செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்



ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை  பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்த அந்தப் பெண், சாக்சி மாலிக்.

அரியானாவில் உள்ள ரோட்டக் என்ற நகரம்தான் சாக்சியின் சொந்த ஊர். அவருடைய தாத்தா, மல்யுத்த வீரர். சிறு வயதிலிருந்தே தனது மல்யுத்தப் பராக்கிரமங்களை பேத்தி சாக்சியிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் சொன்ன மல்யுத்தக் கதைகளால் சாக்ஷிக்கு அந்த விளை யாட்டு மீது ஆர்வம் பிறந்தது. குஸ்தி, சண்டை என்றாலே ஒதுங்கிச் செல்லும் சிறுமிகளுக்கு மத்தியில் தாத்தா வழியில் மல்யுத்த விளையாட்டில் குதித்தார். மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டபோது சாக்சிக்கு 12 வயது. மல்யுத்த விளையாட்டைத் தேர்வுசெய்தது என் வாழ்வில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு என்று பின்னாளில் சாக்சி குறிப்பிடும் அளவுக்கு அந்த விளையாட்டில் புகழ்பெற்றார்.

தடைகள் தாண்டி

மல்யுத்த விளையாட்டில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில், வீட்டில் அதற்குப் பெரிய அளவில் ஆதரவில்லை. மல்யுத்த விளையாட்டில் ஈடுபட அவருக்குப் பலவிதத் தடைகள் ஏற்பட்டன. அவற்றைத் தாண்டித்தான் சாக்சியால் பயிற்சியில் ஈடுபட முடிந்தது. தன் மீது அவருக்கு இருந்த அபாரமான நம்பிக்கையால், விடாமுயற்சியுடன் பயிற்சிசெய்து அந்த விளையாட்டில் முன்னேறி வந்தார். மாநில அளவிலும் தேசிய அளவிலும் விளையாடத் தொடங்கி பிறகு, அவர் பெற்ற வெற்றிகள், சர்வதேசப் போட்டிகளில் அவருக்குச் சிவப்புக் கம்பளத்தை விரித்துக்கொடுத்தன.

மறக்க முடியாத ஆண்டு

2010இல் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாக்சி பங்கேற்கத் தொடங்கினார். இளையோர் உலக வாகையர் பட்டப் போட்டியில் பங்கேற்ற சாக்சி, 58 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று கவனம் ஈர்த்தார். முதல் சர்வதேசத் தொடரையே அமர்க்களமாகத் தொடங்கிய சாக்சியின் பக்கம் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வெற்றிக் காற்று வீசியது. 2014இல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச மல்யுத்தத் தொடரில் 60 கிலோ எடைப் பிரிவில் முதன் முறையாகத் தங்கப் பதக்கம் வென்றார்.

அதே ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன் வெல்த் போட்டியில் நைஜீரிய வீராங்கனையை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014இல் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி யில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். ஒரே ஆண்டில் மூன்று சர்வதேசத் தொடர்களில் சாக்சி பெற்ற வெற்றி, அவரது ஒலிம்பிக் கனவை அதிகப் படுத்தியது.

ஒலிம்பிக் வாய்ப்பு

ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 2015இல் ஆசிய மல்யுத்த வாகையர் பட்டப் போட்டி, பயிற்சியாக அமைந்தது. அந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று திரும்பினாலும், ஒலிம்பிக் போட்டிக்கு முழுமையாகத் தயாராக அது உதவியது. சாக்சி மாலிக் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறவில்லை.

2016 தொடக்கத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று தான் ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றார்.  மேலும் மல்யுத்தப் போட்டிகளில் சாக்சி மாலிக் முன்னேறி வந்தார். இந்தச் சுற்றில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி, வெண்கலப் பதக் கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றார்.  2016இல் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெற சாக்சி வென்ற வெண்கலப் பதக்கம் உதவியது. இதன் பிறகுதான் பாட்மிண்டனில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதற்கு முன்னர் பளு தூக்குதலில் கர்ணம் மல்லேஷ்வரி, குத்துச்சண்டையில் மேரிகோம், பாட்மிண்டனில் சாய்னா நேவால் என மூன்று பெண்கள் மட்டுமே ஒலிம்பிக்கில் பதக்கம் வென் றிருந்தனர். அந்தப் பட்டியலில் சாக்சியும் சேர்ந்தார்.

மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் சாக்சிக்குக் கிடைத்தது.

-  விடுதலை நாளேடு, 5.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக