வியாழன், 19 மே, 2022

‘ஆஃப்டர் ஆல் ஹேர்தானே’ என்று நான் மொட்டை அடித்துக்கொண்டதற்கு பெரியார்தான் காரணம்!


    எனது அப்பா, ராஜாஜியுடன் நெருக்கமாக இருந்த அரசியல் ஆளுமை. ஆனால், பெரியாரின் மறுமலர்ச்சிக் கொள்கைகள் பற்றி எங்களிடம் நிறையப் பேசுவார். தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை வழங்கி வந்த போது அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் எனக்கு ‘பெண் ஏன் அடிமை ஆனாள்?’ என்கிற பெரியாரின் புத்தகத்தைப் பரிசளித்தார். அதற்கும் முன்பு பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள என்னை அழைத்திருந்தனர். அப்போதும் இதே புத்தகத்தை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள்.

    அந்தப் புத்தகம் என்னை வெகுவாகப் பாதித்தது. அந்தப் புத்தகத்தின் பின்னே இருந்த சிந்தனை வீச்சு, முறைமை அசாதாரணமானது. ‘யுத்தம் செய்’ படத்தில் நடித்தபோது, நான் மொட்டை அடித்துக்கொள்ளக் கொஞ்சம்கூடத் தயங்கவில்லை. ‘போடா... ஆஃப்டரால் ஹேர்தானே’ என்று ஜாலியாக மொட்டை அடித்துக்கொண்டேன்! அதற்குப் பெரியார்தான் காரணம். மொட்டை அடித்துக்கொண்டு ஷவரின் கீழ் நின்றபோது கிடைத்த விடுதலை உணர்வு அளப்பரியது. பெரியாரின் கடவுள் நம்பிக்கை சார்ந்த கொள்கையில் நான் மாறுபட்டவள். ஆனால், தீண்டாமை, சமத்துவமின்மை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றுக்கு எதிராகச் செயல்பட்டு பெரியார் கொண்டுவந்த மாற்றங்களின் காரணமாகத்தான் இன்று தமிழ்நாடு தனித்துவமான கலாச்சாரம் கொண்டதாக இருக்கிறது. அந்த விஷயத்தில் நான் பெரியாரின் தீவிர விசிறி!

    திருமணப் பரிசாக எனது பெரிய மாமனார் எனக்குத் திருக்குறளைப் பரிசளித்தார். எப்போதாவது குழப்பம் ஏற்பட்டால், அந்தத் திருக்குறள் புத்தகத்தின் ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து கண்ணில் படும் குறளையும் அதன் விளக்கவுரையும் வாசித்தால் அங்கே தீர்வு இருக்கும். அப்படியொரு வேதம் அது. நான் திரைப்படங்களை இயக்கத் தொடங்கும் முன்பு, எனக்குப் பரிசளிக்கப்பட்ட மற்றொரு புத்தகம் சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ புத்தகம். அது திரைக்கதை எழுதும் தன்னம்பிக்கையைக் கற்றுக்கொடுத்தது. ஆனால், தமிழில் திரைக்கதையை எழுத முடியும் என்கிற தன்னம்பிக்கையை எனக்குக் கொடுத்தது ‘பாரதியார் கவிதைகள்’ நூல். மொழியின் ஆற்றலை பாரதியார் வழியாகப் பெற்றேன் என்று சொல்லுவேன். ‘பாரதியார் கவிதை’களை எனக்குப் பரிசளித்தவர் வானதி சீனிவாசன்.

- லெட்சுமி ராமகிருஷ்ணன்,
நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி ஆளுமை. 
நன்றி: 'இந்து தமிழ் திசை' பக்.6 - 5.3.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக