பெண்களுக்கெதிரான சர்வதேச வன்கொடுமைகள் தடுப்பு நாளாக ஒரு நாள் (ஜூன் 26) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் படுகிறது. 1960ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி மிராபெல் சகோதரிகளான மூன்று சகோதரிகள் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சமூகத்தில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதை கடுமையாக எதிர்த்து இவர்கள் குரல் கொடுத்து வந்த வர்கள். அவர்கள் படுகொலை செய்யப்பட் டதை அடுத்து மூன்று சகோதரிகளும் மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள் என்று உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்டார்கள். 1999 டிசம்பர் 17இல் அய்.நா சபை கூட்டத்தில், மூன்று சகோதரிகள் இறந்த நவம்பர் 25ஆம் நாளை சர்வதேச பெண்களுக் கெதிரான வன்கொடுமைகள் தடுப்பு நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
"பெண் என்பவள் பிறப்பதில்லை - உருவாக்கப்படுகிறாள்" என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று உள்ளது. உண்மையில் பெண் குழந்தையாகப் பிறந்தாலும், அவள் இந்தச் சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை. இந்தச் சமூகம் அவளை வளர விடுவதில்லை. பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால் அக்குழந்தையைக் கொன்றுவிடும் நிலைமை இப்போதும் உலகெங்கிலும் பரவலாக உள்ளது. ஒருவேளை அந்தப் பெண் குழந்தை, கொலையிலிருந்து தப்பித்து, பருவ வயதை அடைந்துவிட்டால், பலரின் கண்கள் அப்பெண்ணின் உடலைத் துளைக்கும். ஒரு தலை காதலால் ஆசிட் வீச்சு, ஆணவக் கொலைகள், வரதட்சணைக் கொடுமைகள், சட்டத்தில் ஆண்களுக்கு இணையான சமஉரிமை இல்லாமை என இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை இப்பூமியில் வாழ்வதற்கு தினம் தினம் தீயில் பெண்கள் எரிந்து கொண்டே இருக்கிறார்கள். இந்தக் காலகட்டத் திலும் கூட பெண்கள் ஆண்களுக்கு ஒருபடி கீழேதான் என்ற நிலைமை உலகெங்கும் உள்ளது.
பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாகத்தான் என்றும், அதற்கு அடுத்தபடியாக அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுதல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று அனைத்து நாடுகளின் கணக்கெடுப்புகளின் முடிவுகளும் சொல்லு கின்றன. அனைத்து நாடுகளின் அரசு களுக்கும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் பற்றி நன்றாகத் தெரிந்தி ருக்கிறது. ஆனாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், மற்றும் உரிமைகள் ரீதியிலான கொடுமைகள் குறைந்த பாடில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான். என்ன தான் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கொடிகட்டிப் பறந்தாலும், அவர்களை என்றுமே ஒரு போதைப் பொருளாக, காமப் பொருளாக, ஆண்களுக்கு அடுத்த படியாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை எந்த நாட்டில் வசிக்கும் ஆண்களும் தவிர்க்கத் தயாராக இல்லை.
கவுரக்கொலை எனப்படும் ஆணவக் கொலைகள் பெண்களுக்கு எதிரானதாகவே அதிகம் நடக்கிறது. உலக அளவில் ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான். Action Aid என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், பாலியல் வன்கொடுமை களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நாடுகள், பிரேசில் மற்றும் இந்தியா ஆகும். அதாவது பிரேசிலில் 87 சதவிகித மும், இந்தியாவில் 73 சதவிகிதமும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு.
பெண்கள் இந்தியாவில் 2015இல் வெளியிடப்பட்ட தேசியக் குற்ற ஆவணப் பதிவேடு ஆண்டறிக்கையின்படி 2014இல் சுமார் 34,530 பாலியல் வன்கொடுமை வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2013-அய் விட இந்த எண்ணிக்கை 7 சதவிகிதம் அதிகம் ஆகும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் 90 சதவிகிதத்துக்கு மேல் அந்தப் பெண் ணுக்கு அறிமுகம் ஆனவர்களே. இதில் 40 சதவிகிதப் பெண்கள் 19 வயதுக்குக் குறை வான சிறுமிகள் ஆவர். தினமும் 800-க்கும் அதிகமான பெண்கள் பாலியல் கொடுமை களாலும் மற்ற கொடுமைகளாலும் பாதிக்கப் படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு இருபது நிமிடத்துக்கும், ஒரு பாலியல் வன் கொடுமை சம்பவம் நடைபெற்று வருகிறது. 2011ஆம் ஆண்டில் எடுத்த ஒரு கருத்துக் கணிப்பு என்ன சொல்கிறது தெரியுமா? 2010-க்கு முன் 30 ஆண்டுகளில், இந்தியாவில் கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம். இதில் ஒரு சோகமான செய்தி என்ன தெரியுமா? பெண் சிசுக் கொலைக்கு முக்கிய காரணமாக இருப்பது இன்னொரு பெண்தான் என்கிறது அந்த ஆய்வு.
பெண்களுக்கான வன்முறைகள் மற்றும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் அதிகமாக நடக்கும் நாடுகளில், முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது, இங்கு 19 வயதிலிருந்தே பெண்கள், திருமணம் செய்து கொள்ளக் கட்டயப் படுத்தப்படு கிறார்களாம். ஆப்கானிஸ்தானில் 87 சத விகிதப் பெண்கள் கல்வி அறிவு இல்லாத வர்களாக இருக்கிறார்களாம். இரண்டாவது இடத்தில் காங்கோ நாடு இருக்கிறது. இங்கு ஒவ்வொரு நாளும் சுமார் 1100 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இங்கு பெண் சிசுக் கொலையும் அதிக அளவில் நடந்தேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தபடியாக பெண்களுக்கான அதிக வன்கொடுமைகள் நடப்பது அதாவது பாலியல் கொடுமைகள், உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துதல், சம உரிமை இல்லாமை போன்றவற்றில் மூன் றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தி யாவில் மட்டுமே 87 சதவிகிதம் பெண்களுக்கு எதிராக பாலியல் உடல் மற்றும் மனரீதியான வன்கொடுமைகள் நடப்பதாக ஆய்வறிக்கை சொல்லுகின்றது. இதில் கூட்டு பாலியல் வன்செயல்களும், வன்கொடுமைகளும் அடக்கம். மேலும் பெண் சிசு கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என உலக நாடுகள் சொல்லுகின்றன. நான்காவது இடத்தில் சோமாலியா நாடு உள்ளது. இங்கு 4 முதல் 5 வயதுப் பெண்குழந் தைகளின் உறுப்புகள் சிதைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. இது மட்டுமல்லாமல், பாகிஸ்தான், கொலம்பியா, எகிப்து, மெக்சிகோ போன்ற நாடுகள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உலகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொது வெளிப்பகுதிகள், பேருந்து, அலுவல கங்கள் போன்ற இடங்களில் பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், தினம் தினம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
"பெண்கள் ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல... இப்பூமியில் வாழ்வதற்கு அவர் கள் மீண்டும் மீண்டும் எரிந்துகொண் டிருக்கிறார்கள், நமக்கெல்லாம் தெரியும் அவர்கள் மீண்டு வருவார்கள் என்று. ஆனால், ஒவ் வொரு முறை எரியும் போதும் அவர்களின் உயிர்போகும் வலியை உணர நாம் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்."
- ஜெ.அன்பரசன்
(இதில் கூறப்பட்டுள்ள நிலவரம் 2014ஆம் ஆண்டுக்கானது)
- விடுதலை ஞாயிறு மலர், 14.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக