ஞாயிறு, 20 நவம்பர், 2016

பெண் விடுதலைக்காக... தடம் பதித்த நூல்கள்:

ம.சுசித்ரா
நாட்டின் வளர்ச்சிக்குக் கல்வி இன்றியமையாதது எனத் தொடர்ந்து சொல்லப்படுகிறது. கல்வி முக்கியம் என்பது பொதுவான கூற்று. எத்தகைய கல்வி அவசியம் என்பது குறித்த தெளிவு வேண்டாமா? வேலைக்கான படிப்பை மட்டும் கற்றால், கற்றுக் கொடுத்தால் போதுமா? தனிமனித ஒழுக்கமும், சமூகப் பொறுப்பும் வேண் டாமா? ஆங்கிலத்தில் கல்வி என்பதற்கு “Education means to change the behaviour of human nature” என்னும் விளக்கம் உள்ளது.
தன்னையும் தன்னைச் சுற்றி நிகழ்வனவற்றையும் உற்றுக் கவனித்து, கேள்விக்குள்ளாக்கி, தன்னைத் தானே புரட்டிப்போட்டு, சமூக நீதியை நோக்கி வீறுநடைபோடச்செய்வதே உண்மை யான கல்வி என்பதே அதற்கான விளக்கம். இதை நம்முடைய மரபார்ந்த கல்வி தரவல்லதா? மனித உரிமை, சமூக- பொருளாதார வரலாறு, பெண் கல்வி, சூழலியல் உள்ளிட்டவை சமூக அறி வியல் வகுப்புகளில் கற்றுத் தரப்படு கின்றன.
அதிலும் பெரும்பாலான நேரங் களில் பரிந்துரைக்கப்பட்ட பாட நூல் களிலிருந்து தேர்வுக்கான பாடமாகப் புகட்டப்படுகின்றனவே தவிர சமூக அவலங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் விமர்சனப் பட்டறைகளாக அவை திகழ்கின்றனவா? சமூக, தனிமனித பொறுப்பு சார்ந்த கல்வியில் இன்றி யமையாதது பெண்களின் நிலை குறித்த வரலாற்றுக் கல்வியாகும். இதை அழுத்த மாகப் பதிவு செய்திருக்கும் நூல்களில் ஒன்றுதான், தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?”.
பெண்கள் எந்தெந்தக் காரணங் களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள், அடிமையானார்கள், அடிமைகளாக இருந்து வருகிறார்கள் என்பதை ‘கற்பு’, ‘காதல்’, ’சொத்துரிமை’, ‘பெண்கள் விடு தலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ உள்ளிட்ட 10 அத்தியாயங்களில் விவா திக்கிறார் பெரியார். இதைப் படித்து பெண்கள் எந்தக் காரண காரியங்களால் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக வாழ முடியும் என்பதை விளக்குகிறார்.
கற்பு எனும் கற்பிதம்
கற்பு என்னும் சொல்லுக்குத் தவ றாமை, நாணயம், சத்தியம் உள்ளிட்ட பொதுவான அர்த்தங்கள் இருப்பதைப் பகுப்பாய்ந்து விளக்குகிறார் பெரியார். இதன் மூலம் அது பெண்களுக்கு மட்டுமே உரித்தான வார்த்தை அல்ல என நிரூபிக்கிறார்.
மேலும் ஆங்கிலச் சொற்களான சேஸ்டிடி, வர்ஜினிட்டி ஆகியவையும் பொதுவாக மனித சமூகத்துக்குச் சொல்லும் அர்த்தம் கொண்டவையாகத்தான் இருக்கின்றன எனக் காட்டுகிறார். இப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒன்றை ஆரிய மொழி பெண்ணுக்குரியதாக மாற்றி அடிமைத்தனத்தைப் புகுத்தி யதை மேற்கோள் காட்டி விளக்குகிறார். இதற்கு வள்ளுவரும், தர்மசாஸ்திரங் களும் துணைபோனதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.
“கற்பு என்பதற்கு ‘பதிவிரதம்’ என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண் களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலிவு கொண்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டதனாலும், பெண்கள் அடிமையாவதற்கு, புருஷர் மூர்க்கர் களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை.”
