலட்சுமி மருத்துவராவதற்கும் பிற்காலத்தில் புற்றுநோய் மருத்துவத்துக்கான சிறப்பு மருத்துவமனையான அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை உருவாக்குவதற்கும் இருவர் காரணமாக அமைந்தார்கள். 

மருத்துவராகச் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றிருந்த முத்துலட்சுமி பிற்காலத்தில் பல முன்னோடிச் சட்டங்களை இயற்றுவதிலும் பங்களித்தார். நாட்டிலேயே சட்டமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட இரண்டாம் பெண் உறுப்பினர் முத்துலட்சுமி (1927இல்). சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தேவதாசி முறை ஒழிப்பு மசோதா, குழந்தைத் திருமணத் தடை மசோதா போன்றவை அவருடைய முக்கியப் பங்களிப்புகள்.

கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு போராடிக்கொண்டிருந்த காலத்தில், தென்னிந்தியப் பெண்களின் நிலை மோசமாகவும் கேட்பாரற்றும் இருந்தது. அந்தப் பின்னணியில் பெண்களின் சமூக மேம்பாட்டுக்கு இந்தச் சட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பங்களித்தன.

அடிப்படையில் காந்தியவாதியான முத்துலட்சுமி தன் காலத்தைத் தாண்டி சிந்திப்பவராக இருந்தார். அதேநேரம் தீவிர முற்போக்காளர் என்று அவரை வரையறுத்துவிட முடியாது. சட்டமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மசோதா தொடர்பான விமர்சனங்கள், ஏற்படுத்தச் சாத்தியமுள்ள பின்விளைவுகள் சிலவற்றை அவர் முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருக்க வில்லை. அதேநேரம் பெண்களின் நிலையை முன்னேற்ற தன் வாழ்நாள் முழுக்க அர்ப்பணிப்புடன் அவர் பாடுபட்டார்.

மதம், சடங்குகளின் பெயரில் பெண்களுக்கு எதிராக வலியுறுத்தப்பட்ட ஒடுக்குமுறைகளைச் சட்டரீதியாகக் களைவதற்காகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருந்தார்.

பல வகைகளில் தான் ஒரு முதல் பெண்ணாக இருக்கிறோம் என்கிற பெருமையைப் பெரிதாகக் கருதாமல், சமூகத்தை அனைத்துப் பெண்களுக்குமானதாக மாற்றுவதற்காகக் கடைசிவரை மன உறுதியுடன் அவர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பதவி

 

ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்த மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக(விளையாட்டு) நியமித்து முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டார்.

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு முன்புவரை ரயில்வே துறையில் பயணச்சீட்டு ஆய்வாளராகத்தான் மீராபாய் சானு பணியாற்றி வந்தார். இந்தியாவுக்கு திரும்பும்போது, சானுவுக்கு இன்பஅதிர்ச்சி கொடுப்பேன் என்று முதல்வர் பிரேன்சிங் தெரிவித்த நிலையில் விளையாட்டுப்பிரிவில் காவல்கண்காணிப்பாளராக நியமித்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டில் கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2ஆவது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லமல் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் சானு என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு புதிய வரலாறு படைத்துள்ளதையடுத்து, அவருக்கு ரூ.ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் அறிவித்துள்ளார். இந்நிலையில் டோக்கியோவிலிருந்து மீராபாய் சானு நேற்று (26.7.2021) தாயகம் திரும்பினார். மணிப்பூர் சென்ற சானுவுக்கு அந்த மாநில மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அதோடு முதல்வர் பிரேன் சிங்கும் சானுவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

அதில்,  மீராபாய் சானு தற்போது செய்துவரும் ரயில்வே துறையில் இருக்கும் பணியிலிருந்து விடுவித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். அவருக்கு மணிப்பூர் அரசு சார்பில் காவல் துறையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக (விளையாட்டுக்கோட்டா) பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சானு இனிமேல் மணிப்பூர் காவல் துறையில் இணைந்து பணியாற்றலாம். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு தங்கப்பதக்கம் வெல்ல முயற்சிக்கலாம். எனத் தெரிவித்தார்.

இது மட்டும்லாமல் மணிப்பூரைச் சேர்ந்த ஜூடோ பிரிவில் 2014ஆம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற லிமாபாம் சுஷிலா தேவி காவலராக பணியாற்றி வந்தார், அவரை காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்த்தி முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டார். மேலும், மணிப்பூர் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற 5 வீரர்களுக்கும் தலா ரூ.25 லட்சம்வழங்கப்படும் எனவும் மணிப்பூர் அரசு அறிவித்தது

இது தவிர ரயில்வே துறை சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்வன் ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் வைஷ்னவ் சுட்டுரையில் பதிவிட்ட கருத்தில்  இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த ரயில்வே வீராங்கனை மீராபாய் சானுவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை கவுரப்படுத்தும் விதமாக ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும், அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்படும். அவரின் திறமையால் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்துள்ளார்

தன்னையே வரையும் பெண்


மரணத்தைத் தொட்டு மீள்வது ஒருவரது தோற்றத்தில் நிலையான பாதிப்பை ஏற்படுத்தி அவரது இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடும். இதுபோன்ற அனுபவத்துக்குப் பிறகு அவர்கள் மரண பயத்தை வென்றுவிடுவார்கள் அல்லது நடந்ததையே நினைத்து ஒவ்வொரு நொடியையும்  கழிக்கலாம்.

ஃப்ரீடா காலோ (1907-1954) இப்படியொரு அனுபவத்தின் நிழலில்தான் வாழ்ந்தார். அவர் மரண பயத்தை வென்றதோடு அதை எதிர்த்துப் போராடினார். மிகச் சிறந்த ஓவியரான அவர், இன்றைக்கு மட்டுமல்ல, அவர் வாழ்ந்த காலத்திலேயே முன்னோடியாக இருந்தார். தனக்கெனத் தனித்த பாணியை உருவாக்கிக்கொண்டு தன்னிகரில்லாத அடையாளத்தோடு வெளிப்பட்டார். ஜெர்மன் தந்தைக்கும் ஸ்பெயின் கலப்பினத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த மக்தலீனா கார்மென் ஃப்ரீடா தன் இளமைக் காலத்தை மெக்சிகோவில் உள்ள ஒரு நகரத்தில் கழித்தார். 18 வயதில் நிகழ்ந்த பேருந்து விபத்து, சிறு வயதில் ஆர்வத்துடன் ஈடுபட்ட ஓவியத்துக்குள் அவரை அழைத்துச் சென்றது. அவரது உடல் வலியும் ஊனமும் தனிமையும் ஓவியத் திறனில் கலந்து அற்புதமான படைப்புகளை உருவாக்கின. ஓவியங்கள் மூலமாகத் தன் வலிக்கு அழியாத தன்மையை அவர் கொடுத்தார்.

கனவும் நனவும் பிணைந்த கலை

பாலினம், வர்க்கம், நிறப் பாகுபாடு போன்ற வற்றுக்கு எதிரான சோஷலிசக் கொள்கைகள் அவரை ஈர்த்தன. அநீதிக்கும், அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக நின்றார். இந்தக் கொள்கைகளில் வலுவான பிடிப்பு கொண்டவர்கள் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் டியாகோ ரிவேரா மீதான ஃப்ரீடாவின் ஈர்ப்புக்கும் இதுதான் காரணம். ஃப்ரீடாவின் அறிவுத் தேடலுக்கு விடையாக அமைந்தார் ரிவேரா. அவர்களது தீவிரமான காதல் திருமணத்தில் முடிந்தது. தனித்த பாணியில் ஓவியங்களை வரைந்தபோதும் ஃப்ரீடா தன் கணவரது நிழலிலேயே மறைந்து நின்றார். டியாகோ நடத்திய கண்காட்சிகளில் ஃப்ரீடாவின் ஓவியங்கள் இடம்பெறவில்லை.

ஒருகட்டத்தில் அடையாளமற்ற அந்த நிழலில் இருந்து வெளியேறினார் ஃப்ரீடா. எடுத்ததுமே அந்தப் பயணம் சிறப்படையவில்லை. ஆனால், அவர் கண்காட்சிகளை நடத்திய பிறகு அங்கீகாரம் அவரைத் தேடி வந்தது. ஆழ்ந்த சிவப்பும் மெக்சிகன் மஞ்சளும் நிறைந்த ஃப்ரீடாவின் ஓவியங்களைப் பற்றி டைம் இதழ், எழுதியது. ஃப்ரீடாவின் கலையுணர்வு முழுமையாக மலர டியாகோ உதவினார். சர்ரியலிசக் கலையை உருவாக்கிய ஆண்ட்ரே பிரெட்டனை அறிமுகப்படுத்திவைத்தார். ஃப்ரீடாவின் ஓவியங்களில் கனவும் நனவும் இரண்டறக் கலந்து மிளிரும் அற்புதத்தை அவர் கண்டுகொண்டார். பிரெட்டனின் ஆதரவும் ஊக்குவிப்பும் தனக்கென தனி அடையாளத்தை நிறுவ ஃப்ரீடாவுக்கு உதவின.

உணர்வைச் சொல்லும் ஓவியம்

டியாகோவின் நடத்தையும் பிற பெண்கள் மீது அவருக்கு ஏற்பட்ட ஈடுபாடும் அவரை விட்டுப் பிரிய ஃப்ரீடாவுக்குக் காரணமாக அமைந்தன. மனச்சோர்வும் ஆற்றாமையும் நிறைந்த பிரிவுக் காலத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் கையறுநிலையையும் ஆத்திரத்தையும் குரோதத் தையும் அன்பையும் ஒருசேர பிரதிபலித்தன. ஆண் மீது ஒரு பெண் கொண்டிருக்கும் ஈர்ப்பையும் சார்பையும் இதைவிட அற்புதமாக வரைந்துவிட முடியாது என்கிற அளவில் அவரது ஓவியங்கள் அமைந்தன. ஒரு பெண்ணை இப்படித்தான் வரைய வேண்டும் என்று சமூகம் அதுவரை கற்பித்துவைத்திருந்த அனைத்தையும் அவரது ஓவியங்கள் கேள்விக்குள்ளாக்கின. உணர்வுகளை வெளிபடுத்திய அவரது தற்படங்கள் கற்பனைக்கும் எட்டாதவை. அவர் வரைந்த 200 ஓவியங்களில் 55 ஓவியங்களில் தன்னையே வரைந்திருக்கிறார்.

தனித்த மூன்று

ஃப்ரீடாவின் ஓவியங்களில் மூன்று அம்சங் களுக்கு முக்கியப் பங்குண்டு அவருக்கு வேறெந்த முகமும் உடலும் தேவையில்லை. தன்னையே வரைந்தார். சிறு வயதில் அவரது உடலையும்  நோகச் செய்த, வலியும் வேதனையும் நிறைந்த அனுபவங்களே மிகச் சிறந்த ஓவியங்கள் உருவாகக் காரணமாக அமைந்தன. இரண்டாவது, மெக்சிகோவின் தனித்த கலை வடிவங்களில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாடு. தன் நிலத்தின் பண்பாட்டுப் பாணியை ஓவியங்கள் மூலமாகப் படியெடுத்தார். மூன்றாவது, சமரசமோ சலுகையோ தேவைப்படாத அவரது பெண்ணியப் பார்வை. அவரது ஒவ்வொரு படைப்பிலும் ஆழமான, வெளித்தெரியாத பெண்ணியக் கோணம் வெளிப்படும். தனக்குள் மோதிச் சிதையும் கேள்விகளுக்கான, புதிர்களுக்கான விடையாகவே ஓவியங்களை வரைந்தார் ஃப்ரீடா காலோ. அப்போது மெக்சிகோவில் புகழ்பெற்றிருந்த சுவரோவியத்துக்கு முற்றிலும் எதிரான பட்டய ஓவியத்தில் ஆர்வத்துடன் இருந்தார். உலோகப் பட்டைகளில் வரையப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களைச் சேகரித்து வைத்திருந்தார். மரணம் - வாழ்வு, நம்பிக்கை - விரக்தி, அழிவு - வளர்ச்சி என்று ஒன்றுக்கொன்று எதிரான இந்த முரணை ஓவியங்களில் வெளிப்படுத்தினார் ஃப்ரீடா.

மரங்கள், வேர்கள், முட்கள், கூந்தல், கண் புருவம், உடற்கூறு போன்றவற்றைத்தான் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகங்களாக அவர் பயன்படுத்தினார். மனித மனத்தின் சிடுக்குகளை இதைவிடச் சிறப்பாகச் சொல்ல முடியாத அளவுக்கு நுட்பத்துடன் அவரது ஓவியங்கள் விளங்கின. பெண்ணியமும் நவீனமும் கலந்த அசாதாரண கலைவடிவத்தைத் தன் அடையாளமாகக் கொண்டிருந்த, பெண் குறித்த அடையாளப்படுத்துதலுக்கு எதிராகச் செயல்பட்ட ஃப்ரீடா காலோ, மிகச் சிறந்த போராளி.