காதலின் பெயரால்
தெய்வீகமானது, புனிதமானது, ஆதலால் ஒரு தடவை காதல் ஏற்பட்டு விட்டால் எந்தக் காரணத்தைக் கொண் டும் பிறகு அதை மாற்றிக்கொள்ளக் கூடாது, முதல் காதல் மட்டுமே உண் மையானது, நிரந்தரமானது இப்படிக் காதலைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மாய வலையைக் கிழித்து எறிகிறார் பெரியார்.
“காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு, அறிவீனம், அனுபவ மின்மை, ஏமாற்றம் என்பவைகளை விடச் சிறிதுகூட சிறந்தது அல்ல.”
அன்பும், ஆசையும், நட்பும் போல காதலும் மன இன்பத்தையும் திருப்தி யையும் பொறுத்ததே. அதைவிடுத்து ‘இது காதலல்ல’, ‘அது காதலுக்கு விரோதம்’, ‘இது காம இச்சை’ போன்ற பிதற்றல்களையும், பெண்களுக்கு எதிரான கருத்தியல்களையும் தகுந்த எதிர் வாதங்கள் கொண்டு கட்டுடைக்கிறார்.
பேதமின்றி சுதந்திரம்
‘கல்யாண விடுதலை, ‘மறுமணம் தவ றல்ல’, ‘விதவைகள் நிலைமை’, ‘சொத் துரிமை’, ‘கர்ப்பத்தடை’ ஆகிய தலைப்பு களில் பெண்களுக்கான உரிமைகளை ஆணித்தரமாக முன்வைக்கிறார். அவர் வைத்த பெண்ணுரிமைக் கோரிக்கைகள் இன்று சட்டங்களாகவே உள்ளன. நிச்சயமாகப் பெண் உரிமைகளுக்கு இடம் தரும் வகையில் சமூக வெளி விரி வடைந்துள்ளது. ஆனால் காலங்கால மாகப் புகுத்தப்பட்ட கற்பிதங்களி லிருந்து விடுதலை அடைய வேண்டிய தேவை இன்றும் உள்ளது.
ஆண், பெண் பேதமின்றி சுதந்திரத் தையும், அடிமைத்தனத்தையும் அணுக வேண்டும்; விடுதலை வேண்டும் என் றால் பெண்கள் தாங்களே போராட வேண்டும், ஆண்களை எதிர்பார்த்திருக் கக் கூடாது; தங்களுடைய உரிமைகளை உணரும் பெண்கள் அந்தச் சுதந்திரத்தை வென்றெடுத்து சமூக நலனுக்காகப் பாடு பட வேண்டும் உள்ளிட்டவை இந்நூல் முழுக்க விரவிக் கிடக்கும் பெரியாரியச் சிந்தனையாகும்.
அடிமையாக்கப்பட்டவள்
பெண் விடுதலை வேண்டும் எனப் பொத்தாம்பொதுவாகப் பேசுவதில் பயனில்லை. பெண் ஏன் ஒடுக்கப்படு கிறார், அதன் மூலகாரணம் என்ன என் பதைக் கண்டறியும் நோக்கில் 1942-லேயே தமிழ்ச் சூழலில் இப்படியொரு சமூக ஆய்வறிக்கை எழுதப்பட்டிருப்பது வியக்க வைக்கிறது.
அதிலும் ஆக்ரோஷ மான அறைகூவல்களோ, ஆர்ப்பரிப்புக் கூற்றுகளோ இன்றி நுட்பமான, ஆய்வின் அடிப்படையில் பெண்ணின் வலிமையை வெளிக்கொணர்ந்திருக் கிறார் பெரியார். பெண் தன் இயல் பிலேயே பலவீனமானவள் அல்ல, பல வீனமாக்கப்பட்டாள்; பெண் அடிமை அல்ல, அடிமையாக்கப்பட்டாள் என் பதை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இது பெண்கள் மட்டுமே படிக்க வேண்டிய புத்தகம் அல்ல. முக்கியமாக ஆண்கள் படித்துப் பெண்கள் மீது சமத் துவ உணர்வை வளர்த்துக் கொள்ளும் படி முகவுரையிலேயே பெரியார் குறிப்பிடுகிறார். பெண் விடுதலைக்கான சமூக விடுதலைக்கான பாதையில் இந்நூலை வாசிப்பதும், மறுவாசிப்புக்கு உட்படுத்துவதும் அவசியமாகிறது.
தொடர்புக்கு:
susithra.m@thehindutamil.co.in
(நன்றி: ‘தி இந்து தமிழ்’ 8.3.2016)
-விடுதலை ஞா.ம.,12.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக